Serial Stories யாயும் ஞாயும் யாராகியரோ

யாயும் ஞாயும் யாராகியரோ-2

2

சென்னை  போக் ரோடில் அமைந்துள்ள அந்த ப்ரம்மாண்ட மாளிகை குதூகலக் குரல்களால் நிறைந்து ஆரவாரமாகக் காணப்பட்டது. அந்தக் குதூகலத்துக்கும் ஆரவாரத்துக்கும் யார் காரணமோ அவள்.. நிரல்யா  மட்டும்,

எப்போதும் போல  அமைதியாக..குறுஞ்சிரிப்பு இதழ்களை அலங்கரிக்க .. இளஞ்சிவப்பு வண்ண சுடிதாரில் ரோஜாப்பூச்செண்டு போல அழகே உருவாய் அமர்ந்திருந்தாள்.

ஆனால் மேக்னாதான் குறும்புக்காரி ஆயிற்றே. தன் தோழியை அப்படி அமர்ந்திருக்க விடுவாளா என்ன?

“ஏய்..நிரூ..! எனக்கு ஒரு உண்மை தெரிஞ்சாகணும்! அதென்ன உம்மேல அப்படி ஒரு அக்கறை அந்த சேனல்காரனுக்கு?”

மேகி கேட்டதும் நேற்றைய நிகழ்ச்சி கண்முன்னே விரிந்தது நிரல்யாவுக்கு.

அந்த நடிகையின் மீ டூ வழக்கு விசாரணை முடிந்து தீர்ப்பு சொல்லியதும் வீட்டுக்குக் கிளம்பினாள் நிரல்யா. காரில் ஏறி அமர்ந்ததுமே கார் ஜன்னல் தட்டப்பட கண்ணாடியைக் கீழிறக்கியவளின் பார்வைக்கு பிரபலமான மாதர் சங்கம் ஒன்றின் தலைவி கிடைத்தார்.

“அச்சோ..! இவங்களா!”. அவள் மனசுக்குள் ஒரு சலிப்பு.

“என்ன லாயர் மேடம்…நீங்களே ஒரு பொண்ணா இருந்துகிட்டு இப்படி பெண்மைக்கு எதிரா வாதிடுறீங்களே.! பொண்ணுக்கு பொண்ணே எதிரின்னு சொல்றது உங்க விஷயத்துல உண்மையாயிடுச்சே..! இப்படி பொய்யா வாதாட எத்தனை கோடி குடுத்தான் அந்த ஹீரோ? ”  ஏளனத் தொனியில் கேட்க..

“நான் நிரல்யா! தனித்துவமானவள். நேர்மையும்,உண்மையும் எந்தப் பக்கம் இருக்கோ அங்கேதான் நானிருப்பேன். நீங்க நினைக்கிற மாதிரி பணத்துக்காக வாதாடும் வக்கீல் நானில்லை..”

மென்மையாக அதே சமயம் கண்டிப்பும் அழுத்தமுமாக அவள் சொன்ன வார்த்தைகளைக் கேட்டதும்..

“ஹேய்..”என்று கூச்சலிட்டபடி அந்த மாதர்சங்க மகளிர் சங்க உறுப்பினர்கள்  நிரல்யாவின் காரைச் சூழ்ந்து கொண்டு மறியல் செய்ய, பப்ளிசிடிக்காக இப்படி  செய்பவர்களைப் பார்த்து எரிச்சல் வந்தது நிரூவுக்கு..

அதற்குள்…

“அடடே..மேடம் நீங்களா..! உங்களைப் பேட்டி எடுத்து எங்க சேனல்ல ஒளிபரப்பணும்னு தேடிகிட்டிருந்தேன். எப்படி மேடம் இப்படி உங்க சொந்த வேலைகளை எல்லாம் கூட ஒதுக்கி வெச்சுட்டுப் பெண்கள் முன்னேற்றத்துக்காகப் பாடுபடறீங்க..?

கிரேட் மேடம்..

கொஞ்சம் இந்தப் பக்கமா வந்தீங்கன்னா உங்களை பேட்டி எடுக்க, ஃபோட்டோ எடுக்க வசதியா இருக்கும் ..”

மைக்கை நீட்டியபடியே..அஸ்வின் சொல்ல, அவன் பேச்சில் கலந்திருந்த கிண்டலைக் கூடப் புரிந்து கொள்ள முடியாமல் ஒரு அசட்டுச் சிரிப்புடன் காரை விட்டு  நகர்ந்த தலைவியின் பின்னால் செம்மறியாட்டுக் கூட்டம் போல மொத்தப் பெண்கள் கூட்டமும் சாய்ந்தது…பின்னே..? பிரபல சேனலில் முகம் காட்ட அவர்களுக்கு மட்டும் ஆசையிருக்காதா என்ன?

வாய் பாட்டுக்கு பேசிக் கொண்டிருக்க, கண்கள் நிரூவைப் பார்த்து போகலாம் என்று ஜாடை காட்ட…காரை விருட்டென்று கிளப்பினாள் நிரூ. 

“காத்து நுழைய முடியாத எடத்துல கூட இந்த சேனல்காரங்க நுழைஞ்சிடுவாங்க….”

உதடுகள் முணுமுணுத்தாலும் மனசென்னவோ அவனுடைய சமயோசித புத்திக்கு ஒரு சபாஷ் போட்டது.




“என்ன இன்னும் ஃபங்க்ஷன் ஆரம்பிக்கலையா? “

அஸ்வின் குரல் கேட்டது.

“ஒஹ்..அவனெப்படி இங்கே..? அவனப் பத்தி நெனச்சுகிட்டே இருக்கறதால ஏற்பட்ட பிரமையோ ” நிரூ தலையை உலுக்கிக் கொண்டாள்.

“ரோஜாப்பூ ஆடி வந்தது..ராஜாவைத் தேடி வந்தது”

நிரூவுக்கு மட்டும் கேட்கும்படி பாடிக் கொண்டு குறும்புச் சிரிப்போடு எதிரே வந்து நின்றவனைப் பார்த்து விழிகளில் பொய்க்கோபம் காட்டினாள் நிரூ.

“வெல்கம் எவ்ரிபடி” என்று வரவேற்றுக் கொண்டே உள்ள வந்த சீனியருக்கு எல்லோரும் எழுந்து வணக்கம் சொல்ல.. அஸ்வினும் அவர்களுடன் சேர்ந்து கொண்டான்.

“இரும்பு அடிக்கற  பட்டறையில் இந்த ஈக்கு என்ன வேலை”

மனதில் நினைத்ததை வெளியில் சொல்லாமல்..

“வக்கீல்கள் இருக்கற இடத்தில் சேனல்காரங்களுக்கு  என்ன வேலை சார்?”

கிண்டலாக மேகி கேட்க

“அதையேதான் மேகி நானும் இவன் கிட்ட கேட்டேன்‌..அதுக்கு உங்க ஜுனியரை அந்த மாதர் சங்கத்துக்காரங்க பண்ணின ஆர்ப்பாட்டத்திலருந்து காப்பாத்தின எனக்கு அவங்க பாராட்டுவிழா ல கலந்துக்க கூட அனுமதி கிடையாதான்னு விடாக்கண்டனா வந்துட்டான். எனக்கும் வேற வழி தெரியல” என்றார் சீனியர்.

 நிரூவின் வெற்றிக்கு காரணமான,   அந்த மீ டூ நடிகையும் அவள் லாயரும் பேசிய வீடியோவை ரகசியமாக எடுத்ததே அஸ்வின் தான் என்பது அவருக்குத் தெரியாதா என்ன?

அவன் குறும்புத்தனத்தை நினைத்து நொடிப்பொழுது ரசித்தவள்..

சீனியரிடம்..

“இந்தப் பாராட்டுவிழா எல்லாம் அவசியம்தானா சார்.? அப்படி பெரிசா என்ன சாதிச்சிட்டேன்.? உங்க வழிகாட்டுதல்தான்‌ என்னோட இந்த வெற்றிக்கு காரணம். நீங்க பெருந்தன்மையா எங்களுக்கு விட்டுக் கொடுத்து எங்க வெற்றியை அழகு பாக்கறீங்க. இந்த மனசு யாருக்கு வரும்? எங்களை உங்க பிள்ளைகளா நினைச்சு வழி நடத்தறீங்க”

விழிகளில் நீர் மல்க..குரல் நெகிழ பணிவாக நிரல்யா பேச…

“இந்தப் பணிவான குணம் அப்படியே உங்கம்மா கிட்ட இருந்து வந்திருக்கு நிரூ. ஜானகியும் இப்படித்தான் எந்த பெருமையையும் தலையில் ஏத்திக்காம..இயல்பா இருப்பாங்க. ஜானகியைப் பற்றிப் பேசும் போது சீனியரின் குரல் தழுதழுத்தது . கல்லூரித் தோழியைப் பற்றிய பெருமிதம் அவர் முகத்தில் ஒரு மலர்ச்சியைக் கொடுத்தது.

பேசிக் கொண்டிருக்கும் போதே ஜானகியிடமிருந்து நிரல்யாவுக்கு ஃபோன் வர..பத்து நிமிடங்களுக்கு மேல் கொஞ்சிப் பேசி முடித்த பின்னரும் தாயின் நினைவில் பனிக்கட்டியாய் உருகினாள் மகள். 

 

ஜானகி…! தமிழகத்தின் பெருமை வாய்ந்த பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக  இந்த வருடம்தான் பதவி ஏற்றிருந்தார்.

முனைவர் பட்டமும், பத்தாண்டுகளுக்கு மேல் பேராசிரியராகப் பணிபுரிந்த அனுபவத்துடன் அவளுக்கிருந்த சிறந்த நிர்வாகத் திறமையும் பொறுப்பான, கௌரவமான இந்தப் பதவியில் அவளை அமர வைத்தது.

“மெய்வருத்தம் பாரார் பசிநோக்கார் கண்துஞ்சார்

எவ்வெவர் தீமையும் மேற்கொள்ளார் – செவ்வி

அருமையும் பாரார் அவமதிப்புங் கொள்ளார்

கருமமே கண்ணாயி னார்”

பள்ளிப் பருவத்திலேயே அவள் மனதில் பதித்துக் கொண்ட நீதி நெறி விளக்கப் பாடலின் அடியொற்றி நடந்ததால் கிடைத்ததுதான் இந்த சிறந்த வாய்ப்பு என்பதை அவள் உள்ளம் மறக்கவில்லை.

வெளியூர் என்பதாலும்,  பணிச்சுமை காரணமாகவும்  அடிக்கடி சென்னை வந்து மகளுடன் இருக்க சாத்தியப்படவில்லை என்பதுதான் ஜானகிக்குப் பெரிய மனக்குறையாக இருந்தது‌.

ஆனாலும் மகள் பாதுகாப்பாகத் தன் கல்லூரித்தோழனின்  ஜூனியராக..சிறந்த வக்கீலாக மெருகேறிக் கொண்டு வருகிறாள் என்பதில் மிகுந்த மனத்திருப்தி அவளுக்கு.  அவள் வாதாடிய மூன்று வழக்குகளிலும்  வெற்றி பெற்றதை நினைத்துப் பெருமிதத்தில் விம்மித் தணிந்தது அவள் நெஞ்சம் . தன்னைப் போலவே தன் மகளும் கடமையே கண்ணாக இருப்பதில் மனம் கொள்ளாப் பூரிப்புதான் ஜானகிக்கு.

இப்படித் தாயும் மகளும் ஒருவரை நினைத்து ஒருவர் பெருமைப் படுவது எத்தனை இல்லங்களில் வாய்க்கும்?

மகளின் படிப்பு, வேலை இதிலேயே கவனம் செலுத்திக் கொண்டிருந்த ஜானகிக்கு, நிரூவுக்கு வயது இருபத்தைந்தாகிறது..

அவளுக்கேற்ற ஒரு வாழ்க்கைத் துணையைத் தேடி ..திருமணம் செய்து வைத்து அவள் சந்தோஷமாகக் குடித்தனம் செய்வதைப் பார்க்க வேண்டும் என்ற ஆசையும் வேகமும் இப்போதெல்லாம் அதிகமாகத் தோன்றுகிறது . ஏனிப்படி‌..? 

ஒருவேளை தனக்கு வயதாகிறது‌.. தனக்குப் பின் மகள் தனியாகி விடுவாளோ என்ற பாதுகாப்பின்மை உணர்வா?  இல்லை எத்தனை பெரிய படிப்போ பதவியோ இருந்தாலும் பேரக்குழந்தைகளைக் கொஞ்ச வேண்டுமென இயல்பாகத் தோன்றும் இந்த வயதுக்கே உரிய ஆசையா?




எதுவாக வேண்டுமானாலும் இருக்கட்டும்.

மகளுக்கேற்ற மாப்பிள்ளை தேடும்போது‌..அவர்கள் கேட்கும் கேள்விகளுக்கான பதில் தன்னிடம் இருக்கிறதா.? 

தான் சொல்லும் பதிலை அவர்கள் நம்புவார்களா?  தடுமாறினாள் ஜானகி.

இதைப் பற்றி  சீனியரிடம் ஒரு நாளைக்கு கலந்து பேச வேண்டும். தங்களுடைய கடந்த காலத்தைப் பற்றிக் கவலைப்படாத ..ஒரே ஒரு குடும்பம் கூடவா கிடைக்காது? நிரூவுக்கான மாப்பிள்ளை இனிமேலா பிறக்கப் போகிறான்? 

மனதைத் தேற்றிக் கொண்டாள்.

ஆனாலும் அவ்வப்போது நிரூவின் திருமணம் தங்களுக்குள் பிரிவை ஏற்படுத்தி விட்டால் என்ன செய்வது? இருக்கும் மிச்ச வாழ்க்கையைத் தான் தனிமையில் கழிக்க வேண்டி வருமோ என்ற சஞ்சலமும் அவள் மனதில் தோன்றாமல் இல்லை.

இன்னமும் நிரூவுக்கே தெரியாத விஷயங்கள் நிறைய இருக்கிறது. அவளிடம் முதலில் மனம் விட்டுப் பேசி அவளுக்குப் புரிய வைத்து விட வேண்டும். இத்தனை நாட்கள் காலம் தாழ்த்தியது கூடத் தவறுதானோ? இப்போது சொன்னால் புரிந்து கொள்வாளா? இல்லை என்னைத் தவறாக நினைப்பாளா? பேசும்போது சீனியரும் உடனிருந்தால் நல்லது. மாரல் சப்போர்ட்டிற்கு அவரைத் தவிர வேறு யார் நமக்கு இருக்கிறார்கள்?  பணிகளில் ஈடுபட முடியாமல் குழம்பித் தவித்த ஜானகி தன்னை மறந்து இமைகளை மூட… மனத்திரையில் விரிந்தது அவளைத் தூங்கவிடாமல் துரத்தும் அந்தக் காட்சி‌…!




What’s your Reaction?
+1
22
+1
20
+1
3
+1
0
+1
0
+1
0
+1
0
Subscribe
Notify of
guest

0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!