Serial Stories இது ஒரு காதல் மயக்கம்

இது ஒரு காதல் மயக்கம்-27 (நிறைவு)

27

ராஜவேலு கொஞ்சமும் யோசிக்கவில்லை.சட்டென சாந்தாமணியின் பாதங்களை பற்றிக் கொண்டார் .” மன்னிச்சுடு சாந்தா .நான் தப்பு செய்துவிட்டேன்.உன் மேல் எனக்கு  அன்புதானே தவிர வேறு களங்கமான எண்ணமில்லை. உன் மனதில் நான் மட்டுமே இருக்க வேண்டுமென்ற தவிப்பில்தான் எப்போதும் உன்னை ஏசியபடியே  இருந்தேன் .என்னைக் கேட்காமலேயே என் மகளின் திருமணத்தை எனக்கு பிடிக்காதவனின் மகனுடன் நடத்தி விட்டாயே என்ற அதிக கோபம் எனக்கு .

அந்த திருமணத்தை எப்படியாவது முறித்து விட வேண்டுமென்ற முட்டாள் வேகம் . இந்த எண்ணத்தை மாற்ற நீ என்னுடன் போராடி களைத்து இறுதியாக என்னை பிரிந்தாவது பிரச்சனையை சரி பண்ண வேண்டுமென்று நம் மாப்பிள்ளையின் துணையுடன் இங்கே வந்தாய் .அப்போதும் என்னை விட்டு அந்த தர்மராஜனை நம்பி போய்விட்டாயே என்று ஒரு வகை வெறியே வந்தது .அந்த வேகத்தில்தான் இந்த ஊரையே அழிக்க வேண்டுமென ஏதேதோ பித்து பிடித்தாற் போல் செய்து கொண்டிருந்தேன் .இன்று இதோ …நம் மகள் , மாப்பிள்ளை ,  என் தோழன் எல்லோருமாக சேர்ந்து என் கண்களை திறந்து விட்டனர் .இனி எனது பழைய வக்கிர புத்தியையெல்லாம் விட்டு விட்டு உனக்கு அன்பான கணவனாக நிச்சயம் நடந்து கொள்வேன் “

பாதங்களை பற்றியபடி பேசியவர் பேச்சு முடிந்ததும் குனிந்து சாந்தாமணியின் பாதங்களில் தலை வைத்துக் கொண்டார்.  சாந்தாமணி மூடியிருந்த கண்களை இப்போதுதான் திறந்தாள் .குனிந்து கணவனின் தோள் தொட்டாள் .” எழுந்திருங்கள் “

எழுந்து நின்றவரின் கைகளை பற்றிக் கொண்டாள் .”  என் பக்கத்தில் வந்து நில்லுங்கள் .திருமணம் முடிந்ததும் நாம் குழந்தைகளை  ஆசீர்வாதம்  கூட செய்யவில்லை .வாருங்கள் ஆசீர்வதிக்கலாம் ” ராஜவேலு முகம் மலர சாந்தாமணியின் அருகே போய் நிற்க , தாரிகா துள்ளலுடன் ஓடிப் போய் மயில்வாகன்னின் கைகளை பிடித்து இழுத்துக் கொண்டு போய் தாய் , தந்தையின் கால்களில் பணிந்தாள்.

” நலம் நூறும் பெற்று நிறைவாக வாழுங்கள்  ” மனமார வாழ்த்தினர்  பெற்றோர்கள் .

” அப்படியே இங்கேயும் வாருங்கள் ..”  தர்மராஜா உற்சாகம் பொங்க அழைத்தபடி தமயந்தி அருகே போய் நிற்க தம்பதிகள் அடுத்து அவர்கள் பாதம் பணிந்தனர் .

 ” மனைவிகள் மதிக்கப்பட வேண்டியவர்கள்  ..இந்த டயலாக் நினைவிருக்கிறதா மாமா ? ” ஆசீர்வாதம் பெற்று எழுந்த தாரிகா கேட்க தர்மராஜா தடுமாறினார் .

” அ …அது …நா…நான்தான் கொஞ்ச நேரம் முன்பு சொன்னேன் “

” ம் .என் அப்பாவிற்கு அறிவுரை சொன்னீர்கள் . நீங்கள் அதன்படி நடக்கிறீர்களா ….? அத்தைக்கு மனைவிக்கான மரியாதையை கொடுக்கிறீர்களா ? “

”  அ …அது அவள் கொஞ்ச நாட்களாக சரி இல்லை மருமகளே .சாந்தாமணிக்கு நான் உதவ நினைப்பதை தவறாகவே நினைத்துக் கொண்டிருந்தாள் .

என் மகள்களிடம் கூட அப்படியே பேசி வைத்திருந்தாள் .மயிலு ஒருத்தன் தான் என்னை புரிந்து கொண்டிருந்தான் .

அதனால்தான் நான் அவளிடம் எதையுமே தெரிவிக்காமல் இருந்தேன் .”




” தவறாக நினைக்கும் படி தானே உங்கள் வாழ்க்கை நிகழ்வுகள் இருந்தன மாமா. அதனை தெளிவுபடுத்த வேண்டியது உங்கள் பொறுப்பு தானே ?  என் அம்மா அப்பாவிற்கு தன்னை தெரியப்படுத்த மிகவும் முயன்றார் .அது எனக்குத் தெரியும் .ஆனால் நீங்கள்…?  நானறிந்தவரை நீங்கள் சொல்வதற்கு எல்லாவற்றிற்கும் அத்தை தலையாட்ட வேண்டும் என்று மட்டுமே நினைத்தீர்கள். உங்கள் நினைப்பு எல்லாமே சரியானதாகவே இருக்கும் என்ற உறுதி உங்களுக்கு .இது தவறில்லையா ? அத்தையை நீங்கள் அலட்சியமாக நடத்துவதை  எத்தனையோ முறைகள் நானே பார்த்திருக்கிறேன். இது மட்டும் ஞாயமா ?மனைவியை நீங்கள் மதிக்க வேண்டாமா ? “

தர்மராஜா அவஸ்தையுடன் தலையை சொறிந்தார் .பின்னர் தலையசைத்துக் கொண்டார் . ” சரிதான்மா என் தப்பு தான் . இப்போது நானும் கால்களை பிடிக்க வேண்டுமா ? ” கொஞ்சம் பதட்டமாக கேட்டார்.  அவர் பார்வை தயக்கத்துடன் தமயந்தியின் பாதங்களை தொட்டு மீண்டது.

” பொண்டாட்டி காலில் விழுவதெற்கெல்லாம் கௌரவம் பார்க்கக்கூடாது தர்மா . நீயே பார்த்தாய்தானே …கொஞ்ச நேரத்திற்கு முன்பு நான் தயங்காமல் விழுந்தேனே … இப்போது நாங்கள் ஒன்றும் நினைக்க மாட்டோம். நீயும் ம்..ம் … ஆகட்டும் ‘” ராஜவேலு கிண்டல் சிரிப்புடன் நண்பனை ஏவிய படி தன் மனைவியின் தோள்களில் கையை போட்டுக் கொண்டார்.

” டேய் நீ வாயை மூடுடா . நீ செய்ததெல்லாமே ஆகாத வேலைகள் .நான் அப்படி இல்லை. ஏதோ அப்பப்போ கொஞ்சம் புரியாமல் தவறாக ஏதாவது சின்ன சின்னதாக செய்து விடுவேன் .அதெற்கெல்லாம் காலில் விழ வைக்க வேண்டுமென்று என் மனைவி நினைக்க மாட்டாள் . இல்லைதானே  தமா …?

” இல்லையே …காலில் விழுவதில் எனக்கொன்றும் ஆட்சேபனை இல்லையே ”  சொன்னதோடு தன் கால்களை வெளித் தெரியுமாறு வைத்துக்கொண்டாள்  தமயந்தி .

எல்லோரும் வாயை மூடி சிரிப்பை மறைக்க ராஜவேலு வெளிப்படையாகவே சிரிக்கத் தொடங்கினார் .தர்மராஜா அவரை முறைத்தபடி மெல்ல தமயந்தியின் பாதங்களுக்கு குனிய தமயந்தி அவர் தோள்களை பற்றி தூக்கினாள்.

” இல்லைங்க .வேண்டாம் நான் சும்மா சொன்னேன்.”   விடுதல் பெருமூச்சு ஒன்று தர்ம ராஜாவிடம்.

” ம்ஹூம் … இது அழுகுணி ஆட்டம் .நான் ஒத்துக் கொள்ள மாட்டேன் ”   செல்லமாய் சிணுங்கினாள் தாரிகா .

”  அது இருக்கட்டும். முதலில் நீங்கள் இருவரும் எங்களிடமும் ஆசீர்வாதம் வாங்கலாம். நாங்களும் பெரியவர்கள் தான் .வாருங்கள் .”  சுந்தரேசனின் அழைப்பில் மயில்வாகனன் தாரிகா திரும்பிப்பார்க்க சுந்தரேசனின் அருகில் சங்கரேஸ்வரி மகிழ்வு முகத்தில் வெளிப்படையாக தெரிய நின்றிருந்தாள் .

” சித்தி நீங்களா …? ”  பரவசத்துடன் தாரிகா ஓடிப்போய் அவள் கைகளை பற்றினாள்.

”  நானே தான்மா …  நீ எனக்கு திருப்பிக் கொடுத்த வாழ்க்கையின் அற்புதத்தை உணர்ந்து கொள்ளாமல் உனக்கு சாபமிட்டு விட்டு போனேனே அதே நான் தான். இப்போது என் மனதார உங்களுக்கு ஆசீர்வாதங்களை அளிக்க வந்திருக்கிறேன் ”  தாரிகா நெகிழ்வுடன் சங்கரேஸ்வரியின் தோள்களில் சாய்ந்து கொண்டாள். தம்பதிகள் அவர்கள் கால்களிலும் விழுந்து ஆசீர்வாதம் பெற்றனர்.

”  அடுத்து உங்கள் முறை ..”  மயில்வாகனனின் பக்கம் சாய்ந்து மெல்ல முனுமுனுத்தாள் தாரிகா .

”  என்ன முறை…? ”  அவன் கேட்க ..” கால்களில் விழுவது ”  தெளிவாகச் சொல்லி  அவனை அதிர வைத்தாள்.

” இ… இங்கேயா …? ” அவனது குரலில் அதிர்ச்சியுடன் வேண்டுதலும் இருந்தது .

” சரி பிழைத்துப் போங்கள் .இங்கே வேண்டாம்.  தனியாக உங்களை கவனித்துக் கொள்கிறேன் ” அலட்சியமாக கையசைத்தாள் .

” வாருங்கள் கோவிலுக்கு போகலாம் ”  அனைவரும் கிளம்பினர்.

பக்தர்கள் பால்குடம் எடுத்து போக,  அம்மன் பூச்சொரிதல் அலங்காரத்தில் முகம் தவிர மற்ற இடங்கள் எல்லாவற்றிலும் பூக்களால் அலங்கரிக்கப்பட்டு பூவிருந்தவல்லியாக  காட்சியளித்தாள்  முத்தால பரமேஸ்வரி அம்மன். பரவசத்துடன் அம்மனை வணங்கிவிட்டு மனநிறைவுடன் வீடு திரும்பினர் அனைவரும் .

தாரிகா எதிர்பார்த்த இரவு தனிமையில் கட்டிலில்  கால் மேல் கால் போட்டுக்கொண்டு அமர்ந்திருந்தாள் .அப்போதுதான் உள்ளே நுழைந்த மயில்வாகனனுக்கு தரையை காட்டினாள் .

”  அது தான் உங்கள் இடம். அங்கே படுங்கள் …” மகாராணியாய் உத்தரவிட்டாள் .

போலி பணிவை முகத்தில் காட்டி கீழே படுத்தவன் தாரிகா சற்றும் எதிர்பாராத ஒரு நொடியில் அவள் இடையை ஒரு கையால் பற்றி அவளை இழுத்து கீழே இருந்த தன் மேல் போட்டுக்கொண்டான் .” இன்னமும் நாம் பிரிந்து தான் படுக்க வேண்டுமா தாரு ? ”  தாபத்துடன் அவள் காதுகளில் முணுமுணுத்தான்.

” நானா…  அப்படி சொன்னேன் ? நீங்களாகவே தான் அப்படி ஒரு நிலைமையை நமக்குள் ஏற்படுத்தி வைத்திருந்தீர்கள் .”தாரிகா துயரத்துடன் சொன்னாள் .




” எனக்கு உன்னை புரிந்து கொள்ள முடியவில்லை தாரு .  நீ அடிக்கடி நம் இருவருக்கும் இடையே உள்ள படிப்பு வித்தியாசத்தை சுட்டிக்காட்டிக் கொண்டே இருந்தாய் . அன்று மணமேடையில் கௌசிக்கிடம் என்னைப் பற்றி கிண்டலாக பேசியது என் மனதில் வடுவாக பதிந்து விட்டது .உன் திருமணத்திற்கு நிச்சயம் போய்விட்டு வா என்று தான் அன்று அப்பா என்னை அனுப்பி வைத்தார் .முன்பே உன்னை திருமணம் செய்ய கேட்டு உன் தந்தை அதனை மறுத்து விட்டது எனக்கு தெரியும் .அப்படி என்ன பெரிய அழகி இவள் என்ற அலட்சியத்துடனேயே  அன்று உன் திருமணத்திற்கு வந்தேன் .மணமேடையில் உன்னை பார்த்ததும் என் மனம் தானாகவே உன் கால்களில் சரண் அடைந்து விட்டது .எதையோ எனக்கு கிடைக்க வேண்டிய எனக்கு உரிமையானதை  இழந்துவிட்ட வேதனை மனமெங்கும் வியாபித்தபடி  இருந்தது .அந்த நேரத்தில் நீயும் கௌசிக்கும் சேர்ந்து என்னை கிண்டலாக பேசியது என் மனதை மிகவும் பாதித்தது .அங்கே திடுமென நமது திருமணத்திற்கான சந்தர்ப்பங்கள் அமைய என் மனம் மகிழ்ந்தாலும் உன் சம்மதத்தை பெறுவதில் உறுதியாக இருந்தேன் .எனவே தான் உன் வாயால் திருமணம் செய்ய கேட்குமாறு நிர்ப்பந்தித்தேன் “

”  உங்கள் அளவு என் மனதில் அன்று குழப்பங்கள் இல்லை.கௌசிக்  என் அப்பா காட்டிய ஒரு மாப்பிள்ளை அவ்வளவு தானே தவிர வேறு எந்த எண்ணமும் அவன் மேல் இருந்ததில்லை .அன்று மணமேடையில் உங்களை சாதாரணமாக நண்பர்கள் போலத்தான் கிண்டலாக பேசினோம். தவறான எண்ணத்தில் இல்லை .கௌசிக் குடும்பத்தை பற்றி தெரிந்த உடன் உடனடியாக இந்த திருமணத்தை நிறுத்த வேண்டும் என்ற எண்ணம் மட்டுமே முழு மூச்சாக இருந்தது .அப்போது உங்களிடம் திருமண சம்மதம் கேட்க எனக்கு துளி தயக்கம் கூட ஏற்படவில்லை. மணமகனாக அம்மா உங்களை சுட்டிக்காட்டிய போது கூட எனக்கு பெரிதான அதிர்வு எதுவும் உண்டாகவில்லை .என்னை இக்கட்டிலிருந்து காப்பாற்ற வந்த மிக நல்லவர் என்ற அளவில் தான் உங்கள் மீதான அபிப்ராயம் எனக்கு இருந்தது .நமது திருமணம் எனக்கு எந்த அதிர்வையும் கொடுக்காமல் இயல்பான ஒன்றாகவே  தோன்றியது “

மயில்வாகனன் தன் மேல் பூங்கொத்தாய் சரிந்திருந்தவளை இறுக்க அணைத்துக் கொண்டான். ”   என் மனநிலையை உனக்கு தெரியப் படுத்தி விடும் ஆவலுடன் நமது முதலிரவன்று உன்னருகே நெருங்கினேன் .நீயோ மயங்கி விழுந்து விட்டாய் . அன்று மட்டுமல்ல அதன் பிறகும் கூட சில சமயங்கள் இதேபோல் நடந்தன. என்னை பார்த்தாலே மயங்கி விழும் அளவுக்கு உன் மனதில் பயமும் வெறுப்பும் இருக்கிறது என்ற எண்ணம் என்னை உன் அருகே நெருங்க விடாமல் செய்தது “

” அந்த அடிக்கடி மயக்கத்திற்கு எனக்கு காரணம் தெரியவில்லை.  ஆனால் நீங்கள் என் அருகில் நெருங்கி வந்தாலே கண்கள் தானாக செருகிக் கொள்கிறது. தலை கிறுகிறுக்கிறது .நான் என்ன செய்யட்டும் ..? ” தாரிகா சினிங்கினாள்.

” அப்படி என்றால் இந்த மயக்கம் என் மீது கொண்ட காதல் மயக்கமா ?   அப்படி நான் எடுத்துக் கொள்ளலாமா ? ” மயில்வாகனன் கேட்டு முடித்தவுடன் அவள் காதுகளை மெல்ல கவ்வினான்.

” சீ… போடா அப்படி ஒன்றும் கிடையாது ”   தாரிகா வெள்ளி மணியாய் ஓசையிட்டு குலுங்கினாள் .

” டா… அடிக்கடி நீ உச்சரிக்கும் இந்த ”  டா  ”  தான் என் மீது உனக்கு இருந்த உரிமையை காட்டுவதாக எனக்கு தோன்றியது .அதனால் தான் உனது ஒவ்வொரு டா வின் முடிவிலும் என்னை கட்டுப்படுத்த முடியாமல் உன்னை முத்தமிட்டு விடுவேன்…”

” என்னது நீங்கள் கொடுத்ததற்கு பெயரெல்லாம் முத்தமா ?   அப்படியா பிய்த்து தின்பது போல் கொடுப்பது …? ” தாரிகா தன் இதழ்களை வருடிக் கொண்டாள் .




” உன் டா வின் பலன் அது. எனக்கு காதல் வெறியேற்றுகிறது உனது” டா ” .  நேற்று  உன் தந்தையின் பின்னாலேயே நீ போன போது கூட நீ சொல்லி விட்டு சென்ற இந்த ” டா “தான் உன்னை எனக்கு உணர்த்தியது .என் கலக்கத்தை போக்கியது.”

”  அவர்கள் முன் வாழ்க்கை குறித்து அப்பா பொய் சொல்கிறார் என்று தெரிந்துவிட்டது .அவர் வாயிலிருந்து உண்மையை வாங்குவதற்காகத்தான் அவர் பின்னால் போக முடிவு செய்தேன் .சுகந்தியை யார் கடத்தியது என்ற கேள்விக்கு உன் அப்பா என்று கிண்டல் போல் நீங்கள் சொன்ன பதிலில் இருந்த உண்மையையும்  அறிந்து கொள்ள நினைத்தேன். அத்தோடு என் அப்பா – உங்கள் அப்பாவின் பின்னால் மறைந்து கிடக்கும் அவர்கள்  முன்னாள்  மர்மங்களையும் தெரிந்து கொள்ள விரும்பினேன்.அதனால் தான் அப்பா  மனம் போல் பேசி அவர் பின்னால் போனேன். எனது இந்த எண்ணத்தை உங்களுக்கு உணர்த்திவிட தான் அந்த  ” டா ” வை சொல்லிவிட்டு போனேன் .அதனை நீங்கள் உணர்ந்து கொண்டு சரியாக என்னை காப்பாற்ற வந்துவிட்டீர்கள் .அங்கே நீங்கள் எனக்காக செய்தவைகள் எல்லாம் என்னால் கற்பனை கூட செய்ய முடியாது . “

” அப்படி என்ன பெரிதாக செய்துவிட்டேன் ?  நீ எனக்காக நிறைய செய்துவிட்டாய் தாரு .  சுகந்தியை பற்றி எனக்கு தெளிவுபடுத்தி அத்தையின் மனதை ஆராய்ந்து சுந்தரேசன் மாமாவுடன் துணிந்து பேசி 20  வருடங்களாக பிரிந்து இருந்தவர்களையே சேர்த்து வைத்திருக்கிறாய். இதற்கு பதிலாக உனக்கு நான் செய்தது மிகவும் கொஞ்சம். உனது ஆசைப்படி ஜாதி வித்தியாசம் இல்லாமல் அந்த எளிய மக்களையும் நம்முடன் சேர்ந்து கொள்ள நினைத்தேன். அதற்காக நமது சொத்துக்களை கொஞ்சமாக கொடுத்தேன் .கடினமான உழைப்பாளிகளான அவர்கள் நிச்சயம் அதனை பயன்படுத்தி மேலே வந்து விடுவார்கள் என்று எனக்குத் தெரியும் .இது நமது ஊருக்குமான முன்னேற்றம் தானே…? “

”  ஆனாலும் எனது ஆசைக்காக சொத்துக்களையே கொடுப்பதற்கு மனசு வேண்டும் அல்லவா ? “

” நான் என்னையே எப்போதோ உனக்குக் கொடுத்து விட்டேன் . உன் ஆசைக்காக சொத்துக்களை கொடுக்க மாட்டேனா…? “

” ம்க்கும் … பேச்சில் ஒன்றும் குறைச்சல் இல்லை. செயலில்தான் எதுவும் கிடையாது ”  தாரிகா முனுமுனுக்க மயில்வாகனன் இப்போது அவளை கீழே தள்ளி மேலே படர்ந்தான்.

” ஹேய் … என்னடி.. என்ன சொல்கிறாய் ?  சற்று முன் முத்தத்தைப் பற்றி ஏதோ பாடம் எடுத்தாயே திரும்பவம் அதிலிருந்தே ஆரம்பிப்போமா ? “

” சரிதான் போடா …”  தாரிகாவின் கன்னங்கள் செந்தாமரையை கடன் வாங்கி இருந்தன.

” இப்போது போய் எங்கே போகச் சொல்கிறாய் ?  அதெல்லாம் போக  முடியாது …”

நோகாமல் தலையில் அடித்துக் கொண்டவள் ” அப்படித்தான் சொல்வேன் டா டா டா டா…”  தாரிகா அடுக்க  அவள் மனதை புரிந்து கொண்ட மயில்வாகனன் காதல் கணவனாக மாறி அவளை ஆக்கிரமிக்க தொடங்கினான்.

  இன்பமான காதல் மயக்கம் சூழ்ந்துகொள்ள கண்கள் சொருக தாரிகா  விருப்பமாய் அவனில்  மயங்க தொடங்கினாள்.

– நிறைவு –




What’s your Reaction?
+1
25
+1
8
+1
0
+1
1
+1
2
+1
0
+1
1
Subscribe
Notify of
guest

0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!