Short Stories sirukathai

பார்வைகள் மாறலாம் (சிறுகதை)

அன்று கிருஷ்ண ஜெயந்தி அந்த தெருவில் இருந்த வீடுகளில் எல்லாம் பட்சண வாசனையும், பூ வாசனையும் கலந்து பரிமளித்துக்கொண்டு இருந்தது. கண்ணன்
பாடல்கள் ஒலித்துக்கொண்டு இருந்தன. வீடுகள்தோறும் கோலமிட்டு குட்டிப்பாதங்கள் வரைந்து சுட்டிக்கண்ணனை வரவேற்றனர். சில வீடுகளில் சின்ன குழந்தைகளுக்கு கண்ணன் அலங்காரம் வேறு. மொத்தத்தில் கிராமமே கோகுலமாக  மாறியிருந்தது.

அங்கு ஒரு வீட்டில் …“இந்தா .….ஒவ்வொருவருக்கும் நான் கொடுக்கும் இந்த
பக்ஷணத்தை கொடுத்து விட்டு வா ” பத்து வயசு சிறுவன் பாலுவிடம் சொன்னாள்
அம்மா.

“ஏம்மா ….. காலையில் கொடுத்தால் என்ன.”

“கிருஷ்ண ஜெயந்தி சாயங்காலம்தானே. இப்போ பூஜை பண்ணிய உடனே கொடுத்தால்தான் ஒரு சந்தோஷம். ஏழெட்டு வீடுகள்தானே. கொடுத்துட்டு
வாப்பா ப்ளீஸ்.

“காலில் சக்கரம் கட்டின மாதிரி ஒரே ஓட்டம்தான். ஓடாமல் நடந்து போ”. அம்மா  போட்டு கொடுக்க, கொடுக்க அக்கம் பக்கத்து வீட்டு நண்பர்களுக்கு கொடுத்து வந்தான். தெரு முனையில் இருந்த கிராமத்து சிறிய மளிகை கடைக்கும் வந்தான்.

கடை வாசலில் கம்பத்தில் மாட்டியிருந்த போர்டை பார்த்துவிட்டு காற்று அடித்தால் காசு கொடுக்கவும்  வேண்டுமென்றே போர்டை திரும்பவும் ஒருமுறை படித்தான் . கடையின் ஒரு மூலையில் சைக்கிளுக்கு காற்று அடிக்கும் பம்ப் சார்த்தி வைக்கப்பட்டு இருந்தது .

“பாய்….. எத்தனை முறை சொல்லி விட்டேன்; இதை மாத்தி எழுதுங்கன்னு …..
கேட்க மாட்டீங்களே ? “

“ஏன் மாத்தணும் ? “

“பின்னே…. சைக்கிளுக்கு காற்று அடித்தால் என்று சரியாக எழுத வேண்டாமா ? இல்லாட்டி ஒரு சைக்கிள் படமாவது ஒட்டலாமில்லையா. அப்புறம் இதை படிக்கறவங்க என்ன நினைப்பாங்க ?”




“என்ன நினைப்பாங்க ?”

“புளியமரத்தடியன் கடையில நிக்கும்போது காற்று அடித்தால் காசு கொடுக்கணும். மழை பெய்தால் என்ன ஆகுமோ, என்று ஊருக்குள்ள ஒரு பேச்சு வந்துடாது ?” என்றான் நமுட்டு சிரிப்புடன்.

“எதுக்கு காசு கேட்கறீங்க. நீங்க என்ன சைக்கிள் வாடகைக்கு விடும் கடையா நடத்துறீங்க. கறாராக காசு கேட்பதற்கு. உங்க மளிகை கடைக்கு வரவங்களுக்கு இது ஒரு உதவியாக இருக்கட்டுமே. காற்று என்ன நீங்க காசு கொடுத்து வாங்கி  வைத்து இருக்கும் மளிகை சாமானா? தேவைப்படுபவர்கள் தானே பம்ப் வைத்து காற்று அடித்துக் கொள்ளப் போகிறார்கள். அதுவும் ஒரு வகை தர்மம்தான் . யோசிங்க பாய் ”

“ஹே …. அதிருக்கட்டும் . அதென்ன சந்தடி சாக்கில புளியமரத்தடியன் கடை கிண்டலா பண்ணுற .

“பின்னே புளிய மரத்துக்கு பக்கத்தில கடை கட்டி இருக்கீங்க. அது புளியமரத்தடிக்கடை தானே. கடைக்காரர் நீங்க “புளியமரத்தடியன்”.

“நீ என்னை “தடியன்” னு கிண்டலா பண்ணுற . இரு …. இரு …. உன் அண்ணா
கிட்ட சொல்றேன்.”

“அதெல்லாம் அண்ணா கண்டிக்க மாட்டார். ”

“அதெப்படி அவ்வளவு தீர்மானமாக சொல்கிறாய்.”

“அண்ணன் காதுக்கே இந்த விஷயம் போகாது. கடைக்கார “பாய்”அண்ணன் நீங்க சும்மாதான் சொல்றிங்க. எனக்கு தெரியாதா ?

“சரி …. சரி…. இந்தாங்க கிருஷ்ண ஜெயந்தி பக்ஷணம். சாப்பிடுங்க”

“இல்லப்பா. நீங்க சாமிக்கு பூஜை பண்ணியதை, நான் சாப்பிட மாட்டேன்.”

“ஏன் பாய் அப்படி நினைக்கிறீங்க. கொஞ்சம் மாத்தி யோசிங்க . நாங்க உங்க கடையில வாங்கிய அரிசி, பருப்பு , வெல்லம், எண்ணெய் என்று அதில்தானே
பக்ஷணம் செய்தோம். நாங்க சாப்பிடவில்லையா.”

“அது வியாபாரம் தம்பி”.

“ஓ….. நான் உங்களை பாய் என்று அழைப்பது அண்ணனாக நினைத்துதான். இப்போதும் பிரியமாக அண்ணனுக்கு என்றுதான் பக்ஷணம் கொண்டு வந்தேன். ஆனால் நீங்க பூஜை என்று மறுக்கிறீர்கள். பசங்க நாங்க பேதம் பார்க்காமல் பிரியமாக இருந்தாலும் நீங்க விட மாட்டிங்க போலிருக்கே. எந்த ஒரு விஷயமும் நாம பார்க்கிற விதத்தில்தான் இருக்கு.
எல்லாத்துக்கும் நம்ம மனசுதான் காரணம். நம்முடைய எண்ணங்களைப் பொறுத்துதான் நமது செயல்களும் அமையும். பரஸ்பர உதவி, விட்டுக்கொடுத்தல், சகோதரத்துவம், ஒற்றுமை எல்லாம் வார்த்தைகளில் இருந்தால் போதாது. கடைப்பிடிக்க வேண்டும். அதை புரிந்து கொள்ளுங்கள்” சட்டென்று கடையை விட்டு நகர்ந்தான்.

“ஹே …. எப்போதும் வாங்கிக் கொள்ளும் பொட்டுக்கடலையை மறந்து  விட்டாயே. இந்தா”….. பாய் குரல் கொடுத்தார்.

“வேண்டாம் கடைக்காரரே . சின்னப்பசங்க நாங்க கடைக்கு வரும்போதெல்லாம் பொட்டுக் கடலை, வெல்ல சக்கரை கொடுக்கறீங்களே. நான் அதை பாசம்னு
நினைத்தேன். அப்படி இல்லையோ. அதுவும் வியாபார தந்திரம்தானா ?
இப்போதான் புரியுது”

“எனக்கு பொட்டுக்கடலை வேணும்னா காசு கொடுத்து வாங்கிக்கறேன் கடைக்காரரே” அழுத்தமாக சொல்லி விட்டு கிளம்பி விட்டான் பாலு.

துடுக்குத்தனமாக இருந்தாலும் சிறுவனின் வெளிப்படையான பேச்சில் கடைக்காரர் அதிர்ந்துதான் போனார். கொஞ்சம் வலிக்கத்தான் செய்தது. சின்னப் பையன்  வார்த்தைகளில் வித்தியாசம் கொண்டு எப்படி சொல்லி விட்டான். யார் இவன் ; பழகிய பாலு பையனா அல்லது பையன் உருவில் வந்த பால கிருஷ்ணனா ? அவன் சொல்வதிலும் அர்த்தம் இருக்கிறதோ. கொஞ்சம் விட்டு கொடுக்கலாமோ ….. யோசிக்க ஆரம்பித்தார் கடைக்காரர்.

*****




What’s your Reaction?
+1
20
+1
17
+1
1
+1
0
+1
5
+1
1
+1
0
Subscribe
Notify of
guest

0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!