Serial Stories மல்லிகைப் பந்தல்

மல்லிகைப் பந்தல்-10

(10)

களத்து மேட்டிலிருந்து வீரமணி வந்தபோது வீட்டுக்குள்ளிருந்து தரகர் கல்யாண சுந்தரம் இறங்கிக் கொண்டிருந்தது அவனை துணுக்குற வைத்தது.

‘இந்த ஆள் ஏன் இங்கே வந்துவிட்டுப் போகிறான்? அம்மா வழியில் யாருக்காவது மாப்பி;ள்ளையோ, பொண்ணோ பார்த்திருக்கிறானா? இல்லை…ஏதாவது கடன் கேட்டு வாங்கிக் கொண்டுப் போhகிறானா?’

கல்யாண சுந்தரம் அந்த ஊரில் எல்லாருக்கும் பெண் பார்த்து திருமணம் முடித்து வைக்கும் தரகர். சுந்தரவள்ளிக்கு உறவுக்காரரும் கூட. அந்த உரிமையில் அவ்வப்போது வந்து கடன் கேட்டு வாங்கிக் கொண்டு போவதுண்டு. திருப்பிக் கொடுத்தால் ஆண்டவனுக்குத்தான் வெளிச்சம். ஒரு முறை கூட திருப்பிக் கொடுத்ததாக வரலாறு இல்லை. 

வீரமணியைப் பார்த்ததும் ஒருமாதிரி சிரித்துவிட்டு நலம் விசாரித்துவிட்டு நகர்ந்துவிட்டான். ஏதோ தப்பு செய்ததைப் போல் நடை தடுமாறியது. 

உள்ளே வந்த வீரமணி கூடத்தில் அமர்ந்து எதையோ கையில் வைத்துப் பார்த்துக் கொண்டிருந்த அம்மாவைப் பார்த்து சிடுசிடுத்தான்.

“இந்த ஆள் எதுக்கு இப்ப வந்துட்டுப் போறான்? இவருக்கு கடன் கொடுக்காதே கடன் கொடுக்காதேன்னு எத்தனை தடவை உனக்கு சொல்றது? கல்யாண சீசன் இல்லைன்னா உடனே இங்க வந்திட வேண்டியது, கடன் வாங்கிட்டுப் போக. ஒரு தடவையாவது திருப்பிக்  கொடுத்திருக்காரா?” 

எரிச்சலாக வந்து சோபாவில் அமர்ந்தான்.

“அவரு… கடன் வாங்க வரலை. நான்தான் அவரை வரச்சொல்லியிருந்தேன்”

“நீ எதுக்கு அவரை வரச் சொன்னே?”

“பொண்ணு பார்க்கத்தான்.”

“பொண்ணு பார்க்கவா? யாருக்கு? நம்ம சொந்தக்காரங்கள்ல கல்யாணம் பண்ற வயசுல யாரும் இல்லையே”

“சொந்தக்காரங்களுக்கு நான் ஏன் பொண்ணுப் பார்க்கனும்? உனக்குத்தான் பொண்ணு பார்க்க வரச்சொல்லியிருந்தேன்”

இதைக்கேட்டு அதிர்ந்துப் போனான் வீரமணி.

“அம்மா… என்ன சொல்றே? உனக்கென்ன பைத்தியமா?”

சீறிய மகனைப் பார்த்து சிரித்தாள். “உன் அம்மா பைத்தியம் இல்லைடா? அறிவாளி”

“இதான் அறிவாளியோட லட்சணமா? நிறை மாச கர்ப்பிணியா அங்க லலிதா இருக்கா. நீ இங்க பொண்ணு பார்க்கறே?”

“டேய்…அவளுக்கு எப்படியும் பொண்ணுதான் பொறக்கும். அதுவும் செத்துப் போகும். அப்பறம் அவ இந்த வீட்டு வாசப்படி ஏற முடியாது. அதனாலதான்… இப்பவே பொண்ணு பார்த்து ரெடியா வச்சுக்கறேன். இந்தா… இந்த ஃபோட்டோவைப் பாரு.” என்றபடி இதுவரை தான் பார்த்துக் கொண்டிருந்த புகைப்படத்தை நீட்டினாள்.

சட்டென்று அதை வாங்கி அவன் கிழித்துப் போட்டான். அதே நிமிடம் தொலைப்பேசி ஒலித்தது. ஆத்திரமாக சென்று தொலைப் பேசியை எடுத்தவன் ‘அப்படியா?’ என மகிழ்ச்சியாக கூவினான். பின் பட்டென்று ஃபோனை வைத்துவிட்டு அம்மாவின் பக்கம் திரும்பினான். 




“லலிதாவுக்கு ஆண் குழந்தைப் பிறந்திருக்கு” என்றான்.

சுந்தரவள்ளிக்கு பளாரென அறைந்ததைப் போல் இருந்தது. சத்தியமாக அவளால் நம்பவே முடியவில்லை. மறுபடியும் பெண் பிறக்கும் என்றுதான் நினைத்தாள். அதனால்தான் மகனுக்கு வேறு கல்யாணத்திற்கு பெண் பார்க்கவும் சொல்லியிருந்தாள். ஆனால்…. நொடியில் எல்லாமும் மாறிப்போனது. 

விசயத்தை அம்மாவிடம் சொன்னானேத்தவிர அதை அம்மாவுடன் கொண்டாட அவனால் முடியவில்லை. காரணம் சற்று முன் அம்மா பேசிய பேச்சு. வந்துவிட்டுப் போன தரகர் ஏற்படுத்தியிருந்த எரிச்சல். 

வெளியே போய்விட்டான், தன் மகிழ்ச்சியை தன் நண்பர்களுடன் கொண்டாட.

அதைப்பற்றி சுந்தரவள்ளியும் கவலைப்படவில்லை. அக்கம் பக்கம் எல்லோரையும் அழைத்து தன் மகிழ்ச்சியை தம்பட்டம் அடித்துக் கொண்டாள்.

உடனே கிளம்பி மருமகளைப் பார்க்க ஓடினாள். ரோஜா மலராய் பிறந்திருந்த குழந்தையை அள்ளி கொஞ்சோ கொஞ்சோவென்று கொஞ்சினாள்.

பெண் குழந்தைப் பிறந்த போதெல்லாம் அவள் இப்படி கொஞ்சவில்லை. பிறந்திருப்பது பெண் குழந்தை என்று தெரிந்ததுமே அது இன்னைக்கு செத்துவிடுமோ நாளைக்கு செத்துவிடுமோ என புலம்பிக் கொண்டும் மற்றவரின் மனதில் பயத்தை பரப்பிக் கொண்டும்தான் இருந்தாள். ஒரு முறைக் கூட குழந்தையை எடுத்துக் கொஞ்சியதில்லை. கொஞ்சுபவர்களையும் ‘இதப்பார்…குழந்தையை கொஞ்சி கொஞ்சி மனசை கெடுத்துக்காதிங்க. அது எந்நேரத்திலும் செத்துப் போயிடும். சாபம் அப்படி.’ என்று குழந்தையை ஆசையோடு நெருங்குபவர்களையும் நெருங்கவிடாமல் தடுத்துவிடுவாள். 

அவள் சொல்வதைப் போலவே குழந்தையும்  சில நாட்களில் செத்துவிடும்.

ஆனால் இப்பொழுது ஆண்குழந்தை செத்துப் போகாது என்ற நம்பிக்கையில் பெருமையும், மகிழ்ச்சியுமாக கொஞ்சினாள். 

லலிதாவிற்கும் மனதில் பெரும் நிம்மதி உண்டானது. மாமியாரிடம் கோபித்துக் கொண்டு லலிதா அம்மாவிட்டிற்கு வந்துவிட்டாளே ஒழிய ஒவ்வொரு நிமிடமும் உள்ளுக்குள் திகிலோடுதான் வாழ்ந்தாள். இதுவும் பெண்ணாகப் பிறந்தால் இறந்துவிடுமே என்ற பயம் அவளுடைய மனதை முழுவதுமாக ஆக்ரமித்துவிட்டது. அந்த அளவிற்கு அந்த சாபம் அவளுக்குள் வேறூன்றிவிட்டது. 

அதனால் தினம் தினமும்… இல்லை ஒவ்வொரு நிமிடமும் அவளுடைய மனம் பிராத்தித்துக் கொண்டேயிருந்தது. 

‘கடவுளே…எனக்கு பெண் குழந்தை வேண்டாம். ஆண் குழந்தையை கொடு:’ என்று. மாமியார் பெண் பிறந்து இறந்தால் மகனுக்கு இன்னொரு கல்யாணம் பண்ணிவிடுவாள் என்ற பயம் இல்லை அவள் மனதில். இந்தக் குழந்தையையும் பிணமாகப் பார்க்க அவளிடம் தெம்பு இல்லை. 

எப்படியோ பிரார்த்தனைப் பலித்தது. இதுவரை ஏற்பட்ட இழப்புகளின் வலியை இந்தக் குழந்தை ஈடு செய்வதைப் போலிருந்தது. 

பாசம் பொங்க குழந்தையை அள்ளி அணைத்துக் கொண்ட மாமியாரிடம் தன் பழைய கோபத்தைக் காட்டவில்லை. இழப்பு எல்லோருக்கும் ஒரே மாதிரியான உணர்வை ஏற்படுத்துவதில்லை. சிலருக்கு வேதனையையும், வலியையும் ஏற்படுத்துகிறது. சிலருக்கு கோபத்தை ஏற்படுத்துகிறது. சிலருக்கு போராட்டக் குணத்தை ஏற்படுத்துகிறது.

மாமியாருக்குள் உண்டான கோபத்தையும், வெறுப்பையும் பெரிதாக பொருட்படுத்தவில்லை. எப்படியோ ஆண் குழந்தை பிறந்து எல்லார் மனதிலும் ஏற்படுத்திய மகிழ்ச்சி பெரும் நிம்மதியைத் தந்தது.  ஆனால்…அவளுக்குள் இருந்த பெண் குழந்தையின் மீதான ஆசை மட்டும் குறையவில்லை.

பெண் குழந்தை பிறக்க வேண்டும், அதற்கு மீனாள் என்று பெயரிட வேண்டும் என்ற ஏக்கம் அவளுக்குள் ஏக்கமாக எழுந்து வளர்ந்துக் கொண்டேயிருந்தது. 

லலிதாவை அடுத்தவாரமே வீட்டுக்கு அழைத்து வந்தாள் சுந்தரவள்ளி. குழந்தைக்கு பெயர் சூட்டும் விழாவிற்கு ஏற்பாடு செய்தாள். மிகவும் விமரிசையாக கொண்டாட பணத்தை வாரி இறைத்தாள். சொந்தம் பந்தம் ஊர் உறவு என எல்லோருக்கும் அழைப்பு விடுத்தாள். 

அதற்கு முன் ஆண்பிள்ளையைக் கொடுத்த அம்மனுக்கு பெரிய படையல் போட்டாள். 

வெகு விமரிசையாக பெயர் சூட்டும் விழா நடந்தது. ஆடும், கோழியும் பிரியாணியாக மாறி பந்தலில் பரிமாறப்பட்டது.  ஊரே மகிழ்ச்சியில் தின்று திளைத்தது. 

குழந்தைக்கு உமாபதி என பெயர் சூட்டப்பட்டது. வீடியோக்காரரும், ஃபோட்டோ கிராபரும் வளைத்து வளைத்து படம் எடுத்தனர். 

அப்பொழுது லலிதா செய்த ஒரு செயல் சுந்தரவள்ளியின் மனதில் கடும்கோபத்தை உண்டுப்பண்ணியது.




What’s your Reaction?
+1
5
+1
10
+1
0
+1
1
+1
0
+1
0
+1
0
Subscribe
Notify of
guest

0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!