Serial Stories இது ஒரு காதல் மயக்கம்

இது ஒரு காதல் மயக்கம்-17

17

ஹாய் சித்தி  சாப்பிட்டாயிற்று ? ”  கேட்டபடி தன் அருகே வந்து அமர்ந்த தாரிகாவை கலவரமாக பார்த்தாள் சங்கரேஸ்வரி. இவள் எதற்கு இப்படி உரச வருகிறாள் ?  சரி இல்லையே சங்கரேஸ்வரியின் மூளை அபாய மணி அடித்தது.

” என்னை குசலம் விசாரிக்கிற அளவு நீ வீட்டு மனுஷி ஆகி விட்டாயா ?   இந்த வீட்டில் உன்னை விட எனக்குத்தான் உரிமை. தெரிந்து கொள்.”

” ஈசி சித்தி . எதற்கு உடனடியாக இவ்வளவு டென்ஷன் ?   சாதாரணமாக சாப்பிட்டதை விசாரித்ததற்கு எதற்காக உரிமைப் போராட்டம் எல்லாம் நடத்துகிறீர்கள் ? எதைக் கண்டு பயப்படுகிறீர்கள் ? “

” எனக்கு என்னடி பயம் ? என் அண்ணன் வீட்டில் நான் எதற்கு பயப்பட வேண்டும்? “

” இன்னும் எத்தனை நாட்களுக்கு இந்த வீடோ என்ற பயமாக கூட இருக்கலாமே ? “

” என்ன சொன்னாய் ?  அண்ணா.. மயிலு ..” சங்கரேஸ்வரியின் அலறல் உச்சபட்சமாக இருந்தது.  உடனடியாக அவளது அதிரடி தாக்குதலை எதிர்பார்க்காத தாரிகா முதலில் சற்று திகைத்தாலும் பின் ,  தன்னை சமாளித்துக் கொண்டு நிமிர்ந்து நின்றாள்.

” இங்கே பாருங்கள் அநியாயத்தை.  இந்த வீட்டில் நீ எத்தனை நாட்கள் இருப்பாய் என்று பார்க்கிறேன் என்று இவள் கேட்கிறாள் ? ” அலறலுக்கு ஓடிவந்தவர்களிடம் கூசாமல் தாரிகாவை கை காட்டினாள் .

” என்னம்மா இது …? ” பெரும் சலிப்பு தர்மராஜாவிடம் .

” இங்கே பார் வாயடக்கமாக இருக்க பாரு . இந்த வீட்டை மாற்ற வேண்டுமென நினைத்தால் அது நடக்காது . நாங்கள் யாரும் எப்போதும் எங்கள் நிலையில் இருந்து மாற மாட்டோம் ”  மாமியாரின் பேச்சில் இருந்தது திட்டா…?அறிவித்தலா …? தாரிகா தமயந்தியை கூர்ந்து நோக்க ,

” வாயை மூடுடி …” தர்மராஜாவின் உறுமல் மனைவிக்கு.  தமயந்தி வாயை மூடிக் கொண்டாலும் அவளது பேச்சை மாற்றிக் கொள்ளவில்லை விழிகள் .

” உங்கள் மருமகள் சுந்தரேசன் மாமாவை போய் பார்த்து பேசி விட்டு வந்திருக்கிறாள் அப்பா ”  தகவல் தந்தவன் மயில்வாகனன்.

அடப்பாவி தெரியுமா உனக்கு …திக்கிட்டு அவனைப் பார்த்தாள்.  அவன் இவள் புறம் விழி திருப்பாமல் காப்பியடித்த மாணவனை வாத்தியாரிடம் மாட்டி வைத்த வகுப்பறை தலைவனாக கை கட்டி நிமிர்வாக நின்றிருந்தான்.

ஓரமாக கிடந்த சிறு ஸ்டூலை இழுத்துப் போட்டு ஏறி நின்றாவது அவன் உச்சந்தலையை நச் நச்சென்ற கொட்டினால் சிவக்க வைக்க வேண்டுமென்ற ஆங்காரம் தாரிகாவினுள் மிக வேகமாக பரவியது .

” ஐய்யோ ..பார்த்தீர்களா அண்ணா ” சங்கரேஸ்வரி அலறலை தொடர ,  தமயந்தி தாரிகாவை பிரமிப்பாக பார்க்க , தர்மராஜா அதிர்வாக பார்த்தார் .

” என்னம்மா …ஏன் இப்படி செய்தாய் ? இதெல்லாம் சரியில்லைம்மா ” தர்மராஜா கண்டிக்க ,  தாரிகா பயம் போல் தலை குனிந்து நின்றிருந்தாள் .

”  சுந்தரேசனுடன் சேர்ந்திருக்க முடியாதுன்னு சங்கரி உறுதி செய்த பிறகு தான்மா அவளை இங்கே கூட்டி வந்து வைத்திருக்கிறோம் .நீ இடையில் தலையிட்டு எதையும் மாற்ற முயற்சிக்க வேண்டாம் “

” சரிங்க மாமா .சும்மா ஒரு ஆர்வத்தில்தான் …” குரலை இழுத்தபடி ஓரக் கண்ணால் சங்கரேஸ்வரி , தமயந்தி பிறகு மயில்வாகனன் என ஒவ்வொருவரையும் பார்வையால் வருடிக் கொண்டாள் .

”  அண்ணா உறுதியாக சொல்லி வையுங்கண்ணா .இ..இவளை விட்டால் நம்ம சுகந்தியை அங்கேயே கொண்டு போய் சேர்த்திடுவா போல …” சங்கரேஸ்வரி பதற தாரிகா அவள் புறம் லேசாக சரிந்தாள்.

” அதே ஐடியாதான் சித்தி எனக்கு ” முணுமுணுத்தாள் .

” அண்ணா அப்படித்தான்னு சொல்றாண்ணா …” சங்கரேஸ்வரி கத்த …தாரிகா வேகமாக தலையசைத்தாள் .

” இல்லைங்க மாமா .பயப்படாதீங்க சித்தின்னுதான் சொன்னேன் ”  கையடிப்பாள் போன்ற உறுதியுடன் நின்றாள் தாரிகா .சங்கரேஸ்வரி சிறிது மிரட்சியுடன் அவளை பார்க்க …

” பிரமையை விடு சங்கரி .அவள் சொன்ன பேச்சு கேட்கிற பிள்ளை ”  தர்மராஜா சங்கரேஸ்வரியின் வயிற்றில் புளியை கரைத்தார் .




” நீங்க எதற்காக  இங்கே வந்து உட்கார்ந்திருக்கீங்கன்னு எனக்கு தெரிஞ்சு போச்சு சித்தி ”  வாயை துடைப்பாள் போல் கையால் மறைத்துக் கொண்டு பவ்யம் போல் தலை குனிந்து சங்கரேஸ்வரிக்கு மட்டுமாக பேசினாள் . சங்கரேஸ்வரியின் முகம் வெளிறியது .

” உங்க புருசன்தான் தெளிவாக சொன்னாரு …”  இப்போது பரிவு போல் அவள் தோள்களை தட்டிக் கொடுத்துக் கொண்டிருந்தாள் .” புருசன் ” ல் அதிக அழுத்தம் கொடுத்தாள் .

சங்கரேஸ்வரி கண்கள் நிலை குத்தி வாய் திறக்க முடியாமல் ஒரு மாதிரி அதிர்வில் நின்றிருக்க , தாரிகா சாவகாசமாக அவளை வேடிக்கை பார்க்க ,  இருவரது நெருக்க நிலையையும் கலைத்தபடி இருவருக்குமிடையே  இடையே வந்து நின்றான் மயில்வாகனன் .

தன் தோள் பட்டையில் அழுத்தமாக அவன் இடித்த இடி வலிக்க தாரிகா அவனை முறைத்தபடி விலக முயல , அதற்கு விடாமல் அவள் கையை பற்றி அருகிலேயே இழுத்துக் கொண்டான் .  அத்தையின் தோள்களையும் ஆறுதலாக அணைத்துக் கொண்டான்.

” என் பொண்டாட்டி என்ன சொல்கிறாள் அத்தை ? ”  கேட்டபடி தாரிகாவிற்கு எச்சரிக்கை பார்வை கொடுத்தான் .

” மயிலு …” சங்கரேஸ்வரி கேவலுடன் அண்ணன் மகன் தோள் சாய , தாரிகா அலட்சியமாக உதடு சுளித்தாள் .

” இவள் என்னை மிரட்டுகிறாள்டா …”  சங்கரேஸ்வரியின் புகாரின் போது அவனது பார்வை தாரிகாவின் சுளித்த இதழ்களில் இருந்தது. தாரிகா உஷாரானாள் .

” அவளுக்கு வாய் கொஞ்சம் ஓவர்தான் அத்தை .நல்லா கவனிக்கனும் …”  மயில்வாகனனின் பதிலில் சங்கரேஸ்வரிக்கு திருப்தியும் , தாரிகாவும் பயமும் கிடைத்தது .இவனது கவனிப்பு எப்படி இருக்கும் ….?அநிச்சையாக வாயை கையால் மூடிக்கொண்டாள் .

இவர்களது பேச்சு காதிற்கு கேட்காத தர்மராஜா  ” டேய் மயிலு என்னடா மருமகளை மிரட்டுகிறாயா ? ”  அதட்டினார் .வாய் பொத்தி மிரட்சியாக பின் நகர்ந்த மருமகள் அவரை அப்படி எண்ண வைத்தாள் .

” யாரு …? இவளையா …? நானா ….? ” மயில்வாகனன்னின் கேள்விக்கு ”  அதானே …இவளெல்லாம் மிரளும் ரகமா ….? ” முணுமுணுத்தாள் சங்கரேஸ்வரி .

” ம்க்கும் அத்தை ” எனப் பதில் அளித்தவனை முறைத்தபடி ” திட்டுறாரு மாமா ”  மாமனாரிடம் புகார் பதிந்தாள் தாரிகா .

” மயிலு மருமகள் தங்கம் . அவளை பத்திரமாக பாதுகாக்க வேண்டியது உன் கடமை ”  தர்மராஜா மகனுக்கிட்ட உத்தரவிற்கு சங்கரேஸ்வரியின் முகம் வாட , மயில்வாகனின் விழிகள் அலட்சியம் சுமந்தது.

” நான் மேலே ரெஸ்ட் எடுக்க போகிறேன் மாமா. டயர்டாக இருக்கிறது ”  தர்மராஜாவிடம் தனக்குள்ள ஆதிக்கத்தை அந்த வீட்டு உறுப்பினர்களுக்கு அறிவித்தபடி  அலட்சியமாக மாடியேறினாள் தாரிகா .

” ஏய் என்ன அதிகப்பிரசங்கித்தனம்டி பண்ணிக்கிட்டு இருக்கிறாய் …? ”  அடுத்த நிமிடமே மாடியில் அவள் முன் நின்றான் மயில்வாகனன் .

” என்னை வேவு பார்த்துக் கொண்டே இருக்கிறீர்களாக்கும் ? “

” ஆமாவாக்கும் ” அவளைப் போன்றே அவனும் பேசிக் காட்ட தாரிகாவின் ஆத்திரம் அதிகமானது .

” பொண்டாட்டியை வேவு பார்ப்பவர்களெல்லாம் மகா மட்டமானவர்கள் ”  கையை அவன் முகத்திற்கு நேராக நீட்டி முழங்க , அவன் நீண்ட கையை பற்றி அவள் முதுகிற்கு பின் வளைத்து திருப்பி நிறுத்தினான் .

” அகம்பாவம்டி உனக்கு. எதுக்காகடி இப்படி எல்லாம் செய்கிறாய் ? “

” ஷ் …ஆ …விடுங்க ”  திமிறியவள் அவனது பிடியை விலக்க முடியாதென உணர்ந்து பற்களை கடித்தபடி வலி பொறுத்து நின்றாள் .பின்னிருந்து குனிந்து அவள் முகம் பார்த்தவன் ” ம் …சொல்லு …” என்றான் .

” உ…உங்கள் அத்தையை அவர்கள் குடும்பத்தோடு சேர்க்க நினைத்தேன் “

” அது எங்களுக்கு தெரியாதா …?   அது சரி வராது என்றுதானே இத்தனை வருடங்களாக  அது போன்ற முயற்சிகள் எதுவும் எடுக்காமல் இருக்கிறோம். நீயெல்லாம் நேற்று பெய்த மழையில் முளைத்த காளான். நீ வந்து பல வருட பிரச்சனையை தீர்க்கப் போகிறாயா ? “




” நீங்கள் ஒரு பக்கத்தை மட்டுமே பார்க்கிறீர்கள் .  உங்கள் மாமா பக்கமும் பாருங்கள் .அவரிடமும் நியாயம் இருக்கிறது “

” என்ன பெரிய நியாயம் அது ? “

” அது ….”  விளக்க தொடங்கிய போதுதான் தாரிகா அதனை உணர்ந்தாள் .இவன் …இப்போது என் மேல் வன்முறை காட்டிக் கொண்டிருக்கிறான் .இவனுக்கு எதற்கு நான் விளக்கங்கள் தர வேண்டும் …தானே சிலுப்பிக் கொண்ட தலையுடன் அவனை பார்த்தவள் திகைத்தாள் .

பின்னிருந்தபடியே வளைத்து பிடித்திருந்த அவளது கையை விடுவித்ததோடு சற்று முன் காயப்படுத்தியதற்கு பரிகாரமாக இதமாக தோள்பட்டை தொடங்கி விரல்கள் வரை அழுத்தி விட்டபடி இருந்தான் மயில்வாகனன். இந்த இதத்தில்தான் தன்னை மறந்து அவனிடம் இயல்பாக பேசத் தொடங்கி விட்டாள் போலும். உருகத் தொடங்கி விட்ட மனதை அதட்டி ,  நெகிழ ஆரம்பித்திருந்த உடலை நிமிர்த்தி அவன் பிடியிலிருந்து சுலபமாக விடுபட்டுக் கொண்டாள் .

” அடிப்பதும் …பிறகு வருடுவதும். இதற்கெல்லாம் நான் ஆளில்லை .தள்ளுங்கள் .நான் போகிறேன் “

” எங்கே ? “

” பக்கத்து அறைக்கு …”

” ஏய் நான் உன் புருசன்டி .என்னை விட்டு  தனி அறை போவாயா நீ …? “

” புருசனா …? எனக்கா …? யாரது …? ”  நிதானமாக கேட்டு விட்டு அவன் அதிர்ந்து நிற்கும் போதே அறையை விட்டு வெளியேறிவிட்டாள் .

ஒருவேளை பின்னாலேயே வருவானோ என்ற அவளது எதிர்பார்ப்பை பொய்க்க வைத்து இரவினை நீளமாக்கினான் மயில்வாகனன்.

ஹப்பாடா …ஒரு வழியாக விடிந்தது பெருமூச்சுடன் எழுந்து கொண்ட தாரிகா குளித்து , கீழே இறங்க அவன் அறையைக் கடந்த போது அவன் அறையினுள் பாட்டுச் சத்தம் முழங்கியது . முதலில் ஸ்பீக்கரில் பாட்டு ஓடுகிறதென நினைத்தவள் ,  பின் தலையை தட்டிக் கொண்டாள் .அவனது லட்சணமான போன் …

அறை வாசலிலிருந்து எட்டிப் பார்க்க மேசையின் மேல் அதிர்ந்து கொண்டிருந்த போன் கண்ணில் பட்டது .அவனைக் காணவில்லை .பாத்ரூமிற்குள் இருப்பானாயிருக்கும் .தாரிகா அறைக்குள் நுழைந்து அவன் போனை எடுத்துப் பார்த்தாள் .

அதில் அபிஷேக் என்ற பெயர் ஒளிர்ந்து கொண்டிருந்தது .




What’s your Reaction?
+1
19
+1
11
+1
0
+1
0
+1
3
+1
0
+1
1
Subscribe
Notify of
guest

0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!