Serial Stories யாயும் ஞாயும் யாராகியரோ

யாயும் ஞாயும் யாராகியரோ-4

4

“சீனியர் ரொம்ப கிரேட் .. இல்லை?

ஐஸ்க்ரீமை சுவைத்தபடி மேக்னா கேட்க

பெருமிதமாய் தலையசைத்த நிரல்யா

சீக்கிரம் முடிச்சிட்டு வா மேகி! நாம் வீட்டுக்குப் போய் டிரஸ் சேன்ஞ்ச் பண்ணிட்டு ‘அன்பாலயம்’ போகணும்.”

எந்த ஒரு நல்ல விஷயம் நடந்தாலும் உடனே அன்பாலயத்தில் பகிர்ந்து மகிழ்வது அம்மாவின் வாடிக்கை.சென்னையில் இருந்தவரை ம் என்றால் அங்கு ஓடிவிடுவார்.ஆரம்பத்தில் அம்மாவுக்காக போக ஆரம்பித்தவளுக்கு கொஞ்சம் கொஞ்சமாக அபிமானம் உண்டாகிவிட்டது. ஆதரவற்ற பெண்களையும் அனாதைக் குழந்தைகளையும் பேணிப் பராமரிப்பதென்பது‌ எத்தனை பெரிய விஷயம்.சியாமளா பத்மநாபன் முழு நேர சேவையாக செய்துவருகிறார்.அவரிடம் பத்து நிமிடம் பேசினால் போதும் எப்பேர்பட்டவரும் கருணையாளராக மாறிவிடுவார்கள்.

“அதோ பார்.  அந்த சேனல் காரன் யார்கிட்டயோ கடலை போட்டுக்கிட்டு இருக்கான் அவன் பாக்குறதுக்குள்ள தப்பிச்சு ஓடிப் போயிடுவோம் வா” மேகி வேகமாக நிரல்யாவின் கையை இழுத்தபடி நகர்ந்தாள்.

இருவருமாக காம்பவுண்டை கடந்து ஸ்கூட்டியை நெருங்குகையில் அஸ்வின் தூரத்தில் இருந்து கத்துவது தெரிந்தது.

‘ஹேய்..வக்கீல் மேடம்.கொஞ்சம் நில்லுங்க.ஒரு முக்கியமான விஷயம்..”

“பத்திரமா வச்சுக்கோங்க. நாளைக்கு வாங்கிக்கிறோம்”

திரும்ப கத்திவிட்டு வேகமாக ஸ்டார்ட் செய்தாள் மேகி.

பின்னால் ஓடி வந்தவனைப் பார்த்து நிரல்யா பழிப்பு காட்ட ஸ்கூட்டி பறந்தது.

“ஏய்..மெதுவா போ.பறக்காதே”

நிரல்யா சொல்லிக் கொண்டிருக்கும்போதே குறுக்கே வந்தது அந்த மெட்டாடர் வேன்.

சடாரென ப்ரேக் போட்ட வேகத்தில் மேகி தடுமாற..நிரல்யா கீழே குதித்தாள்.

அடுத்த கணம் நிரல்யா மட்டும் அந்த வேனுக்குள் இழுபட்டாள்.

நொடியில் நடந்துவிட்ட சம்பவத்தில் கதிகலங்கிய மேகி 

“ஹெல்ப்..ஹெல்ப்..” என சத்தமிட

திபுதிபுவென கூட்டம் கூடியது.

என்ன ஏது என்று நிதானிப்பதற்குள் நிரல்யாவின் கண்கள் கட்டப்பட்டன.

“டேய்.சீக்கிரமா போடா.அந்தக் குட்டிச்சாத்தான் கத்தி ஊரையேக் கூட்டுது “

கரகரத்த குரலில் ஒருத்தன் கூற, மற்றவன் அவள் கைகளை இறுக பற்றியிருந்தான்.

சட்டென இழுபட்டதில் நிலை தடுமாறியவள் கொஞ்சம் சுதாரித்துக் கொண்டாள்.அவள் வக்கீல் புத்தி வேலை செய்ய..

தனது அலைபேசி கிடைக்குமா எனத் துழாவியபடியே மெல்ல பேச்சுக் கொடுத்தாள்.




“யாருடா நீங்க?எதுக்கு என்னைக் கடத்தறீங்க.”

“கடத்தறோம் னு தெரியுதில்ல கம்முனு வா.

வாயில் ஒரு பிளாஸ்திரியை போடவா ண்ணே”

“லூஸ் ல விடுடா.வக்கீலம்மா வாயை வச்சு தான் பொழைப்பு ஓட்டுது.”

“முட்டாபசங்களா!

நான் பணக்கார வீட்டு பொண்ணு இல்லை.என்கிட்ட காசு பணமும் இல்லை.ஏன் வெட்டிவேலை பார்க்கிறீங்க “

மெல்ல வாயை விட்டு ஏதாவது தகவல் கிடைக்குமா என நோட்டமிட்டாள் நிரல்யா.

“வக்கீலம்மா! நீ பொண்ணு தானே.அதுவும் அழகா வேற இருக்கே. வடநாட்டுக்காரன் நல்ல விலை கொடுப்பான்.

உன் புத்திசாலித்தனத்தை எங்ககிட்ட காட்ட நினைக்காதே”

கடுமையான குரலில் ஒருவன் எச்சரிக்க.

“சரிதான்.மண்டையை மறைச்ச நீ கொண்டையை மறைக்கல. இந்நேரம் என் ப்ரெண்ட் இந்த  வண்டி நம்பரை நோட் பண்ணியிருப்பா.மரியாதையா என்னை இறக்கி விட்டுட்டா தப்பிப்ப.. இல்லை அவ்வளவு தான்.”

“அப்படியா! வாதாடற உனக்கு இத்தனை மூளை இருந்தா எங்களை மாதிரி கிரிமினலுக்கு எத்தனை இருக்கும்? இப்ப பாரு..”

அவன் சொல்லிமுடிப்பதற்குள்‌ வேன் நின்றது. வேறு வண்டியில் அவளை ஏற்ற அது சிட்டாய்ப் பறந்தது.

அடப்பாவிகளா! இது சீரியஸான கடத்தலா? எத்தனை பேர் வண்டியில் இருக்கானு தெரிலையே. எப்படியாவது தப்பிக்கணுமே.அவள் யோசித்து முடிப்பதற்குள் வண்டி நின்றது.

அவளை மென்மையாய்க் கைத்தாங்கலாய் ஒரு கரம் பிடித்து அழைத்தது.

“வருக மகாராணியாரே!”

பழகிய குரலில் அவள் திகைக்க..கண்கட்டு அவிழ்த்தும் எதிரில்…

“அஸ்வின்! நீயா?”

பலூன்களால் அலங்கரிக்கப்பட்ட அந்த இடத்தில் நடுநாயகமாக கேக் வைக்கப்பட்டிருந்தது.

தனக்காக எத்தனை மெனக்கெட்டு செய்திருக்கிறான்? மனசுக்குள் ஒரு பெருமிதம் ஓடினாலும் எதற்கு இந்த கடத்தல் நாடகம்?

“இதென்ன பைத்தியக்காரத்தனம் அஸ்வின்? படிச்சவன் பண்ற வேலையா இது? எதில் விளையாடுறதுனு ஒரு விவஸ்தை வேண்டாம்?ஐயோ

மேகி இந்நேரம் அம்மாகிட்ட சொல்லியிருப்பாளே.”

படபடவென பட்டாசாய்ப்‌ பொரிந்தவள்

“உன் ஃபோனைக் கொடு”

“கூல் கூல் பேபி. மேகியும் இதோ இங்க தான் இருக்கா. உன் அம்மாவுக்கும் சொல்லியாச்சு.இப்போதைக்கு இந்த நேரத்தை என்ஜாய் பண்ணுவோம்.”

“இல்லை அஸ்வின் இதை நான் என்கரேஜ் பண்ண முடியாது.இந்த விஷயத்தை சாதாரணமா எடுத்துக்க நான் தயாரா இல்லை.சீனியருக்குத் தெரிஞ்சா என்னை கேவலமா நினைப்பார்.”

“ஸாரி நிரூ.

நீ நினைக்கிற மாதிரியில்ல. நான் உன்னை கடத்தவும் இல்லை.உன்னை கடத்தின கும்பல்கிட்டேயிருந்து காப்பாத்தியிருக்கேன்”

“ஆமாம் நிரூ.நாம இன்னும் ஜாக்ரதையா இருக்கணும். அந்த நடிகையோட மாமாதான் உன்னை ஆள் வச்சு கடத்தினது.அஸ்வின் மட்டும் சமயோசிதமாக உன்னை மீட்கலைனா…” தோளை குலுக்கினாள் மேகி.

அதற்குள் பத்து பதினைந்து முறை அழைத்திருந்தார் ஜானகி.

மேகியின் கையிலிருந்து ஃபோனைப் பிடுங்கியவள்.

“கவலைப்படாதீங்க மா.எனக்கு ஒன்றுமில்லை.சும்மா ஃப்ரெண்ட்ஸ் சேர்ந்து பிராங்க்‌ செய்தாங்க. பதறாதீங்க மா ப்ளீஸ்…”

கண்ணில் நீர் மல்க குழறியவளைப் பார்த்து வியந்தான் அஸ்வின்.

இதென்ன! இப்படியொரு அம்மா பாசம்.

அவன் வீட்டுக்கு ஒரே பிள்ளை.தாத்தா பாட்டி பெரியப்பா என மொத்த குடும்பமும் அவன் மீது பாசத்தைக் கொட்டுவார்கள் தான். ஆனால் இந்த அம்மா பாசம் விசித்திரமாக தெரிந்தது.

ஒரு வேளை அவள் அம்மா படித்து பெரிய பதவியில் இருப்பதால் இத்தனை ப்ரியத்துடன் இருக்கிறாரோ.

சே…அப்படி சொல்ல முடியாது

ஊரிலிருந்த போதும் சரி.இங்கு வந்துவிட்ட போதும் சரி அவன் அம்மாவிடம் இத்தனை ஒட்டுதல் ஆக இருந்ததில்லை.

ஆனாலும் அவன் சேனலில் வேலை செய்யப் போவதாக சொன்னபோது அம்மா மட்டும் தான்

“உனக்குப் பிடிப்பதை செய்” என்றாள்.

 முதன்முறையாக அம்மாவிடம் பேச வேண்டும் போலிருந்தது.

“நிரல்யாவுக்கு ஆபத்துனு எப்படி உங்களுக்கு தெரிஞ்சது அஸ்வின்?”

அவனைக் கலைத்தாள் மேகி.

“ம்க்கும் அதை இப்ப கேளு. முக்கிய விஷயம் னு சொல்லி கூப்பிட்டப்ப கேட்டிருக்கணும்.

கோர்ட்ல தீர்ப்பு வந்ததுமே அந்த நடிகையோட கார்டியன் ஒரு தடியன் பயங்கர கடுப்பில் இருந்தான். அந்தப் பெண்ணை வச்சு பணம் சுருட்ட நினைச்ச நினைப்பில் மண் விழுந்திடுச்சே.அந்த ஆத்திரத்தில் நிரூவை கடத்தி விற்க பக்காவா ஏற்பாடு செஞ்சிருப்பதா எனக்கு தகவல் வந்துச்சு..அப்போது அத்தனை விபரம் எனக்குக் கிடைக்கல.அது உண்மையான்னு தெரியவுமில்லை.அதைச் சொல்லி எச்சரிக்க நினைச்சுதான் நான் ஃபங்ஷனுக்கே வந்தேன்.சீனியரும் முக்கியமான காலில் பிஸியாயிட்டார் உங்களைத் தேடினா‌‌ நீங்க அவசரமா கடத்தல்காரனோட காரில் ஏறிட்டீங்க..

அதான் என் காரை எடுத்துட்டு வந்து வழிமறிச்சு காப்பாத்தினா…

உங்க மேடம் எரிஞ்சு விழறாங்க.”

“ஸாரிங்க..இப்படி நடக்கும் னு யாருக்குத் தெரியும்?”

“உங்க மூளை அவ்வளவுதான்னு தெரிஞ்சதுதான். வக்கீல் மேடம் கோட்டை விட்டது தான் வேடிக்கை.”

உண்மைதான்.இன்னமும் கவனத்தோடும் எச்சரிக்கையோடும் இருக்கணும்.ஆனால் ஒவ்வொரு இக்கட்டிலும் ஆபத்பாந்தவனாக வருபவன் கிடைத்தது வரமல்லவா? நெஞ்சு நிறைய நன்றியோடு கண்களில் காதல் பெருக அவனைப் பார்த்தவள்…

சட்டென தன்னைக் கண்ட்ரோல் செய்து கொண்டவளாய்




“ரொம்ப தேங்க்ஸ் அஸ்வின்.நான் வர்றேன்” என்றாள்.

கனிஞ்சு வர்ற காதலை அப்படியே காட்டினா குறைஞ்சா போயிடுவா? ஒண்ணும் தெரியாத மாதிரி எப்படி போறா பாரு அழுத்தக்காரி. மனசுக்குள் அஸ்வின் மறுக…

அச்சோ! இந்தக் காதலை அம்மாகிட்ட எப்படி சொல்றது? அம்மா ஒத்துக்குவாரா?

அஸ்வின் வீட்டில் ஒத்துக்குவாங்களா?

நிரல்யாவும் தவித்தாள்.

அவளுக்கான கடமை எத்தனையோ இருக்கு.கூடவே கடைசிவரை அம்மாவை அவள் கூடவே வைத்துக் கண்மணி போல பார்த்துக்கொள்ள வேண்டும். இதற்கெல்லாம் அஸ்வின் ஒத்துவருவானா?

இதுவரை அஸ்வின் குடும்பத்தைப் பற்றி எதுவும் தெரிந்துகொள்ளவும் இல்லை.

அஸ்வின் அம்மா எப்படி இருப்பார்?

அவள் யோசித்துக் கொண்டிருந்த..

அதேநேரம்

ஊரில் அஸ்வின் அம்மா வித்யா

மகனின் நல்வாழ்வுக்காய் ஈஸ்வரமூர்த்தியை வேண்டி விளக்குப்போட்டு பிரகாரத்தில்

ஒருநிமிடம் உட்கார்ந்தாள்

எளிய காட்டன் புடவை. மாநிறமாயிருந்தாலும் களையான‌ முகம்.அகன்ற விழிகள்..அதில் அப்பியிருக்கும் லேசான சோகம்.

எழப்போனவளை வம்புக்கிழுத்தாள் ஊர்வம்பு கோமதி.

என்ன வித்யா பிள்ளைக்கு கல்யாணமாமே உங்க வீட்ல மாநாடு கூடியிருக்கு.நீ சொல்லவே இல்லையே!

சுருக்கென்றிருந்தது வித்யாவுக்கு. எதைத்தான் அந்த வீடு அவளிடம் சொல்லியிருக்கிறது. ம்.. அதற்காக வெளியாட்களிடம் விட்டுக் கொடுக்க முடியுமா என்ன?

“பிள்ளைனு இருந்தா‌ கல்யாணபேச்சு எடுக்கிறது வழக்கந்தானே”

பரவாயில்ல.விட்டுக்கொடுக்காம பேசற. உங்க வீட்ல  ஆம்பளைங்க வச்சது தானே சட்டம். ஆனாலும் எனக்குத் தெரிஞ்சதை சொல்றேன் கேட்டுக்க. உன் நாத்தனார் புருஷன் எங்க பக்கத்துவீட்டு பொன்னுசாமியை வரன் பார்க்கிற விஷயமா கூப்பிட்டிருக்கார். ஆனா உங்க வீட்டு சட்டதிட்டங்களுக்கு எவ‌ வந்து மாட்டப்போறாளோ?

முகத்தை நொடித்தபடி‌ கோமதி போக..

வித்யாவுக்கு ஆயாசமாக இருந்தது.கோமதி சொல்வது உண்மைதான்.இந்த காலத்திலும் ஒரு மொபைல் ஃபோன் கூட இல்லாமல் தான் இருக்கிறாள்.பெற்ற பிள்ளையிடம் ஆசையாய் நாலு வார்த்தை பேசக்கூட கொடுப்பினை இல்லை.கணவன் சேகரனிடம் கேட்டால் குத்தலாய் ஏதாவது சொல்வான்.ம்ஹும் அவள் கொடுத்து வைத்தது அவ்வளவு தான்.குழிக்குள் விழுந்தபிறகு குமுறி என்ன பயன்? எல்லாம் அந்தப் பாவியால் வந்த வினை

குப்புறத்தள்ளிக் குழியைப் பறித்ததாம் குதிரை.

கூடா நட்பு கேடாய் முடிந்துவிட்டது.நம்பிக்கைத் துரோகி.நெஞ்செல்லாம் கசந்து வழிய..

சே! எதை நினைக்கக் கூடாதோ அதையே நினைக்க வைக்கிறது விதி.

நீலகண்டா! உன்னை மாதிரி நஞ்சை விழுங்கவும் முடியாமல் துப்பவும் முடியாமல் வாழ வச்சிட்டியே ! போதும் இந்த பொல்லாத வாழ்க்கை

ஈஸ்வரா! என் பிள்ளைக்காவது நல்ல வாழ்வை அமைத்துக் கொடு”

மனதார வேண்டிக்கொண்டு வீட்டிற்கு வந்தவளுக்குப் பெரிய அதிர்ச்சி காத்திருந்தது.




What’s your Reaction?
+1
12
+1
13
+1
0
+1
0
+1
0
+1
0
+1
1
Subscribe
Notify of
guest

0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!