Serial Stories தீரா…நிலதீரா…!

தீரா…நிலதீரா…!-6

6.கர்னல்பெய்லி தந்த விருந்து 

*****************************************

கர்னல்பெய்லி தன் மாளிகையின் சாளரத்தினருகில் நின்று புகை பிடித்துக் கொண்டிருந்தான். அவன் வெளியிட்டுக் கொண்டிருந்த புகையைப் போலவே மனதிலும் பலவித யோசனைகள் புகைந்தன. கர்னல் வெஸ்லி லெப்டினன்ட் வாட்சன் அவன் கைத்தடி வில்ப்ரெட் ஜோயல் இப்படி சிலரை விருந்துக்கு அழைத்திருந்தான். கட்டாய விருந்து அழைப்புதான். என்ன செய்வது? இந்த இந்திய நாய்களைக் கொன்று தீர்க்கும் வரை குறிப்பாக அந்தத் தீரனை துண்டுத்துண்டாக வெட்டும் வரை பதவியை தக்க வைத்துக் கொள்ள இவர்களின் கால் பிடிக்க வேண்டியுள்ளதே!

இங்கு என்றால் அதிகாரம் பண்ணிக் கொண்டிருக்கலாம் இந்திய அடிமைகளை. தண்டனை பெற்று சொந்தநாட்டுக்குப் போய்விட்டால் நினைக்கவே பயமாயிருந்தது வெஸ்லிக்கு. அந்தநாட்டின் ராணுவ விசாரணை என்ற பேரில் அவனை கொல்லாமல் கொல்வார்களே. 

ஆனால்

அதேநேரம் இந்தத் தீரனை மட்டும் தீர்த்து விட்டால்….

ஆஹா…எல்லா பட்டங்களும் பதவி உயர்வும் செல்வாக்கும் காலடியில் கிடக்கும். வெஸ்லிக்கு நினைக்கையிலேயே தித்தித்தது.

“ஷாமி…ஷாமி…த்தொர ஷாமி! “

ச்சீ யாரடா இவன்? கனவை கலைப்பவன் 

எதிரே இருவர் நின்றனர்.

பரட்டைத்தலை அழுக்கு உடல் தோளில் ஒரு சாக்கு மூட்டை ஒருவன் எங்கோ பார்த்தபடி கோணங்கி போல் நிற்க மற்றவன்தான் கூப்பிட்டது.

“ஹேய்! ஹுவார் யூ மேன்? யார் நீ”

“ஷாமித் தொரே! நாங்க மலக்குறவங்கோ.  இங்கனே  மான்கறி வேவோனும்னு சாக்கிப்பன் சொல்லோ கொணாந்தேன். “

“ம்! ஒம் பேரு என்னா “

“நானு எசக்கி! இவோன் மண்ணு”

“மண்ணு …யூ மீன் சாயில்… என்னடா பேரு இது “

வெஸ்லி சிரித்தான்

“அய்யோ ஷாமி மண்ணாங்கட்டி! மண்ணு ன்னு சொல்லொ”

அந்த மண்ணு எனக்கும் இதற்கும் சம்பந்தமேயில்லை என்பது போல பார்த்துக் கொண்டிருந்தான் தூரவெளியை

“இவன் பேசமாட்டானா அவ்ளோ திமிரா? “

“ஷாமி ..அவனுக்கு பேசவராது. செவிட்டூமை “

வெஸ்லி தன் பழுப்புக் கண்களை இடுக்கிக் கொண்டு பார்த்தான்.

பிறகு கையைத்தட்ட ஒரு சீருடை சார்ஜெண்ட் வந்ததும் ஏதோ சொல்ல அவன் வேறொருவனை அழைத்து வந்தான். 




“ஏய்! இவன் கிட்டே மான்கறி இருக்கி.  நல்லதா பாரு.  இன்னும் என்னென்னு கேளு”

அவன் அவர்களை நோக்கி வாயில் புறமாய் வெளியேறும் போதும் அந்த மண்ணு மண்ணைப் போலவே நின்றான்.

வெஸ்லி சந்தேகம் குறையாமலே அருகிலிருந்த மேஜை மேலிருந்து தீர்ந்துபோன காலி மது புட்டியை எடுத்து தரையில் போட்டு உடைத்தான். 

அந்த கலீர் சத்தத்தில் மற்ற இருவரும் திரும்பி இவனைப் பார்க்க அந்த மண்ணு இவன் பக்கம் திரும்பவேயில்லை . அசைவு கூட இல்லை.

வெஸ்லி திருப்தி பட்டுக் கொண்டாலும் கையிலகப்பட்ட வெண்கல பூஜாடியை கீழே போட்டான். அது சப்தமெழுப்பியபடி உருண்டோடியது. 

அதற்கும் அவனிடம் அசைவில்லை. மற்ற இருவரும் குழப்பத்துடன் திரும்பி இவனைப் பார்த்தாலும் வாயைத் திறக்கவில்லை. கேட்கத்தான் முடியுமா?

எசக்கியிடம் ஏதோ கேட்க அவன் அந்த மண்ணுவைப் பாவமாய் பார்த்து கையிலிருந்த மூட்டையைக்காட்டுப்படி சைகை செய்வதும் அவர்கள் நடந்து போய் ஒரு  மரத்தினடியிலிருந்த  பனையோலைக் கூடையை காட்ட …..வெஸ்லி பார்த்துக் கொண்டே நின்றிருந்தான்.

“எவ்ரிதிங் குட் ஸார். ஃப்ரெஷ் திங்ஸ் “

“ஓ ப்ரிங் தெம்.”

இருவரும் அருகில் வந்ததும் ஒரு வெள்ளி நாணயத்தை எறிந்தான்.வாயெல்லாம் பல்லாக எசக்கி கீழே குனிந்து பொறுக்கிக் கொண்டான்.  மண்ணுவை தோளில் தட்டி நாணயத்தையும் பெய்லியையும் காட்டி கும்பிடச் சொன்னான். மண்ணுவும் இளித்துக் கொண்டு கும்பிடு போட்டான். 

அவர்கள் நகர சொடக்குப் போட்டு கூப்பிட்டான். 

“ஏய்! இவன் இங்கே இருக்கட்டும்”என்று மண்ணுவைப்பார்த்துக் கூற எசக்கி தலையை வறட்டு வறட்டென்று சொறிந்து கொண்டான். 

“ஷாமி! இவோனில்லாம நா காட்டுக்கு போ முடியாது ஷாமி. எம்பொஞ்சாதி என்னை விளாராலே விளாசிடுவா. வூட்டுக்குள்ளே ஏத்தமாட்டா. இவன் எம் மச்சா சாமி. “

“வாட் “

“மச்சா…..மச்சா..எம் பொஞ்சாதியோட ஒம்பொறப்பு. “

“வேலைக்கு வச்சிக்கிட போறியா த்தொர “

” த்தொர அவனுக்கு நாஞ்சொன்னாத்தான் வெளங்கும் இல்லேன்னா மண்ணு தான் “

பெய்லி யாரையோ கூப்பிட்டு எதுவோ சொல்ல இருவரையும் அவன் உள்ளே அழைத்துப் போனான். 

பனையோலைக்கூண்டிலிருந்த விடைக்கோழி காடை கௌதாரி புறாக்களுடன் சாக்குப் பையிருந்த மான்குட்டிகளும் உள்ளே வந்தன. 

நான்காம் நாள் பெய்லி மாளிகை விருந்துபச்சாரத்தில் ரெண்டு பட்டது. 

குதிரை பூட்டிய சாரட்டு வண்டிகளில் வந்திறங்கியவர்களை எதிர் கொண்டு அழைத்தான் பெய்லி. 

விருந்துண்ணும் அறையில் நீள்வட்ட  உணவு மேஜையும் சுற்றிலும் நாற்காலிகளும். அலங்கார விரிப்புகள் விரிக்கப்பட்டு இருந்தன தலைக்கு மேலே கண்ணாடிக் கூண்டுகளில் விளக்குகள் பொருத்தப்பட்டு ஒளியூட்டின. சாளரங்களுக்கு புதுத்திரைச்சீலைகளும் பூஜாடிகளில் புத்தம்புதிய பூக்களும் இடம் பெற்றன. 

விருந்து பறிமாறும் முன்னே மதுக்கிண்ணங்கள் நிறைந்தன. 

கூடவே சூடான உணவு வகைகள் வரிசையாக வந்தன.

மிளகு போட்டு நெய்யில் வதக்கிய மாமிச வகைகள்  வாட்டி வெண்ணை தடவப் பட்ட ரொட்டிகள் வேகவைத்த காய்கறிகள் என்று பறிமாறப்படும் போதே உதவிக்காக மண்ணு மாத்திரமே அனுமதிக்கப் பட்டான். இரண்டு ஆங்கிலேய வேலைக்காரர்கள் தேவைக்கேற்ப ஸ்டைலாக பறிமாற உணவு தீரத்தீர மண்ணு மட்டுமே வெளியே போய் கொண்டு வந்தான்

வெஸ்லியும் ஜோயலும் பெய்லியிடம் கேள்வியாய் பார்க்க. கர்னல்பெய்லி “இவன் செவிட்டூமை.  நாம் பேசிக் கொள்கிற விஷயமோ மிகவும் முக்யமானது. இவனால்  விஷயம் வெளியே போக வாய்ப்பில்லை. செர்வெண்ட்ஸ் எல்லோரையுமே அனுப்பி விட்டேன். “

 என்றான்.




ஆயினும்  ஜோயல் கையைத் தட்டிக் கூப்பிட்டான். மற்ற இருவரும் உடனே திரும்பிப் பார்க்க தலைகுனிந்து நின்ற மண்ணுவோ  கோழித் துண்டங்கள் நிரம்பிய பீங்கான் கோப்பையை நகர்த்தி வைத்து விட்டு கண்ணாடி தம்ளர்களில் நீர் வார்த்தான்.

பெய்லி சிரித்துக் கொண்டே தனக்கு அருகில்  தொங்கிக் கொண்டிருந்த பித்தளைத் தகட்டில் அதன் மேலே செருகியிருந்த மரத்தண்டை உருவி “டணால்,டணால்”என்று ஓசை வரும்படி மூன்றுமுறை அடித்தான். 

அந்த மூடப் பட்டிருந்த அறைக்குள் அந்த ஒலி பேரோசையாய் வியாபித்தது. திடீரென எழுந்த ஒலியில் ஜோயலுக்கு புரையேறியது.கண்கள் சிவக்க. இருமினான்.

மண்ணுவோ அமைதியாக சிரத்தையுடன் நீர் வார்த்து முடித்து சுவரோரமாய் தலைகுனிந்து நின்று கொண்டான்.

“வெல்டன்! வெல்டன்”

எல்லோருமே வாய்விட்டு சிரிக்க அப்போதுமே தலை நிமிர்த்தவேயில்லை மண்ணு. 

 “கர்னல் ஹாரிஸ் வருவார் என்றிருந்தேன்”

(ஆங்கில உரையாடல் தமிழில் இங்கு மாற்றப்பட்டுள்ளது)

“எப்படி மிஸ்டர் பெய்லி. அவர் அந்த தீரன் சின்னமலையின் கையெறிகுண்டுகளால் நடந்த தோல்வியில் மனம் குலைந்து போய் விட்டார். “

“ஆனாலும் அவனென்ன பிசாசா? வெறுமனே கையெறி குண்டுகளாலேயே நாசம் செய்து விட்டானே! “

#”அறச்சலூரில் தான் அப்படி ஆடித்தீர்த்தான் எனில் இங்கே சென்னிமலை சிவலைக்கிடையே ##சிலம்பாட்டம் ஆடினானே ! அவனால் உண்டாகிற பிரச்னை வளர்ந்து கொண்டே போகிறது. அவனை கொன்று போட்டால் ஒழிய இந்த ஜனங்கள் நம்மை மதிக்க மாட்டார்கள். அவனுடைய கொங்கு படையையே வேரறுத்து விட வேண்டும். “

“அதற்காகத்தான் நான் ஒரு திட்டம் வகுத்துள்ளேன்”

அடுத்து உண்பதும் தீரனுக்கெதிரான சதித் திட்டங்களுமாய் விடியலைத் தொடும் வரை பேசி முடித்து மது மயக்கத்தில் போய் உறங்கினர். 

மறுநாள் மாலைப்பொழுதில் அனைவரும் புறப்பட்டு விட பெய்லியும் அதற்கடுத்த நாள் புறப்பட்டான். 

புறப்படு முன்னே தன் கையிலிருந்த.  பூண் போட்ட சிறு மரத் தண்டினால் மண்ணுவின் தோளில் தட்டி அவன் கையில் ஒரு நாணயத்தை தூக்கிப் போட்டான். கண்கள் விரிந்து பளிச்சிட ஆசையோடு  அதைப் பார்த்தவன் கண்ணில் ஒற்றிக்கொண்டு கும்பிடு போட்டான். 

கோவைக்கோட்டை சதி வேலை இந்த விருந்துண்ட இரவில் தான் ஆரம்பமாயிற்று. 




அரச்சலூர்  நெருங்கும் சமயம் அருகே யிருந்த ஓடையில் எசக்கியும் மண்ணுவும் இறங்கி நீராடினர். 

எசக்கி நீராடியவன் தண்ணீரைத் தொட்டுக் கொண்டு ஆடிக் கொண்டிருந்த விழுதை பிடித்துக்கொண்டு மேலேறினான். சரசரவென ஏறியவன் மரக்கிளையைப்பற்றிக்கொண்டு தாவித்தாவி ஓரிடத்தை அடைந்து அங்கே கிளையில் கட்டப்பட்டு இருந்த துணி மூட்டையை மரத்தினடியில் எறிந்துவிட்டு மீண்டும் நீரில் குதித்தான்.

கரையேறிய இருவரும் மூட்டையை பிரித்து வேறு உடையை அணிந்தனர்.இடுப்புப் பட்டையில் குறுவாட்களை செருகிக் கொண்டு நிமிர்ந்தவன் தோற்றமே மாறியிருந்தது. கையிலெடுத்து உதறிய பழைய ஆடையினின்றும் நாணயம் ஒன்று நழுவி உருண்டோடியது.

அதை எடுத்து ஓடைநீரில் வீசியெறிப் போனவனின் கரத்தைப் பிடித்து மற்றவன் கை.

“வேண்டாம் தீர்த்தா! இது நம்முடைய நாட்டின் லட்சூமி. அதை உன் கையால் தூக்கி எறிந்து விடாதே.தனலட்சுமியோடு உன் கையில் ராஜ்யலட்சுமியும் தங்க வேண்டும்.இதை நாம் யாருக்காவது தருவோம். இல்லை இதை வைத்து அடுத்த ஊர் சத்திரத்தலைவர் மூலம் இரண்டு புரவிகளை சம்பாதித்துக் கொள்வோம்”

என்றபடியே வாங்கிக் கொண்டான்.

“எனக்கு அத்தனை ஆத்திரம் வந்தது கருப்பா. அந்தக்கும்பினியான்களுக்கு என் கையால் சேவை செய்தேனே. இதை தீயில் வைத்துப் பொசுக்க வேண்டும்.”

“தீர்த்தா! உளராதே. எத்தனை விஷயங்களை அறிந்து வந்துள்ளோம். அதை கவனி. எனக்குமே விருந்திலே விடம் வைத்து விடலாமா என்றுதான் தோன்றியது. ஆனாலும் நாம் பொறுத்துத்தான் ஆகவேண்டும். நாம் இவர்களை மண்ணை கவ்வ வைக்கப் போகிறோம். வெற்றி நமதே. விரைவில் ஓடாநிலைக்குப் போய் சரியான திட்டங்களைத் தீட்டிட வேண்டும் புறப்படு .”

“உன்ன எப்படியெல்லாம் சோதித்தானடா அந்த பெய்லி. திக்கென்று ஆகி விட்டது வெங்கல ஜாடியை தூக்கிப் போட்டதும். ஆனால் நீ திரும்பவேயில்லை”

கருப்ப சேர்வை சொல்ல தீரன் சிரித்தான்.

“அது மட்டுமா? விருந்தின்போது என்னை சோதிக்கவென்றே அந்த சேமங்கல அழைப்புமணியை அடித்தான் பார். டணால் டணால் என்று. திடுக்கிட்டு விட்டேன். என்னவோ போ! வில்வநாதர் கருணையோ என்னவோ…. என் எதிரேயிருந்த ஆழியில் அவன் உருவம் தெரிந்தது. அவன் மணியின் மரத்தடியை உருவினது புலப்பட்டதுமே உஷாராகி விட்டேன். பின்பு நான் ஏன் கண்டு கொள்கிறேன்….நம்பிவிட்டார்கள் மடையர்கள். பெய்லி மஹாக் கொடுரமானவன். என்னோடு உதவிய அந்த இரு ஆங்கிலேயரையும் விருந்து முடிந்த இரவே  கொன்று விட்டான்.யாரையும் அவனைச் சார்ந்தவர்களைக் கூட நம்பவில்லை. நீயோ அன்றிரவு மதுவருந்தி மயங்கி ஸ்மரணை இல்லாமல் கிடப்பது போல் கட்டையாய் சமையலறைக்கு பின்னே கிடந்தாய்.காலால் எத்திவிட்டுப் போய் விட்டான்.நான் செவிட்டூமை என்பதால் தப்பித்தேன்”

நண்பர்கள் இருவரும் வாய்விட்டு சிரித்தபடி நகர்ந்தனர்.

விதியும் கோர விழிகளால் இருவரையும் உறுத்து விழித்தது.

(தீரன் வருவான்)

#1803 அறச்சலூர் அருகே கர்னல் ஹாரிஸின் படையை கையெறி குண்டுகளாலேயே துவம்சம் செய்த தீரன் சின்னமலையின் செயல் வரவாற்றில் பேசப்படுகிறது.

##1802ல் சிவன்மலை சென்னிமலையிடையே ஆங்கிலேயப்படைகளை சிலம்பமாடியே தோல்வியுற வைத்ததாக குறிப்புகள் கூறுகின்றன.

தீரா…நிலதீரா…!




What’s your Reaction?
+1
3
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
Subscribe
Notify of
guest

0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!