Serial Stories இது ஒரு காதல் மயக்கம்

இது ஒரு காதல் மயக்கம்-20

20

 ” உங்கள் மாமாவின் பாசத்தை உங்களால் புரிந்து கொள்ள முடியவில்லையா ?  ஏன் இப்படி வெறுப்பாக பேசுகிறீர்கள் ? தாரிகா மயில்வாகனனை முறைத்தபடி கேட்டாள்.

”  மனைவி வேண்டாம் மகள் மட்டும் வேண்டும் என்பவரிடம் நான் எப்படி விருப்பம் காட்ட முடியும் ? வெறுப்பைத்தான் கொட்ட முடியும் .இவரை பார்த்தாலே எனக்கு வெறுப்புதான் வருகிறது.”

” மனைவி வேண்டாம் என்று அவர் உங்களிடம் சொன்னாரா ? “

 ” அப்படி சொல்லித்தானே அத்தையை வீட்டைவிட்டு விரட்டிவிட்டார் “

” அப்படி என்று உங்கள் அத்தை சொன்னார் .சரிதானே..? “

” ஆமாம் …ஆனால் …”மயில்வாகனன் யோசிக்கத் தொடங்கினான்.

” ம். இப்போதாவது யோசியுங்கள்.  உங்கள் மாமாவை இதுவரை உங்கள் அத்தையின் கண் வழியாகத்தான் நீங்கள் பார்த்திருக்கிறீர்கள். கொஞ்சம் உங்கள் கண்களையும்  உங்கள் மாமாவின் மீது வைத்துப் பாருங்கள். அவர் அடிப்படையில் எவ்வளவு நல்ல மனிதர், மனைவி மகள் என்று வாழவேண்டும் என்ற அளவில்லா ஆசையுடன் இருப்பவர் என்பதை உங்களால் புரிந்து கொள்ள முடியும் “

” ஆனால் அத்தையுடன் எப்போதும் சண்டையிட்டுக்கொண்டே…”   கையை உயர்த்தி அவனது பேச்சை நிறுத்தினாள் .

“அவர் அல்ல.  உங்கள் அத்தை தான் எப்போதும் சண்டையிட்டுக்கொண்டே இருந்தவர்கள்.”

”  ஏன் …? “

”  காரணம் மிகவும் சாதாரணமானது .அதனாலேயே அந்தக் காரணம் உங்களுக்குத் தெரியாமலேயே உங்கள் அத்தை 20 வருடங்களாக பார்த்துக் கொண்டார் .”

” அப்படி என்ன காரணம் அது ? ” மயில்வாகனனின் குரலில் எரிச்சல் வந்திருந்தது .

” ரொம்பவும் சலித்துக் கொள்ளாதீர்கள்.   உங்கள் மாமா அத்தையை செய்யச் சொன்னது அவர்களுக்கு நன்மையைத் தரக்கூடிய மிகச் சாதாரணமான விஷயம்.  கொஞ்சம் உடலை மூளையை வருத்த பயந்துகொண்டு அங்கிருந்து ஓடி வந்து விட்டார்கள் உங்கள் அத்தை .”

அப்படி என்னதான் செய்யச்சொன்னார் ?   “வேறு ஒன்றும் இல்லை பத்தாவது வரை மட்டுமே படித்திருந்த உங்கள் அத்தையை மேலே படிக்கச் சொன்னார் .ஒரு டிகிரியாவது வாங்கியாக வேண்டும் என்று கட்டாயப் படுத்தினார்.”

 மயில்வாகனன் திகைத்தான்.  ஒரு நொடி திகைப்பை சுமந்திருந்த அவனது முகம் மறு நொடியே தெளிந்தது. முதலில் மெல்ல இதழ் விரித்து பின்பு கடகடவென சிரிக்க ஆரம்பித்தான்.

அவனது சத்தமான சிரிப்பில் மிரண்ட தாரிகா மரத்தின் பின்னிருந்து தலை நீட்டி பார்த்து அங்கே சுகந்தியும் அவளது அப்பாவும் மர பெஞ்சில் அமர்ந்து கொண்டு இளநீர் ஒன்றை உடைத்து குடித்தபடி தங்களது நீண்டநாள் பிரிவாற்றாமையை பாச பேச்சுக்களில் கழித்துக் கொண்டு இருப்பதை உறுதி செய்தபின் வேகமாகப் பாய்ந்து மயில்வாகனனின் வாயை தன் கையால் அழுத்தமாக மூடினாள்.

 ” இப்போது எதற்கு இப்படி சிரிக்கிறீர்கள் ?   நாம் இங்கே மறைந்து நின்று கொண்டிருக்கிறோம். அப்பா மகளின் தனிமையை கலைக்க வேண்டாம். ” எச்சரித்தாள் .

அவளது இடையை இரு கைகளாலும் பற்றிக் கொண்ட மயில்வாகனன் அவளை தன்னருகே இழுத்து தன்னோடு ஒட்டிக் கொண்டான். விடுபட முயன்றவளிடம் ” ஷ் …  வெளியே தெரிந்து விடுவோம் ”  என்று போலியான எச்சரிக்கை ஒன்றை சொன்னான் .

அப்படி தெரியுமா என்ன…? தாரிகா ஆராய்ச்சியில் இறங்கியபோது ”  அத்தையின் பயத்திற்கு காரணம் எனக்கு தெரியும்.”  என்று சொல்லி அவளது ஆராய்ச்சியை நிறுத்தினான் .அவளை இன்னமும் தன் அருகே இழுத்துக் கொண்டான்.

”  அத்தை மாமா நினைத்துக் கொண்டு இருப்பது போல் பத்தாவது வரை படிக்க வில்லை. ஆறாவது வகுப்பிலேயே பெயில் ஆகிவிட்டதால் இனி பள்ளிக்கூடம் போகமாட்டேன் என்று அடம் பிடித்து வீட்டிலேயே இருந்து விட்டார்கள்.  அவர்களுக்கு ஆரம்பம் முதலே படிப்பில் அவ்வளவாக நாட்டம் இருந்தது இல்லை. அத்தையை பெண் பார்க்க வந்த சுந்தரேசன் மாமா 2 டிகிரி படித்து முடித்திருந்தார். நல்ல அரசாங்க வேலையில் இருந்தார். அவரது எண்ணம் தன் மனைவியாக வரப்போகும் பெண் அடிப்படைப் படிப்பு படித்திருக்க வேண்டும் என்பதாக இருந்தது .சுந்தரேசன் மாமாவையும் அவரது குடும்பத்தினரையும் எங்கள் தாத்தாவிற்கும் அப்பாவிற்கும் மிகவும் பிடித்துவிட்டதால் அத்தை பத்தாவது வரை படித்திருப்பதாக சொல்லிவிட்டனர். அப்போது பெண்ணின் படிப்பிற்கு அந்த அளவு முக்கியத்துவம் கொடுக்கப் படாததால் இது மிகப்பெரிய பொய்யாக அப்பா தாத்தாவிற்கு தோன்றவில்லை.”




தாரிகா வாயில் கைவைத்து  அதிர்ந்தாள். ” இது எவ்வளவு பெரிய பொய் தெரியுமா ? நீங்கள் தப்பு செய்துவிட்டீர்கள். நம்பியவரை ஏமாற்றி விட்டீர்கள் ” குற்றம் சாட்டினாள் .

“நான் தான் சொன்னேனே .அந்த காலத்தில் பெண்களின் படிப்பை அவ்வளவு முக்கியமாக நினைக்கவில்லை. அதனால் இது பெரிய விஷயமாக தோன்றாமலே போய்விட்டது.” அந்தக் காலத்தில் மட்டும் என்று இல்லை.  இந்தக் காலத்திலும் உங்கள் குடும்பத்தினருக்கு படிப்பு என்றாலே பிடிக்காது தானே ?  உங்கள் படிப்பு எத்தனையோ ?  சுகந்தியையும் படிக்க விடாமல் வீட்டிற்குள் தானே அடைத்து வைத்திருக்கிறீர்கள் ? “

தாரிகாவின் குத்தலான பேச்சில் மயில்வாகனன் முகம் வாடினான் . ”  ஏட்டுப் பாடத்தை விட அனுபவப் பாடம் எனக்கு விருப்பமான ஒன்று .அதனாலேயே நான் பத்தாவதுடன் படிப்பை நிறுத்தி விட்டேன் .சுகந்தியின் விஷயம் உனக்கே தெரியும். அவளை வீட்டைவிட்டு வெளியே படிக்க அனுப்பினால் அவளை கடத்திக் கொண்டு போய் தன்னுடன் வைத்துக் கொள்வதில் சுந்தரேசன் மாமா உறுதியாக இருந்தார் .அதனாலேயே அவளை படிக்க அனுப்ப வில்லை  “

” ஆமாம் உங்கள் மாமா தன் மனைவியுடன் போராடிப் பார்த்து தோற்றுவிட்டார். மனைவியை போன்றே மகளையும் முட்டாளாகவே வைத்திருக்க அவர் விரும்பவில்லை. அதனாலேயே மகளை படிக்க வைத்து விடுவதற்காகவேனும்  தன்னுடன் வைத்துக் கொள்ள எண்ணினார் .அதற்காகவே சுகந்தி விஷயமாக உங்கள் குடும்பத்தாருடன் சண்டை இட்டுக் கொண்டே இருந்தார் “

” மாமாவின் வீட்டில் எல்லோருமே அதிகமாக படித்தவர்கள்.   தான் ஒருத்தி மட்டுமே அங்கே படிக்காதவள் என்ற மனக்குறை அத்தையிடம் உண்டு .இப்போது தனது பத்தாவது படிப்பும் தேய்ந்து ஆறாவது என்று சொன்னபடி புகுந்த வீட்டினர் முன் நிற்பதற்கு அத்தைக்கு மிகவும் கூச்சமாக இருந்திருக்கும். அத்தோடு மேற்கொண்டு படிக்க வேண்டும் என்னும் மாமாவின் வற்புறுத்தல் வேறு இவற்றையெல்லாம் மனதில் வைத்தே அவர் மாமாவை விட்டு பிரிந்து வந்து விட்டார் . இப்படித்தான் நடந்திருக்கும் என்று நினைக்கிறேன் “

”  இதுதான் விசயம் என்று பிறந்த வீட்டினரிடம் சொன்னால் அவர்கள் உன் கணவன் மனம் போல படித்து விடு என்று சொல்லி விடுவார்களோ என பயந்து தான் உங்கள் யாரிடமும் இந்த விஷயத்தை சொல்லாமல் மாமாவை பற்றி இல்லாததும் பொல்லாததுமாக பேசி அத்தை முட்டாள்தனமாக தன் பிறந்த வீட்டிலேயே இருந்து விட்டார் இப்படியும் தான் நடந்திருக்கவேண்டும் ” மயில்வாகனனின் யூகத்தை தான் தொடர்ந்து முடித்தாள் தாரிகா.

” ப்ச் …  சாதாரண விஷயத்திற்காக அத்தை இப்படி தன் வாழ்க்கையையே கெடுத்துக் கொண்டார்களே ” மயில்வாகனன் வருந்தினான்.

” உங்களது ஆதர்ச அனுபவ படிப்பின்  லட்சணத்தைப் பார்த்தீர்களா ?  கொஞ்சமாவது படித்திருந்தால் உங்கள் அத்தை   இப்படி பாமரத்தனமாக  யோசித்திருப்பார்களா ? அடிப்படை கல்வி அறிவை அவர்களுக்கு அளிக்காமல் போனீர்களே ? ” தாரிகா ஆற்றாமையுடன் புலம்பினாள்.

” தப்புதான்”   தயங்காமல் ஒத்துக் கொண்ட மயில்வாகனன் லேசாக தொண்டையை செருமிக் கொண்டான்.

” உனக்கு நான் நன்றி சொல்ல வேண்டும் தாரிகா.  முடிந்து போய்விட்டது என்று நினைத்த அத்தையின் வாழ்வை மீண்டும் ஆரம்பித்து வைத்ததற்கு ”  சந்தோசமாக குதித்தாள் தாரிகா.

” நிச்சயமாகவா ? உங்கள் அத்தையை  மாமாவுடன் சேர்த்து வைத்து  விடுவீர்களா …? சுகந்தியை படிக்க வைத்து விடுவீர்களா….? “

” ம் ….” ஒற்றை எழுத்துடன் தலையசைத்த மயில்வாகனனின் விழிகள் தாரிகாவின் குதூகலத்தை பார்வையிட்டன.

”  ஒரு நல்ல விஷயத்தை சொல்லும்போது நன்றாக வாய் திறந்து ஆமாம் என்று சத்தமாக  சொல்வதை விட்டு எதற்கு இந்த தலையாட்டல் ? ”  முகம் சுளித்தாள்.

” உன்னைப்போல் கத்தியே குதிப்பேன் . ஆனால் அங்கே கேட்டுவிடும் பரவாயில்லையா.? ”  கட்டைவிரலை சுந்தரேசன் –  சுகந்தி பக்கம் காட்டிக் கேட்டான் .

 ” ஐய்யோ வேண்டாம். அவர்களுக்கு இடையே நாம் தலையிட வேண்டாம் .வாருங்கள் . நாம் கிளம்பி விடலாம் “

 ”  சரிதான் போகலாம் ஆனால் அதற்கு முன் கொஞ்சம் கீழே இறங்கி கொண்டாயானால் நல்லது. அப்போதுதான் என்னால் நடக்க முடியும் மயில்வாகனன் சொன்னதும்தான் தாரிகா குனிந்து தன்னை பார்த்தாள் .முன்பே அவனருகில் ஒட்டியபடி நின்றிருந்தவள் அவன் சொன்ன சந்தோச செய்தியில் துள்ளிக் குதித்து அவன் கழுத்தைக் கட்டிக்கொண்டு அவன் கால்களின் மேல் ஏறி நின்றிருந்தாள். இதே நிலையிலேயே வாருங்கள் போகலாம் என்று அவனுக்கு அழைப்பு விடுத்துக்கொண்டிருந்தாள் .




” ஓவ் …” சிறு அலறலுடன் அவனை விட்டு விலகியவள் …” போகலாம் ..” மெல்லிய குரலில் முணுமுணுத்தாள்.  அவளது கண்கள் முறுக்கி  விடப்பட்டிருந்த  அவனது மீசை நுனியின் மீது படிந்து விலகியது.

முன்னால் நடக்குமாறு சைகை செய்தபடி மயில்வாகனன் நடக்கத் துவங்கினான்.  ” உங்கள் அத்தை மாமாவுடன் சேர்ந்து வாழ ஒத்துக்கொள்வார்களா ? ”  அவனுடன் நடந்தபடி தாரிகா கேட்டாள். ஏனென்றால் அவளுக்கு சங்கரேஸ்வரியின் மீது தர்ம ராஜாவின் மீது அவர்களின் அதீத சகோதர பாசத்தின் மீது மிகுந்த சந்தேகம் இருந்தது.

“ஒத்துக்கொள்ள வைப்பேன் .”  உறுதியாகச் சொன்ன மயில்வாகனன் சொன்னதையே செய்தும் காட்டினான். தந்தையிடம் என்ன பேசினானோ அவர் அன்று இரவே சங்கரேஸ்வரியை அழைத்து “உன் கணவனுடன் சேர்ந்து வாழ்வதைப் பற்றி என்ன நினைக்கிறாய் ? ” என நேரடியாக தங்கையிடம் கேட்டார் .

சங்கரேஸ்வரி ” என்னால் முடியாது அண்ணா ” என்று கத்த

“சுகந்தி அவள் தந்தையுடன் இருக்க விருப்பப்படுகிறாள் ” என்றார் .

சங்கரேஸ்வரி மகளை பார்க்க சுகந்தி “ஆமாம் அம்மா “என்று தலையசைத்தாள்.

” அவள் சின்னப் பெண் அவளுக்கு என்ன தெரியும் ? ”  நான் ஒத்துக்கொள்ளமாட்டேன் மறுக்க ..தாரிகா அவள் அருகே சென்று குரலைத் தாழ்த்தினாள் .

”  உப்புக்கு பெறாத விஷயத்திற்காக உங்கள் கணவருடன் சண்டை இட்டு உங்கள் வாழ்க்கையை கெடுத்ததோடு அல்லாமல் உங்கள் மகள் வாழ்க்கையையும் கெடுக்க நினைக்காதீர்கள் சித்தி ” எச்சரித்தாள்  தாரிகா .

“நீங்கள் இந்த விஷயத்திற்காகத்தான் மாமாவைப் பிரிந்து  இருந்தீர்கள் என்பது அப்பாவிற்கு தெரிந்தால் அவர் என்ன சொல்வார் என்று யோசித்துப்பாருங்கள் அத்தை ” மயில்வாகனன் மறுபுறம் அத்தையை நெருங்கி நின்று  குரல் கொடுத்தான் .

தனக்கு இருபுறமும் நின்று கொண்டு தன்னை கார்னர் செய்த கணவன் மனைவியை மிரட்சியாக பார்த்தாள் சங்கரேஸ்வரி..    இந்த உண்மை அண்ணனுக்கு தெரிந்தால் நிச்சயம் தன்னை கன்னத்தில் அறைந்து கையை பிடித்து இழுத்துக்கொண்டு போய் கணவர் வீட்டில் தள்ளி விட்டு வருவார் என்பதில் அவளுக்கு சந்தேகம் இல்லை .ஏனென்றால் இத்தனை நாட்களாக தன் கணவரைப் பற்றி ஏதேதோ தப்பிதமாக அண்ணனிடம் சொல்லி வைத்திருந்தாள். அண்ணனின் அபிப்பிராயமின்மையை பெற சங்கரேஸ்வரி விரும்பவில்லை.

 அவள் முடிவு எடுத்து விட்டாள்.  தன் மகளுடன் கணவன் வீட்டிற்கு கிளம்ப முடிவு எடுத்து விட்டாள்.




What’s your Reaction?
+1
19
+1
13
+1
1
+1
3
+1
0
+1
0
+1
1
Subscribe
Notify of
guest

0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!