Serial Stories எனை ஆளும் நிரந்தரா

எனை ஆளும் நிரந்தரா-6

6

விருதுநகர் பராசக்தி மாரியம்மன் கோவில் பங்குனி பொங்கல் திருவிழாவிற்கு சுற்றிலுமிருந்த இருபது கிராமத்து ஜனங்கள் வந்திருக்க அக்னி சட்டி, பூ மிதித்தல், அலகு குத்துதல் ,காவடி எடுத்தல்  முளைப்பாரி என திருவிழா கொண்டாட்டங்களுடன் ஊரே ஜே ஜே என்று இருந்தது.

 திருவிழாவை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த மானசி அருகில் திடீரென வந்து நின்று சிவ நடராஜன் கேட்டதும் உண்மையில் வெலவெலத்து போனாள் அவள். இத்தனை ஆயிரம் ஜனங்கள் கூடி நிற்கும் இடத்தில் இப்படியா ஒருவன் வந்து நின்று பேசுவான்? பயத்துடன் தனது தோழிகள் பின்னால் பதுங்கிக் கொண்டாள். இவளுக்கும் சேர்த்து அவர்கள் ஆளாளுக்கு அவனுடன் பேச முனைய வெறுத்துப் போய் திருவிழா வேடிக்கையை பாதியிலேயே விட்டுவிட்டு வீட்டிற்கு திரும்பி விட்டாள்.

” சிவா இப்போ ரொம்ப ஹேண்ட்ஸம் ஆயிட்டார் இல்ல?”

“அவர் எப்பவுமே ஹேன்ட்சம்  தானே? சினிமா ஹீரோ போல இருக்கிறார்”

” இந்த திருவிழாவில் எல்லா வேலையும் அவர்தான் இழுத்துப்போட்டு பார்க்கிறார் தெரியுமா?”

” ஆமாம் இப்போ ஊருக்குள்ள போய் பார்த்தோம்னா எந்த பக்கம் திரும்பினாலும் அவர் முகம்தான் தெரியுது”

தோழிகள் பேசிக்கொள்ள பிறகு ஊருக்குள் காலெடுத்து வைத்து இறங்கவே மானசிக்கு தயக்கமாக இருந்தது. ஆனாலும் அவளுக்கு அந்த ஊர் மாரியம்மனிடம் ஒரு காரியம் ஆக வேண்டியிருந்தது. பிளஸ் டூ முடித்திருந்த நிலையில் மேற் படிப்பிற்கான கல்லூரியை தேர்ந்தெடுக்கும் பொறுப்பை அவர்கள் ஊர் மாரியம்மனிடம்தான் ஒப்படைப்பதாக இருந்தாள்.

 விருதுநகரில் இருக்கும் பெண்கள் கல்லூரி மற்றும் இன்ஜினியரிங் கல்லூரி இரண்டையும்  சீட்டில் எழுதி அம்மன் காலடியில் போட்டு எடுக்க எண்ணியிருந்தாள். எங்கும் திருவிழா கோலமாக இருக்க கொஞ்சம் தனிமைக்காக காத்திருந்தவள் மாரியம்மன்  எந்நேரமும் மிகவும் பிஸியாகவே இருக்க ,சரி பரவாயில்லை இந்த அம்மனிடமே கேட்போம் என்று கொஞ்சம் பரபரப்பு குறைவாக இருந்த துர்க்கை அம்மனை தேர்ந்தெடுத்தாள்.

 கண்களை மூடிக்கொண்டு அம்மன் முன் சீட்டை குலுக்கி போட்டு நல்ல கல்லூரியாக தேர்ந்தெடுத்து தருமாறு வேண்டிவிட்டு கையால் துழாவினால் சீட்டுக்களை காணவில்லை. திகைப்புடன் கண்களைத் திறந்து பார்த்தால்  சீட்டுகளை எடுத்து பிரித்து பார்த்துக் கொண்டிருந்தான் சிவ நடராஜன்.

 “ஆக இந்த ஊரை விட்டு வெளியேறும் எண்ணமே இல்லை, காலம் முழுவதும் குண்டு சட்டிக்குள்ளேயே குதிரை ஓட்ட போகிறாயா?” அதட்டினான்.

மானசி அவனை புரியாமல் பார்க்க அந்த சீட்டுக்களை கிழித்து போட்டவன் “காலேஜுக்கு நீ சென்னை போகப் போகிறாய்” என்றான்.




“நான் எங்கே படிக்க வேண்டும் என்று நீங்கள் முடிவு செய்ய முடியாது. சென்னையெல்லாம் தூரம். அங்கெல்லாம் போய் படிக்க எனக்கு பயம்”

” என்ன பயம்! இத்தனை வருடங்களாக இந்த விருதுநகருக்குள்ளேயே சுற்றிக் கொண்டிருந்து விட்டாய். இனி நிச்சயம் வெளி உலக அனுபவம் உனக்கு வேண்டும்.ஐந்து வருடங்களாவது சென்னையில் இருந்துவிட்டு வருவதுதான் நல்லது.  அல்லது வெற்றி போல் பெங்களூர் போகிறாயா?” மானசி அவனை நம்ப முடியாமல் பார்த்தாள். இவன் ஏன் என்னுடைய விஷயங்களில் தலையிடுகிறான்?

“நம் ஊரை விட்டு நான் எங்கேயும் போக மாட்டேன்” உறுதியாக சொன்னாள்.

 முதலில் கோபமாக பார்த்தவன் பிறகு  தணிந்து “சொல்வதை கேள் மானு.நம் விருதுபட்டியை தாண்டி நிறைய இடங்கள் இருக்கின்றன.அதிக வித்தியாசமான மனிதர்களும் இருக்கிறார்கள்.அவற்றையெல்லாம் நீ நிச்சயம் தெரிந்து கொள்ள வேண்டும். சென்னை ஒன்றும் பயம் கிடையாது. எனக்கு தெரிந்தவர்கள் நிறைய இருக்கிறார்கள் நீ பாதுகாப்பாக அங்கே படிப்பதற்குரிய எல்லா ஏற்பாடுகளையும் நான் பார்த்துக் கொள்கிறேன். போய் படித்துவிட்டு வா”

பட்டை சாக்லேட்டை உடைத்துக் கொடுத்து குழந்தையிடம் பேசும் தொனியில் அவன் பேச்சு இருக்க மானசி படபடத்தாள் “ஊருக்குள் எந்நேரமும் வம்பு இழுத்துக் கொண்டிருக்கும் ரவுடி பயல்களுக்கெல்லாம் என் விஷயத்தில் முடிவெடுக்கும் அதிகாரம் கிடையாது”

 ஏதோ தைரியத்தில் சொல்லிவிட்டு அங்கே நிற்கும்  தைரியமின்றி ஓடி வந்து விட்டாள்.

அவள் சொன்னதில் பெரிய அளவில் தவறேதும் இல்லை. திருவிழா காலங்களில் எங்காவது ஒரு இடத்தில் சலசலப்பு நடந்து கொண்டே இருப்பதுதான். அந்த மாதிரி இடங்களிலெல்லாம் தவறாமல் சிவ நடராஜன் தென்பட்டான். அவனுடைய

குரல்தான் உரத்து ஒலித்துக் கொண்டிருந்தது. மானசி அவனுக்கு கட்டிய ரவுடிப்பயல் பட்டத்திற்கு சற்றும் மாற்றில்லாமல் நடந்து கொண்டிருந்தான்.

இரண்டே நாட்களில் வெற்றி வேலன் அவளுக்கு சென்னை கல்லூரிக்கான அப்ளிகேஷனுடன் வந்தான். “அண்ணா நான் அவ்வளவு தூரமெல்லாம் போக மாட்டேன்” என்றவளை வினோதமாக பார்த்தான்.

“என்ன மானு நீ ,எந்தக் காலத்தில் இருக்கிறாய்? இப்போது பெண்களெல்லாம் எவ்வளவு தைரியமாக இருக்கிறார்கள்? எவ்வளவு அருமையாக படிக்கிறார்கள்?”

” அது யாரப்பா வெற்றி நன்றாக படிக்கும் தைரியமான பெண்?” பாட்டி கேட்க தடுமாறினான் வெற்றி.

” நா…நான் பொதுவாக சொன்னேன் பாட்டி.நம் வீட்டு பெண்களை வீட்டிற்குள்ளேயே ஏன் முடக்கிப் போடவேண்டும்.நன்றாக படித்து கெத்தாக, ஸ்டைலாக தலை நிமிர்ந்து வரும் பெண்கள் தனி அழகுதானே பாட்டி?”

அண்ணன் சொல்ல சொல்ல மானசிக்குமே அப்படி தலை நிமிர்ந்து நடக்கும் ஆசை வந்தது.

 “பெண் பிள்ளையை அவ்வளவு தூரம் எதற்கு அனுப்புவது?” ஆட்சேபம் சொன்ன அப்பாவுடன் கைகோர்த்துக்கொள்ள மானசி தயாரான போது “இந்தக் காலத்தில் படிப்பிற்காக எந்த தியாகமும் செய்யலாம். அதுவும் பெண் பிள்ளைகளுக்கு கடைசி வரை உற்ற துணை படிப்பு மட்டும்தான்”யாருக்கோ சொல்வது போல் அறைக்குள்ளிருந்து பாட்டியின் குரல் ஒலித்தது.

 அதன் பிறகு மானசி படிப்பு விஷயத்தில் மறு வார்த்தை பேச குடும்பத்தில் யாரும் இல்லை. திரில்லான ரைடு பயணத்தை எதிர்பார்க்கும் மனநிலையுடன் மானசியம் சென்னைக்கு பயணமானாள்.

“பத்திரமாக போய்விட்டு வாம்மா” பல தடவை பத்திரம் சொல்லிவிட்டு ரயில் மெல்ல நகரத் துவங்கியதும் மனமின்றி கீழே இறங்கிக் கொண்ட மணிவண்ணன், தூரம் செல்வதை பார்த்தபடி இருந்தவள், தன் அருகில் அரவம் கேட்டு திரும்பி அதிர்ந்தாள்.

 சிவ நடராஜன் ” ஒரு வழியாக  கிளம்பியாயிற்று போல?” எனக் கேட்டபடி நின்றிருந்தான்.

 என்ன பதில் சொல்வது என்று திரு திருத்தவளிடம் ஒரு தண்ணீர் பாட்டிலை நீட்டினான். “இதுபோன்ற விழிப்பையெல்லாம் நம் விருதுபட்டியோடு நிறுத்திக் கொள். சென்னை பெரிய ஊர். நிறைய விஷயங்கள்,நிறைய மனிதர்கள்.  தைரியமாக தலையை நிமிர்த்தி சுற்றி நடப்பவற்றை கவனி. உனக்கு தேவையானதை எடுத்துக்கொள், அல்லாதவற்றை ஒதுக்கி விடு” அக்கறையான உறவினன் போல் சிவ நடராஜனின் அறிவுரை அந்த நேரத்தில் மானசிக்கு தேவை போன்றே தோன்றியது.

“எந்நேரமும் அங்கே எந்த ரௌடியும் உதவிக்கு வந்து நிற்க மாட்டான். உன்னை நீயே தான் பார்த்துக் கொள்ள வேண்டும்” என்றவன் சிறு பாக்கெட் டைரி ஒன்றை அவளிடம் நீட்டினான்.




” இதில் எனக்கு தெரிந்தவர்களின் சென்னை அட்ரஸ் இருக்கிறது. அங்கே ஹாஸ்டலிலோ கல்லூரியிலோ உனக்கு என்ன தேவை என்றாலும் இவர்களில் யாரையும் நீ எந்த நேரத்திலும் தயக்கம் இல்லாமல் தொடர்பு கொள்ளலாம். உனக்குரிய உதவி கிடைக்கும் .ஓகே பை, பத்திரமாகப் போ.நன்றாக படி” சொல்லிவிட்டு வேகம் எடுக்க ஆரம்பித்திருந்த ரயிலில் இருந்து ஒரு குதியுடன் இறங்கி கீழே மறைந்து போனான்.

 நடந்தது நிஜமா? கனவா? எனும் பிரமிப்பில் வெகு நேரம் அமர்ந்திருந்தாள் மானசி. அவன் கொடுத்து விட்டுப் போன பாக்கெட் டைரியின் முகப்பில் சௌபாக்கியா ஆயில் மில்ஸ் என்ற விளம்பரம் மின்னியது.அது அவர்கள் எண்ணெய் கம்பெனியின் பெயர்.

கிட்டத்தட்ட ஐந்து வருடங்களுக்கு முன்பு சிவ நடராஜன் கொடுத்துப் போன அந்த பாக்கெட் டைரியை கையில் எடுத்து பார்த்தாள் மானசி. எதற்கும் உதவும் என்று அதில் இருந்த அட்ரஸ்களுக்காக எப்போதும் அவளது கைப்பையின் உள்ளேயே டைரியை போட்டு வைத்திருப்பாள்.

 பத்து அட்ரஸ் இருந்த அந்த டைரியில் மூன்று பேர் வரை தொடர்பு கொண்டாள்.படிப்பு சம்பந்தமான அவளுக்கான  உதவிகளை அவர்கள் தயங்காமல் செய்தனர்.அவன் பெயருக்கே அவர்களிடம் ஒரு மரியாதை இருப்பதை கவனித்தாள். இவ்வளவு ஆழ்ந்த தோழமைகளை இவன் எப்படி பிடித்தான் என்ற ஆச்சரியம் ஒவ்வொரு முறையும் அவளுக்கு வரும்.

டிடிங் என்ற ஓசையோடு அவளுக்கு செய்தி வந்திருப்பதை போன் சொல்ல, டைரியை கீழே வைத்துவிட்டு பக்கத்தில் இருந்த போனை எடுத்து பார்த்தவள் திகைத்தாள்.

“ஹேய் உன்னை சந்திக்க வேண்டுமே?” சௌபாக்கியம் ஆயில் மில்ஸ் அபிஸியல் இன்ஸ்டாகிராம் பேஜிலிருந்து மானசிக்கு மெசேஜ் வந்திருந்தது.




What’s your Reaction?
+1
42
+1
17
+1
5
+1
2
+1
1
+1
0
+1
0
Subscribe
Notify of
guest

0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!