Serial Stories தொடுவதென்ன தென்றலோ

தொடுவதென்ன தென்றலோ-12

12

அன்று செம்பருத்தி வகுப்பறையில்‌ நுழையும்‌ போது ரொம்பவே தாமதமாகியிருந்தது.

“செம்பருத்தி முன்பு மாதிரி இல்ல கிளாசுக்கு சரியான நேரத்துக்கு வர்றதில்ல…பாடத்தில்‌ கவனம்‌ குறைந்து விட்டது இப்படி இருந்தா எப்படி? என்னாச்சு உனக்கு?” என்று கெட்ட ப்ரொபசரிடம்‌ விளக்கம்‌ ஏதும் சொல்லாமல்‌ ஒரு சாரியை மட்டும்‌ கேட்டுவிட்டு வகுப்பிற்குள்‌ நுழைந்தாள்‌. நம்முடைய மன மாற்றத்தை எப்படியோ கண்டுபிடித்து விட்டார்களே என்றெண்ணியது அவளின்‌ மனம்‌.

பாடத்தில்‌ கவனம்‌ செல்லவில்லை. மதியம்‌ லஞ்சுக்கு பிறகு இனிமே வகுப்பில்‌ அமர முடியாது என்ற நிலையில்தான்‌ அருகில்‌ அமர்ந்திருந்த தோழி இவளைப்‌ பார்த்து “என்னடி தலவலியா கேண்டின்‌ போய்‌ ஒரு கப் காபி குடிச்சிட்டு வரவேண்டியதுதானே?” என்ற போது இப்போதைக்கு இங்கிருந்து வெளியே செல்வது தான்‌ ஒரே தீர்வு என்று எண்ணியவள், அடுத்த வகுப்பை கட்‌ பண்ணி விட்டு கேண்டின்‌ சென்று ஒரு கப்‌ காபி குடித்தாள்‌. பிறகு ஒரு முடிவோடு கல்லூரியை விட்டு வெளியில்‌ வந்தாள்‌.இவள்‌ வரவுக்காகவே காத்திருப்பது போல்‌ அந்த வெண்ணிற காரில்‌ இருந்து இறங்கியவன்‌ இவளை நோக்கி வந்தான்‌.

அங்கே அவனை பார்த்தது எதிர்பாராத அதிர்ச்சியாய்‌ இருந்தது. ராஜா ஏன் என்னைத்தேடி வரணும்‌?. எரிச்சலோடு ஏறிட்டபோது அவன்‌ முகம் சோர்வோடு இருப்பதாய்‌ தோன்றியது. முன்பு பார்த்த அந்த சுறுசுறுப்பு துடைத்து வைக்கப்பட்டிருந்தது. என்ன ஆச்சு கல்யாணம்‌ குடும்பம்னு இருக்கிறவனுக்கு பெருசா என்ன கஷ்டம்‌ வந்துட போகுது? அவன்‌ எப்படி போனால்‌ எனகென்ன? இப்போதைக்கு என்‌ கேள்வி இவன்‌ எதுக்கு என்னை தேடி வரணும்‌? எல்லாம்‌ தான்‌ முடிஞ்சிடுச்சு போய்‌ தலைமுழுகியாச்சே? பிறகு திரும்பவும்‌ எதற்காக தொடர்ந்து வருகிறான்‌.? ஆனாலும்‌ ஏதோவிஷயம்‌ இல்லாம இவளை தேடி வர மாட்டான்‌. என்றது மனம்‌ இவளுக்கும்‌, அவனிடம்‌ பேசுவதற்கு சண்டை போடுவதற்கு உறவை முறித்துக்‌கொள்வதற்கு என சில நிமிடங்கள்‌ தேவைப்பட்டது.

“செண்பா…நான்‌ உன்கிட்ட பேசணும்‌…கொஞ்சம்‌ எங்கூட வரமுடியுமா? இவளுக்கும்‌ அவனிடம் பேச வேண்டிய விஷயங்கள்‌ நிறைய இருந்தது. அதுக்கான நேரம்‌ இப்போது வந்திருக்கிறது. இன்னைக்கு விட்டா திரும்பவும் பேச முடியாது என்று எண்ணினாள்‌.

இவள்‌ ஏறியவுடன்‌ காரின்‌ வேகத்தை அதிகபடுத்தினான்‌. சற்றுநேரத்தில்‌ பீச்‌

ஓரமாக காரைநிறுத்திவிட்டு அவள்‌ பக்கம்‌ திரும்பினான்‌.

“அடுத்தவாரம்‌ நான்‌ ஸ்டேட்ஸ்‌ போறேன்‌ திரும்பி வர ஐந்து வருடமோ அல்லது அதற்கு மேலும்கூட ஆகலாம்‌”.

இவள்‌ இயல்பான முகபாவனையோடு அவனை பார்த்தாள்‌. அவன்‌ முகம் தோல்வியை தழுவியது. அழுது புரண்டு இத்தனை வருடம்‌ ஆகுமா இனி உங்களை சந்திக்கவே போவதில்லையா? என்று உருகுவாள்‌ என எண்ணி இருந்தான்‌. எல்லாமே தலைகீழாய்‌ இருந்தது. 

“எனக்கும்‌ கடைசியா பேச வேண்டிய சில விஷயங்கள்‌ இருக்கு…” என்றாள்‌.

“இன்னமும்‌ நீ அப்படியே தான்‌ இருக்கே…கொஞ்சம்‌ கூட மாறல செண்பா…”

என்றான்‌ ராஜா.

“எதற்கு மாறனும்‌ நான்‌ நானாகவேதான்‌ இருப்பேன்‌…” என்றாள்‌.




“இப்ப கூட ஒன்னும்‌ கெட்டு போகல அப்பா அம்மாவோட விருப்பத்துக்காகதான்‌ அந்த கல்யாணம்‌ மத்தபடி மனசளவுல கூட நான் அவளோட வாழவில்லை. என்னுடைய மனசெல்லாம்‌ உன்னையே தான் நினைச்சுக்கிட்டு இருக்கு. நீ ஊன்னு ஒரு வார்த்தை சொல்லு நாம ரெண்டு பேரும்‌ கோவிலில்‌ வைத்து மாலை மாத்திக்கலாம்‌. உன்னை நான் வெளிநாட்டுக்கு கூட்டிட்டு போறேன்‌…”

“இல்ல அதற்கு வாய்ப்பே இல்லை…என்னை கல்யாணம்‌ பண்ணிக்கிற தகுதியும்‌ இப்போ உங்களுக்கு இல்ல. இதுவே நான்‌ ஒருத்தனை கல்யாணம் பண்ணிக்கிட்டு இரண்டாவதாக உங்கள கல்யாணம்‌ பண்ணிக்கிறேன்னு சொன்ன ஏத்துப்பீங்களா? ஆணுக்கு ஒரு சட்டம்‌ பெண்ணுக்கு ஒரு சட்டமா? அடுத்தது இந்த அளவுக்கு உங்க கிட்ட பேசுறேன்னா ஏதோ கொஞ்ச நாள் உங்க கூட பழகியிருக்கேன்‌. அந்த மரியாதைக்காகதான்‌ இல்லன்னா இந்த நேரம்‌ கூட உங்க கிட்ட பேசிட்டு இருக்க மாட்டே…”

“என்ன செண்பா இப்படி எடுத்தெறிஞ்சு பேசுற? என்ன பாத்தா உனக்கு பாவமா இல்லையா…?”

“எதுக்கு பாவப்படணும்‌ நான்‌ பாவப்பட்டதெல்லாம்‌ போதும்‌ இதோட எல்லாத்தையும்‌ முடிச்சுக்கலாம்‌…”

“இல்ல நீ அப்படி சொல்ல கூடாது இப்ப நான்‌ உன்கிட்ட வந்ததே உன்னுடைய அன்பை தேடித்தான்‌ வந்திருக்கேன்‌. நீ என்ன சொன்னாலும் கேட்கிறேன்‌ காலில்‌ விழ சொன்னாலும்‌… என்று ரொம்பவும்‌ இறங்கி வந்தான். “சீ… இந்த அளவுக்கு இறங்கி வரீங்கன்னா உங்க கிட்ட ஏதோ தப்பு

இருக்குன்னு அர்த்தம்‌. உங்களை நான்‌ ஏத்துக்க முடியாது. நீங்க என்ன சொன்னாலும்‌ நான்‌ ஏத்துக்க முடியாது. காரணம்‌ இப்ப எனக்கு நிச்சயம் ஆயிடுச்சு!. இன்னும்‌ கொஞ்ச நாள்ல எனக்கு கல்யாணம்‌ ஆகப்போகுது. எங்க அப்பா அம்மா எங்க மாமனார்‌ குடும்பம்னு எல்லோரும்‌ எம்மேல பெரிய நம்பிக்கையோட இருக்காங்க அவங்க முகத்துல கரி பூச நான்‌ விரும்பல…”

“என்னது உனக்கு நிச்சயம்‌ ஆயிடிச்சா?” அதிர்ச்சியோடு கேட்டான்‌.

“ஆமாம்‌…”

“எனக்கு ஒரே ஒரு சந்தேகம்தான்‌ அவர்‌ எப்படி உங்களுக்கு ஃபிரண்டா ஆனார்‌?. அவ்வளவு நல்ல குணம்‌ உடைய ஒருத்தர்‌ கண்டிப்பா உங்களுக்கு ஃபிரண்டா இருக்க வாய்ப்பில்லையே” என்று சொன்னபோது,

“நீ யார சொல்ற எனக்கு ஒன்னும்‌ புரியல என்னுடைய ஃபிரண்டா யாரது…?”

“என்ன மிஸ்டர்‌ ராஜராஜன்‌ எதுவும்‌ தெரியாத மாதிரி பேசுறீங்க? இல்ல உண்மையாவே தெரியலையா?”

“இல்ல நண்பன்னு நீ சொல்றது யாரன்னு எனக்கு ஒன்னும்‌ புரியல”

“இளமாறன்தான்‌…அதாவது உங்களுடைய முன்னாள்‌ நண்பன்‌” 

அதிர்ச்சியோடு அவள்‌ முகத்தை எறிவிட்டான்‌.

“இளமாறனையா கல்யாணம்‌ பண்ணிக்க போற? அவனுக்கு பாத்திருக்கிற பொண்ணு நீ தானா” சற்று நேரம்‌ கண்களை மூடி பெருமூச்சை இழுத்து விட்டவன்‌,

“நானும்‌ அவனும்‌ ரொம்ப நெருங்கிய நம்பர்களாய்‌ இருந்தோம்‌. சில பல காரணங்களால ரெண்டு பேரும்‌ நிரந்தரமா பிரிய வேண்டியதாச்சு. இதோ இப்ப கூட நீ அவனை கல்யாணம்‌ பண்ணிக்க போறேங்கிற விஷயம்‌ உன் மூலமாகதான்‌ தெரியுதே தவிர அவன்‌ என்கிட்ட ஒரு வார்த்தை கூட சொல்லல? இந்த நிமிஷம்‌ வரை அவன்‌ மேல எனக்கு எந்த கோபமும் இல்ல. ஆனா அவன்‌ தான்‌ என்ன வெறுத்து ஒதுக்கிட்டான்‌. என்னை வெறுத்து ஒதுக்க இந்த உலகத்தில்‌ நிறைய பேர்‌ இருக்காங்க நேசிக்கத்தான்‌ ஆளே இல்லை…”

“நாம நல்லவங்களா இருந்தாதான்‌ மத்தவங்க, நம்மள நேசிப்பாங்க துரோகம் பண்றவங்கள யாரும்‌ தேடி போய்‌ நேசிக்கிறது இல்லை…”

“ப்ளீஸ்‌ இப்படி எல்லாம்‌ பேசி என்னை கஷ்டப்படுத்தாத.. செண்பா. இளமாறன்‌ நல்லவனா இருக்கலாம்‌ அவனோடு உனக்கு மேரேஜ்சும் பிக்ஸ்சாகி இருக்கலாம்‌. ஆனால்‌ நான்‌ உன்‌ காதலன்‌… உன்னை நேசிக்கிறவன்‌ கடைசி வரைக்கும்‌ என்னோட நினைப்பு உன்‌ மனசுல இருக்கும்‌. நீ அவனை கல்யாணம்‌ பண்ணிட்டு கண்டிப்பா நிம்மதியா இருக்க முடியாது. ஒரே ஒரு வார்த்தை சொல்லு இளமாறன்‌ கிட்ட நான்‌ பேசுறேன்‌

இந்த கல்யாணத்தை நிறுத்துறேன்‌.”

“இல்ல வேணாம்‌ அந்த ஒரு முயற்சியை மட்டும்‌ பண்ணிடாதீங்க”

“ஏன்‌… நான்‌ செண்பாவை காதலிச்சேன்‌ ரெண்டு பேரும்‌ ஒருத்தரை ஒருத்தர்‌

கல்யாணம்‌ பண்ணிக்கலாம்னு இருந்தோம்ன்னு சொல்றேன்‌…”

“எதுக்கு…? என்னோட விருப்பத்தோடதான்‌ நிச்சயம்‌ நடந்தது. நான் மறுத்திருந்தால்‌ என்னை யாரும்‌ கட்டாயப்படுதப்போவதில்லை. நான்‌ நல்லா யோசிச்சு தான்‌ நான்‌ இருந்த கல்யாணத்துக்கு சம்பாதிச்ச…இனி உங்க வழியை பார்த்துட்டு நீங்க போங்க என்‌ வழியில நான்‌ போறேன்‌. எந்த சூழ்நிலையிலும்‌ என்னை கஷ்டப்படுத்தி பாக்கலாம்னு நினைக்காதீங்க நான்‌ மனதளவில்‌ ரொம்பவும்‌ சோர்ந்து போயிருக்கேன்‌”.

“அவசரப்பட்டுட்டே செண்பா கொஞ்சம்‌ யோசிச்சு இருக்கலாம்‌ எனக்காக கொஞ்சம்‌ கன்சிடர்‌ பண்ணி இருக்கலாம்‌ என்னுடைய மனநிலை என்னன்னு என்‌ கூட பேசி இருக்கலாம்‌. நான்‌ உனக்கு நிறைய முறை கால் பண்ணினேன்‌ நீ எடுக்கவே இல்ல. நான்‌ உன்கிட்ட ஒரு விஷயம் சொல்லனும்னு சொன்னேன்‌ இல்லையா அத பத்தி தான்‌ அதை நீ கடைசி

வரைக்கும்‌ கேட்கவே இல்லை. உன்கிட்ட சொல்லணும்னு தான்‌ ஓடி வந்தேன்‌. இனிமேலும்‌ அதை மறைத்து மனசுக்குள்ள வச்சிருக்க விரும்பல…”

“எதுவா இருந்தாலும்‌ அதை கேக்கிற மனநிலையில நான்‌ இல்லை…” என்றாள்‌.

“அப்படின்னா நான்‌ அதிரடியா இறங்க வேண்டியதுதான்‌ வேற வழியே இல்லை…” கடுமையான குரலில்‌ சொன்னான்‌.

“புரியல…”

“நீயூம்‌ நானும்‌ எடுத்துக்கொண்ட போட்டோ அது ஒன்னு போதும்‌ நம்முடைய காதலை அடையாளப்படுத்திக்காட்ட அதை இளமாறனனிடம்‌ காட்டினால்‌ அவன்‌ விலகி வழிவிட்டுவிடுவான்‌ இல்லையா?” அவன்‌ முகத்தில்‌ குரூரம் தெரிந்தது. ஒரே ஒரு செல்பி என்று அவ்வப்போது அவன்‌ எடுத்ததெல்லாம் இப்படி பிளாக்மெயில்‌ பண்ணத்தானா? அதிர்ச்சியோடு அவனை ஏறிட்டாள்‌.

“செல்லில்‌ வைத்தால்‌ மிஸ்சாகிடுன்னு பென்டிரைவ்ல போட்டு வச்சிருக்கேன்‌…”

“ப்ளீஸ்‌ அதெல்லாம்‌ எங்கிட்ட கொடுத்துடுங்க… கலங்கிய கண்களோடு கெஞ்சினாள்‌.

“அதெப்படி அவ்வளவு சீக்கிரம்‌ தூக்கி கொடுத்துட முடியும்‌?”

“பீளீஸ்‌…இதனால எங்க குடும்பத்துக்கு தலைகுனிவு..அத எங்கிட்ட கொடுத்துடுங்க…” சற்றுநேரம்‌ அவளையே பார்த்துகொண்டிருந்தவனின் முகம்‌ மெல்ல மலர்ந்தது.

அப்படின்னா அதுக்கு ஒரு விலை இருக்கே…அதை கொடுத்திட்டீன்னா பென்டிரைவ்வை கொடுத்துட்டு மொத்தமா விலகிடுவேன்‌…”

“என்ன…?”

“நாளைக்கு மறுநாள்‌ நான்‌ சொல்ற இடத்துக்கு காலயில ஒன்பது மணிக்கு வரணும்‌…”

வெறுப்போடு அவனை ஏறிட்டாள்‌.

“நீ நினைக்கிற மாதிரி கெஸ்ட்‌ ஹவுஸ்‌ இல்லை…இது பப்ளிக் பிளேஸ்தான்‌…எந்த இடம்ன்னு மெசேஜ்‌ அனுப்புறேன்‌.”

“சரி வரேன்‌…” எதையும்‌ எதிர்கொள்ளும்‌ ஒரு தைரியத்தோடு கூறினாள்‌.




 

What’s your Reaction?
+1
19
+1
15
+1
0
+1
2
+1
0
+1
0
+1
0
Subscribe
Notify of
guest

0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!