Serial Stories மனமென்னும் ஊஞ்சலேறி

மனமென்னும் ஊஞ்சலேறி-13

13

மறுநாள் காலை தாரணி எழந்தபோது நன்றாக விடிந்திருந்தது. கடக்.. கடக் என்ற சத்தங்கள் பக்கவாட்டு ஜன்னல் வழியே வந்தது. இது என்ன சத்தம் யோசித்தபடி பார்வையை திருப்பியவள் லேசாக விதிர்த்தாள். இவன் எப்போது வந்தான்? காலையில் எப்போது எழுந்தான்?

கட்டிலின் எதிர்புறம் இருந்த கண்ணாடி முன்பு தலை வாறியபடி நின்றிருந்தான் பூரணசந்திரன். அப்போதுதான் குளித்துவிட்டு வந்திருப்பான் போலும், வெற்று முதுகில் திரண்டு மின்னின நீர் துளிகள். 

கற் பாறை மீது பூத்திருக்கும் நீர் மொட்டுக்கள், இப்படி தோன்றிய உடனேயே தாரணிக்கு சிரிப்பு வந்தது.சரிதான் கவிதை எல்லாம் எழுத ஆரம்பித்தாயிற்றா? தன்னைத்தானே கேட்டுக் கொண்டு மெல்ல எழுந்தவள், அதிர்ந்தாள்.

 அவள் உடை தாறுமாறாக கலைந்திருந்தது. இப்படி சேலை கட்டிக்கொண்டு படுத்து பழக்கம் இல்லாததால் …இப்படி.எங்கெங்கோ பறந்த உடையை இழுத்து மேலே போர்த்திக் கொண்டாள். சங்கடத்துடன் எதிரில் இருந்தவனை பார்த்தாள்.இவன் கண்ணிலும் பட்டிருக்கும்தானே? சை, இப்படியா தூங்குவேன்!

“குட் மார்னிங்மா, சீக்கிரம் குளித்து சாப்பிட்டுவிட்டு கிளம்பு” கண்ணாடியில் இருந்து திரும்பாமலேயே பேசினான்.

“எங்கே ?”

“உன் காலேஜிற்கு, நீ படிப்பை தொடர போகும் விஷயத்தை உன் பிரின்ஸ்பாலிடம் பேசிவிட்டு வந்துவிடலாம்”

“அவருக்கு தெரியும். நான் முன்பே சொல்லியிருக்கிறேன்”

“இருக்கட்டும் ,இப்போது உன் கணவனாக நான் வந்து உறுதி சொன்னால் அவருக்கு சந்தோசமாக  இருக்குமில்லையா? இன்னமும் பத்து நாட்களில் காலேஜ் ஆரம்பிக்கப் போகிறது. வேறு ஏதும் விபரங்கள் இருக்கிறதா என்றும் கேட்டு வரலாம் கிளம்பு” வெற்று முதுகில் ஒரு துண்டை எடுத்து போர்த்திக் கொண்டு, அவள் பக்கம் திரும்பாமலேயே அறையை விட்டு வெளியே போய் விட்டான்.

 தாரணி எழுந்து நின்று வேகமாக சேலையை சுற்றிக் கொண்டாள்.”இனி நைட் சூட் போட்டுத்தான் படுக்கணும்”

அவர்கள் கல்லூரியை அடைந்தபோது மணி ஒன்பது.”பத்து மணிக்குத்தான் பிரின்சிபல் வருவார்” தாரணி சொல்ல, “தெரியும். கடையை ஒரு பார்வை பார்க்கலாம் என்று சீக்கிரம் கிளம்பி வந்தேன்” பூரணசந்திரன் கடைக்குள் நுழைய, தாரணியும் மெல்ல உள்ளே போனாள்.




 அதோ அந்த டேபிளில்தான் அன்று உட்கார்ந்து டீ குடித்தாள். உடன் புவனாவின் நினைவும் வர மனதிற்குள் ஒரு வெற்றிடம் உருவானது. திருமணத்திற்கு கூட இப்படி வராமல் இருந்து கொண்டாளே, ஏன் அவ்வளவு எரிச்சல் என் மேல்?

” என்ன விஷயம் கண்ணு?” 

பூரணசந்திரன் அவள் அருகே சற்று நெருங்கி நின்று அவள் முகத்தையே பார்த்தபடி இருந்தான். நொடியில் தன் வருத்தத்தை உணர்ந்து கொண்டு விசாரிப்பவனை புன்னகையுடன் பார்த்தாள். “ஒன்றுமில்லை காலேஜ், படிப்பு, தோழிகள் என்று ஞாபகம் வந்தது”

“சரி அப்படி போய் உட்காருவாயாம் நான் சூடாக மசாலா டீ போட்டு வருவேனாம்” கண்களை சிமிட்டி விட்டு டீ பார்லரை நோக்கி நடந்தான். தாரணி விழித்தாள். அன்று நாங்கள் டீ குடிக்க வந்ததை நினைவில் வைத்திருக்கிறானா?

டீ கப்புடன் வந்தவனின் முகத்தில் அப்படி அவளை தெரிந்து கொண்டதற்கான ஜாடை எதுவும் இல்லை. நிம்மதி பெருமூச்சுடன் டீயை எடுத்துக் கொண்டவள் துளித்துளியாய் ருசித்து பருகலானாள். பாதி கப் காலியான பிறகே கவனிக்க எதிரில் அமர்ந்து அவளையே பார்த்துக் கொண்டிருந்தான் அவன்.

சாக்லேட்டை ருசிக்கும் குழந்தையை பார்க்கும் பார்வை.

அந்தப் பார்வை தாளாது தடுமாறியவள் “நேற்று இரவு எங்கே போனீர்கள்?” பேச்சை மாற்றினாள்.

” சும்மா, ஜஸ்ட் ஒரு வாக்”. 

அந்த நேரத்திலா?”

” அது… ஒரு காரணம் இருக்கிறது கண்ணு. அந்நேரத்திற்கு நான் அங்கே இருந்தால், உன் கையில் பால் சொம்பை கொடுத்து உள்ளே  உள்ளே அனுப்பி, ஆசீர்வாதம் அது இதுவென்று ஏகப்பட்ட சடங்குகளை செய்வார்கள் அம்மாவும், அக்காவும். உனக்கு சங்கடமாக இருக்கும். அதை தவிர்ப்பதற்காக தான் வெளியே போய் விட்டேன். நீ தூங்கட்டும் என்று நினைத்தேன்” ஆக அவள் தூங்கிய பிறகு வந்திருக்கிறான்.

மசாலா டீயில் தேன் சுவை சேர்ந்தாற் போல் இருந்தது தாரணிக்கு. 

“காலையில் ஏதோ கடக் கடக்கென்ற சத்தம் கேட்டது. என்ன அது?” அவன் பார்வையில் இருந்து தப்புவதற்கு பேச்சை திரும்பினாள்.

“தறி ஓடுகிற சத்தம் கண்ணு. நமக்கு பத்து தறிகள் சொந்தமாக இருக்கிறது” தாரணி விழி விரித்தாள் இந்த விபரம் அவளுக்கு சொல்லப்படவில்லை.

“நான் தறியை பார்த்ததே இல்லையே பார்க்கலாமா?” ஆவலாக கேட்டாள்.

” பார்க்கலாமே !இன்று வீட்டிற்கு போனதும் பார்க்கலாம். உன்னுடைய நிச்சய பட்டு கல்யாண பட்டு எல்லாம் நம்முடைய தறியில் நானே நெய்தது” 

 உடன் ஒருவகை குளிர் தென்றல் உடலை அரவணைத்தாற் போல் உணர்ந்தாள் தாரணி. கணவன் கையாலேயே நெய்த பட்டினை உடுத்துவதென்றால் அது ஒரு வகை மகிழ்ச்சிதானே!

“தறி ஓட்டும் தொழில் இருக்கும்போது இந்த ஹோட்டல் ஏன்?” தாரணி கேட்கவும் பூரணசந்திரனின் கண்கள்  இடுங்கியது.

” ஏன் இந்த தொழில் மட்டமா?”

” அப்படி சொல்லவில்லை .இரண்டு தொழில்களையும் கவனிக்க வேண்டுமே! கஷ்டமாயிற்றே! என்று தான்…”

 அதெல்லாம் இல்லை. தொழில் எனக்கு பிடித்த ஒன்று. தறியில் என் அப்பா காலம் போல் லாபம் நிற்பதில்லை. வேறொரு தொழில் தேடிக் கொண்டிருந்தேன். இந்த இடம் விலைக்கு வந்தது. ரோட்டு மேல் இருக்கும் இடமென்பதால் ஹோட்டலுக்கு சரியாக இருக்கும் என்று வாங்கி விட்டேன்.”

“ஆனால் தெரியாத தொழிலில் எப்படி…?”தாரணியின் மணக்கண்ணில் பூரணசந்திரன் தேர்ந்த மாஸ்டராய் காபி ஆற்றியதும் புரோட்டா பிசைந்ததும்…

“விலைக்கு வாங்கிய பிறகு, இந்த இடத்தை ஹோட்டலுக்கு ஏற்றார் போல் மாற்றும் ஆறு மாதங்கள் வரை சென்னையில் ஒரு பெரிய ஹோட்டலில் சமையல்காரனாக வேலை பார்த்தேன். அந்த அனுபவம் தந்த தைரியத்தில்தான் இங்கே தொழிலை ஆரம்பித்தேன்”

தாரணி பிரமிப்பாக விழி விரித்தாள். தொழிலில் இவனுக்கு எவ்வளவு அர்ப்பணிப்பு !இப்படிப்பட்டவன் தொழிலில் முன்னேறாமல் இருப்பானா என்ன!

” என்னம்மா இந்த வேலையில் உனக்கு எதுவும் அப்ஜெக்சன் இருக்கிறதா?” பூரணசந்திரனின் குரலில் லேசாக பிசிறுத்தட்ட, தாரணி இதழ் விரித்து புன்னகைத்தாள்.

 தன் கையை அவனை நோக்கி நீட்டினாள் “நீங்கள் கிரேட்.இதற்கு மேல் என்ன சொல்லவென்று தெரியவில்லை”




நீருக்கு மேல் தலை நீட்டி ஆடும் தண்டுடனான செந்தாமரை போல் பச்சை நரம்புகள் ஓட தன்னை நோக்கி நீண்டிருந்த வெண்கரங்களை, கருவிழி அங்குமிங்கும் உருள இரு வினாடி பார்த்தவன், சிறு தயக்கத்துடன் மெல்ல பற்றி குலுக்கினான்.

” தேங்க்ஸ், வா போகலாம்” வேகமாக கையை உருவிக்கொண்டு விட்டான்.

இருவருமாக பிரின்சிபாலை சந்தித்து அடுத்த வருட அவள் படிப்பை உறுதி செய்த பிறகு, ஆபீஸில் ஃபீஸ் எவ்வளவு என்று கேட்டு கட்டினான்.

“என்னிடம் பணம் இருக்கிறது” தயங்கிச் சொன்னாள் தாரணி. தசரதன் அவள் திருமணத்திற்கு என்று கொடுத்துப் போன பணத்தை கனகலிங்கம் அப்படியே அவள் பெயரில் அக்கவுண்டில் போட்டு விட்டிருந்தார்.

தாரணி அப்படிச் சொல்லவும்  அவளை ஒரு பார்வை பார்த்தான். “அப்பா… கொடுத்த… பணம், என் அக்கௌன்டில்…” வார்த்தைகள் துண்டு துண்டாக வர புன்னகைத்தான்.

” பத்திரமாக வைத்துக் கொள் கண்ணு. எனக்கு தேவைப்படும்போது கேட்டு வாங்கிக் கொள்கிறேன்”

“ஐஸ்கிரீம் பிடிக்கும்தானே?” கடையில் நிறுத்தினான். ஜில்லிப்பான ஐஸ்கிரீம் தொண்டையில் நழுவி வயிற்றில் விழுந்த போது வயிறோடு உடல் முழுவதும் குளிர்ந்தது தாரணிக்கு.

“உங்கள் கடையில் ஐஸ்கிரீம் வைத்திருக்கிறீர்களா?₹

“நம் கடை என்று சொல்லு கண்ணு. நீ நான் என்ற பிரிவு பேச்சில் கூட வேண்டாம். சில பெரிய பிராண்டுகளிடம் பேசிக் கொண்டிருக்கிறேன். நமக்கு ஒத்து வருவதை வாங்கி வைக்க வேண்டும்”

“அதற்கு பதிலாக நாம் ஐஸ்கிரீம் மெஷின் வாங்கி வைத்தாலென்ன? சாஃப்ட் ஐஸ்கிரீம். சிட்டியிலெல்லாம் இப்பொழுது பிரபலமாக இருக்கிறது. மெஷினை வாங்கி கடை வாசலில் வைத்து விட்டால் போதும்.கான்…கப்போ  வாடிக்கையாளர்களின் விருப்பப்படி பிடித்துக் கொடுக்க ஒரு ஆள் மட்டும் அருகில் போதும்”

” ம்…நான் பிராண்டடுக்காக யோசித்தேன். இது கொஞ்சம் புதுமையாக இருப்பதால் இதையே முயற்சிப்போம்”

உடனே அவளது ஐடியாவை ஏற்றுக் கொண்டதில் தாரணிக்கு சந்தோசம். ” தேங்க்ஸ்” என்றாள்.

“நல்ல ஐடியாவிற்கு நான்தானே தேங்க்ஸ் சொல்ல வேண்டும்?” 

“ஐடியா சொல்வதற்கு இடம் கொடுத்ததற்கு தேங்க்ஸ் சொல்ல வேண்டாமா?” சிரித்தபடி எழுந்து கொண்டவளை யோசனையாக பார்த்தான்.




What’s your Reaction?
+1
48
+1
25
+1
2
+1
3
+1
0
+1
0
+1
0
Subscribe
Notify of
guest

0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!