Serial Stories யாயும் ஞாயும் யாராகியரோ

யாயும் ஞாயும் யாராகியரோ-5

5

சில்லென்ற அருவியின் குளுமை உள்ளிறங்கியதோ?

“சீனியரின் வீட்டுக்கு வாங்க அஸ்வின்” என்ற நிரல்யாவின் குரலில் என்னவோ ஏதோ என்று பதறியடித்துக் கொண்டு ஓடிய அஸ்வினின் கண்களைப் பறித்தது அமைதியான அந்த வீட்டு ஹாலில் மாட்டியிருந்த பெரிய அருவி போஸ்டர்தான்.

சரி, ஒன்றும் பிரச்சனை இல்லை என்றே தோன்றுகிறது. அப்புறம் எதற்காக அவ்வளவு அவசரமாக என்னைக் கூப்பிட்டாள் நிரு?

“இது ஸ்டாக் போஸ்டர் இல்லை, ஒகேனெக்கலில் என் பையன் எடுத்தது. ” என்றவாறே சீனியர் ஹாலுக்குள் வந்தார். 

“என்னடா திடீர்னு வீட்டுக்கு வரச் சொல்லிட்டாங்களேன்னு உனக்குத் தோணும். எங்க வீட்டுப் பொண்ணைக் காப்பாற்றிக் கொடுத்திருக்க, அதான் இன்றைக்கு, அவ பிறந்தநாளன்னிக்கே, உனக்கு ஒரு விருந்து கொடுக்கணும்னு ஆசை” என்றவாறே வந்த அந்தப் பெண்மணியைப் பார்த்ததும் அஸ்வின் சட்டென்று எழுந்தான்.

சீனியரின் மனைவி, இல்லையா? அதிகம் உயரமில்லைதான், ஆனால் அந்தக் கண்களில் தெறிக்கும் அறிவுச் சுடரில் தனி கம்பீரம் இருக்கிறது. சூடிதார்தான் அணிந்திருக்கிறார்கள், எனினும் மங்களம் பெருக்குகிறார்கள்.

“இந்தாப்பா, உனக்கு புது உடை வாங்கி வெச்சிருக்கோம். மாற்றிட்டு வா. கொஞ்சநேரம் பேசிட்டுச் சாப்பிடப் போகலாம்” என்று அந்தத் தாய் நீட்டிய பார்சலை வாங்கிக் கொள்ளத் தயங்கினான் அஸ்வின். அவர்களை விழுந்து வணங்கி வாங்கிக் கொள்ளத் தோன்றியது. பெரியவர்களை வெறுங்கையோடா வணங்குவது?

 விழிகளைச் சுழற்றியபோது, இன்னொரு பெண்ணுடன் ஒரு அறையின் வாசலில் நின்று நிரல்யா அவனைக் கடைக்கண்ணால் பார்த்துக் கொண்டிருப்பதைக் கண்டான். ‘இப்படி அவசரப்படுத்திவிட்டாயே! பெரியவர்களுக்கு எதுவும் வாங்காமல் வந்துவிட்டேனே’ என்று கண்களாலேயே குற்றம் சாட்ட, அவள் ‘அவங்கதான் உடனே வரச் சொன்னாங்க. நான் என்ன செய்வேன் அஸ்வின்?’ என்று தவிப்பாய் முகபாவம் காட்டினாள்.

“வாங்கிக்கப்பா” என்று சீனியரும் சொல்லவே, அஸ்வின் “உங்களுக்கு நமஸ்காரம் பண்ணிக்கறேன்” என்று சொல்லி வணங்கத் தயாரானான்.

“பார்த்தியா விமலா? நாம சும்மா வீட்டுக்கு வந்த விருந்தாளிக்குப் பரிசு கொடுக்க நினைச்சோம். இல்லை, நீங்க வீட்டு மாப்பிள்ளைக்குத் தான் கொடுக்கறீங்கன்னு சொல்லாம சொல்லிட்டாரு” என்றார் சீனியர் வேடிக்கையாக.

“அப்போ பொண்ணும் சேர்ந்தே நமஸ்காரம் பண்ணட்டுமே! அவளுக்கு வாங்கிய கிஃப்டையும் கொடுத்திடுவோம். அஸ்வின்! நிரல்யா மாதிரி நீயும் நல்லா பாடுவியா?” என்று விமலா சிரிக்க, நிரல்யா வெட்கச் சிவப்புப் பூசிய கன்னங்களுடன் வந்தாள். இருவரும் அதிகம் நெருங்காமல் நின்று சீனியரையும் அவர் மனைவியையும் வணங்கினார்கள்.

நிரல்யாவைப் பார்த்துப் பிரமிப்பின் உச்சிக்கே போய்விட்ட அஸ்வின் “ஒவ்வொரு நிமிஷமும் நீ என்னை ஆச்சரியப்படுத்தற, நிரு!” என்றான் வெளிப்படையாகவே. “இன்னும் எத்தனை விஷயங்கள், எத்தனைத் திறமைகள் எனக்குத் தெரியாமல் ஒளிச்சு வெச்சிருக்க டியர்?” என்று கேட்டான், சுற்றிப் பலர் இருப்பதை மறந்து.

நிரல்யாவின் முகம் குங்குமமாகச் சிவந்துவிட்டது. “எவ்வளவோ இருக்கு! ஒவ்வொண்ணா தெரிஞ்சுக்கோ. இப்போ என்ன அவசரம்? ஒரு வாழ்நாள் முழுக்க நேரம் இருக்கே, ஒருத்தரை ஒருத்தர் புரிஞ்சுக்க, ரசிக்க, நேசிக்க” என்றாள் மெல்லிய குரலில்.

பெரியவர்கள் இருவரும் புன்னகைக்க, அங்கே காற்றில் ஒரு அழகான ஆனந்தம் அற்புதமாய்க் கலந்தது.

கலகலவென்று பேசிச் சிரித்தவாறே விருந்து முடிந்தது. அஸ்வின் தன் மீடியா அனுபவங்களை வேடிக்கை வேடிக்கையாய் விளக்க, எல்லோரும் குபீர் குபீரென்று சிரித்து ரசித்தார்கள்.

பொரியல் எடுத்துவரக் கிச்சனுக்குள் சென்ற நிரல்யாவிடம் விமலா “நல்ல பையனா இருக்காண்டி நிரு. உனக்குப் பொருத்தமா இருப்பான்” என்றாள். அஸ்வின் அதைக் கேட்டுச் சிரித்துக் கொண்டான்.

ஏன், சீனியரே கூட வாஷ் பேஸின் அருகே அவளைப் பார்த்தவர், “குட் செலெக்‌ஷன்” என்றார் மென்மையாய். நிரல்யாவுக்குப் பெருமை தாங்கவில்லை.  

“நாளைக்கு லீவுதானே, இங்கேயே தங்கலாமே” என்று கட்டளையிடுவதுபோல் சொல்லிவிட்டார் சீனியர். எனவே அன்றிரவு சீனியர் வீட்டிலேயே தங்கிவிட்டார்கள். நிரல்யா சஞ்சுவின் அறையில். அஸ்வினுக்கு கெஸ்ட் ரூம்.

இரவு வெகுநேரம் ஏதேதோ பேசிக் களித்தார்கள். ரம்மி விளையாடினார்கள். 

விளையாட்டும் சிரிப்புமாய்க் கழித்த பொழுதுகள் மொபைல் போன் விடாது அழைத்த சத்தத்தில் அப்படியே கலைந்து போயின.

“சே! அத்தனையும் கனவா?” கண்ணைத் துடைத்துக் கொண்டு போனை எடுத்தவன்..

“நிரூ!” என்றான் தாபம் பொங்க.

“இப்ப தான் கனவுல..” என ஆரம்பித்து சீனியர் தனக்கு பார்ட்டி கொடுத்தது, தன்னை இரவு அவளுடன் தங்கச் சொன்னது, ரம்மி விளையாடியது எனச் சொன்னவன் அதற்கப்புறம் என்னன்னு பார்க்கறதுக்குள்ள நீ போன் செஞ்சுட்ட என்றான்.

“ம்ம்! ஆசை தான்! இன்னும் எங்கம்மா கிட்டயே நம்ம காதல் விஷயத்தைச் சொல்லல.. அதுக்குள்ள சீனியர் இதுக்காக பார்ட்டி வைக்கற அளவுக்குப் போயாச்சு நீ!” எனக் கலகலவென்று சிரித்தாள்.

நிரல்யா! நீ என் உயிர். எனக்கென்றே உருவானவள். சீனியர் கூடச் சொன்னாரே, குட் செலக்‌ஷன் என்று! ஆனால் என் வீட்டுக்கும் உனக்கும் பொருத்தம் இருக்கிறதா, டார்லிங்? உனக்கு முழு உரிமையும் தன்னம்பிக்கையும் அளித்திருக்கும் உன் உயிரான அம்மா, உன் உயர்வில், உன் மகிழ்வில் மகிழும் கனிவான நண்பர்கள்… இந்தச் சூழலிலிருந்து நீ எப்படி விலகுவாய்? பெண் என்றாலே அவள் எல்லைகள் அடுப்படி, குழந்தை வளர்ப்பு என்று எண்ணும் வீடு வெற்றிகரமான வக்கீலாக விளங்கும் உன்னை ஏற்றுக் கொள்ளுமா? 




பார்க்கலாம். உன் அம்மா, என் அம்மா இருவரும் நிச்சயம் நமக்காகப் பேசுவார்கள். இந்தக் குடும்பமும் இருக்கவே இருக்கிறது. திருமணமாகிவிட்டால் நாம் தனிக்குடித்தனம் வந்துவிடலாம். அம்மாவை மட்டும் அழைத்து வருவோம். பாவம், அவள் இதுவரை என்ன சுகத்தைக் கண்டாள்?

நான் மீடியாவுக்கு வருவதற்கு முன்னால் வீட்டில் எவ்வளவு போராட வேண்டியிருந்தது தெரியுமா?. அம்மா மட்டும்தான் என் பக்கம்…  அது மாதிரி நம் கல்யாணத்தையும் எங்கம்மா, உங்கம்மாவே நடத்திடுவாங்க!” என்றான் அஸ்வின்.

பாவம், அவனுக்கு என்ன தெரியும்? அவர்களுடைய அம்மாக்கள்தான் அவர்கள் காதலுக்கு எதிரியாக இருக்கப் போகிறார்கள் என்பது. 

“கவலைப்படாதேடா. கட்டாயம் நம்ம கல்யாணம் ஜாம்ஜாம்ன்னு நடக்கும். முதல்ல நம்ம அம்மாக்கள் கிட்ட சொல்லுவோம். அப்புறம் பார்ட்டி கீர்ட்டின்னு கனாக் காணலாம்.”

“ஓகே நிரூ. இப்ப எதுக்கு போன் பண்ணினியாம்? என் கனவை கேலி பண்ணவா?”

“இல்லல்ல. மீ டூ கேஸ்ல நீ கொடுத்த அந்த எவிடென்ஸ் இல்லன்னா என் கேஸ் கந்தலாயிருக்கும். அப்புறமும் என்னை அந்த கார் கடத்தல்ல இருந்து மீட்டு…”

“சரி..அதெல்லாம் தான் அப்பப்ப தேங்க்ஸ் சொல்லி கடனைத் தீர்த்துட்டியே.. இப்ப என்ன?”

“தேங்க்ஸ் சொல்லிட்டாலும் நான் எதுவும் ஸ்பெஷலா உனக்குச் செய்யலன்னு நீ நினைச்சுக்கிட்டா?”

“ஓ! நிரூ! நீ நீயாய் இரு. எனக்காக மாற வேண்டாம். இப்ப என்ன நீ ஏதாவது எனக்குச் செஞ்சா தான் நான் சந்தோஷமாவேன்னா சீக்கிரம் உங்கம்மா கிட்ட விஷயத்தச் சொல்லி என் வீட்டுக்கு வர வழியப் பாரு! வைக்கட்டா!” சிரித்துக் கொண்டே வைத்தவனின் போனில் மெசெஜ் வந்ததற்கான ஒலி கேட்டது.

திரும்பவும் நிரூ தானா எனப் புன்னகையுடன் எடுத்தவன் அதிர்ந்தான்.

“அம்மாவுக்கு  விபத்து. உடனே ஊருக்குக் கிளம்பி வா” என்று செய்தி அனுப்பியிருந்தார் அப்பா.




What’s your Reaction?
+1
6
+1
11
+1
0
+1
0
+1
0
+1
0
+1
2
Subscribe
Notify of
guest

0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!