Serial Stories யாயும் ஞாயும் யாராகியரோ

யாயும் ஞாயும் யாராகியரோ-3

3

“இல்ல.. இல்ல.. வேணாம். எனக்குப் படிக்கணும். எனக்குப் படிக்கணும்!”

கதறிய குரல் வெளியில் கேட்டதோ? 

சட்டெனத் தன்னை மீட்டுக் கொண்ட ஜானகி சாற்றிய கதவைப் பார்த்தார். இல்லை யாரும் வரவில்லை. 

ம்ஹும்! இஃதென்ன? கலங்கிய காலங்கள் காற்றோடு போனதாய் நினைத்தோமே! இன்னும் அவை ஆறா வடுவாய் மனதில் அமர்ந்து தம்மைக் கலங்கடிக்கச் செய்கிறதே! இன்றைக்கு வேலை முடிந்ததும் ஆஷ்ரமம் சென்று தியானம் பயில வேண்டும். மன அமைதிக்கு அதுவே ஒரே வழியென நினைத்தவர் நொடியில் விழியில் கசியும் கண்ணீரை டிஷ்யூவால் அழுந்தத் துடைத்தார். மேஜை மேலிருந்த கோப்புகளை நகர்த்தி வைத்து விட்டு மணியை அழுத்தினார். 

காத்திருந்தாற்போல் வந்து நின்ற அவரின் பி.ஏ. வாசு

“போகலாம் மேடம்!” என்றான் பவ்யமாக.

“டைம் ஆச்சா வாசு?”

“நோ மேம்! நீங்க தான் மிஸ் பெர்பெக்‌ஷன் ஆச்சே! கரெக்டா ஃபங்க்ஷனுக்குப் போயிடலாம் மேம்!”

“ஓ! நோ வாசு. எதற்கோ இத்தனை புகழாரங்கள்?”

வாசு ஒன்றுமே சொல்லாமல் அவளின் ஹேண்ட்பேக்கைக் கையில் எடுத்துக் கொண்டு காரை நோக்கி விரைந்தான். 

அவன் அப்படித் தான். பேச வேண்டிய வார்த்தைகள் அளவோடும் அர்த்தத்தோடும் இருக்கும். மேற்கொண்டு தூண்டில் போட்டாலும் எந்த மீனும் சிக்காது அவனிடம். அவனின் அந்தப் போக்கு ஜானகிக்கு மிகவும் பிடித்தது. தனக்கொரு குட்டித் தம்பி இருந்திருந்தால் இதோ இந்த வாசுவைப் போல் தான் இருந்திருப்பான் என நினைப்பார்.

ட்ரைவர் காரை ஓட்டிக் கொண்டிருக்க வாசு ட்ரைவரின் அருகில் அமர்ந்திருக்க ஜானகி பின்சீட்டில் வசதியாக அமர்ந்து தன் கையில் இருந்த போனில் வந்த நியூஸ் ஹெட்லைன்ஸைப் படித்த படி வந்தார்.

“முன்னணி நடிகரின் மேல் போட்ட பொய்வழக்கைத் தன் அபார வாதத்தால் ஒன்றுமில்லாமல் செய்த வழக்கறிஞர் நிரல்யா!”

“பெண் வழக்கறிஞர் நிரல்யா தான் ஒரு பெண்ணாக இருந்தும் இன்னொரு பெண்ணுக்கெதிராக தீர்ப்பு சொன்னது சரியா? மாதர் சங்கங்கள் எதிர்ப்புக் கேள்வி”

“என் திறமையைக் காட்டிலும் என் ஜூனியர்ஸின் திறமையில் நான் மிகவும் நம்பிக்கை வைத்திருக்கிறேன். இது தான் ஆரம்பம். இனி நிரல்யாவிற்கு கிடைக்கப் போவது அனைத்தும் வெற்றியே! – சீனியர் வக்கீல் பெருமிதம்”

ஓ! சீனியர்.. நீங்க இல்லன்னா.. என் நிரல்யா என்னவாகி இருப்பாளோ? நிரல்யாவுக்குப் போன் செஞ்சு வாழ்த்தின எனக்கு உங்களுக்கு ஒரு போன் செஞ்சு வாழ்த்தணும்ன்னு தோணலையே. சே! எனத் தன்னையே நொந்தவர் பேசுவதற்காக எண்களை இட்டு விட்டுப் பின்னர் அழைக்காமலேயே வாட்ஸப் செயலியில் ஒரு மெசெஜ் அனுப்பி விட்டார்.

“வாழ்த்துகள்! – ஜா!” என்று.

உடனேயே அதில் பார்த்ததற்காக நீல அடையாளம் தெரிய பார்க்கும் போது மலர்ந்திருக்கும் அந்தப் புன்னகையின் அளவையும் மனக்கண்ணால் ரசித்துக் கொண்டார்.

அவ்வளவே! அந்த நீல வண்ண டிக் மார்க் தான் இந்தப்பக்கம் இவருக்கும் அந்தப் பக்கம் அவருக்குமான நட்பின் இறுகிய பந்தம். பதில் எதிர்பார்த்து யாரும் இல்லை. சொல்லாத பதிலால் இந்த அற்புதமான இழை அறுகப் போவதுமில்லை. 

தண்டவாள நட்பாய்

தடம்பார்த்துக் கிடக்கிறோம்!

என்றேனும் ஒருநாள்

எதிர்வரும் பயணியாய்ச்

சந்திப்போமென்று!




ஜானகிக்கு மிகவும் பிடித்த கவிதை இது. இதைக் கூட ஒரு முறை சீனியர் தான் சொன்னார். எப்போ? ம்ம்! ஹான்! கல்லூரிச் சந்திப்பின் கடைசி நாள் அன்று. இந்தக் கவிதையைத் தான் ஒரு ஆட்டோகிராப் நோட்டில் எழுதிக் கொடுத்தார்.

சீனியர் சீனியர்ன்னு அவர் பேரே மறந்து தான் போச்சு. கல்லூரியில் எனக்கு சீனியராய் இருந்து இப்போ என் பெண்ணுக்கு நிஜமாவே சீனியரா இருக்கார். நினைவில் சிரித்துக் கொண்டாள் ஜானகி. 

வருக! வருக! எங்கள் வேல்விழி அமுதனார் பெண்கள் கல்லூரியின் ஐம்பதாவது ஆண்டு விழாவுக்கு வருகை தரும் அனைவரையும் வருக வருகவென வரவேற்கிறோம்!” பதாகை  தெரிய கார் அரைவட்டமடித்து கல்லூரியின் நீண்ட சாலையில் உள்சென்று ஆடிட்டோரியத்தின் வாசலில் நின்றது. 

கல்லூரி முதல்வரும், தாளாளரும் பூச்செண்டுகளுடன் நிற்க வண்ண மயில்களாய் கண்ணைப் பறிக்கும் அழகிய புடவைகளில் கையில் சாக்லேட் தட்டேந்தி புன்னகை பூமுகமாய் தங்கள் காரை நோக்கி நடந்து வரும் இளம்பெண்களைப் பார்த்த ஜானகி மகிழ்ச்சி பொங்க காரை விட்டு கை கூப்பியபடி இறங்கினார்.

“வெல்கம் மேடம்!” தாளாளர் பூங்கொத்து அளிக்க

“வெல்கம் மேடம்! உங்கள் வருகையால் எங்கள் கல்லூரி மேன்மை பெற்றது.” உபசாரமாய்க் கூறிக் கல்லூரி முதல்வர் தன் பங்குக்கு பூங்கொத்தை அளிக்க இருவரையும் பார்த்துக் கை கூப்பி புன்னகை சிந்தியவர்.

தன்னை நோக்கிச் சிரிப்புடன் நிற்கும் இளந்தேவதைகளைப் பார்த்தவர் சற்று முன் நகர்ந்து 

“ஹாய் மை டியர் ஏஞ்சல்ஸ்!” என்றபடி அவர்கள் தட்டில் இருந்த சாக்லேட்டையும் பூவையும் எடுத்துக் கொண்டார். 

ஒரு சில நடன நிகழ்ச்சிக்குப் பின் விழாக் குழுவினர் ஜானகியின் யோசனைப்படி எந்த முன்னுரையும் இல்லாது நேரடியாகப் பரிசளிக்கும் நிகழ்வுக்குச் செல்ல அதற்குத் தயாராக இருந்தவர் பரிசு பெறும் ஒவ்வொரு பெண்ணையும் மனதார வாழ்த்திப் பரிசுகளை வழங்கினார். 

அதிலும் வானதி என்ற ஒரு மஞ்சள் நிற வன தேவதை தொடர்ந்து மூன்று முறை பரிசு பெற மேடையேற..

“பேசாமல் என் பக்கத்திலேயே நின்று விடம்மா வானதி. மொத்தப் பரிசையும் உனக்கே தந்து விடுகிறேன்.”

“தேங்க்ஸ் மேடம்!” என்ற வானதி அழகாகச் சிரித்தாள்.

சொல்லி வைத்தாற்போல் அடுத்த இரண்டு பரிசும் சாதனை மெடலும் அவளுக்கே கிடைக்க அவற்றை  மகிழ்வுடன் கையில் கொடுத்தவர் பின் அவளைத் தன் கையணைப்பில் வைத்துக் கொண்டு மைக்கில் ஜானகி கம்பீரமாக மொழிந்தார்.

“இத்தகைய சிறப்பு பெற்ற மகளைப் பெற்ற வானதியின் பெற்றோர்களை நான் மேடைக்கு அழைக்கிறேன்!” 

கண்ணில் நீர் துளிர்த்த படி விவசாயக் குடும்பத்தைச் சேர்ந்த ஏழ்மையான இருவர் தயக்கத்துடன் படியேற ஜானகியே முன் சென்று அவர்களைக் கைபிடித்து அழைத்து வந்தார். கல்லூரி முதல்வரும் , தாளாளரும் ஜானகியை வியந்து பார்த்தனர்.

“ஒரு பரிசு இல்ல இரண்டு பரிசு இல்ல. கை நிறையப் பரிசுகளுடன் சாதனை மெடலும் வாங்கி இருக்கா உங்க பொண்ணு. கடவுள் கொடுத்த உங்களுக்கான பெரிய பரிசு இவள் தாம்மா!” என்ற ஜானகி வானதியின் கையை அவள் அம்மாவின் கையோடு சேர்த்தார்.

“சொல்லுங்கம்மா! உங்களுக்குப் பெருமையா இருக்கா?”

“ரொம்ப!” தாயின் கள்ளமில்லா வெள்ளை உள்ளம் கோர்வையாகப் பேசத் தெரியாது திணறியது.

“நீங்க எதுவரை படிச்சிருக்கீங்க?”

“எட்டாவதும்மா! அப்ப அதே பெரிய படிப்பு எங்க உறவுல.”

“அப்புறம் கல்யாணம் முடிச்சுடுவாங்களா?”

“ஆமா! பல கருச்சிதைவுக்குப் பின் தங்கினவ தான் வானதி. அவளையாவது நல்லா படிக்க வைக்கணும்ன்னு தான்..!” கண் கலங்கிய வானதியின் தாயை முதுகில் தட்டிக் கொடுத்து பெற்றோருடன் வானதியுடன் அனுப்பியவர்.. கலங்கிய தன் கண்களை யாருமறியாமல் துடைத்துக் கொண்டார்.

“தற்பொழுது நமது பல்கலைக்கழக துணைவேந்தர் மேடம் ஜானகி சிறப்பு உரை ஆற்றுவார்கள்.” 

கேட்ட குரலில் தன்னைத் தேற்றிக் கொண்ட ஜானகி பலத்த கரவொலிக்கிடையில் பேச ஆரம்பித்தார்.

“ஹாய் மை டியர் ஏஞ்சல்ஸ்! ஏஞ்சல்ஸ் தான் நீங்க அத்தனை பேரும். வானத்தில் இருந்து கடவுளால் அனுப்பப் பட்ட தேவதைகள். உங்கள் சிறகுகளுக்குப் பறக்கும் திறன் அளிப்பது எது தெரியுமா? கல்வி தான். கல்வி மட்டுமே தான். 




கல்வி அறிவில்லாப் பெண்கள் களர்நிலத்துக்கு ஒப்பாவாள் என்றான் பாரதிதாசன். அந்த நிலத்தில் புல் விளையலாம். நல்ல புதல்வர் விளைய மாட்டார் என்றான். 

அது மட்டுமா சொன்னான்? அழகாய் ஒரு பாடலே பாடி வைத்திருக்கிறானே!

தலைவாரிப் பூச்சூடி உன்னைப் பாட

சாலைக்குப் போ என்று சொன்னாள் உன் அன்னை

சிலைபோல ஏனங்கு நின்றாய் – நீ

சிந்தாத கண்ணீரை ஏன் சிந்துகின்றாய்

விலைபோட்டு வாங்கவா முடியும்? – கல்வி

வேளைதோறும் கற்று வருவதால் படியும்!

மலைவாழை அல்லவோ கல்வி? – நீ

வாயார உண்ணுவாய் போ என் புதல்வி!

என்று ஒரு தந்தை தன் மகளைப் பாடசாலைக்கு அனுப்புகிறாராம். 

இப்படிப்பட்ட பெற்றோர் ஒரு பெண்ணுக்குக் கிடைத்து விட்டால் அப்பெண்ணுக்குக் கிடைத்த கல்வியினால் அவள் பரம்பரையே வாழ்ந்து விடும் அல்லவா?

வீட்டுக்குள் பெண்ணைப் பூட்டிவைத்து பல

வேண்டாத சிந்தனைகளை வளர வைத்து

நாட்டுக்கு நலமற்றுப் போக வைத்தால்

நாடுமோ நல்லது நம் வாழ்வில்?

வானதியைப் போன்ற வைரங்கள் கல்விச் சாலையெங்கும் மின்னட்டும். அவள்தம் பெற்றோர் போன்ற உயர் மனங்கள் தம் பெண்களை முன்னேற்றப் பாதையில் கொண்டு வரட்டும். 

பெண்கள் சக்திகள். பெண்கள் மட்டுமே சக்திகள். கல்வி என்ற புள்ளி இல்லாவிட்டால் அவர்கள் சகதிகளில் கிடக்க நேரும். அதனைக் கூற எனக்கு தகுதி இருக்கிறது என்றே நினைக்கிறேன். 

பெண் கல்லூரிகள் நிறைய வரவேண்டும். பெண்கல்வி சிறக்க வேண்டும். அத்தகைய சிறப்பைத் தரும் இக்கல்லூரி இன்னும் பல சிறப்புகளைப் பெற வேண்டும் என வாழ்த்தி வணங்கி அமர்கிறேன். நன்றி.

பேரன்புடன் வழியனுப்பிய முதல்வர், தாளாளருக்கு நன்றி தெரிவித்து விட்டு காரில் ஏறப்போன ஜானகிக்கு அதிர்ச்சி காத்திருந்தது.

“மீ டூ வழக்கில் வெற்றிகரமாக வாதாடிய வழக்கறிஞர் நிரல்யா கடத்தப் பட்டாரா? சென்னையில் பரபரப்பு!”

வாசுவின் கையில் இருந்த மாலை நாளிதழ் படபடத்தது ஜானகியின் மனதைப் போலவே.

“ஹாங்!” அதிர்ந்தாள் ஜானகி.




What’s your Reaction?
+1
10
+1
27
+1
0
+1
0
+1
0
+1
0
+1
3
Subscribe
Notify of
guest

0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!