Serial Stories இது ஒரு காதல் மயக்கம்

இது ஒரு காதல் மயக்கம்-16

16

“கொஞ்ச நேரம் உன்னை கண்களிலிருந்து தவறவிட்டு விட்டேன்.  அதற்குள் அந்த அபிஷேக் உன் நெற்றியில் துப்பாக்கியை வைத்து இருக்கிறான். எனக்கு எப்படி இருந்தது தெரியுமா ? ” மயில்வாகனனின் குரலில் இருந்தது பதட்டமே என்பதனை தாரிகா ஆச்சரியமாக உணர்ந்தாள்.

இவன் இவ்வளவு நேரமாக நான் அவர்களிடம் மாட்டிக் கொண்டதை பற்றித்தான் பேசுகிறானா?  அவளால் நம்ப முடியவில்லை.   அவள்  சுகந்தியை அங்கே அழைத்து போய் விட்டதை பற்றித்தான் பேசுகிறான் என நினைத்து இருந்தாள். ஆச்சரியத்துடன் முகம் உயர்த்தி அவனை பார்க்க கண்களினருகே துடித்துக் கொண்டிருந்த மயில்வாகனனின் மீசையின் கூர்  அவளது மனதினுள்  ஆழமாக இறங்கியது.

” என்னை பின் தொடர்ந்து கொண்டேதான் இருந்தீர்களா? “

” நீ ஏதோ குறுக்குவாட்டில் திட்டம் போடுகிறாய் என்று தெரிந்தது .   அதனால் உனக்கு ஆபத்து ஏற்படலாம் என்ற பதட்டமும் எனக்கு இருந்தது. எனவே உன்னை விட்டு நான் விலகவே இல்லை ” சொல்லியபடி இன்னமும் அவளை இறுக்க அணைத்துக் கொண்டான். தனது உடல் கொஞ்சம் கொஞ்சமாக கரைந்து அப்படியே அவனோடு ஐக்கியம் ஆவதாக உணர்ந்தாள்.

கண்கள் சொறுக அவளுக்கு மயக்கம் வரும்போல் இருந்தது.  அவள் இரு கன்னங்களையும் பற்றி முகத்தை உயர்த்திய மயில்வாகனன் அவள் கண்களுக்குள் பார்த்து ” என்ன மயக்கம் வரவில்லையா ? ” கிண்டலாக கேட்டான்.

இந்தக் கேள்வியிலும் , அவன் கண் சிமிட்டலிலும் தாரிகா பிரமித்தாள்.  எனது கிறுகிறுப்பு இவனுக்கு எப்படி தெரிந்தது ?  இப்படித்தான் இவனை பார்த்ததும் எனக்கு மயக்கம் வருகிறதா ? ஏதோ ஒன்று புரிந்தது போல் இருந்தது அவளுக்கு.

” என்னை திட்டலை? ”  டா சொல்லலை ? ”  மயில்வாகனன் கேள்வியில் கோபமில்லை. எதிர்பார்ப்பு இருந்தது. ஏதோ ஒரு எதிர்பார்ப்பு. இவன் திட்ட சொல்கிறானா ?  தாரிகா அவன் விழி பார்க்க அவன் இதழ் குவிக்க சட்டென புரிந்து …” மாட்டேன்..”  ஊடலுடன்  அவனை விட்டு சரிந்து கீழே படுத்தாள்.

” ஏய் தாரு மேலே வாடா ” கை நீட்டி அழைத்த மயில்வாகனனின்   குரலில் தாபம் இருந்தது.  தாரிகா அவன் கை படாமல் தள்ளிக்கொண்டு தலையணையில் முகம் பதித்துக் கொண்டாள்.” எனக்கு உங்களுடன் பேச வேண்டும் “

” ஓ பேசலாமே இங்கே வா பேசலாம் ” மயில்வாகனன் இப்போது அழைத்தது அவன் மார்புக்கு.  அந்த  அழைப்பின் நோக்கம்  பேசுவது போல் தெரியவில்லை.

” ம்ஹூம் …” தலையாட்டி தனது மறுப்பை உறுதியாக பதிய வைத்தாள்  தாரிகா. ”  எனக்கு சுகந்தியை பற்றி பேச வேண்டும் ” அழுத்தமாகக் கூறினாள்.

தனது கையை மடக்கிக் கொண்ட மயில்வாகன் ” ம் … சொல்லு ” என்றான்.

” உங்களுக்கும் அவளுக்கும் இடையே என்ன…? ”  தாரிகா முடிக்கும் முன் ”  ஏய் …” உறுமினான். இரை தேடும் சிங்கத்தின் கண்கள் என அவன் விழிகள் ஜொலித்தன.

”  அவள் மீது எனக்கு ஏதும் எண்ணம் இருந்திருந்தால் அவளைத் திருமணம் செய்து கொள்ள இங்கே எந்தத் தடையும் இல்லை என்பதை நான் உனக்கு விளக்க வேண்டிய அவசியமில்லை என்று நினைக்கிறேன் “

” அதைத்தானே உங்கள் அத்தை செய்யச் சொல்லிக் கொண்டிருந்தார்?  ஏன் அதனை நீங்கள் மறுத்துப் பேசவில்லை? “

”  அத்தை புகுந்த வீட்டு வாழ்க்கை சரியாக அமையாமல் மிகவும் மனம் நொந்து எங்களை தஞ்சம் என எண்ணி வந்திருந்தார். அவரிடம் ஒரு அளவுக்கு மேல் எங்களால் கடுமையாக நடந்து கொள்ள முடியாது. அவரது கருத்துக்கு மாற்று சொல்லவும் முடியாது. காலம் வரட்டும் என்று நானும் அப்பாவும் காத்திருந்தோம் “

” ஆனால் சுகந்தியின் மனது ..? வெளி உலகம் அறியா கன்னிப் பெண்ணின் மனம் பசும் வயல் போன்றது. சிறு விதை போதும். ஆலமாக வளர்ந்து விடும்.  உங்கள் விஷயத்தில் சுகந்தியிடம் அப்படித்தான் நடந்து கொண்டிருக்கிறீர்கள் ”  குற்றம் சாட்டினாள் .

”  நான் மாமன் மகன் என்ற உறவு முறையை தாண்டி அதிகப்படியாக சுகந்தியிடம் என்றுமே நடந்து கொண்டதில்லை ”  உறுதியாகச் சொன்னான் மயில்வாகனன்.

” இது உண்மை என்றால் என்னுடைய சில காரியங்களுக்கு நீங்கள் உதவ வேண்டும்”

” அப்போ உனக்கு நம்பிக்கையில்லை ? ” குத்தீட்டி சுமந்திருந்தது அவன் பார்வை .

தாரிகா மௌனமாக இருந்தாள். நம்பிக்கைக்கும்,   இல்லாமைக்கும் இடையே அவள் மனம் ஊஞ்சலாடிக் கொண்டிருந்தது .

” என்ன செய்ய வேண்டும்? ”   மயில்வாகன்னின் இந்தக் கேள்வி அவள் மனதில் தேன் சொட்டுக்களாய்  இறங்கியது .

” இப்படி கேள்வி கேட்காமல் இருந்தாலே போதும் “




” ஓ… நீ சொல்வதற்கெல்லாம் தலையாட்டிக் கொண்டு இருக்க வேண்டும் என்கிறாயா ? ” கேட்டவனை  வெறித்தாள்.

” மனைவி பேச்சைக் கேட்பது அவ்வளவு பெரிய தவறா ? “

” மனைவியா …? எனக்கா…?  யாரது…? “

ஏய் தாரிகா இவன் உன்னிடம் வம்பிழுப்பதற்காகவே அலைகிறான் …உள்மனம் எச்சரிக்க தாரிகா வாயை மூடிக்கொண்டாள்.

” ஏய் பேசுடி  ஏன் வாயை மூடி கொண்டாய்? “

” உங்களிடம் பேச எனக்கு பிடிக்கவில்லை “

” அப்போ எந்திரிச்சு ரூமை  விட்டு வெளியில் போ ” தாட்சண்யமின்றி ஒலித்தது அவன் குரல்.

தாரிகா அதிர்ந்தாள் . அவள் உடல் அவமானத்தில் குறுகியது.  வீம்புடன்  எழுந்து பாயை சுருட்டி எடுத்துக் கொண்டு அறையை விட்டு வெளியேறினாள்.

” நீயே பரிமாறு ”  மயில்வாகனன் சாப்பிட நுழைந்ததும்  பதார்த்த பாத்திரத்தை இவள் பக்கம் தள்ளி விட்டு தமயந்தி வெளியே போக , தாரிகா அவள் முதுகை யோசனையுடன் பார்த்தாள் .அம்மா – மகனுக்குள் என்ன …?

” நேற்று எங்கே படுத்தாய் ? ” மயில்வாகனன் இலையில் தண்ணீர் தெளித்துக் கொண்டே ,  அங்குமிங்கும் நடமாடிக் கொண்டிருந்தவர்கள் காதில் படாமலிருக்க மெல்லிய குரலில் கேட்டான் .

” வெளியே போன்னு விரட்டிட்டு , இப்போ என்ன கேள்வி ? “

” சாரி …கொஞ்சம் கோபம் ….”  சாப்பிடுகிறானா இலையின் இட்லிகளை எண்ணுகிறானா ?

தாரிகா அவனது மன்னித்தலை ஏற்பதாக இல்லை .  இரவு முழுவதும் பக்கத்து அறையில் தனிமையில்  திடுமென யாராவது வந்து என்னவென்று கேட்டு விடுவார்களோ ?எனக் கழித்த மணிகளின் பயங்களை அவள் மட்டுமே அறிவாள் .

” தொடாதீர்கள் ” சாம்பார் ஊற்றிய கை தொட வந்தவனை அடிக்குரலில் எச்சரித்தாள் .

முகத்தில் அறை வாங்கிய பாவம் தெரிந்த்து அண்ணாந்து அவளைப் பார்த்த மயில்வாகனனின் முகத்தில். “உங்களுக்கும் உங்கள் அம்மாவிற்கும் இடையே என்ன கோபம் ? “

மயில்வாகனன்னின் பார்வையை சந்திக்க அவள் தயாராக இல்லை.  தக்காளி சட்னியில் கறிவேப்பிலை தேடிக் கொண்டிருந்தாள் .

” அம்மாவிற்கு என் மேல் கோபம் “

” எதற்கு ? “

” ப்ச் … வேறன்னா நம் கல்யாணத்தை நினைத்துதான் இருக்கும் “

” உங்கள் அம்மாவிற்கு நம் திருமணம் பிடிக்கவில்லையா ? “

” அப்பாவைத் தவிர நம் வீட்டில் யாருக்கும் பிடிக்கவில்லை “

இந்த பதிலில் தாரிகா மனதில் பலமாக அடி வாங்கினாள்.

” நான் கொஞ்சம் வெளியே போய் வரலாம் என்று இருக்கிறேன்”   மனதில் வாங்கிய அடியின் சுவடுகள் குரலில் தெரியாமலிருக்க சிரமப்பட்டாள்.

” எங்கே போகிறாய்? ”   கூர் பார்வையுடன் கேட்டவனை அதே போல் ஈட்டி விழியுடன் தயக்கம் இன்றி எதிர்கொண்டாள் .

மயில்வாகனன் தோள்களைக் குலுக்கிக் கொண்டான் ” என்னவோ செய். எனக்கு ஒன்றும் கிடையாது ” கைகளை உதறிவிட்டு எழுந்தாள்.

ஐயோ சரியாக சாப்பிடாமல் போகிறானே…  ஒரு நிமிடம் தவித்த தாரிகாவின் மனது “எனக்கு மனைவியாக இல்லாதவர்களைப் பற்றி எனக்கு என்ன கவலை ? ”  என்ற மயில்வாகனனின் முணுமுணுப்பில் தவிப்பு அடங்கி சினம் சுமந்தது.




எனக்கு மட்டும் என்ன கவலை …  போடா போடா வாஷ்பேசினில் திரும்பி நின்று கைகளை கழுவிக்  கொண்டிருந்தவனின் முதுகில் பேசினாள். அவன் விருக்கென திரும்ப இவள் திடுக்கிட்டு சுவற்றில் ஓடுங்க ,  மயில்வாகனன் அருகிலிருந்த டவலை எடுத்து கைகளை துடைத்து வைத்துவிட்டு பின்  சிறு நிம்மதி மூச்சுடன்  சுவரில் சரிந்து இருந்தவளை   பற்றி இழுத்து இதழ்களில் அழுத்தமாய் தன் இதழ் பொருத்தினான்.

“டா  சொன்ன தானே ? ”  கேட்டுவிட்டு நிதானமாக தன் இதழ்களை ஒற்றை விரலால் வருடியவன் மீசையையும் முறுக்கி கொண்டபடி அறையை விட்டு வெளியேறினான்.

நடந்தவற்றில் இருந்து மீள முடியாமல் மீண்டும் சுவரில் சரிந்து விட்ட தாரிகா “செய்வதெல்லாம் ஆகாத வேலை. இதில் இவனுக்கு எதற்கு இந்த மீசை முறுக்கு?  பெரிய கட்டபொம்மன் போல ? ”  அனிச்சையாக தன் வாயை கையால் மூடிக்கொண்டு பொருமினாள்.

அப்போது உள்ளே வந்த தமயந்தி கையை வாயால் மூடியபடி சுவரில் சாய்ந்து நின்றவளை விசித்திரமாக பார்த்தாள்.”  என்ன..? ”  கேட்டாள்.  மகனின் மேல் இருந்த ஆத்திரம் அம்மாவின் மேலும் தாரிகாவிற்கு பரவியது.

” அரைப்படி வெண்ணை ” எரிச்சலுடன் வந்த தாரிகாவின்பதிலுக்கு தமயந்தியின் முகத்தில் புன்னகை வந்தது .

” சாந்தாவின் பேச்சு உனக்குள் அடிக்கடி வருகிறது ”  இப்போது தமயந்தியின் இதழ் விரிந்து சிரிக்கவே ஆரம்பித்தாள்.

” சாந்தா…?  என் அம்மா …?என் அம்மாவை உங்களுக்கு நன்றாகத் தெரியுமா? ”   தமயந்தியின் முகம் மீண்டும் கருமை பூசிக் கொண்டது “தெரியும்… தெரியும் “முணுமுணுத்துவிட்டு சட்டென நகர்ந்தாள்.

இந்த வீட்டில் யாரும் உருப்படியாக பேசவே மாட்டார்களா ?  தாரிகாவிற்கு ஆத்திரம் அளவில்லாமல் வந்தது. அந்த வீட்டின் மீது…  அந்த வீட்டு மனிதர்களின் மீது .அவளது இந்த காட்டம் துணிச்சலான காரியம் ஒன்றை அவளை செய்ய வைத்தது அது….

சங்கரேஸ்வரியின் கணவன் ,  சுகந்தியின் அப்பா சுந்தரேஸ்வரனை  நேரிலேயே அவரது வீட்டிற்கே சென்று சந்திக்க வைத்தது.




What’s your Reaction?
+1
21
+1
16
+1
0
+1
0
+1
3
+1
0
+1
0
Subscribe
Notify of
guest

0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!