ஒரு பக்கக் கதை

“ஹூ ஈஸ் தி பிளாக் ஷீப்” (ஒரு பக்கக் கதை)

“ச்சை!…இத்தோட இருபது இருபத்தியஞ்சு வரனுக்கும் மேல வந்தாச்சு…வந்த வேகத்திலேயே எல்லாம் திரும்பிப் போயாச்சு!… காரணம்…. “பொண்ணு கருப்பு”….  ஹூம்…எந்த செவுத்துல போய் நான் முட்டிக்கறது?” வீட்டிற்குள்  வரும்  போதே புலம்பிக்  கொண்டு வந்தார்  பொன்னுரங்கம்.




கூடத்தில் அமர்ந்து குத்து விளக்கைத் துடைத்துக் கொண்டிருந்த அம்பிகா, கூனிக் குறுகி, தாழ்வு மனப்பான்மையோடு தந்தையைக் கீழ்ப் பார்வை பார்த்தாள்.  “க்கும்…பார்க்கறதைப் பாரு…கரும்பூதம்!…அட்டைக்கரியாட்டமா பொறந்து தொலைச்சு எங்க உயிரை வாங்குது…சனியன்…சனியன்…இது கழுத்துக்கு ஒரு தாலி கொண்டார்றதுக்குள்ளார நான் போயிடுவேன் போலிருக்கு சுடுகாட்டுக்கு”

சாட்டையடி வார்த்தைகளைத் தாங்க முடியாமல், வேகமாய் எழுந்து உள் அறைக்குச் சென்று குலுங்கிக் குலுங்கி அழுதாள் அம்பிகா.

அப்போது, “அய்யா…அய்யா” என்று உரத்த குரலில் அழைத்தபடியே ஓடி வந்தான் ஆட்டுப்பட்டி சின்னான்.

“என்னடா?…எதுக்கு இப்படிக் கத்திட்டு வர்றே?” கோபத்தை அவன் மேல் காட்டினார் பொன்னுரங்கம்.

“அய்யா…நம்ம பெரிய ஆடு….குட்டி ஈனுடுச்சுங்க அய்யா!…மூணு குட்டிங்க!”

“அப்படியா?…என்ன நெறம்?” உடனே கேட்டார்.

“மூணுமே கருப்பு நெறமுங்க அய்யா”

“ஹா…ஹா…ஹா..”வெனச் சிரித்து சந்தோஷித்தார் பொன்னுரங்கம்.  “நல்லதாப் போச்சு…அடுத்த மாசம் கிடாவெட்டு வரப் போவுது….கருங்குட்டிகளைப் பலி கொடுத்தால்தான் கண் திருஷ்டி போகும்னு… ஜனங்க எல்லோரும் கருப்புக் குட்டிகளுக்காக அலைவாங்க!… அப்ப கருங்குட்டிகளுக்கு நல்ல கிராக்கியாயிடும்…. செமையா  வெலை  போகும்!”

“விருட்”டென்று தலையைத் தூக்கி, அறைக்குள்ளிருந்தவாறே தந்தையை வெறுப்போடு பார்த்தாள் அம்பிகா.




What’s your Reaction?
+1
2
+1
6
+1
0
+1
0
+1
0
+1
0
+1
1
Subscribe
Notify of
guest

0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!