Serial Stories மல்லிகைப் பந்தல்

மல்லிகைப் பந்தல்-8

(8)

    ‘ஒப்பாரி வைத்து ஊருக்கே அந்த குடும்பத்தின் மீதிருக்கும் சாபத்தை மறந்தவர்களுக்கும் ஞாபகப்படுத்தினாள் சுந்தரவள்ளி. 

‘:ஐய்யோ….பொண்ணா பொறந்தா இந்தக் குடும்பத்துல தங்காதே. நான் என்னாப் பண்ணுவேன். இந்த வீட்ல இப்படி இழவு விழுதே. என் வம்சத்தையே விருத்திப் பண்ண விடாம பண்ணிட்டாங்களே. சாமிக்கே சாபம் விட்டுட்டுட்டுப் போன பாவமா இது?’

“சாபமா…என்னா சாபம்?’ இழவுக்கு வந்த பெண்களில் விசயம் தெரியாத பெண்களின் கிசு கிசுப்பிற்கு வயதான கிழவிகள் ரகசிய தொணியில் பதில் சொன்னார்கள்.

‘தெரியாதா உனக்கு? இந்த குடும்பத்துல ஒரு கிழவி சாமிக்கே சாபம் வுட்டுடுச்சு.’

‘என்னா சொல்றே? சாமிக்கே சாபமா?’

“ஆமா… சுந்தரவள்ளியோட மாமியாளோட மாமியாவுக்கு …’ என்று ஆரம்பித்து சிவகாமியின் சபதம் போல் கிழவியின் சாபத்தை பேசு பொருளாக்கினர்.

‘அதான்… சாமி தன் கோவில் இடியாம காப்பாத்திக்க பொறக்கற பொம்பளைப் புள்ளையை சாவடிச்சுடுது’

பேசுவதெல்லாம் காதில் விழுந்தாலும் அழக் கூட தெம்பு இல்லாமல் வெறித்தப் பார்வையுடன் அமர்ந்திருந்தாள் லலிதா. 

இந்த முறை குழந்தையை கொல்லையிலேயே புதைக்கவில்லை. 

‘வேண்டாம்ப்பா… என் தோட்டமே கல்லறைத் தோட்டமா ஆயிடும் போலிருக்கு. இதை… கொண்டுப் போயிடுங்க’

கொண்டு போகப்பட்டது சுடு காட்டிற்கு.

இப்பொழுதெல்லாம் லலிதா மல்லிகைப் பந்தலுக்கு செல்வதில்லை. சருகான பூக்களை அகற்றுவதில்லை. கருகவிடாமல் தீபத்தை ஏற்றுவதில்லை. உருக உருக… ஊனுருக.. உயிருக… ஆருயிர் மகளிடம் பேசுவதில்லை.

முதல் குழந்தையை இழந்த போது வேதனையும் துக்கமும் இருந்தது. இரண்டாவது குழந்தையை இழந்த போது வேதனையைவிட, துக்கத்தைவிட குற்ற உணர்வே கூறுப் போட்டது. 

குழந்தை இறந்தது குடும்ப சாபத்தால் என ஊர் பேசினாலும், அது தன்னால்தான் இறந்தததாக எண்ணித் துடித்தாள்.

பெண் குழந்தை பிறந்தால் இறக்கும் என்ற சாபத்தை நம்பாமல் மாமியார் ஆண் குழந்தை பிறக்க வேண்டும் என்று வேண்டிக் கொள் என்று சொல்லியும் நான் வேண்டிக்கொள்ளாமல் பெண் குழந்தை வேண்டும் என்று வேண்டிக் கொண்டதால்தான் பெண்ணாகப் பிறந்ததோ?

பிடித்ததைக் கொடுத்து பின் பிடுங்கிக் கொண்டதோ தெய்வம்?

கேட்பதை ஒழுங்காய் கேட்காமல் போன குற்றம் என்னுடையது தானோ? இது ஆணாய் பிறந்திருந்தால் உயிருடன் இருந்திருக்குமோ?’

மூட நம்பிக்கைகளில் மூழ்காத அவளுடைய மனம் இப்பொழுது முற்றிலும் மாறியிருந்தது,

பகுத்தறிவு பேசும் பல பேர் தன் பச்சிளம் குழந்தைக்கு பங்கம் வரும் என்றால் பகவானே என்று அலறிய கதைகள் இங்கு நிறைய உண்டு. அறிவு என்பது அடிமடியில் கைவைக்காத வரை அழகாக இருக்கும். ஆருயிராய் மதிக்கும் ஜீவனுக்கு ஆபத்தென்றால் அறிவு அங்கே பதுங்கிக் கொள்ள ஆன்மீகம் அதுவாகவே அவதரித்துவிடும்.

அவளுக்குள்ளும் அப்படித்தான் உண்டானது. தன் வேண்டுதலினால்தான் பெண் குழந்தைப் பிறந்தது என எண்ணி எண்ணி குற்ற உணர்வில் துடித்தாள். 

பட்ட காலிலே பட்டது. விழுந்த பள்ளத்திலேயே மறுபடி விழ நேரிட்டது. எழுந்து வர முடியாமல் அழுந்திக் கிடந்தவளை இந்த முறையும் ஏதும் சேதமின்றி எடுத்துவிட பாடுபட்டான் வீரமணி. பக்குவமாக பள்ளத்திலிருந்து அள்ளிவிட்டான். 

அடிமேல் அடி. அன்றாட வாழ்க்கைக்கு அவளை மாற்றுவதில் அவனை அவஸ்தைப்பட வைத்தது. அவனுடைய அன்பு, அரவணைப்பு, அக்கறை அவளை மீட்டெடுத்தது. தாரத்திற்கு தாயாக மாறிய அவனுடைய பரிவு அவளை பழையபடி இல்லற பாதைக்கு இழுத்து வந்தது. 




. மூன்றாம் முறையாக கர்ப்பமானாள் லலிதா. முத்து சுமந்த சிப்பியின் கெத்து இல்லை அவளிடம். கருக்கொண்ட மேகத்தின் கர்வம் இல்லை அவளிடம். சூல் கொண்ட மலரின் சுகந்தம் இல்லை அவளிடம்.

கடமையே என சுமந்தாள். தன் உடைமை என உரிமை கொள்ள முடியாமல் உடைந்துக் கொண்டிருந்தாள் உள்ளுக்குள். பத்து மாதம் மட்டுமே தனக்கு சொந்தம் என்ற பரிதாப எண்ணமா? பக்குவமா? பற்ற தன்மையா?

அனுபவம் தந்த அச்சம் அவளை ஆண் குழந்தையாகப் பிறக்க வேண்டும் என்று ஆசைப்படவிட்டாலும் பெண்குழந்தை வேண்டாம் என்ற  எண்ணத்தை ஏற்படுத்தியது. பெண் குழந்தை மீதான ஆசைக்கு அவளே கதவடைத்தாள். பெண் குழந்தை வேண்டாம் தாயே. கொடுத்து கொடுத்து பறித்துவிடாதே என தினமும் கடவுளிடம் வேண்டிக்கொண்டாள். 

ஆனால்…சுந்தரவள்ளி சொன்ன விசயம் அவளை தூக்கி வாரிப் போட வைத்தது. ஒரு மதிய உணவு வேளையின் போது சாப்பிட்டுவிட்டு ஓய்வெடுத்திருந்த மகனிடம் வந்தாள் சுந்தரவள்ளி. 

லலிதா துணிகளை மடித்து வைத்துக் கொண்டிருந்தாள். 

“லலிதா… மாடியில புளி காயப் போட்டிருக்கேன். அதை எடுத்துட்டு வந்து பானையில வை” என்றாள். லலிதாவிற்கு புரிந்தது.

மகனிடம் ஏதாவது ரகசியம் பேச வேண்டுமென்றால் இப்படித்தான் அவளை ஏதாவது வேலை சொல்லி எங்காவது அனுப்பிவிடுவாள்.

‘ஆத்தாளுக்கும் மகனுக்கும் ஆயிரம் இருக்கும் நமக்கென்ன’ என்று மாடிக்கு வந்தாள். மாடியில் காய்ந்த புளியை எடுத்து அங்கேயே வைத்திருந்த பெரிய மண்பானையில் வைத்தாள். 

மனம் மட்டும் சுந்தரவள்ளி மகனிடம் என்ன பேசிக்கொண்டிருப்பாள் என்பதிலேயே உழன்றுக் கொண்டிருந்தது. 

புளிப்பானையை எடுத்துக் கொண்டு கீழே வந்து சமையலறையில் வைத்தாள். மாமியாரும் சமையலறையில் இருந்தாள். காபி போட்டுக் கொண்டிருந்தாள். 

பேசி முடித்துவிட்டாள் போலிருக்கிறது. 

“இந்தா… புளிப் பானையில கொஞ்சம் உப்பைத் தூவி வை. பூச்சிப் புடிக்காது.” என்று உத்தரவிட்டவாறே காபி கலந்தாள் சுந்தரவள்ளி.

“சரி அத்தை.” என்று உப்பு டப்பாலை எடுத்து புளிப்பானையில் உப்பைத் தூவினாள்.

“இந்தா… இந்த காபியை கொண்டு போய் அவன்கிட்ட கொடு’

“இப்பத்தானே சாப்பிட்டாங்க”

“என்னமோ தலைவலிக்குதாம்.” 

காபியை எடுத்துக்கொண்டு சமையலறையைவிட்டு வெளியே வந்தாள். ‘நல்லாத்தானே இருந்தார். அதற்குள் எப்படி தலைவலி வந்திருக்கும். கிழவி என்னைப் பத்தி ஏதாவது வத்தி வைத்திருக்குமா?’ யோசித்தவாறே அறைக்குள் நுழைந்தாள். 

கண்களை மூடி படுத்திருந்தான் வீரமணி. 

“என்னங்க… காபி” என்றாள். கண்களைத் திறந்தவன் எழுந்து அமர்ந்து காபியை வாங்கிக் கொண்டான். அவனருகிலேயே அமர்ந்தவள் “என்னாச்சு? தலைவலின்னீங்களாம். அத்தை சொன்னாங்க”

“ம்…” என்று ஒரு வாய் காபியை உறிஞ்சினான்.

“நல்லாத்தானே இருந்தீங்க. திடீர்ன்னு எப்படி தலைவலி?”




“தலைவலிதான் வீட்லயே இருக்கே” எரிச்சலாக சொன்னான்.

“நானா?’ என்றாள் வேண்டுமென்றே முகத்தை சோகமாக வைத்துக்கொண்டு.

“உன்னை சொன்னேனா?”

“பின்னே?”

“என்னைப் பத்து மாசம் சுமந்து பெத்ததுதான்”

“ஏன் என்ன சொன்னாங்க?”

அவன் எதுவும் சொல்லவில்லை. காபியை குடித்து முடித்துவிட்டு எழுந்து சட்டையை எடுத்துப் போட்டுக்கொண்டு “ நான் வெளியே போய்ட்டு வர்றேன்” என்று கூறிவிட்டுப் போய்விட்டான். இறுகிக் கிடந்த அவனுடைய முகம் அவளுக்கு எதையோ சொல்வதைப் போலிருந்தது. ‘மாமியார் என்ன சொன்னாள்? நான் முன்னைப் போல் ஒழுங்காக வீட்டு வேலைகளை செய்வதில்லை என்று கூறியிருப்பாள். என்னைப் பற்றி சொல்ல வேறென்ன இருக்கிறது?’ 

உள்ளத்தில் போட்டு உழற்றாமல் உதாசீனப்படுத்திவிட்டு உருப்படியான வேலைகளில் இறங்கினாள். 

உலாவிவிட்டு வீட்டிற்கு வந்த வீரமணி அவளை உட்கார்த்தி வைத்து சொன்ன விசயம் ஓங்கி நடுமண்டையில் அடித்ததைப் போலிருந்தது. 




                  

What’s your Reaction?
+1
8
+1
15
+1
0
+1
0
+1
1
+1
1
+1
0
Subscribe
Notify of
guest

0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!