Serial Stories மல்லிகைப் பந்தல்

மல்லிகைப் பந்தல்-9

(9)

அதிர்ச்சியில் விழி பிதுங்கிவிடும் நிலைக்கு ஆளானாள் லலிதா. 

“என்ன சொல்றிங்க?”

தலைக் குனிந்திருந்தான் வீரமணி. அவளுடைய கண்கள் பனித்துவிட்டது. சிவந்து சிந்தும் கண்ணீருடன் கூடிய அந்த கண்களை சந்திக்கும் தைரியம் அவனுக்கில்லை. 

“எப்படிங்க… எப்படிங்க… இப்படியெல்லாம் யோசிக்க உங்க அம்மாவுக்கு மனசு வருது”

அவனால் பதில் சொல்ல முடியவில்லை. அம்மா லலிதாவை மதியம் மாடிக்கு அனுப்பிவிட்டு அவனுடைய அறைக்கு வந்த போது ஏதோ சாதாரணமாக நெல் போட்ட கணக்கையும், உரம் வாங்கிய கணக்கையும் கேட்கப் போவதாகத்தான் நினைத்தான். 

ஆனால்….

“வீரமணி… உன்கிட்ட ஒரு விசயம் சொல்லனும்?”

“சொல்லும்மா.. என்ன விசயம்?”

“லலிதா வயித்துல வளர்ற குழந்தை ஆணா பெண்ணான்னு பார்த்துடலாம்.”

அம்மாவின் வார்த்தைகளைக் கேட்டு துணுக்குற்றான் வீரமணி.

“அம்மா… இப்பவெல்லாம் வயித்துல இருக்கற குழந்தை ஆணா பெண்ணான்னு சொல்ல மாட்டாங்க. சட்டப்படி தப்பு அது. எல்லா ஆஸ்பத்திரியிலும் எழுதிப் போட்டிருக்காங்களே நீ பார்த்ததில்லையா?”

அம்மா இளக்காரமாக சிரித்தாள்.

“ஆமா…இந்த நாட்ல எல்லாமும் சட்டப்படித்தான் நடக்குதா? காசை தூக்கி எறிஞ்சா எல்லா வேலையும் நடக்கும்.”

“சரி, ஆணா பொண்ணான்னு தெரிஞ்சுக்கிட்டு நீ என்னப் பண்ணப் போறே?”

“பொண்ணாயிருந்தா கலைச்சிடலாம்”

இதைக் கேட்டு அதிர்ந்தான் வீரமணி.  ;கண் தெறித்துவிடும் போல் அவளைப் பார்த்தான்.

“அம்மா… நீ என்ன சொல்றே?”

“ஆமாண்டா. பொண்ணாயிருந்தா கலைச்சிடுவோம். பெத்து பெத்து பலி கொடுக்கறதைவிட பொறக்கறதுக்கு முன்னாடியே கலைக்கறது நல்லது இல்லையா?”

“அம்மா… இந்த தடவை கண்டிப்பா ஆண் குழந்தைத்தான் பொறக்கும்”

“அதெப்படிடா நீ செல்றே? நீ என்ன மந்திரவாதியா? இதப்பார் அவளோட நன்மைக்குத்தான் சொல்றேன். ஒரு புள்ளையை பத்து மாசம் சுமக்கறதுங்கறது சாதாரணம் இல்லை. அந்த சுமையை இறக்கி வைக்கற நேரத்துல அது இறந்துபோற சுமையை காலம் முழுக்க சுமக்க வேண்டியிருக்கு. அவ உடம்பு இப்படி புள்ளையைப் பெத்து பெத்து பலிக் கொடுத்துக்கிட்டிருந்தா போயிடும். கூடிய சீக்கிரம் அவளே போய் சேர்ந்துடுவா. அவ நல்லபடியா இருக்கனும்ன்னா… இப்படி செய்யறதைத் தவிர வேற வழி இல்லை.”

லலிதாவின் உடல்நிலையில் அக்கறைக் கொண்டு பேசுவதாக சுந்தரவள்ளி காட்டிக் கொண்டதும் வீரமணியால் ஒன்றும் சொல்ல முடியாமல் போனது.

முதல் குழந்தை இறந்த போது அவன் இந்த சாபம் பற்றியெல்லாம் அலட்டிக் கொள்ளவில்லை. இதெல்லாம் சுத்த பைத்தியக்காரத்தனம் என நினைத்தான். ஆனால்….இரண்டாவது பெண் குழந்தையும் இறந்தபோது அவனுடைய மனம் அவனையும் மீறி உண்மைதானோ…? சாபம் பலிக்குமோ? என்று யோசிக்க வைத்தது. அந்த யோசனையின் தொடர்ச்சியாக இந்த குழந்தை ஆணாக பிறக்க வேண்டுமே என மனதிற்குள் பிரார்த்தனை தொடர்ந்துக் கொண்டே இருந்தது. 

மகனின் அமைதி சுந்தரவள்ளிக்கு அவனை அசைத்துவிடலாம்  என்ற நம்பிக்கையை தந்தது. 

“இதப்பார்… பத்து மாதம் சுமந்து பெத்து பலிக் கொடுத்துட்டு அழுதுக்கிட்டிருக்கறதைவிட இது ஒன்னும் பெரிய விசயம் இல்லை.”

“அம்மா… இதுக்கு லலிதா சம்மதிக்கனுமே” 




“அவளுக்கு எதுவும் தெரிய வேண்டாம். அவளை செக்கப்புக்கு சாதாரணமா கூட்டிட்டுப் போற மாதிரி போவோம். ஸ்கேன் பண்ணி ஆணா பொண்ணான்னு தெரிஞ்சுப்போம். ஆணாயிருந்தா வச்சுப்போம். பெண்ணாயிருந்தா கலைச்சிடுவோம். டவுன்ல இதுக்கெல்லாம் கோமதியை வச்சு நான் ஏற்பாடு பண்ணிட்டேன். பணத்தை விட்டெறிஞ்சா எல்லாம் நடக்கும்.”

அம்மாவின் திட்டம் மனதிற்கு சரியாகப் பட்டாலும் அதை லலிதாவிடம் சொல்லாமல் செய்வது பெரும் தவறு. துரோகம். ஏமாற்று வேலை என்று தோன்றியது. 

“அம்மா தாய்க்குத் தெரியாம புள்ளையை கலைக்கறது பெரும் பாவம்மா.”

“போடா… பெரிய பாவத்தைக் கண்டே. சாமிக்கே சாபம் விட்டுட்டு பெரிய பாவத்தை உன் கொள்ளுப்பாட்டி பண்ணியிருக்கு. அதைவிடவா இது பெரிய காரியம்? நாட்ல எத்தனையோ காரணங்களுக்காக குழந்தையை கலைக்கிறாங்க. என்னமோ நாமதான் புதுசா கலைக்கிறமாதிரி. இதப்பார்… இந்த வீட்ல குழந்தை அழற சத்தம்தான் இனிக் கேட்கனுமே தவிர லலிதா ஒப்பாரி வைக்கற சத்தம் கேட்கக் கூடாது.”

கண்டிப்புடன் சொல்லிவிட்டாள்.

வீரமணிக்கு அம்மாவின் பேச்சு நியாயமாகத்தான்பட்டது. ஆனால் அதை லலிதாவுக்கு தெரியாமல் செயல்படுத்துவதுதான் மனசாட்சியை உறுத்தும் செயலாகயிருந்தது. 

“அம்மா…  லலிதாக்கிட்ட சொல்லி அவ சம்மதத்தோட செய்யலாமே” என்றான் பாவமாக.

‘எந்தத் தாயாவது குழந்தையைக் கலைக்க ஒத்துப்பாளா?”

“நான் சம்மதிக்க வைக்கிறேன்ம்மா. பெண்ணாயிருந்தாத்தானே அதை கலைக்கப் போறோம். ஆணாயிருந்தா அது நம்ம அதிர்\டம்தானே.”

“என்னவோ பண்ணு. ஆனா… என் முடிவுல மாற்றம் இல்லை. இந்த வீட்ல இனி எழவு சத்தம் கேட்க நான் ரெடியா இல்லை.”

இதோ… விசயத்தை லலிதாவிடம் உடைத்துவிட்டான்.

கண்களில் பயம் மிளிர கணவனைப் பார்த்த லலிதா துடித்துப் போய்விட்டாள். குற்றுயிரும் குலையுயிருமாக கிடப்பவளை மறுபடி மறுபடி கூறுப் போட்டதைப் போலிருந்தது.

தனக்குள் உண்டான அதிர்ச்சியையும், ஆத்திரத்தையும் அவளால் வெளிப்படுத்தக் கூட முடியவில்லை. ஆயிரம் அதிர்ச்சி, ஆயிரம் ஆத்திரம் எல்லாவற்றையும் சந்தித்து மீண்டவளுக்கு மறுபடி மறுபடி உண்டாகும் வேதனையை கொட்டத் தெரியவில்லை. 

ஓங்கி அலறவேண்டும் என்றுதான் உள்ளுக்குள் தோன்றியது. ஓங்காரமாய் சத்தமிட்ட வேண்டும் என்றுதான் உள்ளுக்குள் வெறி உண்டானது.

உச்சக்கட்ட கோபமாக உருமாறியது. ஒன்றுமில்லாமல் உலகையே உருக்குலைத்துவிட வேண்டும் என்ற உத்வேகம் உக்கிரமாக உண்டானது. ஆனால்… ஒன்றுமே செய்யமுடியாமல் உணர்வுகள் மரத்துப் போய் உள்ளுக்குள்ளேயே ஓலமிட்டது.

மெல்ல அவளுடைய கூந்தலை வருடியவன் “லலிதா… அம்மா சொல்றது சரின்னுதான் படுது. பெத்து பெத்து பலி கொடுக்கறதுக்குப் பதில் இப்படி செய்தா… வலியும் வேதனையும் நூத்துல ஒரு பங்குதான். என்ன சொல்றே?”

சட்டென அவன் மடியில் கவிழ்ந்து மென்மையாக விசும்பினாள்.

“வேண்டாங்க. என்னால முடியாது. இந்த கொடுமையை செய்ய என்னால முடியாது” 

அவள் கிசு கிசுப்பாகத்தான் சொன்னாள். மறுப்பை மௌனமாகத்தான் சொன்னாள். எதிர்ப்பை ஏதுமில்லாத சக்தியோடுதான் சொன்னாள். 

ஒட்டுக் கேட்டதைப் போல் சரேலென உள்ளே வந்தாள் சுந்தரவள்ளி. 

“என்னடி… என்ன முடியாது?” எகிறினாள்.

அனுமதியில்லாமல் அந்தப்புரத்தில் புகுந்த நரியைப் போல் நுழைந்த சுந்தரவள்ளியைக் கண்டதும் சட்டென்று கணவனின் மடியிலிருந்து தலையை எடுத்தாள் லலிதா. 

“அத்தை…”

“இதப்பாருடி… உனக்கு வேணுமின்னா வயித்துல சுமக்க பலம் இருக்கலாம். எனக்கு மனசுல சுமக்க பலம் இல்லை. உன் வயித்தைப் பார்த்து பார்த்து என்னால பயந்து பயந்து சாக முடியாது. பொண்ணா பொறந்து பொறந்து பலி கொடுத்துக்கிட்டிருக்க முடியாது. மரியாதையா ஆஸ்பத்திரிக்கு கிளம்பு. நான் எல்லா ஏற்பாட்டையும் பண்ணிட்டேன். பொம்பளைப் புள்ளையாயிருந்தா களைச்சிடலாம்”

“அத்தை இந்த முறை கண்டிப்பா ஆண் குழந்தையாத்தான் இருக்கும். ஸ்கேன் பண்ண வேண்டாம்.”

“நீ என்ன உன் வயித்துல வளர்றதை வயித்துக்குள்ள கண்ணைவிட்டுப் பார்த்த மாதிரி சொல்றே? உன் நம்பிக்கைப்படி ஆணாயிருந்தா 

அதிர்\டம்தான். அதைத்தான் பார்த்திடுவோம்ங்கறேன். பொண்ணாயிருந்தாத்தானே கலைக்கப் போறோம்.”

கெஞ்சிக் கொண்டிருந்த லலிதா இப்பொழுது மிஞ்சினாள். எழுந்து போய் ஜன்னலோரம் நின்றுக் கொண்டாள். ஜன்னல் கம்பிகளை இறுகப் பற்றிக் கொண்டாள். அந்தப் பற்றுதலில் அவளுடைய வைராக்கியம் தெரிந்தது. இரும்புக் கம்பியே நெகிழ்ந்துவிடும் நிலைக்குப் போனது.

“என்னால முடியாது. அது ஆணா பெண்ணோ எதுவா வேணாயிருக்கட்டும். பொறந்து பிழைச்சாலும் சரி செத்தாலும் சரி… அதோட விதி என்னவோ அதன்படி ஆகட்டும். ஆனா… நான்  இதுக்கு சம்மதிக்க மாட்டேன்”

உறுதியாக உதிரம் இறுக சொன்னாள். 

“ஓ… உனக்கு அவ்வளவு திமிரா. என்னை எதிர்த்து ஒரு வார்த்தை பேசத் தெரியாத நீ இப்ப இப்படி பேசற அளவுக்கு வந்துட்டியா?”சீறினாள் சுந்தரவள்ளி.

கோழிக்கு இரையை எத்தனை அன்போடு போட்டாலும் அதன் குஞ்சை தூக்கினால் அது இரை போட்ட எஜமானியம்மாவையே கொத்தத்தானே செய்யும்? அது புரியவில்லை சுந்தரவள்ளிக்கு. 




“ இதுக்குத்தான்டா சொன்னேன். அவக்கிட்ட எதுவும் சொல்லாம கூட்டிக்கிட்டுப் போகனும்னு. கேட்டியா, பொண்டாட்டிக்கு உண்மையாயிருக்கறானாம். பொண்டாட்டிக்கு உண்மையா இருக்கனும்னு நினைச்சின்னா… நீ அப்பனாக முடியாது. வெட்டியானாத்தான் இருக்கனும். அவ பெத்துப் போடற புள்ளைங்களை புதைச்சுக்கிட்டேயிருக்க வேண்டியதுதான்.”

மகனால் மல்லுக்கு நிற்க முடியவில்லை அம்மாவிடம். 

“இதப்பாருடி… என்புள்ளைக்கு வாரிசு வேணும். நீ ஒன்னு ஆஸ்பத்திரிக்கு கிளம்பு. இல்ல… உன் அம்மாவீட்டுக்கு கிளம்பு. ஆண்பிள்ளையப் பெத்தா வீட்டுக்கு வா. இல்லே…பொம்பளைப் புள்ளை பிறந்து செத்தா… இங்க வராதே. என் புள்ளைக்கு நான் இன்னொரு கல்யாணம் பண்ணிக்கறேன். முடிவுப் பண்ணிக்க.”

சுந்தரவள்ளி ஆணையிட்டாள். அஞ்சவில்லை லலிதா. ஆனால் வீரமணிதான் ஆடிப் போய்விட்டான். மனைவிப் பக்கம் நின்று அம்மாவை எதிர்க்க முடியவில்லை. 

மனைவியிடம் கெஞ்சினான்.  

“லலிதா அம்மா உன்னோட நன்மைக்குத்தானே சொல்றாங்க. கேளேன்”

“எதுங்க நன்மை? எதுங்க நன்மை? என்னை எப்படி மிரட்டறாங்கப் பார்த்திங்களா? உங்களுக்கு வேற கல்யாணம் பண்ணி வைக்கப் போறாங்களாம். பண்ணிக்கங்க. தாராளமா பண்ணிக்கங்க. இப்படியெல்லாம் மிரட்டினா நான் பயந்துடுவேனா? நான் எங்க அம்மா வீட்டுக்குப்போறேன். பொறக்கறப் புள்ளை ஆணோ பொண்ணோ உயிர் பொழைச்சா வர்றேன். ஆரத்தியெடுக்க வாசல்ல நில்லுங்க. இல்லாட்டியும் ஆரத்தி தட்டோட நில்லுங்க. வேற மருமகளை வரவேற்க.”

சொல்லிவிட்டு துணிமணிகளை எடுத்து பெட்டியில் வைத்துக்கொண்டு கிளம்பிவிட்டாள்.

வீரமணி தடுக்க தடுக்க கெஞ்சக் கெஞ்ச போய்விட்டாள்.

சரியாய்  பத்துமாதம் கழித்து லலிதாவிற்கு குழந்தைப் பிறந்தது. 




What’s your Reaction?
+1
6
+1
14
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
Subscribe
Notify of
guest

0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!