Serial Stories யாயும் ஞாயும் யாராகியரோ

யாயும் ஞாயும் யாராகியரோ-7

7

 

சில மணித்துளிகள் மௌனத்தில் கடந்து போக.. சுதாரித்து கொண்டு தன்னிலைக்கு வந்தான் அஸ்வின்.

அவனையே கண்ணிமைக்காமல் பார்த்துக் கொண்டிருந்த சுதாகர்‌, அதுதான் அந்த டூவீலர்காரன்..

மேலும் சில நிமிடங்கள் அஸ்வினுடன் பேசி விட்டு,..

“அதெப்பிடிங்க! உங்களைப் பாக்கணும்னு நான் கெளம்பி வர, நீங்க  எங்க ஊரு எல்லைல எல்லைச்சாமியாட்டமா நிக்கறீங்க. எனக்கு ஒடம்பு புல்லரிச்சுப் போவுதுங்க” என்றான் வெள்ளந்தியாக.

புன்னகைத்த அஸ்வின்,

“உங்க செல்ஃபோன் நம்பரைத் தர முடியுமா”

“அதுக்கென்னங்க..சொல்றேன் பதிஞ்சுக்குங்க”.

கயல்விழி நம்பரும் தரட்டுங்களா?”

“அது யாரு கயல்விழி?”

அதாங்க உங்களுக்கு பாத்திருக்க பொண்ணு பேரு”

“உங்க நம்பர் மட்டும் போதும்”

சுதாகர் எண்களைச் சொல்லச் சொல்லத் தன் மொபைலில் பதிவேற்றியவன்..

தன் செல்ஃபோன் நம்பரையும் சுதாகரன் மொபைலில் பதிந்து கொடுத்து விட்டு..

“ஊருக்குப் போய் உங்களுக்கு ஃபோன் பண்றேன் சுதாகர்”

கைகுலுக்கி விட்டுக் காரிலேறிக் கிளம்பியவனைப் பிரமிப்போடு பார்த்து விட்டுத் தானும் தன்னுடைய டூவீலரை ஸ்டார்ட் செய்தான் சுதாகரன்.

 ஆழ்ந்த யோசனையிலேயே வீடு வந்து சேர்ந்தவன் வாசல் திண்ணையில் ஈசிசேரில் கால் மேல் கால் போட்டு உட்கார்ந்து, மீசையை முறுக்கிக் கொண்டு உட்கார்ந்திருந்த சேகரனையோ.. பக்கத்தில் தரையில் உட்கார்ந்து வெற்றிலை இடித்துக் கொண்டிருந்த அப்பத்தாவையோ கண்டு கொள்ளாமல் நேரே சமையலறைக்கு ஓடினான்.

 சமையல்கட்டில், அடுப்பில் கொதித்துக் கொண்டிருந்த குழம்பை, விறகை சற்றே முன்னுக்கு இழுத்து கொதிப்பை அடக்கினாள் வித்யாவதி. குழம்பின் கொதிப்பு தணிந்தது போலத் தன்னுடைய குழம்பும் மனதையும்..கொதிக்கும் உணர்ச்சிகளையும் தணிப்பது எப்படி என்று போராடிக்கொண்டிருந்தவளுக்கு மகன் வந்தது சற்றே ஆறுதலைத் தந்தது.

“என்னம்மா இன்னுமா வெறடுகப்புல சமைக்கிறீங்க? போன தடவ வந்தப்பவே கேஸ் ஸ்டவ்வும், கனெக்ஷனும் வாங்கிக் குடுத்துட்டுப் போனேனே..அதெல்லாம் எங்கே..”

அஸ்வினின் பார்வை பரபரவென சமையலறை முழுதும் சுற்றி வந்தது.

விரக்தியாகப் புன்னகைத்த வித்யாவதி..




“கேஸ் அடுப்புல சமைச்சா சாப்பாட்டுல சத்தே இருக்காதாம். அத சாப்ட்டா வியாதி வந்துடுமாம். கீழ உக்காந்து எழுந்திருச்சு அடுப்புல  சமைச்சாதான் பொம்பளைகளுக்கு உடம்பு வணங்குமாம். உங்கப்பாவோட கட்டளை. அதை மீற இங்க யாருக்கு தைரியம் இருக்கு.? உங்க தாத்தாவுக்கிருந்த ஆணாதிக்கம் கொஞ்சமும் குறையாம உங்கப்பாவுக்கு வந்திருக்கு. நீ வாங்கிக் குடுத்த கேஸ் அடுப்பு, குக்கர், மிக்ஸி, க்ரைண்டர் எல்லாமே பின்கட்டுல வேண்டாத சாமான்லாம் போட்டு வெச்சிருக்கோமே அந்த அறைலதான் கெடக்குது. என்ன செய்ய? நான் வாங்கி வந்த வரம் அப்பிடி…ஆ…ஸ்..ஸ்..” தலையைப் பிடித்துக் கொண்டாள்.

“என்னம்மா என்னாச்சு? அதுக்குள்ள ஏன் சமையல் கட்டுக்கெல்லாம் வர்றீங்க? டாக்டர் இன்னும் ஒரு மாசத்துக்காவது ரெஸ்ட்ல இருக்கணும்னு சொன்னத மறந்துட்டீங்களா? நாளைக்கு தலைக்காயத்துக்கு ட்ரெஸ்ஸிங் பண்ணப் போகணும்..மறந்துடாதீங்க..”

தாயிடம் பகிர்ந்து கொள்ளலாமா என்று நினைத்த விஷயங்களை..

“இப்போதைக்கு வேண்டாம்! அம்மா இப்பல்லாம் ரொம்ப உணர்ச்சி வசப்படறாங்க.”

என சொல்லாமல் தவிர்த்தவன், தாயின் தோள்களை ஆதரவாக அணைத்துப் பிடித்த வண்ணம் ஹாலுக்கு வந்தான். 

“அம்மா..பொண்ணைப் பத்தியும், அவங்க குடும்பத்தைப் பத்தியும்  விசாரிச்சிட்டேன். இப்ப அப்பாகிட்ட என்னோட கல்யாண விஷயமா பேசப் போறேன்..தயவு செஞ்சு நீங்க உணர்ச்சி வசப்படாம இருக்கணும்.” 

முன்திண்ணைக்கு தாயுடன் வந்தான்.

“அப்பத்தா கொஞ்சம் வெத்தல இடிக்கிறதை நிப்பாட்டுங்க.. அப்பாகிட்ட என்னோட கல்யாண விஷயமாப் பேசணும்!”

“கல்யாண விஷயமா நானும் பொண்ணோட அப்பாவும் எல்லாமே பேசி முடிச்சாச்சு. உங்காத்தா உனக்கு ஏதாச்சும் மந்திரிச்சி விட்டிருந்தா..அத எல்லாம் மறந்துட்டு நாஞ் சொல்றத மட்டும் கேளு.

வெள்ளிக்கிழமை நிச்சயதார்த்தத்துக்கு உனக்கு ட்ரஸ் வாங்கணும். எந்த மாதிரி வாங்கலாம்னு உனக்கு ஆசையா இருக்கோ சொல்லு வாங்கிடலாம். இல்லேன்னா நானே எனக்குப் புடிச்ச மாதிரி வாங்கிடுறேன்.”

‘நான் இந்த வீட்டுத் தலைவன்..என் விரலசைவில் ஆடும் பொம்மைகள் நீங்கள்’ என்ற தோரணையில் ஆணவமாகப் பேசிய கணவனை எதிர்த்துப் பேச வாய் திறந்த வித்யாவதியைத் தன் கண்ணசைவாலேயே தடுத்து நிறுத்தினான் அஸ்வின். இதைக் கண்டுவிட்ட சேகரனின் இதழ்க்கடையில் ஓர் ஏளனச் சிரிப்பு நெளிந்தது.

“அதான்ப்பா..நிச்சயத்தைப் பத்திதான் பேச வந்தேன். நீங்க அம்மாவுக்கு விபத்துன்னு மெசேஜ் அனுப்பினதும் நான் என்னவோ ஏதோன்னு அடிச்சுப் புடிச்சுட்டு கெளம்பி வந்தேன். நான் இந்த வாரத்துக்காக முடிச்சுத் தர வேண்டிய வேலைகள் நெறய இருக்கு. அதை எல்லாம் முடிக்கணும். இல்லேன்னா வேலை போயிடும்.”

அம்மாவுக்கும் உடம்பு கொஞ்சம் தேறட்டும் என சொல்ல வந்தவன் அப்படியே நிறுத்திக் கொண்டான். அய்யோடா! அம்மாவைக் காரணம் காட்டினால் ஒட்டக்கூத்தன் பாட்டுக்கு இரட்டைத் தாழ்ப்பாள் கதைதான்.

“அச்சச்சோ..அப்பூ..உம் பட்டணத்து பவுசான வேலையப் பாத்துதான பொண்ணோட அப்பன் வாயப் பொளந்துகிட்டு பொண்ணத் தரவே சம்மதிச்சான். இல்லேன்னா அவனுக்கிருக்கற காசு,பணத்துக்கு  வீட்டோட…”

“ஏ கெழவி…வெத்தலயப் போட்டமா..மென்னு முழுங்கினமான்னு கம்முனு இருக்கணும். சமய சந்தர்ப்பம் தெரியாம எதையாவது பேசி வெச்சேன்னா அவ்வளவுதான்”

மகனின் உறுமலுக்குப் பயந்து, இடித்த வெற்றிலை,பாக்கை உருட்டி வாயில் போட்டுத் தான் சொல்ல வந்த விஷயத்தையும் வெற்றிலைச் சாற்றோடு சேர்த்து விழுங்கினாள்.

அவ்வளவுதான்..இனி அடிச்சாகூட ஒரு வார்த்தை வெளியில வராதே! மாமியாரிடமிருந்து எப்படியாவது அவள் சொல்ல வந்த விஷயத்தை கறந்து விட நினைத்த வித்யாவதிக்கு எரிச்சல்தான் வந்தது.

ஆனால் அஸ்வினோ அப்பத்தா சொல்ல வந்த விஷயத்தைக் கண்டு கொள்ளாதவனாகத் தொடர்ந்தான்.

“எப்படியும் பெரியவங்க நீங்க கல்யாணத்தை முடிவு செஞ்சு வெச்சிட்டீங்க. அதனால தனியா நிச்சயதார்த்தம் எதுக்கு? கல்யாணத் தேதிய முடிவு பண்ணி சொல்லிட்டீங்கன்னா, நானும் என்னோட வேலைகளை எல்லாம் முடிச்சிட்டு..லீவு சொல்லிட்டு வந்திடுவேன். அதனால நீங்க பொண்ணோட அப்பாகிட்ட பேசிட்டு எனக்கு ஃபோன் பண்ணுங்க. நான் நாளைக்காலை சென்னைக்குப் பொறப்படறேன்.

பவ்யமாகத் தந்தையிடம் பேசிய மகனை வியப்போடு பார்த்த வித்யாவதி..

டேய் அஸ்வின், நீயுமாடா? பணத்தைப் பாத்து நீயுமா மயங்கிட்டே? பணக்காரப் பொண்ணு வேண்டாம்..படிச்ச பொண்ணுதான் வேணும்னு உங்கப்பாவ எதிர்த்து நிக்கப் போறேன்னு நினைச்சேனே..! கண்களில் நீர் குளம் கட்டியது.

“அஸ்வினுக்கொரு தங்கச்சிய இந்த வீட்டுக்கொரு மகாலச்சுமியப் பெத்துத் தராம இப்பிடி அவனை ஒத்தைமரமா நிக்க வெச்சுட்டியே” என்று மாமியார் குறைப்பட்டு..குற்றப் பத்திரிக்கை வாசித்த பொழுதெல்லாம்..

“இந்த வீட்டுக்கு இன்னுமொரு அடிமையைப் பெற்றுத் தர எனக்கென்ன பைத்தியமா? கல்வியில் கலைமகளாக, செல்வத்தில் திருமகளாக,வீரத்தில் மலைமகளாக  இருக்கும் பெண்ணைத்தான் எனக்கு மருமகளாகக் கொண்டு வரப் போகிறேன் என்று மனதுக்குள் சபதமெடுத்திருந்தாளே! மகன் தன் பேச்சை கேட்டு நடப்பான் என்று மகிழ்ந்திருந்தாளே..எல்லாமே கனவுதானா?

விரக்தியில் மூழ்கி செயலற்று நின்றவளை…

“ஏய் என்ன நின்னுகிட்டே தூங்கறியா. அதான் காலமே வெள்ளன கெளம்பணும்னு எம்புள்ள(!)  சொன்னது காதுல வுளுந்திச்சில்ல.போ..போய் வெரசா சாப்பாடு எடுத்து வெய்யி” மனைவியிடம் சுள்ளென விழுந்த சேகரன்..

“வா கண்ணு சாப்ட்டு தூங்கலாம்..காலமே கெளம்பறப்ப பேசிக்கலாம்”

 முறுக்கேறிய மீசையை ..முறுக்கியவாறு துண்டை உதறித் தோளில் போட்டவராகத் தானும் சாப்பிட எழுந்தார்.

மறுநாள் அதிகாலை.. சென்னை நோக்கிப் பயணமான அஸ்வின், ஊருக்கு வெளியே ஒரு மரத்தடியில் காரை நிறுத்த, அங்கே ஏற்கெனவே காத்திருந்தவரோடு சில நிமிஷங்கள் பேசி விட்டு சென்னையை அடைந்தான்.

தாயின் உடல்நிலை தேறி வருவதையும், வேலைப் பளு அதிகமாக இருப்பதாகவும் நிரல்யாவுக்கு குறுஞ்செய்தி அனுப்பினான். மறந்தும் தன் கல்யாணத்தைப் பற்றி மூச்சு விடவில்லை.




இன்னும் ஒரு மாதத்தில் கல்யாணம், சீக்கிரம் பத்திரிகை அடித்து அனுப்புகிறேன் என்று மட்டும் சேகரனிடமிருந்து தகவல் வந்தது. நீங்கள் அனுப்ப வேண்டாம் நானே புது டிசைனில் அடித்துக் கொள்கிறேன்  என்று மகன் சொன்னதைக் கேட்டுப் பெருமிதப்பட்டுக் கொண்டார் சேகரன். மனசுக்குள் நொந்து வேதனைப்பட்டாள் வித்யாவதி.

தான் முடிக்க வேண்டிய வேலைகள் நிறைய இருக்கிறதே ! அஸ்வின் பரபரத்தான். தன் உதவியாளர்கள் பொறுப்பில் நிறைய வேலைகளை ஒப்படைத்தான். நிருவிடமிருந்து வந்த மெசேஜ்களைப் படிக்காமல் புறக்கணித்தான். அவளைச் சந்திப்பதைத் தவிர்த்தான்.

நிரூ மட்டுமென்ன..! வேலையில்லாமல் வெட்டியாகவா இருந்தாள்?  சீனியர் இன்னொரு புதிய கேஸை அவளிடம் ஒப்படைத்திருந்தார். அதைப் பற்றிய விவரங்கள் அடங்கிய கேஸ் கட்டு அவள் கையில்..! நினைவோ அஸ்வினிடம்! 

ஊருக்குப் போவதற்கு முதல் நாள் வரையில் அவளிடம் கரைகாணாத காதலுடன் இருந்தவனுக்கு திடீரென்று என்னாயிற்று? தன்னிடம் இப்படி பாராமுகமாக இருப்பதற்கு ஊரில் என்னதான் நடந்திருக்கும்?

ஆமாம்.. அவனுக்கு எந்த ஊரென்று கூட நமக்குத் தெரியாதே? அவன் பெயர், படிப்பு ,பதவி, பணியிடமெல்லாம் அவன் கொடுத்த விசிட்டிங் கார்ட் மூலம்தானே தெரிந்து கொண்டோம். ஒரு வக்கீலான தனக்கு  அவன் ஊரைத் தெரிந்து கொள்வதொன்றும் பெரிய வித்தையில்லைதான். ஆனால் எதுவுமே தெரிந்து கொள்ளாமல் அவன் மேல் பீறிட்டெழுந்த நேசத்திற்குக் காரணம் அவன் அழகும் கம்பீரமும் மட்டும்தானா..? இல்லையே! தன்னுயிரையும் பொருட்படுத்தாமல் மனித நேயத்துடன் அவன் செய்த செயல் அல்லவா அவன் பால் தான் ஈர்க்கப்படக் காரணம்! பரிதவித்தாள் நிரூ.

திருமணத்திற்குப் பத்து நாட்கள் இருக்கும் போது அவன் ஆவலோடு எதிர்பார்த்த செய்தியோடு..

“இன்னைக்கே ஆஃபீசுக்கு லீவு போட்டுட்டு அந்த கம்ப்யூட்டர் பொட்டியோட வந்து சேரு” என்ற மெசேஜும் அவனுடைய அப்பாவிடமிருந்து வந்தது.

“இத..இத…இதத்தானே எதிர்பாத்தேன்..”

என்று வீட்டுக்குப் போய்ச் சேர்ந்தவனை வரவேற்றது வித்யாவதியின் புன்னகை பூரித்த முகம்.

 “அம்மா..அப்பா எங்கே..எதுக்கு இத்தன அவசரமா என்ன வரச் சொன்னாரு..? அதான் கல்யாணத்துக்கு இன்னும் பத்து நாள் இருக்கே.. கல்யாண ட்ரெஸ் கூட இன்னும் தெச்சு வரல.. அதுக்குள்ள என்ன அவசரம்?”

“தோளைக் குலுக்கி 

“எனக்கென்ன தெரியும்..? நீயாச்சு..உங்கப்பாவாச்சு..! இரு ஒனக்கு காப்பி கொண்டாறேன்” குஷியாக சமையலறைக்குப் போன அம்மாவைப் பாத்து தனக்குள் சிரித்துக் கொண்டான் அஸ்வின்.

அதற்குள் தன்னறையிலிருந்து எரிமலையாக வெளிப்பட்ட சேகரன்..

“உனக்குப் பாத்த அந்த சிறுக்கி மவ அவளோட அத்த மகன யாருக்கும் தெரியாம கல்யாணம் பண்ணிகிட்டாளாம். அந்தப் பருத்தியூரான் பொட்டச்சிய வளக்கத் தெரியாம வளத்துட்டேன்னு போனைப் போட்டு அழுவறான்.

அஸ்வின்.. இனிமே நீ சென்னைக்குப் போக வேண்டாம். நீ முடிச்சுக் குடுக்க வேண்டிய வேலகளை எல்லாம் இங்கிருந்தே செஞ்சு குடுத்துரு. அதுக்காகத்தான் இந்தப் பொட்டியக் கையோட கொண்டு வரச் சொன்னேன்.இப்ப இருக்கற வேலை எல்லாம் முடிச்சிட்டு வேலைய ராஜினாமா பண்ணிட்டு ஊரோட இரு. 

அந்தப் பொட்டச்சிக்கு நான் யாருன்னு காமிக்கறேன். அத்தமகன் கட்டுன தாலிய அத்துட்டு உங்கையால அவ கழுத்துல  தாலி கட்ட வைக்கிறேன் யார் கிட்ட..ஹ்ஹும்…”

தீக்கங்குகளாக வார்த்தைகள் வெளிப்பட்டன.

“கயல்விழியும் அவளோட  அத்தை பையன் சுதாகரனும் சின்ன வயசுலருந்து ஒருத்தரை ஒருத்தர் காதலிச்சு வந்த விஷயம் தெரிஞ்சு.. அவங்கள ஃப்ரெண்ட்ஸ் மூலமா படாத பாடுபட்டு தேவையான எல்லா உதவிகளையும் செஞ்சு, சேத்து வெச்சோம். இப்ப மறுபடியும் மொதல்ல இருந்தா?”

 அஸ்வின் சிந்தனையில் மூழ்க..

“ஏதோ நம்ம நல்ல காலமோ இல்ல நம்ம மகனோட அதிர்ஷ்டமோ இந்தக் கல்யாணம் நின்னு போச்சுனு நாம பட்ட சந்தோஷத்துக்கு இத்தனை அற்பாயுசா..?”

வித்யாவதி மனசுக்குள் மறுக..

அடிபட்ட சிங்கம் போல..சிந்தனை செய்தபடி  வாசலில் உலாத்திய சேகரனின் அடுத்தகட்ட நடவடிக்கை என்னவாக இருக்குமோ?




What’s your Reaction?
+1
6
+1
11
+1
1
+1
2
+1
0
+1
0
+1
0
Subscribe
Notify of
guest

0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!