Short Stories

அப்பா ‘ஐ லவ் யூ’ (சிறுகதை)

 பேருந்தின் இருக்கையில் நான் பின்புறமாக சாய்ந்து கொண்டேன். தூக்கம் வரவில்லை; ஆனாலும், கண்களை இறுக மூடிக்கொண்டேன்.  காலையில் அம்மா போன் செய்திருந்தார்கள், ” அப்பாவை ஒரு முறை கடைசியாக வந்து பார்த்துவிட்டு போய் விடப்பா”;   “கடைசியாக ” அந்த வார்த்தை என்னை ‘சுற்றி சுற்றி ‘வந்து கொண்டிருந்தது. இதயம் கனத்தது இமைகளை பிரிப்பதில் பிரியமில்லை.  என் நினைவுகள் என்னிடம் இருந்து வழுக்கிக்கொண்டு 15 ஆண்டுகளுக்கு பின் நோக்கி பயணிக்க ஆரம்பித்தது.

இயற்கையிலேயே என் அப்பா மிகவும் திடகாத்திரமானவர். அவருடைய கம்பீரமும், கட்டுறுதியான உடலும் எங்களுடைய ஊர் முழுவதும் பிரசித்தமானது. எனக்கெல்லாம் என் அப்பாவின் அருகில் நின்று பேசவே பயம். ஆனால், அன்று நான் என் அப்பாவிடம் சரிக்குச் சரி பேசினேன்.” நான் சொல்றது உனக்கு புரியலையா”? இது வேண்டாம்னா வேண்டாம் தான்….. என்னோட  முடிவை யாராலும் மாற்ற முடியாது. வேற ஏதாவது வேலை இருந்தா பாரு; உறுதியுடன் ஒலித்தது அப்பாவின் குரல்.

“நான் உங்களுடைய மகன் தான். என்னுடைய முடிவையும் யாராலயும் மாற்றிவிட முடியாது”. நானும் அப்பாவை விடுவதாக இல்லை.இங்கே பார் உனக்கு உலகம் தெரியாது,  சொன்னாலும் புரியாது,  நான் உனக்கு நல்லதைத் தான் சொல்றேன். உன் வாழ்க்கை கஷ்டமாக மாறிவிடும் , பருவ வயதின் கிறுக்கில் உளறாதே.

எனக்கும்  அப்பாவிற்கு நடந்த விவாதத்தில் கருப்பொருளாய் இருந்தது யார் தெரியுமா? “சந்திரா” அன்றைய தேதியில் சந்திரா தான் எனக்கு எல்லாமே.

அன்றைக்கெல்லாம் அவளை நான் காணும் பொழுது என் உடலில் உள்ள ஒட்டுமொத்த செல்கள் விழித்துக் கொண்டு குதியாட்டம் போடும் . “பசும்பொன்ணை கரைத்து உருக்கி வெள்ளியுடன் கலந்து வார்த்து எடுத்தது போன்ற ஒரு நிறம் அவளுக்கு”. அவள் எவ்வளவு அழகு தெரியுமா? “தேன் ஊரும் இதழ்கள் அவளுடையது, அவள் நடக்கும் நடை அழகைக்கண்டு தான் நான் என்னை தொலைத்தேன். அவளின் உடல் வளைவுகள் மிகவும் அபாயகரமானது”. அந்த வளைவுகள் தான் என்னை  இப்படி பித்து பிடிக்க வைத்தது. அவள் பேசும் பொழுது ஏதோ ஒரு காந்த சக்தி இருக்க வேண்டும் என்ன ஒரு மயக்கும் வசீகரம்  இத்தனை பெரிய அழகிற்காக எத்தனை முறை வேண்டுமென்றாலும் அப்பாவுடன் சண்டை போடலாம்.

அப்பா….” காதல் புனிதமானது”! அது ஏன் உங்களுக்கு புரிய மாட்டேன் என்கிறது?

அப்ப, நீ வீணா போகாமல் அடங்க மாட்ட?

இல்லைப்பா அவளுடன் வாழாமல் அடங்க மாட்டேன்….




எங்கள் இருவரின் விவாதத்தின் முடிவு இருவரும் ஒருவர் முகத்தில் ஒருவர் இனிமேல் விழிக்கக் கூடாது என்று முடிவெடுத்தோம். எந்த ஒரு  சூழ்நிலையிலும் அப்பாவை தேடுவது இல்லை என்று நான் என் உள்ளத்தில் வைராக்கியத்தை எடுத்துக்கொண்டேன். இதோ இப்பொழுது பதினைந்து ஆண்டுகள் ஓடிவிட்டது.என் வாழ்க்கையில் எத்தனையோ முறை, ஐயோ! அன்று அப்பா சொன்னதை கேட்காமல் போனோமே என்று பலமுறை யோசித்திருக்கிறேன்.

சந்திராவின் வீட்டிலும் எங்கள் காதலுக்கு சம்மதம் இல்லை. அதனால், இருவரும் வீட்டை விட்டு வெளியேறி எங்களுடைய வாழ்க்கையை வாழ ஆரம்பித்தோம்.

 

முதலில் எல்லாம் நன்றாகத் தான் போய்க் கொண்டிருந்தது. ” என் பருவத்தின் தேவைக்கு தித்திக்க தித்திக்க தீனி போட்டாள் சந்திரா “. அப்பொழுது கண்முன் எதுவும் தெரியவில்லை வாழ்க்கை முழுவதுமே சொர்க்கமாக தெரிந்தது.

நாட்கள் செல்லச் செல்ல வாழ்க்கை புரிய ஆரம்பித்தது. எனக்கு மட்டுமல்ல ,அவளுக்கும் என் மீது உள்ள ஈடுபாடும் ஈர்ப்பும் படிப்படியாக குறைய ஆரம்பித்தது.

என் மனைவி கருவுற்றபோது அவள் பிரசவத்திற்காக வந்தார் எனது மாமியார். அன்று முதல் என் வாழ்க்கையில் “சனியன்” ஆரம்பித்துவிட்டது. பிரசவத்திற்காக வந்தவர் பிரசவம் முடிந்து இத்தனை வருடங்களாகியும் இன்னும் எங்கள் வீட்டிலேயே சப்பனம் போட்டு உட்கார்ந்து கொண்டார்.”அம்மா மகள் இருவருமே மிகவும் ஆடம்பரமான வாழ்க்கை பிரியர்கள்.” “செய்யும் செயல்கள் அனைத்திலும் ஆடம்பரம்” .என்னுடைய சம்பளம் அவர்கள் ஆடம்பரத்திற்கு போதுமானதாக இல்லாது போனது..

நான் வாழ்க்கையில்  பணத்தை தேடி ஓட ஆரம்பித்தேன்.  கிடைத்த வேலைகள் அனைத்தையும் செய்தேன். ஓய்வு என்பது எனக்கு ஒருபொழுதும் இல்லாமல் போனது. சிறுகச்சிறுக நான் தேடி வந்த பணம் எல்லாமே இவர்களுக்கு போதாத குறையாக தான் இருந்தது.

எங்கள் குடும்பத்தின் வாழ்க்கை முறைக்கும், அவர்கள் குடும்பத்தின் வாழ்க்கை முறைக்கும் சிறிதும் சம்பந்தம் இல்லை. மாதம் தவறாமல் பியூட்டி பார்லர் போயே தீருவது என்று மகளுடன் சேர்ந்து அம்மாவும் முடிவெடுத்தார். வாடகை கார் இல்லாமல் ‘ஆத்தாளும் மகளும்’ வெளியே எங்கேயும் போக மாட்டார்கள்.

அது மட்டுமல்ல இவர்கள் இருவரும் மிகப்பெரிய “தீனிப் பண்டாரங்கள்”. நெய்யும் ,பாதாமும், முந்திரியில் இல்லாமல் தொண்டைக்குழிக்குள் சோறு இறங்காது. என் ஒட்டுமொத்த சம்பாத்தியத்தையும்  தின்றே தீர்த்தார்கள்.

அன்று அவளுடைய அழகை எப்படி எல்லாம் வர்ணிதேன். இன்று நீங்கள் அவளைப் பார்க்க வேண்டாமா? அதோ அங்கு மூன்று பேர் அமரக்கூடிய இருக்கையில்  இரண்டே பெண்கள் மட்டும் அமர்ந்திருக்கிறார்கள் இல்லையா, அது என் மாமியாரும் மனைவியும் தான் .அவர்கள் இரண்டு பேரும் அமர்ந்த பிறகு அந்த சீட்டில் வேறுயாரும் உட்காருவதற்கு இடம் என்பது கொஞ்சமும் இல்லை.

வருடத்திற்கு ஒரு சுற்று என்று இதுவரை பதினைந்து சுற்றுக்கள் பெருத்துப் போய் இருந்தாள் .இப்பொழுது அவளது உடலின் வளைவுகள் எதுவுமில்லை “நில திமிங்கலம்” போல்    பெருத்து போய் கிடந்தாள்.” இந்தாங்க…. வண்டி கேண்டீன்ல நிக்குது;  போய் பிஸ்கட் பாக்கெட் வாங்கிட்டு வாங்க”;

“அய்யோ பேசாதே பேசாதே, உன் பேச்சைக் கேட்கவே எனக்கு பிடிக்கவில்லை”. ஒருகாலத்தில் தேனும் மதுரமும் சேர்ந்து ஒழுகிய குரலா இது கூர்மையான ஊ௧்௧ின் நுனி கொண்டு தகரத்தை கீரும் போது ஒரு சப்தம் ஏற்படுமே அதுபோன்ற சத்தமாக அவள் குரல் எனக்கு இப்போது தென்பட்டது .’அப்பா நான் பாத்ரூம் போகணும்” இது என்னுடைய செல்ல மகள்.

என் மகளைப் பற்றி உங்களுக்கு சொல்லவில்லை அல்லவா தெரிந்து கொள்ளுங்கள் இந்த பூமியில் நான் வாழ்வதற்கு உண்டான ஒரே அர்த்தம் என் மகள் மட்டும் தான்.

சட்டென்று இருக்கையிலிருந்து எழுந்து என் மகளின் கையைப் பற்றியபடி, “வாடா செல்லம்”என்று கீழே இறங்கினேன்.

மாப்பிள்ளை….. வரும்போது முறுக்கு ஒரு பாக்கெட் வாங்கிட்டு வாங்க…

அடா அடா   இந்த ஓய்வில்லாமல் ஓடிக் கொண்டிருக்கும்” ரைஸ்மில்” எப்பொழுதுதான் நிற்குமோ? எண்ணமிட்டபடி கீழே இறங்கினேன்.

என் குழந்தை, என் தேவதை என் சாருலதா. அவள் மட்டும் இல்லாதிருந்தால் இந்த நேரம் இந்த பந்தங்களை என்றோ அறுத்துக் கொண்டு ஓடி இருப்பேன்.பேருந்து மீண்டும் கிளம்பி இருந்தது .ரைஸ் மில்லும் ஸ்டார்ட் ஆகி இருந்தது.

“மஞ்சம்பட்டி” வந்திருச்சு எல்லாரும் இறங்குங்க கண்டக்டரின் சத்தம் கேட்டு கண் விழித்தேன்.
நானும் என் மகளும் முதலில் இறங்கிவிட, மாமியாரும் மனைவியும் இறங்குவதற்கு மிகவும் சிரமப்பட்டனர். அவர்கள் படிக்கட்டு வழியாக இறங்கும் பொழுது, பேருந்து ஒரு புறமாக சாய்ந்து விடுமோ என்ற பயம் கண்டக்டரின் கண்களில் முழுமையாகத் தெரிந்தது. ஊதி வைத்த பலூன் ஒரு கட்டத்தில் வெடிப்பது போல் இவர்கள் இருவரும்  ஒரு கட்டத்தில் வெடிக்கத்தான் போகிறார்கள்.

நாங்கள் எங்களுடைய வீட்டுக்குச் செல்வதற்கு நடக்க ஆரம்பித்தோம். எங்கள் ஊரில் ஆட்டோ போன்ற வசதிகள் கிடையாது நடக்கத்தான் செய்ய வேண்டும்.

“ஏங்க கண்டிப்பா முடிஞ்சிடும் இல்ல”? முடியறதுக்கு முன்னாடி பாக்கனும்னு நீங்க ஆசைப்பட்டதனாலதான் இவ்வளவு கஷ்டப்பட்டு வந்துகிட்டு இருக்கேன். —-இது என் மனைவி.

‘என்னத்த’  முடிஞ்சதுக்கு அப்புறம் கூட வந்திருக்கலாம். என்ன ஊரு உலகத்துல இல்லாத ‘அப்பா’. என்ன அப்பாவோ இப்போ நாம வந்ததுக்கப்புறம் முடியலன்னா?நான் அவர்கள் இருவரையும் அற்பப் புழுக்களை பார்ப்பது போல் பார்த்தேன்.

“அப்பா…. எப்ப  அப்பா தாத்தா வீடு வரும்?”.

“இதோ வந்துவிட்டது டா செல்லம்”.

இதோ வந்துவிட்டது; நான் ஓடியாடி விளையாடிய தெரு. இந்த பதினைந்து ஆண்டு காலம் என் ஊர் தலைகீழாக மாறி இருந்தது.

“யாருடா அது, பாக்கியலட்சுமி மகனா”? இப்பத்தான் ஊருக்கு வரதுக்கு வழி தெரிந்ததா? உங்க அப்பன் சாகக்  கிடக்கிறான் போ போ போய் பாரு…. ஊரில் யாருடனும் பேச பிடிக்கவில்லை. யார் முகத்தையும் பார்க்கப் பிடிக்கவில்லை. குனிந்த தலை நிமிராமல் விறுவிறுவென நடந்தேன்.

இதோ என் வீடு. இது வீட்டு முற்றம் இந்த முற்றத்தில் தான் அன்று அவ்வளவு வீராப்பாய் சினிமா டயலாக் எல்லாம் பேசி விட்டு கிளம்பினேன்.

வீட்டின் முன்புறம் அப்பா கட்டிலில் படுத்திருந்தார். இல்லை படுக்க வைக்கப்பட்டிருந்தார் இது என் அப்பா தானா…..

அப்பா, ” உங்கள் மிடுக்கும் கம்பீரமும் எங்கே, கத்தி என குத்திப் பாயும் உங்கள் விழிகள் எங்கே?, வேண்டாம் அப்பா இப்படி படுத்து இருக்காதீர்கள் என்னால் இதைத் தாங்க முடியவில்லை”.

என் அப்பாவின் கைகளைத் தொட்டுப் பார்த்தேன். இந்தக் கைகள் தானே எனக்கு சைக்கிள் சொல்லித் தந்தன .அப்பொழுதெல்லாம் இரும்பைப் போல் இருந்த இந்தக் கைகள் இப்போது ஏன் காய்ந்த சருகு போல் துவண்டு கிடக்கிறது .பரந்து விரிந்து இருந்த உங்களது மார்பு இப்படி குறுகிப் போனதற்குக் காரணம் என்னப்பா?

எதிலாவது மோதிக்கொண்டு முட்டி முட்டி அழவேண்டும் போலிருந்தது. என்னுள் பொங்கி வந்த அழுகையை அடக்கிக் கொண்டேன்.




அப்பா எழுந்திரியுங்கள் அப்பா எழுந்து என்னோடு சண்டை இடுங்கள். “எதற்கடா நாயே, இந்த எருமை மாடுகளை ஓட்டிக்கொண்டு இங்கே வந்தாய்” என்று கேளுங்கள் நான் உள்ளுக்குள் குமுறினேன்.

இப்பொழுது அம்மா என் அருகே வந்தார்.

உன் கையால் அப்பாவுக்கு இந்த பாலை கொடு. அவர் மேலும் சிரமப்படாமல் நிம்மதியாக போய்ச் சேரட்டும் .அம்மாவின் கண்களில் இருந்து தாரை தாரையாக நீர் வழிந்து கொண்டிருந்தது.

நான் அப்பாவின் தலையில் கை வைத்தேன் .என் ஸ்பரிசம் பட்டவுடன் அப்பாவின் முகத்தில் மாற்றம் மெதுவாகக் கண் விழித்தார். என் முகத்தை பார்த்தவுடன் அவரது தளர்ந்த  முகத்தில் மகிழ்ச்சி கையை வீசி அம்மாவை அருகே அழைத்தார்.”பாக்கியம் பிள்ளைக்கு சோறு போடு” மிக மிக சன்னமாக ஒலித்தது அப்பாவின் குரல்.

அப்பாவின் மார்பில் சாய்ந்து கொண்டு கதறி அழ வேண்டும் என்ற உணர்வை மிகவும் சிரமப்பட்டு அடக்கிக் கொண்டேன்.

என்னை ஆசையாய் தொட்டுப்பார்த்தார். என் மகளை வாஞ்சையோடு வருடினார். அவருடைய கண்களில் ஒரு நிறைவு தெரிந்தது. பட்டென்று அவருடைய உயிர் பிரிந்தது.

” பிள்ளைக்கு சோறு போடு ” அப்பா கூறிய வார்த்தை என்னை சுற்றி சுற்றி வந்து கொண்டிருந்தது. என்றைக்கு என் வீட்டில் இருந்து வெளியேறினேனோ அன்றிலிருந்து இன்றுவரை என்னை சாப்பிட்டாயா என்று கேட்பதற்கும் என்னைப் பற்றி சிந்திப்பதற்கு யாரும் இல்லாத அனாதையாகவே இருந்து வருகிறேன்.

நான் வாழ்ந்து வரும் வாழ்க்கையில் நான் ஒரு பணத்தை அச்சடிக்கும் இயந்திரம் அவ்வளவுதான். தங்கு தடையில்லாமல் எந்தவிதமான  ரிப்பேரும் ஆகாமல் நான் ரூபாய் நோட்டுக்களை அச்சடித்து கொண்டே இருக்கவேண்டும். இந்த மிசினை பற்றி கவலைப்பட யாரும் கிடையாது.

இதோ பதிமூன்றாம் நாள் காரியம் முடிவடைந்துவிட்டது.

ராஜேஷ்…. “அப்பாவோட பீரோவ திறந்து பாரப்பா”, அவர் இருந்தவரை அதை யாரும் திறக்கக்கூடாது என்று நிச்சயமாகச் சொல்லிவிட்டார். அது உனக்கானது என்றும் எப்படியாயினும் நீ வரும் பொழுது நீ தான் திறக்க வேண்டும் என்றும்  சொல்லிவிட்டார். இப்பொழுது நீயே திறந்து பார்.

நான் அப்பாவின் பீரோவை நெருங்கினேன். என் அப்பாவை நெருங்கியது போன்ற ஒரு உணர்வு  ஆசையோடு அந்த பீரோவை வருடினேன். பீரோவை திறந்து உள்ளே பார்த்த போது….

வெள்ளை காகிதங்களால் சுற்றப்பட்ட  ரூபாய் நோட்டு கட்டுகள் உள்ளே அடுக்கப்பட்டு இருந்தது. ஒவ்வொரு கட்டின் மீதும் இது என் மகனின் திருமண செலவிற்காக, இது என் மகனின் தொழில் செலவிற்காக என்று ஒரு தகப்பனாய் எனக்கு என்னென்ன செய்யவேண்டும் என்று நினைத்தாரோ அத்தனையும் தனித்தனியாக பணக்கட்டுகள் ஆக ஒதுங்கியிருந்தார்.

மேலும் என் மனைவிக்கு தாலிக்கொடி ;என் மகளுக்கு வளையல் செயின் அனைத்தும் வாங்கி வைத்திருந்தார்.  நான் என் அழுகையை மறைக்க அந்த ரூபாய் நோட்டுக் கட்டுகளை எடுத்து என் முகத்தில் வைத்து மூடிக்கொண்டேன்.

அந்த ரூபாய் நோட்டு கட்டு முழுவதும் என் அப்பாவின் வாசம். இந்த 15 ஆண்டு காலமும் வாழ்ந்த ஒவ்வொரு நொடியும் எனக்காகவே வாழ்ந்திருக்கிறார். என் இருதயம் வெடித்து விடும்போல் ஓர் உணர்வு இனியும் பொறுத்துக் கொள்ள முடியாது.ரூபாய் நோட்டுக் கட்டுகளை என் முகத்தில் அறைந்து கொண்டு  கதறி அழ ஆரம்பித்தேன் .

அப்பா, “ஐ லவ் யூ”




What’s your Reaction?
+1
14
+1
20
+1
0
+1
0
+1
0
+1
0
+1
7
Subscribe
Notify of
guest

0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!