Serial Stories குறளி வசியம்

குறளி வசியம் -10

10

அடுத்து வந்த நாட்களில் கோமளத்தம்மாளுக்கும், வள்ளிக்குமான நெருக்கம் அதிகமானது .
அதிகாலையிலேயே கோமளத்தம்மாளுக்கு முன்னதாக எழுந்திரிப்பதும் , எந்த வேலையையும் யாரும் சொல்ல வேண்டும் என்று எதிர்பார்க்காமல் தானாக இழுத்துப் போட்டுக்கொண்டு செய்வதும் , கோமளத்தம்மாளுக்கு வள்ளியை மிகவும் பிடித்துப் போய்விட்டது .

குறிப்பாக ; “வள்ளியின் அந்த சொக்க வைக்கும் சிரிப்பு” ” மயக்கும் விழிப்பார்வை” ” கிறங்க வைக்கும் வசீகரம்” இவை எல்லாம்  கோமளத்தம்மாளை அடிமையாக்கின என்றே சொல்லலாம் .

சமையல் அறையிலும் வள்ளியின் சாகசங்கள் ஆயிரமாயிரம், இதுவரை தன் வாழ்நாளில் உண்டு பார்த்திராத பட்சனங்களை எல்லாம் அந்த குழந்தை வெகு சுலபமாக சமைத்து.  ‘ மேலும் மேலும் ‘ தின்னத் தூண்டும் சுவையுடன் அந்த உணவை வள்ளி பரிமாறும் அழகே அழகு .

கோமளத்தம்மாளுக்கு  வள்ளியின் மீது ஒன்று இரண்டு சந்தேகங்கள் வராமலும் இல்லை;
குறிப்பாக சொல்வதானால் , இரவு நேரங்களில் வள்ளி என்ன ஆகிறாள் என்பது புரியாத புதிராகவே இருந்தது . கோமளத்தம்மாளுடன் சேர்ந்து படுத்துக்கொள்ளும் ‘ வள்ளி ‘ எப்பொழுது இரவு எழுந்தாலும் அருகே இருப்பதில்லை .எங்கே போனாள் என்று யோசிப்பதர்க்குள் அருகே படுத்திருப்பாள்.

ஏய் வள்ளி  ; “நீ எங்கே சென்றாய் ?”  என்று கேட்டால் பதில் ஏதும் சொல்லாமல் மலங்க மலங்க விழிப்பாள் .  அதானே ஊமைப் பெண்ணை பேச சொன்னால் எப்படி பேசுவாள் . இந்த எண்ணம் வந்தவுடன் கோமளத்தம்மாளுக்கு வள்ளியின் மீது இரக்கம் சுரந்து விடும் . மேற்கொண்டு கேள்விகள் எதுவும் கேட்பதில்லை.




அன்று’ தீபாவளிப் பண்டிகை’; காலையிலேயே எழுந்து வீடு முழுவதும் சுத்தம் செய்து பம்பரமாக சுற்றிக் கொண்டிருந்தாள் வள்ளி . தலைக்கு குளித்து ஈரத்தலையை துவட்டியபடி வந்தாள் கோமளா.

“ஏண்டியம்மா நீ குளிக்கலையா?”

                 கோமளாவின் கேள்விக்கு பதில் சொல்லாத வள்ளி அவளை கூர்ந்து பார்த்தாள் .அந்தப்பார்வை “நீதான் என்னை குளிக்க வையேன்” என்று அவளை அழைப்பது போலிருந்தது.

அய்யர் எத்தனை முறை “வருத்தி வருத்தி ” கூறியிருந்த போதும் அது அத்தனையும் கோமளாவின் நினைவில் இருந்து விடை பெற்றிருந்தது .

                ” நீ வாடி குழந்தை நான் உன் தலைக்கு ௭ண்ணெய் வச்சி குளிக்க வைக்கிறேன்” முதல்முறையாக வள்ளியின் கையை பிடித்து தன் அருகே அழைத்தாள் கோமளம்.

வள்ளியின் கையை தொட்டவுடன் ஓராயிரம் மின்னல்கள் உள்ளுக்குள் ஓடி மறைந்தன. ஏதோ ஓர் கட்டளைக்கு  கட்டுப்பட்டவள் போல் கை நிறைய எண்ணையை ஊற்றி வள்ளியின் தலையில் வைத்து தேய்க்க ஆரம்பித்தாள்.

ஏண்டியம்மா ; ” என்னது இது” உன்னோட தலையில ஏதோ தட்டுப்படுது.

‘ வள்ளியிடம் மௌனமான நமட்டுச் சிரிப்பு ‘தன்னுடைய தலையை குனிந்து கோமளாவிடம் காட்டி இருந்தபோதும் , விழியை உயர்த்தி அவளை பார்த்த பார்வை இருக்கிறதே ,
” அப்பப்பா ” அதை நேரில் பார்த்தால் தான் தெரியும்.

“இது ஏதோ ஆணி மாதிரி இல்ல இருக்கு” கையில் தட்டுப்பட்ட அந்த ஆணியை வெளியே உருவி எடுக்க முயற்சி செய்தாள்.

ஆணி வெளியே வருவதாக இல்லை . “எடு அந்த ஆணியை வெளியே எடுத்து விடு”  ஏதோ ஓர் வசிய குரல் கோமளாவின் காதுக்குள் ஒலித்துக் கொண்டிருந்தது. அந்தக் குரல் அவளுக்கு ஏதோ ஒரு சக்தியையும் தந்திருக்க வேண்டும், இல்லை என்றால் நிச்சயமாக அந்த ஆணியை அவளால் உருவி இருக்க முடியாது.

‘ஆம்’ அன்று அய்யர் அடித்த ஆணியை இன்று தன் கைகளால் உருவி வெளியே எடுத்தாள் கோமளம்.

அந்த ஆணியை வெளியே எடுத்த மறுநொடி  மறுநொடி என்று கூறும் கால அளவு கூட அதிகமாக இருக்கலாம். அதற்கும் குறைவான நேரத்திலேயே பளீரென்று மாபெரும் பிரகாசமான ஒளி கன நேரத்திற்கும் குறைவான தருணத்தில், அந்த ஒளியானது வானுக்கும் பூமிக்குமாக நிற்பது போல் ஒரு உணர்வு கோமளத்தம்மாளுக்கு ஏற்பட்டது. அடுத்த வினாடியே ‘பளீரென்று ஒரு அறை’. அதன்பிறகு நடந்த எதுவும் கோமளத்திற்கு தெரியவில்லை.

ஊர் ஜனங்கள் மொத்தமாக கூடியிருந்தனர்.”ஐயர் பொண்டாட்டியை” பேய் அடித்து விட்டது என்ற தகவல் காட்டுத்தீ போல் ஊர் முழுவதும் பரவியது.

‘அடியே கோமளா’ என்னைத் தெரியிறதா இது பக்கத்து வீட்டு பங்கஜம் மாமி.

மாமி நீங்க இங்கிட்டு வாங்கோ.

‘ மன்னி நான் கிரிஜா வந்து இருக்கேன், என்னையாவது தெரியுதான்னு சொல்லுங்கோ’…

உடம்பு சரியில்லாத பொம்முனாட்டிய இப்படி கட்டில்ல படுக்க வச்சிட்டு எல்லாரும் காத்து கூட விடாம சுத்தி நின்னுகிட்டா  எப்படி? உரக்கக் குரல் கொடுத்தவர் மாதவன் மாமா.

ஏண்டா அம்பி ,இவ்வளவு சத்தத்துக்கு இடையிலும் கொஞ்சமும் அசைவில்லாமல் இருக்கிறாலே டா நேக்கு என்னமோ ரொம்ப பயமா இருக்கு எதிர்வீட்டு பாட்டியின் புலம்பல்.

பாட்டியின் கூற்று முற்றிலும் உண்மைதான். சுற்றிலும் இவ்வளவு கலவரம் நடந்த போதும் அது குறித்து எதுவும் அறியாதவளாய் கிழித்துப் போட்ட வாழை நார் போல் கட்டிலில் கிடந்தாள் கோமளம்.

கோமளத்தின் ஒரு புற முக வாய் முழுவதும் குண்டாக வீங்கியிருந்தது. அந்த பகுதியில் உதடு கிழிந்து ரத்தம் கோடாக வழிந்தபடி இருந்தது. கன்னத்தில் ஏற்பட்ட வீக்கத்தால் கண் சுருங்கி உள்ளே அமுக்கி போய் கிடந்தது .சிறுத்துப் போய் கிடந்த கண்ணை பார்க்கும் பொழுது ஒரு வேளை கண் இருக்கிறதா அல்லது இல்லையா என்று சந்தேகப்படும் படியாக இருந்தது.




விழிகள் நிலைத்து வீட்டின் உதிரத்தை வெறித்தபடி இருந்தன. விழி பாவைகள் மட்டும் இங்கும் அங்கும் ஆடிக் கொண்டிருந்தது. ஒரே ஒரு நல்ல விஷயம் சுவாசம் சீராக இருந்தது. உயிருக்கு எந்த ஆபத்தும் இல்லை.
இதை நாடி பிடித்துப் பார்த்த வைத்தியரும் சொல்லிவிட்டுச் சென்றுவிட்டார் .ஆனால், பேய் அடிப்பதற்கு எல்லாம் நான் என்ன மருந்து தருவது இதற்கெல்லாம் என்னிடம் வைத்தியம் இல்லை. நீங்கள் ஐயருக்கு தகவல் கொடுங்கள் என்று கூறிவிட்டுச் சென்றுவிட்டார்.

வைத்தியர். சொல்வது சரிதான் எதுவானாலும் முதல்ல ஐயருக்கு தகவல் கொடுங்க கூட்டத்திற்குள் ஒருவருக்கொருவர் இதே விஷயத்தை மாறிமாறி சொல்ல ஆரம்பித்தனர்.

ஆளாளுக்கு பேசிக்கொண்டே இருந்தால் எப்படி, எப்பா உடனே வேலைய பாருங்க மீண்டும் மாதவன் மாமாவின் அதட்டல் அந்த அதட்டலுக்கு கட்டுப்பட்டுு  கூட்டத்தில் ஒன்று இரண்டு  சிறுசுகள் காரியத்தில் இறங்கினார்.

தொலைபேசி மூலமாகவும், நேரடியாக ஆட்களை அனுப்பியும் அய்யரை தேடும் பணி துரித படுத்தப்பட்டது. அவர்களுக்கு அதிக சிரமம் வைக்காமல் சரியாக அதே நேரத்தில் பேருந்திலிருந்து சொந்த ஊர் இறங்கினார் ஐயர்.

“அத்திம்பேர் வந்துட்டேளா” ‘ உங்கள தேடி தான் வந்திருக்கிறோம்’.  நீங்களே இங்க வந்துட்டேல். எல்லாம் அந்த பகவான் அனுக்கிரகம் தான்.

“என்னடா கிட்டு ,என்ன சொல்ற நீ”? எதுக்கு என்ன தேடிட்டு வார?.

எதுவானாலும் வீட்டுக்குப் போய் பேசிக்கலாம் அத்திம்பேர், முதல்ல வீட்டுக்கு வாங்கோ.

கிருஷ்ணய்யரின் உள்ளம் படபடக்க ஆரம்பித்தது. “கிட்டு, ஏதாவது பிரச்சனையா டா”?

பெருசா பிரச்சினை எதுவும் இல்லை, ஆனா மாமிதான்..

யாருடா கோமளாவா ஏன் அவளுக்கு என்ன ஆச்சு?  சட்டுனு சொல்லித் தொலைடா தடியா .ஆத்திரத்தில் கையை ஓங்கி விட்டார் ஐயர்.

அத்திம்பேர் அவாளுக்கு எந்த ஆபத்தும் இல்லை. ஆனால், நீங்கள் இல்லாத போது ஏதோ பேய் வந்து அவரை அடித்து விட்டதாகச் சொல்கிறார்கள். நீங்களே போய் பாருங்கோ.

வாரிச் சுருட்டிக் கொண்டு வீட்டை நோக்கி ஓட ஆரம்பித்தார் ஐயர்.

“எப்படி எப்படி ‘நடந்தது இது .நான் எல்லாவற்றையும் பார்த்துப் பார்த்து செய்துவிட்டு தானே வந்தேன். வீட்டிற்குள் மகாகாளி, மந்திர தகடு இருந்தது .குலதெய்வம் சூலம் அத்தனையும் என்ன ஆயிற்று?

முட்டாள் முட்டாள் தன் தலையில் தானே தட்டிக் கொண்டார்.  வீட்டிற்கு உள்ளேயே குறளியை வைத்துக்கொண்டு உன் வீட்டை சுற்றி சுற்றி பாதுகாப்பு கட்டுப் போட்டாயே, அந்த மகாகாளி எந்திரத்தை கோமாளாவின் கழுத்தில் தொங்க விட்டு இருக்கலாமே செய்தாயா? கோமளாவை சுற்றிலும் சஷ்டி கட்டு போட்டிருக்கலாம். சஷ்டி கட்டை மீறி என்ன கிழித்து விடும் இந்த குறளி.




ஆம் ,இப்பொழுது வாய்கிழிய பேச. அப்பொழுது, கோட்டை விட்டு விட்டாயே. ஆயிரம் தான் இருந்தாலும் குறளியும் சிறு தெய்வம் தான் என்பதை எப்படி மறந்தேன். பேசாதே ஓடு ஓடு தன்னைத்தானே திட்டிக் கொண்டும் துரிதப் படுத்திக் கொண்டும் ஓட்டமாய் ஓடினார் ஐயர்.

வீட்டிற்குள் நுழைந்ததும் திபுதிபுவென்று பூஜை அறையை நோக்கி ஓடினார் .அங்கு இருந்த மகாகாளி மாந்திரீக எந்திர தகட்டை கையில் எடுத்துக்கொண்டு, தன் குலதெய்வத்தை அர்ச்சித்த தீர்த்தத் தோடு கோமளாவை நெருங்கினார்.

தீர்த்த நீர் மேலே தெளிக்கப்பட்டு எந்திர தகடு கையில் கட்டப்பட்ட சில நிமிடங்களுக்குள் கோமளாவின் உடம்பில் அசைவுகள் தெரிந்தன.

சில நிமிட நேரத்தில் உள்ளாகவே பூரணமான சுகம் பெற்றாள் அவள்.

“ஏன்னா, நீங்க ஊர்ல இருந்து வந்துட்டேளா?” இப்போதான் வந்தேளா? செத்த இருங்கோ, காபி போட்டுட்டு வாரேன் துள்ளிக் கொண்டு அடுக்களைக்குள்  ஓடினாள்.

நிம்மதி பெருமச்சோடு  நாற்காலியில் அமர்ந்தார் ஐயர்.

“ஏன்னா ,இந்த வள்ளி பொண்ணு இல்ல ;அவ மாயமாய் மறைந்து விட்டான்னா!!!!!;

“எல்லாம் ஊர்க்கார சொன்னா” எல்லாத்துக்கும் காரணம் “சங்கரராமன்” . அவன்தானே இந்தப் பொண்ணை அனுப்பி வச்சான் விடு, நாளைக்கு நான் அவனைப் பேசிக்கிறேன் மனைவியை சமாதானப் படுத்தும் நோக்கத்தோடு பேசினார் அய்யர்.

அப்போது வாசலில் “ஏய் கிருஷ்ணா, என்னடா ஆச்சுுஞ உன் ஆத்துக்காரிக்கு? என்னமோ பேய் அடிச்சிருச்சுன்னு  ஊர் முழுவதும் பேசிட்டு இருக்குறா?” கேட்டபடி உள்ளே நுழைந்தார் சங்கர்ராமன்.

இனி தப்பிப்பதற்கு வழி இல்லை என்ற நிலையில் , நடந்த விஷயம் அத்தனையும் மனைவியிடம் ஒப்புவிக்க ஆரம்பித்தார் ஐயர்.. பிறகென்ன “கோவை சரளாவிடம் மாட்டிக்கொண்ட வடிவேலுவின்” நிலமைதான் நம் ஐயரின் நிலைமையும்” . ஐயரை காப்பாற்றும் மன தைரியமுள்ள ‘ தைரியசாலி ‘  உங்களில் யாராவது இருக்கிறீர்களா? எனக்கு அந்த தைரியம் இல்லை, ‘நான் அம்பேல் ‘.

பின்குறிப்பு:
நண்பர்களே, சில உண்மை சம்பவங்களின் அடிப்படையில் தான் நான் இந்தக் கதையை எழுதி இருக்கிறேன். இதை நான் எழுதியதன் நோக்கம் ‘துஷ்ட சக்திகள்’ மீது நாம் வைக்கும் நம்பிக்கையானது எப்பொழுதும் நமக்கு எதிரானதே. எப்பொழுதும் எல்லாம் வல்ல இறைவனை மட்டும் நம்புவோமாக. அனைவரும் எல்லா வளமும் பெற்று வாழ நான் இறைவனை வேண்டுகிறேன்.

                                                                                            #*நிறைந்தது*#




What’s your Reaction?
+1
3
+1
8
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
Subscribe
Notify of
guest

0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!