Serial Stories அன்பெனும் ரகசியம்

அன்பெனும் ரகசியம்-12

 12

இன்ஸ்பெக்டரும் கான்ஸ்டபிளும் தன் கடையை நோக்கி வருவதைப் பார்த்து விட்ட கடைக்காரன், கல்லாவிலிருந்து வெளியே வந்து, “வாங்க சார்!… என்ன சாப்பிடறீங்க… டீயா?… காஃபியா?… ஜூஸா…?” கேட்டான்.

அவனுக்கு எந்த பதிலையும் சொல்லாத இன்ஸ்பெக்டர், “கான்ஸ்டபிள் உள்ளார போய் சர்ச் பண்ணு… ஏதாச்சும் வித்தியாசமா தெரிஞ்சா சொல்லு” என்று ஆணையிட்டு கான்ஸ்டபிளை உட்புறம் அனுப்பி விட்டு, கல்லா டேபிளுக்கு தான் வந்தார்.

 “சார்… என்ன சார்… என்ன தேடறீங்க?” கடைக்காரன் பரபரத்தான்.

 “ஸ்ஸ்ஸ்… கொஞ்சம் நேரம் அமைதியாயிருந்து” என்று அவனை அதட்டி அமைதியாக்கி விட்டு, கல்லா டேபிளிலும், அங்கிருந்த மற்ற கப்போர்டுகளையும், வார்ட்ரோப்களையும் ஆராய்ந்தார்.

அப்போது ஒரு பிளாஸ்டிக் ட்ரேயில் பாக்கெட் செய்யப்பட்ட உணவுகளை அடுக்கிக் கொண்டு ஒருவன் வெளியேற,

வெளியே நின்றிருந்த சரவணன் ராஜய்யனின் தொடையைக் கிள்ளினான்.

“என்னப்பா… என்ன பிரச்சினை உனக்கு?”

“அந்தப் பொட்டலத்திலிருந்துதான் வாசனை வருது” என்றான்.

“ஓ…” என்றபடி இன்ஸ்பெக்டரிடம் வந்த ராஜய்யன் அந்த விஷயத்தைக் காதோடு சொல்ல, மேலும் கீழும் தலையாட்டிய இன்ஸ்பெக்டர் துரை, “இந்தப்பா… அந்த ட்ரேயை இங்கே வை” என்றார்.

கடைக்காரன் பதட்டமாய் ஓடி வந்து, “சார்… இதெல்லாம் காலேஜ் பக்கத்துல இருக்கற எங்க மெஸ்ஸுக்குப் போயிட்டிருக்கு சார்!… டைம் வேற ஆச்சு சார்… லேட்டாப் போனா பசக ரகளை பண்ணுவாங்க சார்” என்றான்.

 “ஓ… அப்படியா?… ஆமா… அந்த மெஸ்ல வியாபாரம் எப்படி போகுது?” இன்ஸ்பெக்டர் கேட்க,

 “ம்… நல்லாவே போகுது சார்” சந்தோஷமாய்ச் சொன்னான் கடைக்காரன்.

 “அப்படியா?… அது செரி… அந்தக் காலேஜ்ல ஹாஸ்டல் பசங்களுக்கு ஹாஸ்டலுக்குள்ளாரவே மெஸ் இருக்கு!… மத்த பசங்களுக்கு காலேஜ் கேண்டீன் இருக்கு… அப்புறம் எப்படி காலேஜுக்கு வெளிய இருக்கற உன்னோட மெஸ்ஸுக்கு பசங்க கூட்டம் வருது?…” கண்களைக் கோபமாய் வந்து கொண்டு கேட்டார் இன்ஸ்பெக்டர்.

 “சார்… அது வந்து டேஸ்ட்தான் காரணம்… ஹாஸ்டல் மெஸ்ஸிலும், காலேஜ் கேண்டீனிலும் சாப்பாடா சார் போடறானுக?… வாயில வைக்க முடியாதாம்… அதான் பசங்க எங்க மெஸ்ஸுக்கு வந்திடறானுக!… எங்க மெஸ் நல்லா நீட்டாகவும், சாப்பாடு டேஸ்ட் பிரமாதமாகவும் இருக்கும் சார்”. 




 “அப்படியா?… எங்கே பார்க்கலாம்!” என்று சொல்லி அந்த பிளாஸ்டிக் டிரேயிலிருந்து ஒரு பாக்கெட்டைக் கையிலெடுத்தான் இன்ஸ்பெக்டர்.

பதறிப்போன கடைக்காரன், “சார்… அதை அங்கியே வெச்சிடுங்க… உங்களுக்கு டேஸ்ட் பாக்கறதுக்கு உள்ளேயிருந்து வேற பாக்கெட் கொண்டு வரச் சொல்றேன்!”  என்று சொல்லி விட்டு, உள்பகுதியைப் பார்த்து, “டேய்… சாருக்கு ஒரு சாப்பாடு பாக்கெட் கொண்டு வாங்கடா” என்றான் கத்தலாய்.

 “இல்லை… இல்லை… இதையே டேஸ்ட் பார்க்கிறேனே?”

 “வேண்டாம் சார்” அவரருகில் வந்து அவர் கையிலிருந்த பாக்கெட்டைப் பறிக்க முனைந்தான் கடைக்காரன்.  கோபமான இன்ஸ்பெக்டர் அவனை ஒரே தள்ளாய்க் கீழே தள்ளி விட்டு, அவசர அவசரமாய் அந்த சாப்பாட்டு பாக்கெட்டைப் பிரித்து விரலை உள்ளே விட்டுத் தேடினார்.

வெண்மை நிறத்தில் பவுடர் போன்றவொரு வஸ்து நிறைக்கப்பட்ட, சின்னச் சின்ன பாலீதீன் பாக்கெட்டுகள் இரண்டினை வெளியே எடுத்தார்.  தலையைத் தூக்கி கடைக்காரனைப் பார்த்து முறைத்து விட்டு, அந்தப் பாக்கெட்டின் ஓரத்தில் சின்னதாய்க் கிழித்து உள்ளே இருந்ததை, கொஞ்சமாய் நாக்கில் வைத்துப் பார்த்தார்.

 “ராஸ்கல் போதைப் பொருள் கடத்தற வேலையை போலீஸ் ஸ்டேஷனுக்கு எதிரிலேயே செஞ்சிட்டிருக்கேன்னா… உனக்கு எத்தனை தைரியமிருக்கணும்!…” கத்தலாய்ச் சொல்லியவாறே எழுந்து கடைக்காரன் கன்னத்தில் இரண்டு பேயறைகளை வழங்கினான்.

அவன் தப்பியோட முயல, அவர் சட்டையைக் கொத்தாகப் பற்றி, “வாடா ஸ்டேஷனுக்கு” என்றபடி “தர… தர”வென்று இழுத்துச் சென்றார்.

அந்த டிரேயைத் தூக்கிக் கொண்டு அவரைப் பின் தொடர்ந்து வந்தார் கான்ஸ்டபிள்.

லாக்கப்பில் அவனை அடைத்து விட்டு, ராஜய்யனிடம், “யோவ்… நீ சொன்னது உண்மைதான்யா… இந்தப் பயல் உண்மையிலேயே ஒரு அதிசயப் பிறவிதான்யா!… பாரேன் இங்க ஸ்டேஷனுக்கு எதிரிலேயே வெச்சு போதை மருத்துக் கடத்தல் பண்ணியிருக்காங்க!,… என்னால இத்தனை நாளா மோப்பம் பிடிக்க முடியலை!… இவன் ஒரு மணி நேரத்துல கண்டு பிடிச்சிட்டானே!” என்ற இன்ஸ்பெக்டர் துரை சரவணனை அருகில் அழைத்து முதுகில் தட்டிக் கொடுத்தார்.

 “எதிர்காலத்துல எங்க டிபார்ட்மெண்ட்ல சேர்ந்தான்னா… பெரிய லெவலுக்கு வருவான்!.. சி.பி.ஐ. வரைக்கும் போவான்”

 “சார்… சித்தி கொடுமைக்கு பயந்து என் கூட வந்து ஒட்டிக்கிட்டிருக்கான் சார்!… அவனோட எதிர்காலத்தை நீங்கதான் சார்… நல்வழிப்படுத்தனும்!.. நான் ஒரு கூலிக்காரன் என்னால இவனையும் ஒரு கூலிக்காரனாத்தான் ஆக்க முடியும்!… ஆனா நீங்க நெனச்சா இவனுக்கு ஒளி மயமான எதிர்காலத்தைக் குடுக்க முடியும் சார்” சரவணனுக்காக கெஞ்சினான் ராஜய்யன்.

 “ம்ம்ம்… ஓ.கே.. இங்க நிறைய அமைப்புக்கள் ஏழை மாணவ மாணவிகளுக்கு கல்வியுதவி பண்ணிட்டிருக்காங்க… அதில் மெம்பர்ஸா இருக்கற சில வி.ஐ.பி.க்கள்  பல மாணவர்களோட மொத்தக் கல்விக்கும் ஸ்பான்சர் பண்ணிட்டு இருக்காங்க!… அப்படியொரு ஸ்பான்சர் கிட்ட நம்ம பையனையும் ஒப்படைக்க நான் ஏற்பாடு பண்றேன்” என்றார் இன்ஸ்பெக்டர் துரை. 

மனம் நிறைந்த மகிழ்ச்சியோடு அங்கிருந்து கிளம்பினார்கள்.  “ஹும்… நல்ல மனிதர்களை அடையாளம் காண சில மோசமான மனிதர்களைக் கடந்துதான் ஆக வேண்டும் போலிருக்கு” மனதிற்குள் நினைத்துக் கொண்டான் ராஜய்யன்.




****

காலை பதினோரு மணியிருக்கும்.

தன் மொபைலைக் குடைந்து கொண்டிருந்த இன்ஸ்பெக்டர் துரை, கோயமுத்தூரிலிருந்து வந்த அந்த செய்தியையும், அதனுடன் இருந்த புகைப்படத்தையும் பார்த்து சுறுசுறுப்பானார்.

 “படத்தில் உள்ள சிறுவன் பெயர் சரவணன்.  கோவையைச் சேர்ந்த இவன் கடந்த பதினைந்து நாட்களாக் காணவில்லை. வீட்டில் பெற்றோருடன் கோபித்துக் கொண்டு வீட்டை விட்டு ஓடிப் போய் விட்டதாய் தகவல். மேற்படி சிறுவன் புகைப்படம் எல்லா ஸ்டேஷன்களுக்கும் அனுப்பப்பட்டுள்ளது.  சிறுவன் பற்றி ஏதாவது தகவல் தெரிந்தால் கோவை கண்ட்ரோல் ரூமைத் தொடர்பு கொண்டு தெரிவிக்கவும்”

பக்கத்திலுள்ள புகைப்படத்தையே சில விநாடிகள் கூர்ந்து பார்த்து விட்டு, கான்ஸ்டபிளை அழைத்தார்.  “கான்ஸ்டபிள் இந்தப் படத்திலுள்ள சிறுவன் கோயமுத்தூர்ல மிஸ்ஸிங்காம்… உனக்கு இவனை எங்காவது பார்த்த மாதிரி இருக்கா?” கேட்டவாறே அந்த புகைப்படத்தைக் காட்டினார் இன்ஸ்பெக்டர் துரை.

பார்த்த உடனேயே சொன்னார் கான்ஸ்டபிள்.  “சார்… இவன் அந்த போதை மருந்துக் கடத்தல் கும்பலை நமக்குக் கண்டுபிடித்துக் குடுத்த சரவணன் சார்!… ராஜய்யனோட உறவுக்காரப் பையன் சார்”

 “அதான் இல்லை… ராஜய்யன் பொய் சொல்லியிருக்கான்!… இந்தப் பையன் வீட்டுல கோவிச்சுக்கிட்டு வீட்டை விட்டு வெளியேறி தெருவுல சுத்திக்கிட்டிருந்திருக்கான்… ராஜய்யன் இவனைப் பார்த்திருக்கான்… பார்த்தவுடன் பையன் சாதாரணப் பிறவியில்லைன்னு தெரிஞ்சுக்கிட்டான்!…அதான் ராஜய்யனும்… அவனோட அக்காவும் இந்த மந்திர தந்திர விஷயங்கள்ல ஊறினவங்களாச்சே!… “சரி… பையனை நைஸாப் பேசி கூட்டிட்டு வந்திட்டா… இவனை வெச்சு நெறைய விஷயங்களைச் சாதிக்கலாம்!னு நெனச்சு… ராஜய்யன் பையனைக் கடத்திட்டு வந்திருக்கான்!… இவன் பையனைக் கடத்திட்டு வந்த விஷயம் தெரிஞ்சுதான் இன்னொரு மந்திரவாதியும் அவனோட கூட்டாளியும் இந்த ஊருக்கு வந்து ஊருக்கு வெளிய பாழடைஞ்ச வீட்டுல வெச்சு மாந்திரீக வேலைகளைப் பண்ணியிருக்கான்!.,.. பையனை யார் வெச்சுக்கறதுங்கற போட்டிலதான் ரெண்டு பேரும் சண்டை போட்டொருக்காங்க!…. என்னுடைய யூகம் சரியாயிருந்தால் நிச்சயம் இதுதான் நடந்திருக்கணும்!” மூச்சு விடாமல் பேசி முடித்தார் இன்ஸ்பெக்டர் துரை. 

 “சார்… அந்த ராஜய்யன் சொல்லும் போது அந்த மந்திரவாதி இவன் கிட்ட இருக்கற ஒரு குட்டிச் சாத்தானை அடிச்சிட்டுப் போகத்தான் இந்த ஊருக்கு வந்ததா சொன்னானே?”

 “சுத்தமான பொய்… அவன் அடிச்சிட்டுப் போக வந்தது குட்டிச் சாத்தானை அல்ல…அந்தக் குட்டிப் பையனை!”

 “அப்படின்னா இந்த ராஜய்யன் நல்லவனில்லையா சார்?… “கான்ஸ்டபிள் கேட்க,

“அவன் நல்லவனா… கெட்டவனா?ன்னு அந்தப் பையனை அவன் பயன்படுத்தற முறைலதான் இருக்கு!… இட்ஸ் ஓ.கே… அதைப் பத்தி நாம அப்புறம் பேசுவோம்!… மொதல்ல இந்தப் பையன் இங்கிருக்கற விஷயத்தை கோயமுத்தூர் கண்ட்ரோல் ரூமுக்குத் தெரிவிக்கணும்” என்றார் இன்ஸ்பெக்டர் துரை.

 “ஓ.கே.சார்… நான் இன்ஃபார்ம் பண்ணிடறேன் சார்”




 

What’s your Reaction?
+1
6
+1
10
+1
0
+1
1
+1
0
+1
0
+1
0
Subscribe
Notify of
guest

0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!