Serial Stories மனமென்னும் ஊஞ்சலேறி

மனமென்னும் ஊஞ்சலேறி-14

14

“தாரு எப்படி இவ்வளவு சின்ன ரூமுக்குள் படுத்துக் கொள்கிறீர்கள்? மூச்சு முட்டவில்லை?” திவ்யா அவர்கள் படுக்கை அறைக்குள் நடுவில் நின்று சுற்றிலும் விழிகளை சுழற்றியபடி கேட்டாள்.

“ஏன் திவ்யா இந்த அறைக்கு என்ன? நன்றாகத்தானே இருக்கிறது”

” உனக்கு அப்படித்தான் தெரியும். சென்னைக்கு வந்து எங்கள் பெட்ரூமைப் பார். அப்போது தெரியும் வித்தியாசம்”

ஒன்றாக திருமணம் முடித்தவர்கள் ஒருவருக்கொருவர் விருந்து கொடுத்துக் கொள்ளட்டும் என்று எல்லோரும் பேசி முதலில் அஸ்வினும் திவ்யாவும் அவர்கள் வீட்டிற்கு விருந்திற்கு வந்திருந்தனர்.

பழமையை போர்த்தியிருந்த 

பூரணசந்திரனின் வீடு திவ்யாவின் கேலிக்கு உள்ளானது. அந்த வீட்டின் ஒவ்வொரு அறையிலும் நின்று கொண்டு விமர்சித்துக் கொண்டிருந்தாள்.

“வெஸ்டர்ன் இல்லாமல் எப்படி தாரு? உனக்கு இந்தியன் டாய்லெட் பழக்கமில்லையே?”

“அதெல்லாமில்லை திவ்யா. இன்னமும் எனக்கு மூட்டு வலி எதுவும் வரவில்லையே! இந்தியன் டாய்லெட்தான் பெஸ்ட் என்று உனக்கு தெரியாதா?”

“ஏன் தாரு அழகாக ஒரு கப்போர்ட் வைத்துக் கொள்ளத் தெரியாதா? இன்னமும் இந்த ஸ்டீல் பீரோவை வைத்துக் கொண்டிருக்கிறீர்களே?”

” இதென்ன கட்டில் இப்படி உயரமாக கோபுரம் போல் நீட்டிக்கொண்டு… நன்றாகவா இருக்கிறது?”

“இந்த டிசைன் எனக்கு மிகவும் பிடிக்கும் திவ்யா” கட்டிலின் தலைமாட்டில் அமைந்த தாமரைக் குளத்தின் அல்லிகளை வருடியபடி சொன்னாள் தாரணி.

“கிடைப்பதில் திருப்தி படும் மனம் உன்னுடையது. பாவம் நீ வேறென்ன சொல்வாய்? இப்போது எனக்கு உறுதியாக ஒன்று தோன்றுகிறது நல்ல வேளை நான் தப்பித்தேன்”

“என்ன தப்பித்தாய்?”

“ஒருவேளை அப்பா என்னை இங்கே தள்ளிவிட நினைத்திருந்தால்,

நல்லவேளை அந்த நேரத்திலாவது அப்பாவிற்கு இவள் நாம் பெற்ற மகளென்ற எண்ணம் இருந்ததே”




எப்போதும் போல இப்போதும் தாரணியின் மனதை புண்படுத்துவது ஒன்றே நோக்கமாக பேசிக்கொண்டே போனாள் திவ்யா.

“பெரியப்பாவிற்கு எப்போதும் நாம் இருவருமே ஒன்றுதான்” சன்னமாய் முணுமுணுத்தாள் தாரணி.

“ஆமாம் ஒன்றுதான்” களுக்கென்ற  அனாவசிய சிரிப்பு ஒன்று திவ்யாவிடம்.

“தாரு உன் அக்காவை சாப்பிட அழைத்து வா”  வெளியே இருந்து பூரணசந்திரன் அழைக்க இருவரும் வெளியே வந்தார்கள்.அங்கே பூலணசந்திரன்  அருகே பிரமிப்பாய் வீட்டை சுற்றி சுற்றி பார்த்தபடி நின்றிருந்தான் அஸ்வின்

“ப்ரோ உங்க வீடு சூப்பர்! அப்படியே ஆன்ட்டிக் லுக். இது போன்ற வீடுகளெல்லாம் இப்போது அழிந்து கொண்டே வருகிறது. இப்படியெல்லாம் வீடு அமையப்பெற்றவர்கள் அதிர்ஷ்டசாலிகள் தெரியுமா?” அண்ணாந்து மேலே இருந்த கட்டை குத்து கூரையை பார்த்தபடி சொன்னான்.

“போதும் வாயை மூடுங்கள்” திவ்யா கணவனிடம் எரிச்சலாய் முணுமுணுப்பதை புன்னகையோடு பார்த்தபடி அவர்களுக்கு உணவை எடுத்து வைக்க தொடங்கினாள் தாரணி.

“இன்னும் பத்து வருடங்கள். அந்த ஃபாரின் கம்பெனிக்கு உழைத்துக் கொட்டி, கொஞ்சம் பணம் சேர்த்து விட்டு, இது போன்ற ஒதுக்குப்புறமான இடத்திற்கு வந்து வீடு ,தொழில் என்று செட்டிலாகி விட வேண்டும் ப்ரோ. இதுதான் என்னுடைய லட்சியம்” அஸ்வின் சொல்ல திவ்யாவின் முகம் கன்றியது.

 அவள் சற்று முன்தான் அஸ்வின் அமெரிக்கா போகும் ஏற்பாடுகளில் இருப்பதாகவும், சீக்கிரமே  அமெரிக்கா கிளம்பி அங்கேதான் செட்டில்டு என்று தாரணியிடம் சொல்லி வைத்திருந்தாள்.

“சாப்பிடும் போது நச நசவென்று என்ன பேச்சு? பேசாமல் சாப்பிடுங்கள்” அஸ்வினை அதட்டினாள்.

” பார்த்தீர்களா ப்ரோ, கல்யாணம் முடிந்ததும் நமக்கு நான்கு வார்த்தை பேசும் சுதந்திரம் கூட போய் விடுகிறது” அஸ்வினின் சலிப்பில் நிறைய உண்மை இருப்பது போல் தோன்றியது தாரணிக்கு.

“கருவாட்டுக் குழம்பும், கருப்பட்டி அப்பமும், என்ன சாப்பாடு இது? இதெல்லாம் எங்களுக்கு பழக்கம் கிடையாது” திவ்யா தனது கோபத்தை வேறு பக்கம் திருப்பினாள்.

 வெளிப்படையான அவளது இந்த குற்றச்சாட்டில் சுந்தராம்பாள் முகம் வாடி நிற்க, தாரணியின் முகம் கோபத்தில் சிவந்தது.

“சும்மா எதையாவது சொல்லாதே திவ்யா. நம் வீட்டில் கூட நாம் வெயில் காலங்களில் கேப்பைக் கஞ்சியும் கம்மங்கஞ்சியும் சாப்பிடுவதில்லையா? கருவாட்டு குழம்பு நீ சாப்பிட்டதே இல்லையா? கருப்பட்டியில் பணியாரம் செய்தால் இன்னமும் நான்கு வாங்கி தின்பாயே!”  போட்டு உடைத்தாள்.

திவ்யாவின் முகம் தொங்கிப் போனது. “நான் அஸ்வினுக்காக சொன்னேன்” குரல் கம்மியது.

“ஒரு வீட்டிற்கு சாப்பிட சென்றோமானால் அவர்கள் வீட்டுப் பழக்க உணவுகளை ருசிக்க பழக வேண்டும் திவ்யா. நாம் இங்கு வந்ததிலிருந்து சமையல் வாசனை எப்போதடா சாப்பிடுவோம் என்று நினைக்க வைத்துக் கொண்டிருந்தது. இதோ சாப்பிட்டு சொல்கிறேன்” ஆவலுடன் உட்கார்ந்த அஸ்வின் ஒவ்வொன்றையும் ரசித்து ருசித்துச் சாப்பிட திவ்யா முகம் மாறாமல் இருக்க மிகுந்த சிரமப்பட்டாள்.

இரண்டு நாட்கள் தங்க வேண்டும் என்று பேசி வந்தவர்கள், அன்று இரவே சென்னை கிளம்பினார்கள். “ஏன் திவ்யா நான் ஏதாவது தவறாக பேசி விட்டேன்?சாரிம்மா” தாரணிக்கு வீட்டு விருந்திற்கு வந்தவளை அதிகமாக பேசிவிட்டோமோ என்ற குன்றல் வந்திருந்தது.

“அவருக்கு நாளை ஒரு முக்கியமான மீட்டிங் இருக்கிறது. நாங்கள் கிளம்புகிறோம்” வீட்டினர் அனைவரும் வாசல் வரை வந்து வழியனுப்ப அடுத்த வாரம் விருந்துக்கு வரும்படி அழைத்துவிட்டு அவர்கள் கிளம்பினார்கள்.

சுந்தராம்பாள் உள்ளே போக, அவர்கள் கார் தெரு முனையில் திரும்புவதை பார்த்து நின்றாள் தாரணி.

“என்ன சந்திரா வீட்டிற்கு விருந்தாட்கள் போல?” எதிர் வீட்டு சுப்பையா அவர் வீட்டு வாசலில் நின்று கேட்டபடி வாசல் விளக்கை அணைத்துவிட்டு கதவை பூட்டி உள்ளே போக ஆயத்தமானார்.

“ஆமாம் அண்ணா என் மனைவியின் அக்காவும் கணவரும் விருந்துக்கு வந்து விட்டுப் போகிறார்கள்” சொல்லிவிட்டு இங்கேயும் பிரகாசமாக எரிந்து கொண்டிருந்த வாசல் முகப்பு விளக்கை அணைத்தான் பூரணசந்திரன்.

“நாளைக்கு தறி ஓட்ட வந்துடறேன்பா” சொல்லிவிட்டு சுப்பையா உள்ளே போய் கதவை பூட்டிக்கொண்டார். நான்கு வீடு தள்ளி எரிந்து கொண்டிருந்த தெருவிளக்கின் வெளிச்சம் மங்கலாக இங்கே விழ, லேசான வெளிச்சத்தில் ஒருவித நயத்துடன் தெரிந்த தெருவை ரசனையுடன் பார்த்துவிட்டு திரும்பிய தாரணியின் உடலில் ஒரு சிலிர்ப்பு ஓடியது. 

பூரணசந்திரன் அவளுக்கு மிக அருகே நின்றிருந்தான். அவன் மூச்சுக்காற்று அவள் நெற்றியை சுடும் அளவு நெருக்கம்.

“இந்த வருடம் முழுவதும் உனது படிப்பு முக்கியம். அதனால் இது போல் உன் கவனத்தை திசை திருப்பும் சூழல்களை உண்டாக்கக் கூடாது என்றுதான் நினைத்திருந்தேன். ஆனால் இன்று..

” என்றவன் பேச்சை நிறுத்தி அவளை இறுக தழுவினான்.




 பின் கழுத்தில் இதழ் பதித்தவன் “உன் அக்காவின் குத்தல் பேச்சுக்களையெல்லாம் சமாளித்து எனக்காக, அம்மாவிற்காக,நம் வீட்டிற்காக பேசியதற்கு மிகவும் நன்றி “நெகிழ்வான குரலில் பேசியவன் இன்னமும் அழுத்தி அவளை இறுக்கி அணைத்து சில நொடிகள் நின்று விட்டு பிறகு சட்டென விடுவித்தான்.

” உள்ளே போய் தூங்கு,நான் கதவை வெளிப்புறமாக பூட்டிக்கொண்டு, ஒரு வாக் போய்விட்டு வருகிறேன்’

தாரணி நடந்துவிட்ட செயலின் தாக்கத்திலிருந்து மீள முடியாமல் அவனை பரக்க பார்த்து நிற்க “போடா கண்ணு” குழந்தை கொஞ்சல் போல் குரல் குழைத்தவன் அவள் இரு தோள்களையும் பற்றி படியை விட்டு வீட்டின் உள்ளே இறக்கி தள்ளிவிட்டு, வேகமாக வாசல் கதவையும் இழுத்து பூட்டிக்கொண்டு போய்விட்டான். பொம்மை போல் நடந்து வந்து படுக்கையில் விழுந்த தாரணிக்கு வெகு நேரம் தூக்கம் வரவில்லை.

——

தாரணிக்கு கல்லூரி ஆரம்பித்துவிட்டது. பஸ்ஸெல்லாம் வேண்டாம் இருவரும் சேர்ந்தே போகலாம் என்று பூரணசந்திரன் தினமும் பைக்கில் அவளை அழைத்து போய் கல்லூரி வாசலில் இறக்கிவிட்டு விட்டு தனது ஹோட்டலுக்கு திரும்பினான்.

புவனா பற்றிய கவலையோடுதான் தாரணி கல்லூரிக்குள் அடியெடுத்து வைத்தாள். முதலில் அவள் கண்ணில் பட்டதும் புவனாதான். பூரணசந்திரனுடன் பைக்கில் வந்து இறங்குவதை பார்த்தவள் முகத்தை திருப்பிக் கொண்டு போனாள்.

அதன் பிறகு தாரணி அவளிடம் பேச முயன்ற ஒவ்வொரு முறையும் அவளுக்கு தோல்விதான். “ஒரு வார்த்தை முன்பே சொல்வதால் மேடம் தலையில் இருக்கும் கிரீடம் இறங்கி விடுகிறதாக்கும்?” இந்த ரீதியில் தாரணியின் காது படவே பிறரிடம் பேசிக் கொண்டிருந்தாள்.

“என்ன விஷயம் கண்ணு?” பைக்கில் திரும்ப வரும் பொழுது அவள் முகத்தை கவனித்துவிட்டு கேட்டான் பூரணசந்திரன்.

” ஒன்றுமில்லை”

” ஒன்றும் இல்லாததற்கு முகம் எதற்கு இப்படி வாடி கிடக்கிறது? கல்லூரியில் எதுவும் பிரச்சனையா? என்னிடம் சொல்லக் கூடியதாக இருந்தால் தாராளமாக சொல் கண்ணு. என்னால் முடிந்தால் தீர்வு சொல்வேனே”

 பிரச்சனையே நீதான்டா! மனதிற்குள் நினைத்துக் கொண்டு மௌனமாக வந்தாள் தாரணி. பைக்கின் கண்ணாடியை அவள் முகம் பார்க்கும்படி திருப்பி வைத்துக் கொண்டவன், “நாம் இருவரும் பிரண்ட்ஸ் என்று பேசிக் கொண்டோமே மறந்து விட்டதா?” மீண்டும் வலியுறுத்தினான்.

 தாரணிக்குமே இந்த பிரச்சனைக்கு யார் மூலமாகவாது தீர்வு கிடைத்தால் சரியென தோன்றிவிட பொதுவாக, ஒரு பொருள் சந்தர்ப்ப சூழ்நிலையால் தனக்கு வாய்த்து விட அதனை தோழியிடம்  மறைக்க நேர்ந்து விட்டதால் அவள் கோபப்பட்டு பேசாமல் இருப்பதாக சொன்னாள்.

ஒரு நிமிடம் பேசாமல் வண்டி ஓட்டியவன் “எனக்குத் தெரிந்தவரை உங்கள் இருவருக்குமிடையே இருக்கும் பிரச்சனை அந்த பொருள் இல்லை. நீ அவளிடம்  மறைத்ததுதான். தன்னுடைய பிரண்ட்ஷிப்புக்கு நீ மரியாதை தரவில்லை என்று உன் தோழி நினைக்கிறாள். இதனை சரி செய்து விட்டாயானால் பிரச்சனை முடிந்துவிடும்”

 தாரணி தன் தலையில் தானே தட்டிக் கொண்டாள். இது ஏன் அவளுக்கு தோன்றாமல் போனது? அவள் தலை தட்டலை கண்ணாடியில் பார்த்தவன் புன்னகைத்தான்.

“நாளை முயற்சி செய்து பார்த்து விட்டு  நல்ல ரிசல்ட் சொல்லணும் கண்ணு”

மறுநாள் கல்லூரியில் புவனாவை தேடிப்போன தாரணி அவள் இரு கைகளையும் பற்றி கொண்டாள். “சாரிடி புவனா” சுற்றியிருப்பவர்களை பற்றிய கவலையின்றி மன்னிப்பு கேட்டாள்.

” இந்த கண்ணாமூச்சி விளையாட்டை இன்றோடு முடித்துக்கோங்கடி” மற்றவர்கள் அவர்களுக்கு தனிமை கொடுத்து விலகினர்.

” அப்பாவால் ஒதுக்கப்பட்டு பெரியப்பா வீட்டில் வளர்ந்த பெண் நான். எனக்காக ஒரு திருமணத்தை அவர்கள் ஏற்பாடு செய்யும்போது தடுக்க முடியுமா சொல். இந்த திருமண விபரமே எனக்கு தாமதமாகத்தான் தெரியும்.என்னை நம்பு புவனா”

அவ்வளவுதான் புவனா கண்கள் கலங்கி விட்டாள் “இதை ஏண்டி நீ அன்றே சொல்லவில்லை? உன்னுடைய இக்கட்டான நிலைமை எனக்கு ஓரளவு தெரியும். இப்படி இருந்திருக்கலாம் என்று நானும் யோசித்திருக்க வேண்டும்.சாரிடி” தாரணியின் கைகளை எடுத்து தன் கன்னத்தில் வைத்துக் கொண்டாள் புவனா.

“ஏய் அங்கே பாரு குழந்தைங்க பழம் விட்டாச்சு” தள்ளி நின்று இவர்களை பார்த்துக் கொண்டிருந்த தோழிகள் ஆர்ப்பரிக்க சிரித்தபடி அவர்களுடன் இணைந்து கொண்டனர். மிகப்பெரிய பாரம் இறங்கி தாரணியின் மனது லேசானது.

 இதற்கு காரணமான கணவனுக்கு மனதிற்குள் நன்றி சொல்லிக் கொண்டவள் ,இது பற்றாது அவனுக்கு நன்றி வேறு எப்படி சொல்லலாம் யோசிக்க தொடங்கினாள்.




What’s your Reaction?
+1
46
+1
24
+1
4
+1
0
+1
0
+1
0
+1
0
Subscribe
Notify of
guest

0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!