Serial Stories மல்லிகைப் பந்தல்

மல்லிகைப் பந்தல்-15

(15)

அன்றைக்கு வெகு நேரம் வரை மாந்தோப்பில் மாமரத்தின் மீது ஏறி அமர்ந்திரந்தவன் பொழுது சாய ஒரு வழியாக வீட்டை நோக்கி வந்த போதுதான் வீட்டு வாசலில் பெரும் கூட்டம்.

“ஐய்யோ… லலிதா வெஷம் குடிச்சுட்டா…” என்ற வார்த்தைகளைக் கக்கியவாறே ஓடிய பெண்கள் கூட்டம்.

அடிவயிற்றில் நெருப்பு வைத்ததைப் போலிருந்தது. ‘அம்மா… விஷம் குடித்துவிட்டாளா’ வெடவெடவென நடுங்கியது. 

“அம்மா… அம்மா…” அவன் கத்தியபடியே ஓட வாசலில் நிறுத்தப்பட்டிருந்த காரில் லலிதாவை தூக்கி படுக்க வைத்துக் கொண்டிருந்தனர். 

“அம்மா… அம்மா…” என அவன் கார் அருகில் போவதற்குள் சர்ரென கார் விரைந்தது. 

கார் சென்றதும் சுந்தரவள்ளி வாசலிலேயே தரையில் அமர்ந்து தலையிலடித்துக் கொண்டு கதறினாள்.

“”ஐய்ய்யோ…நான் என்னா பண்ணுவேன்? இப்படி அரளி விதையை அரைச்சுக் குடிச்சுட்டாளே…நான் என்னா பண்ணுவேன்?”

“ஏன்… ஆத்தா… என்னா பிரச்சனை? நீ ஏதாவது அந்தப் பொண்ணை சொன்னியா?”

“நான் எதுவுமே சொல்லலையே. அப்படியே சொன்னாலும் வேலை வித்து அப்படி அப்படியே கெடக்குன்னு தான் சொல்லுவேன். அதுக்கெல்லாம் அவ கோவிச்சுக்கிட்டதே இல்லையே.”

“உன் மவன் வீரமணிக்கும் அவளுக்கும் ஏதாவது சண்டையா?”

“”தெரியலையே தாயி. ரெண்டு பேரும் ஒரு நாளும் சண்டைப் போட்டுக்க மாட்டாங்களே. இன்னைக்கு தாலிக்கட்டிக்கிட்ட சோடி மாதிரிதானே பேசி சிரிச்சுக்கிட்டு இருப்பாங்க. நானே ஏதாவது அவளைத் திட்டினாக் கூட பொண்டாட்டிக்குத்தான் வக்காலத்து வாங்குவான். வெசம் குடிக்கற அளவுக்கு என்னா நடந்ததுன்னே தெரியலையே. ஐய்யோ….”

“என்னதான் புருசன் பொண்டாட்டி அன்னியோன்யமா இருந்தாலும் சமய சந்தர்ப்பத்துல வார்த்தைகளை விடறது சகஜம் தானே? உன் புள்ளை என்னா சொன்னானோ… அந்தப் புள்ளைக்கு  காத்ததடிச்சாலே உதிரும் பூ மனசு. வார்த்தை தாங்கலைப் போல. அதான்… இப்படி பண்ணிப்புட்டு.”

“ஆமா….பேசாதவங்க பேசினா தாங்கத்தான் முடியாது. நம்ம புருசனுங்க நம்மளை நாயே… பேயேன்னு கேட்டு கேட்டுப் பழக்கம். நாமலும் பதிலுக்கு காரித்துப்பிட்டு போயிடுவோம். லலிதா அப்படியில்லையே. உள்ளங்கையில வச்சு தாங்கற புருசன் ஒரு வார்த்தை சொன்னா தாங்காதுதான். அதுக்காக இப்படியா பண்றது? பாவம் வீரமணி என்னா துடி துடிக்கிறான்.”




ஆளாளுக்கு காரண காரியங்களாய் ஏதேதோ சொல்ல உமாபதி சிலையாய் நின்றான். ‘காரணம் நான்தானோ? நானேதான். நான் சொன்ன விசயத்தை அம்மாவால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. எப்படி ஏற்றுக் கொள்ள முடியும்? அந்த அதிர்ச்சியைத் தாங்கிக் கொள்ள முடியாமல் இப்படி செய்துவிட்டாளோ?’

“எலே…உமாபதி… எங்கடா போய்த் தொலைஞ்சே? போடா… சைக்கிளை எடுத்துக்கிட்டு ஆஸ்பத்திரிக்குப் போடா. உன் ஆத்தா பண்ணின காரியத்தைப் போய் பாருடா… ஐய்யோ… ஊரு சனம் என் மூஞ்சில காரித்துப்பறமாதிரி இந்த சிறுக்கி காரியம் பண்ணியிருக்காளே…”

“ஆத்தா நீ கொஞ்சம் சும்மாயிரு”

“எப்படி சும்மாயிருக்க? நான்தான் கொடுமைப்படுத்தினதா ஊரு சொல்லாதா?”

“ஆமா… கட்டிக்கிட்டு வந்த காலத்துல இல்லாம கட்டையில போறக் காலத்துலதான் நீ கொடுமைப் படுத்தப் போறியா… எல்லாம் சரியாயிடும் கம்முன்னு கிட”

உமாபதி சைக்கிளை எடுத்துக் கொண்டு மருத்துவமனைக்குப் பறந்தான். 

வாசலிலேயே வீரமணி அவனை எதிர் கொண்டான். ‘அப்பா…’என உமாபதி கண்கலங்கி பதற அவர் உடைந்து அழுதார்.

“அப்பா… அம்மா எப்படியிருக்காங்க?”

“டாக்டர் பார்த்துக்கிட்டிருக்கார்” என்றபடி அங்கிருந்த பெஞ்சில் தளர்வாக அமர்ந்தாரன் வீரமணி. தயக்கமாக பக்கத்தில் உமாபதி அமரவும் குலுங்கி அழுத்தொடங்கினார் வீரமணி.

“நான் அவளை எதுவுமே சொல்லலையே. ஏன் இப்படி பண்ணினான்னு தெரியலையே. ஆச்சிக் கூட ஒன்னும் சொல்லலை.: வீரமணி காரணம் தெரியாமல் தவிக்கவும் உமாபதி உருக்குலைந்தான். முழுக்காரணமும் அவன்தானே. 

“அவ சடங்கு வீட்லயே  சரியில்லை. எதையோ பறிக்கொடுத்த மாதிரியிருந்தா. அவளுக்கு அந்த சடங்கான பொண்ணை அப்படி அலங்கரிச்சுப் பார்த்ததுமே செத்துப் போன ரெண்டு பெண் குழந்தைகளோட ஞாபம் வந்திருக்கும்னு நினைக்கிறேன். அந்த குழந்தைகளோட ஞாபகம் வந்தாலே அவ ரொம்ப மோசமான மனநிலைக்குப் போயிடுவா. பைத்தியம் மாதிரி நடந்துக்குவா. என்னதான் நீ ஆண் குழந்தையாப் பிறந்தாலும் அவளால அந்த குழந்தைகளை மறக்க முடியலை. அதனால மனஅழுத்தம் அதிகமாகி இப்படி பண்ணிட்டாளோ என்னமோ தெரியலை. கடவுளே… அவ பொழைச்சு வந்தா எனக்கு அது போதும்.” தோளில் கிடந்த துண்டை வாயில் புதைத்துக் கொண்டு குமுறினார். 




இடிந்துப் போனவனாக அமர்ந்திருந்தான் உமாபதி. அம்மா ஏன் தற்கொலை முயற்சி செய்தாள் என அவனுக்கு மட்டுமே தெரியும். அது தெரியாமல் வீரமணி ஏதேதோ காரணங்களை கற்பித்துக் கொண்டிருக்கிறார். அப்பாவை பாவமாகப் பார்த்தான் உமாபதி. 

‘அப்பா… அம்மாவின் இந்த நிலைக்கு நான்தான் காரணம். நான் சொன்ன வி~யத்தை அம்மாவால் ஜீரணித்துக் கொள்ள முடியவில்லை. ஆணாகப் பிறந்த தன் பிள்ளை பெண் என்பதை எந்தத்தாயால்தான் ஜீரணித்துக் கொள்ள முடியும்? அதனால்தான் இப்படி செய்திருக்கிறாள். என் அம்மாவுக்கு ஒன்று ஆகிவிட்டால் அதற்கு யார் காரணம்? நான்… நான்தானே காரணம். பெற்ற தாயை கொன்ற பாவம் எனக்குத்தானே. அம்மா… என்னை மன்னித்து விடு. தயவு செய்து பிழைத்து வா. நான் சொன்னது பொய் என்று உன்னிடம் சொல்லிவிடுகிறேன். பொய் சொன்னதாக உன்னை நம்ப வைத்து விடுகிறேன். என்னைப் பற்றிய ரகசியம் என்னோடு போகட்டும். அம்மா நீ எனக்கு வேண்டும். பிழைத்து வாம்மா….’

மனதுக்குள் மன்றாடினான். கதறினான். 

பல மணி நேரங்களுக்குப் பிறகு நர்ஸ் வந்து லலிதா அபாயக்கட்டத்தை தாண்டிவிட்டதாகக் கூறினாள். 

நிம்மதி பெருமூச்சுப் பிறந்தது. கடவுளுக்கு அப்பாவும், பிள்ளையும் நன்றி கூறினர்.

“அவங்களுக்கு நினைவு திரும்பியதும் போய் பார்க்கலாம். மாற்றுத்துணி ஏதாவது எடுத்துட்டு வந்திருக்கீங்களா?” என்று நர்ஸ் கேட்டபோதுதான் தோன்றியது வரும் அவசரத்தில் எதுவும் எடுக்காமல் வந்தது.

“இல்லையே:”

“வீட்டுக்குப் போய் எடுத்துட்டு வாங்க.” சொல்லிவிட்டு அவள் போய்விட வீரமணி மகனைப் பார்த்தார்.

“நீ வீட்டுக்குப் போய் மாத்துத்துணி எடுத்துட்டு வர்றியா? ஆச்சியும் ரொம்ப கவலையாயிருக்கும் அதுக்கிட்ட அம்மாவுக்கு பயப்படறமாதிரி ஒன்னும் இல்லைன்னு டாக்டர் சொன்னதை சொல்லு.” என்றார். 

உமாபதி தன் சைக்கிளை எடுத்துக் கொண்டு வீட்டை நோக்கி சென்றான். கால்கள் சைக்கிளை மிதித்தன. மனம் அவனை மிதித்தது. 

‘அம்மா கண் திறந்தால்  எப்படி அவளுடைய முகத்தில் விழிப்பேன்? உயிர் கொடுத்த தாயின் உயிர் போகுமளவிற்கு கொண்டு விட்டிருக்கிறேனே. எந்த தைரியத்தில் இந்த விசயத்தை அம்மாவிடம் சொன்னேன்? பிள்ளைக்கு தாயைத்தவிர வேறு யார் இருக்கிறார்கள்? அந்தரங்க விசயத்தைப் பேச? 

பசித்தால் தாயின் மார்பு தேடிய குழந்தை தன் மனதின் வேதனையையும் தாயிடம் தானே கூறும். ஆனால்….அது இவ்வளவு விபரீதத்தில் கொண்டுவிடும் என்று நினைக்கவில்லையே.

அம்மா நீ என்னைப் புரிந்துக் கொள்வாய் என்றுதானே உன்னிடம் சொன்னேன். எனக்கு நீ கைக் கொடுப்பாய், பக்க பலமாக இருப்பாய் என்றுதானே சொன்னேன். என் பிறப்பை தாயைத் தவிர வேறு யார் ஏற்றுக் கொள்வார்கள் என்றுதானே சொன்னேன். கடைசியில் நீ என்னையே விட்டுவிட்டுப் போக முடிவெடுத்துவிட்டாயே. உயிரையே மாய்த்துக் கொள்ளும் அளவிற்கு இது மானம் கெட்ட விசயமாக உனக்குத் தோன்றியதா?

வீட்டிற்கு வந்து சுந்தரவள்ளியிடம் அம்மாவின் உடல்நிலைப்பற்றிய விசயத்தை சொல்லிவிட்டு அம்மாவிற்கு மாற்று சேலை வாங்கிக் கொண்டு மறுபடி புறப்பட்டபோது அவனுடைய மனமும் மாற்று வழியை யோசித்துக் கொண்டிருந்தது.

‘பெற்ற தாயை தற்கொலை வரை தூண்டிவிட்டு இனி எப்படி அவள் முகத்தில் விழிப்பேன்?’

சேலையை அப்பாவிடம் கொடுத்துவிட்டு ஊரைவிட்டே ஓடிவிட்டான் உமாபதி.




What’s your Reaction?
+1
9
+1
8
+1
0
+1
0
+1
0
+1
0
+1
3
Subscribe
Notify of
guest

0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!