Serial Stories மனமென்னும் ஊஞ்சலேறி

மனமென்னும் ஊஞ்சலேறி-12

12

மணமகள் அறை முழுக்க உறவினர்களால் நிறைந்திருக்க, கற்பகம் தாரணியை மண்டபத்தின் பின்புறம் சற்று ஒதுக்கமான இடத்திற்கு அழைத்துச் சென்றாள். “என்ன பெரியம்மா?”

” வந்து… ஒரு முக்கியமான விஷயம் பேசணும். விடிந்தால் உங்கள் திருமணம். இரவு சாந்தி முகூர்த்தம் வைத்திருக்கிறோம்” கற்பகம் தடுமாற தாரணி புரியாமல் அவளை ஏறிட்டாள் .

“அதற்கு என்ன பெரியம்மா?”

” வந்து உன் அம்மா இருந்திருந்தாலும்,இதையேதான் உனக்கு சொல்லி இருப்பாள். அது வந்து… நீ இன்னமும் படிப்பையே முடிக்கவில்லை. ஒரு வருடத்திற்கு நீங்கள்  கொஞ்சம் ஜாக்கிரதையாக இருந்து கொண்டீர்களானால், வந்து குழந்தை உண்டாகாமல் பார்த்துக் கொண்டால்…” கற்பகம் சொல்ல வருவது தாரணிக்கு புரிய அவள் கன்னம் சிவந்தது.

 “இப்போதெல்லாம் இதற்கு நிறைய வழிகள் இருக்கிறது. எது உடலுக்கு கெடுதி இல்லாமல் இருக்கிறதோ அதை நீங்கள் இரண்டு பேரும் சேர்ந்து பேசி,ம்… உபயோகித்தர்களானால்…” வார்த்தைகள் சரளமாக வராமல் கற்பகம் திணறினாள். தாரணிக்கோ தலையை நிமிர்த்த முடியவில்லை.

“அதெல்லாம் உங்களை விட தெளிவா நாங்க பேசிப்போம். நீங்க கவலைப்படாதீங்க” திவ்யாவின் குரல் கேட்க கற்பகமும் தாரணியும் விதிர்த்தனர்.

“நீ எங்கடி இங்கே வந்தாய்?”

“எனக்கு தெரியாமல் நீ உன் தங்கச்சி பிள்ளையை ஓரமாக கூட்டிப் போனால் என் கண்ணில் படாமல் இருக்குமா? அப்போதே பின்னாலேயே வந்து விட்டேன்”

 கற்பகம் நோகாமல் தலையில் அடித்துக் கொண்டாள். “உன்னோடு பெரிய தொல்லை. இதெல்லாம் உனக்குத் தேவையில்லை. நான் தாரணியிடம் மட்டும் தான் பேச வேண்டும்”

” ஏன் எனக்குத் தேவையில்லை? எனக்கும்தான் கொஞ்ச நாட்கள் போகட்டும் என்று நினைக்கிறேன்”

” அவளுக்குத்தான் படிப்பு இருக்கிறது. உனக்கென்ன?”

” நான் கொஞ்ச நாட்கள் ஜாலியாக இருக்க வேண்டும். இதெல்லாம் நாங்க ஏற்கனவே பேசி முடிவு பண்ணிட்டோம்”

“அடிப்பாவி கல்யாணத்துக்கு முன்னாலேயேவா?”

” அம்மா நாளை இரவே ஆரம்பிக்கப் போகிற வாழ்க்கைக்கு கல்யாணத்திற்கு முன்பே பேசித்தானே ஆக வேண்டும்”

“கண்றாவி! இந்த காலத்து பிள்ளைகள் என்னவெல்லாம்  பேசுகிறார்கள்?”

“அதெல்லாம் தேவையானதை மட்டும் தான் பேசுகிறோம். நீங்கள் இந்த அட்வைஸ் கொடுக்கிறது மட்டும் கொஞ்சம் நிறுத்திக்கோங்க”

” இதுவும் அம்மாவுடைய கடமைகளில் ஒன்றுதான்டி. நான் தானே இதையெல்லாம் உங்களுக்கு சொல்ல வேண்டும். பாருங்கள் பொண்ணுகளா…அது என்னவென்றால்… நீங்கள் நாள் கணக்கை கூட பார்த்துக் கொள்ளலாம்”

“அம்மா நிறுத்துங்க,உங்க பழமையான மெத்தட் எல்லாம் எங்களுக்கு ஒத்து வராது. இதுக்கெல்லாம் ஆப் (app) இருக்குது”

“என்ன இதற்கெல்லாமா?” கற்பகத்தோடு தாரணியுமே ஆச்சரியமாக பார்த்தாள்.

“ஆமாம்மா நம்மளுடைய பீரியட் டைம்மை அந்த ஆப்ல சேவ் செய்தால் போதும், மாதத்தின் எந்தெந்த நாட்கள் பாதுகாப்பானது என்று அந்த ஆப்பே நமக்கு நினைவு படுத்தி விடும்.அதோட நம்முடைய கர்ப்பத்தையும் கூட நமக்கு முன்பே அது கண்டுபிடித்து சொல்லிவிடும்”




” அது சரி ,இதெல்லாம் உனக்கெப்படி தெரியும்?”

“அம்மா உடனே வயது பெண்ணிற்கு எப்படி இதெல்லாம்… என்று பஞ்சாங்கத்தனமான கேள்விகள் கேட்டு விடாதீர்கள். இதெல்லாம் இப்போது எல்லோருக்குமே தெரியும். கூகுளிடம் கேட்டால் சொல்லி விடப் போகிறது”

“ம்…சாட் ஜிபிடி கூட இருக்குது” தாரணியும் அவளுடன் சேர்ந்து கொள்ள,

 கற்பகம் நிஜமாகவே தலையில் அடித்துக் கொண்டாள் “என்ன கன்றாவியோ? இந்த காலத்துப் பிள்ளைங்ககிட்ட பேசவே முடியல. ஏய் தாரு நானெல்லாம் அட்வைஸ் பண்ண தேவையில்லை. உன் அக்காவிடமே கேட்டுக் கொள், வண்டி வண்டியாக சொல்லுவாள்” கற்பகம் எரிச்சலுடன் உள்ளே போய்விட்டாள்.

 திவ்யா தாரணியை பார்த்து கண்களை சிமிட்டினாள்” என்ன தாரு எதுவும் விபரங்கள் வேண்டுமா?” இப்பொழுது திவ்யா சொன்ன விபரங்களுக்கே அரண்டு போய் நின்றிருந்த தாரணி “வேண்டாம் தாயே !ஆளை விடு” கையெடுத்து கும்பிட்டாள்.

“நிச்சயம் முடிந்த நாளிலிருந்து 

How can I face my first night ? னு கூகுள்கிட்ட கேட்டுட்டு இருக்கேன். அதுவும் விதம்விதமா ஆன்சர் பண்ணிக்கிட்டு இருக்குது. உனக்கு எதுவும் தேவையென்றால் நீயும் ட்ரை பண்ணு”

“அம்மா தாயே நீ முதலில் இங்கிருந்து கிளம்பு. நான் பாத்துக்குறேன்” தாரணி திவ்யாவை பற்றி மண்டபத்திற்குள் தள்ளி விட்டாள்.ஜிகு ஜிகுவென்று துடித்துக் கொண்டிருந்த தன் நெஞ்சை நீவி விட்டுக் கொண்டாள்.

“சாரி” என்று பக்கவாட்டு அரை இருளிலிருந்து சத்தம் கேட்க, திக்கென அதிர்ந்து திரும்பி பார்த்தவள் தலை சுற்றி கீழே விழாத குறைதான். அங்கே பூரணசந்திரன் நின்றிருந்தான். இவன் இங்கு எவ்வளவு நேரமாக நின்று கொண்டிருக்கிறான்?

“இதை கொடுத்துப் போக வந்தேன்” அவன் கைகளில் மறுநாள் திருமணத்தின்போது கட்ட வேண்டிய சேலையின் பிளவுஸ்.

“இன்று வரவேற்பில் உனக்கு தைத்த பிளவுஸ் கொஞ்சம் லூசாக இருந்தது. இதுவும் அதே அளவுதான் தைத்திருந்தது. உடனே வெளியே போய் ஒரு டெய்லரை பிடித்து கொஞ்சம் சரி பண்ணிக் கொண்டு வந்தேன். சரியாக இருக்கிறதா என்று போட்டுப் பார்க்கச் சொல்லலாம் என்று உன்னை தேடி வந்தால் நீ இந்த பக்கம் வருவது தெரிந்தது.உன்னை முந்தி இங்கே வந்து காத்திருந்தேன்.நீங்களும் இதே இடத்தில் என்னை மறித்து நின்று விட்டீர்கள்.என்னால் நகர முடியவில்லை. இதோ பிளவுஸை போட்டு சரி பார்த்து என் அக்காவிடம் சொல்லிவிடு” சட்டையை அவள் கைகளில் வைத்து விட்டு அவள் முகம் பார்க்காமலேயே ஒதுங்கி நடந்தான்.

 அவன் உடல் மொழி அவர்கள் பேச்சை கேட்டு விட்டதை சொன்னது. நாலு எட்டு நடந்தவன் நின்று திரும்பாமலேயே முதுகு காட்டி நின்று “போனில் எந்த ஆப்பும் உனக்கு தேவை இல்லை. ஒரு வருடத்திற்கு நமக்கிடையே அது போன்ற அவசியங்கள் இல்லை” சொல்லிவிட்டு போய்விட்டான்.

 தாரணிக்கு கூச்சத்தில் அப்படியே பூமிக்குள் புதைந்து விட மாட்டோமா என்று இருந்தது.

மறுநாள் மணமேடையில் அவன் பக்கம் திரும்பவே அவளால் முடியவில்லை. என்னவெல்லாம் பேசிவிட்டோம்…முந்தின இரவு பெண்கள் பேச்சிலேயே உழன்றது அவள் மனம்.” ரிலாக்ஸ்” மந்திரம் சொல்லுவதற்கு இடையே மெல்ல அவளை ஆற்றுப்படுத்த முயன்றான் பூரணசந்திரன்.

அம்மி மீது காலை வைத்து மெட்டி போடும்போது நடுங்கிய அவள் பாதங்களை தன் கையால் அழுந்த பற்றி ஆசுவாசப்படுத்தினான்.தசரதன் தந்தையாக நின்று தாரை வார்த்துக் கொடுக்க அவர்கள் திருமணம் இனிமையாக நடந்து முடிந்தது.

பூரண சந்திரனின் தாயும், சகோதரி மீனலோசனியும் கூட அவளிடம் மிகவும் மென்மையாகவே பழகினர். அன்று பெரியப்பாவிடம் காச் மூச்சென்று கத்தியவர்கள் தானா இவர்கள்? தாரணிக்கு சுந்தராம்பாளைப் பார்த்தால் ஆச்சரியமாகவே இருந்தது.

“கருப்பட்டி தட்டி காபி போட்டு தாரேன் புள்ள, குடிச்சுட்டு படுக்க போனின்னா யானை பலம் உடம்புல இருக்கும்” மீனலோசனி கிண்டலுடன் சொல்ல படுக்கப் போகும் நேரத்தில் எதற்கு காபி என்று நினைத்தாள் தாரணி.




“சும்மா இரு அக்கா” அதற்குள் எங்கிருந்தோ உதயமாகி இருந்தான் பூரணசந்திரன். தாரணிக்கு இந்த மாதிரி பேச்செல்லாம் பழக்கம் இருக்காது. நீ கொஞ்ச நேரம் அவளை ஃப்ரீயாக விடு”

“சரிதாண்டா இதையெல்லாம் எங்களைப் போன்ற சீனியர்கள் தானே சொல்லிக் கொடுக்க வேண்டும்?” மீனலோசனி சொல்ல தாரணியின் முகம் முதல் நாள் பேச்சை நினைத்து செம்மை பூசிக் கொண்டது.

அதைச் சொல்லித் தாரேன் இதை விளக்கித்தாரேன்னு எத்தனை பேருடா கிளம்பி இருக்கீங்க மனதிற்குள் அலறினாள்.

“அக்கா நீ உன் ஸ்கூல் பசங்களுக்கு பாடம் சொல்லிக் கொடு, போதும். இந்த பாடம் எல்லாம் நாங்களே பார்த்துக் கொள்வோம்”

மீனலோஷினி காஞ்சிபுரம் ஹையர் செகண்டரி ஸ்கூல் ஒன்றில் டீச்சராக பணிபுரிந்து கொண்டிருந்தாள்.

“மல்லிகைப்பூ பன்னீர் பூ சிகப்பு ரோஜா என்று பூக்கடைக்காரரிடம் போனில் கேட்டுக் கொண்டிருந்த சுந்தராம்பாளை தடுத்து ஃபோனை கட் செய்தானர பூரணசந்திரன். “இரண்டு முழம் பூ சொல்லுங்கம்மா. போதும்”

” பூ கூட இல்லாமல் எப்படி ராசா?” சுந்தராம்பாள் தயங்க “அதெல்லாம் ஒன்றும் வேண்டாம். உறுதியாய் முடித்து விட்டான்”

இரவு சாப்பாடு முடிந்ததும் வெளியே கிளம்பப் போனவனை திகைப்பாய் பார்த்தனர் சுந்தராம்பாளும் மீனலோசினியும்.

” இந் நேரத்திற்கு எங்கேடா போகிறாய்?”

 “கடைத்தெருவில் சின்ன வேலை இருக்குதம்மா. தரணிய ரூமுக்குள்ள படுக்க சொல்லுங்க. நான் ஒரு மணி நேரத்தில் வந்து விடுவேன்” போய்விட்டான்.

“அது…தம்பிக்கு ஏதாவது முக்கியமான வேலை இருக்கலாம் புள்ள ” மீனலோசனி சங்கடத்துடன் தாரணியை பார்க்க அவள் புன்னகைத்தாள்.

” இருக்கட்டும் அண்ணி் அவர் வரட்டும். நான் போய் படுக்கிறேன்” 

பெரிய கட்டில் ஒன்று அந்த அறையில் நடுநாயகமாக போடப்பட்டிருக்க கட்டிலின் தலைமாடு உயரமாக இருக்க,அதில் அல்லிக்குளம் ஒன்று இருப்பது போன்ற மரவேலைப்பாட்டுடன் இருந்தது.

 ஆவலுடன் அந்த மரப் பூக்களை வருடி பார்த்தவள் எங்கே படுப்பது என சுற்றும் முற்றும் பார்த்தாள். அந்த அறையில் கட்டிலைத் தவிர சோபா போல் எதுவும் இல்லாமல் இருக்க தரையில் படுப்பதற்கும் போதுமான இடமில்லாமல் இருந்தது. யோசிக்கலாம் என்றெண்ணியபடி கட்டிலில் ஒரு ஓரம் படுத்தவள் சட்டென உடல் நிம்மதியாய் தளர கண்கள் சொருக தூங்கிப்போனாள்.




What’s your Reaction?
+1
45
+1
20
+1
4
+1
2
+1
2
+1
1
+1
1
Subscribe
Notify of
guest

0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!