Short Stories sirukathai

ரசனைகள் (சிறுகதை)

“அத்தை …. நான் இன்று ஆபீஸ்ல இருந்து வரும்போது அப்படியே அம்மா அப்பாவை
பார்த்துவிட்டு வருகிறேன் ”என்று காலையில் ஆபீஸ் கிளம்பும்போதே சொல்லி
கொண்டு கிளம்பினாள் லதா .

உள்ளூரிலேயே பிறந்த வீடும் இருப்பதால் மாதம் ஒரு முறை அங்கு சென்று வருவது
அவளது வழக்கம் தான்.  அன்றும் அது போலவே சென்ற போது, “ வா.. வா என்று
வரவேற்ற அம்மா இந்தா உனக்கு பிடிக்குமே என்று செய்தேன். எடுத்துக்கோ.. சாப்பிடு என்றபடியே ஒரு தட்டில் இரண்டு ரவா லட்டுகளையும் கொஞ்சம் மிக்ஸ்ஸரும்
கொண்டு வந்து கொடுத்து விட்டு பக்கத்தில் அமர்ந்து கொண்டாள்.

“ஏம்மா …. சிரமப்படுகிறாய். காஃபி மட்டும் போதுமே” என்றாள் லதா.

“இதில் என்ன சிரமம். உனக்கு பிடிக்கும். ரசித்து சாப்பிடுவாய். பிடித்ததை செய்து
கொடுத்தால் அது ஒரு சந்தோஷம்தான்” என்று சிரித்தாள் அம்மா
உண்மைதான். லதா சாப்பிடும் எதையும் ரசித்து, ருசித்துதான் சாப்பிடுவாள். சாப்பாட்டு
ராமி என்று அர்த்தம் இல்லை. ஆனால் சாப்பிடுவதை ஒரு கடமை போல, ஒரு வேலை
போல, கடனே என்று செய்ய கூடாது என்பாள். அதே போல டிவி பார்த்துக்கொண்டோ,
இடது கையில் கதை புத்தகத்தை வைத்து படித்துக் கொண்டோ சாப்பிடுவதும் தவறு
என்பாள். அது சாப்பிடும் பொருளை அலட்சியப்படுத்துவது போல, நமக்காக உபசாரம்
செய்பவரை அவமதிப்பது போல என்பது அவள் கருத்து.

“கம கம”வென நெய் ,ஏலக்காய் வாசனையுடன், முந்திரி பருப்புகள் நெருட, ஜிலீரென நாவில் கரைந்த ரவா லட்டுக்களை ருசித்த லதா சாப்பிட்டு முடித்துவிட்டு “ரொம்ப
நன்னா இருக்கும்மா” என்று பாராட்டி விட்டு, கொஞ்ச நேரம் அம்மா, அப்பாவுடன்
பேசிக்கொண்டு இருந்த பின் வீட்டுக்கு கிளம்பினாள்.




குங்குமம் கொடுத்த அம்மா கையோடு ஒரு எவர்சில்வர் சம்புடத்தையும் கொடுத்தாள்.
“இந்தா இதையும் எடுத்துக்கோ. உன் மாமியாரிடம் கொடு. போன முறை கொடுத்தது
நன்றாக இருந்தது. உன் நாத்தனாருக்கும் கொடுத்து அனுப்பியதாக சொன்னாயே.
அதனால் செய்தவுடனே கொஞ்சம் எடுத்து வைத்து விட்டேன்” என்ற படியே சம்புடம்
நிறைய இருந்த ரவா லாடுகளை காண்பித்தாள்.

லதா மறுக்க முடியாமல் வாங்கி கொண்டு கிளம்பினாள். அம்மா போன முறை
என்றதும் அன்றைய நினைவு நெஞ்சில் நிழலாடியது.

“உன் அம்மா கொடுத்த லாடுகளுக்கு சர்க்கரையும், நெய்யும் குறைச்சலாக இருந்தது.
நான் எல்லாவற்றையும் உதிர்த்துவிட்டு சர்க்கரையும், நெய்யும் சேர்த்து திரும்ப
பிடித்தேன் ” என்று விமர்சனம் செய்த மாமியார் நாத்தனார் வந்தபோது அவளுக்கு
கொடுத்து அனுப்பியது நினைவு வந்தது.

வீடு வந்தவுடன் இந்தாங்கோ அத்தை . அம்மா கொடுத்தனுப்பினாள்  என்ற படியே
மாமியாரிடம் சம்புடத்தை கொடுத்தாள். திறந்து பார்த்த மாமியார் என்ன ரவா லாடுவா
? என்ன உங்கம்மா எப்பவும் இதே பண்ணுகிறாள் ? இது உனக்கு பிடிக்கும் என்பதாலா
இல்ல. உங்கம்மாவுக்கு இது ஒன்றுதான் பண்ண தெரியுமா” என்றாள் கிண்டலாக .
அம்மா ஆசை ஆசையாக செய்து கொடுப்பதென்ன ; அதற்கு இவர்கள் கிண்டலென்ன.
பொறுத்தது போதும்; பொங்கி எழு என்ற உத்வேகம்தான் லதாவுக்கு .

“இது எனக்கு மிகவும் பிடிக்கும் என்பது உண்மைதான். எங்கம்மா வேற பட்சணமும்
செய்வாள் ஆனால் நீங்க உடைத்து, உதிர்த்து, உங்க இஷ்டத்துக்கு, திரும்ப ரீ-மாடல்
பண்ண இதுதான் வசதி இல்லையா ? வேற எந்த பட்சணமும் அந்த மாதிரி பண்ண
முடியாதே” “வெடுக் “ என்ற பதில் லதாவிடமிருந்து வந்தது.

எல்லாவற்றையும் கேட்டுக்கொண்டு இருந்த மாமனார் கையில் வைத்து கொண்டு
என்னம்மா அரட்டை ; ஈ மொய்க்க போகிறது என்றார்.

“இல்ல மாமா இங்கே “ஈயே” இல்லை ” என்றாள் லதா கிண்டலுடன், வெகு திருப்தியுடன்
மாமியாரின் முகத்தை பார்த்த படி…….

மாமியாருக்கு அவள் தன்னைத்தான் சொல்கிறாள் என்று புரிந்தது. மாமனார் புரிந்தும்
புரியாமலும் விழித்துக்கொண்டிருந்தார்.

*******




What’s your Reaction?
+1
18
+1
17
+1
1
+1
0
+1
0
+1
0
+1
0
Subscribe
Notify of
guest

0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!