Serial Stories உயிராய் வந்த உறவே

உயிராய் வந்த உறவே-10

10

காலையில் அவனுடைய கண்மணி மேலேறி பின்பக்க கிரவுண்டில் ஓடிக்கொண்டிருப்பான். நினைவு வைத்துக் கொண்டு அதிகாலை தூக்கத்தை தியாகம் செய்து எழுந்து கிரவுண்டை நோக்கி நடந்தாள் வாணி.

டக் டக் என்ற குதிரை 

குளம்படி கிரவுண்டை நெருங்கும்போதே கேட்க மனம் படபடத்தது. தயக்கத்தில் பின்னிழுத்த கால்களை அதட்டி முன்வைத்து அவன் முன் நின்றாள். யோசனையில் புருவம் சுருங்க அவளைப் பார்த்தான் விபீசன்.

“வந்து… உங்க கூட கொஞ்சம் பேசணும்”

“சொல்லு” அவன் தனது ஆரோகனத்தை மாற்றிக்கொள்ளவில்லை. 

ராட்சசன் கொஞ்சமாவது இறங்குகிறானா பார்!அவன் இவள் பேச்சைக் கேட்க மனம் மட்டுமல்ல உடலும் இறங்கப் போவதில்லை என தெரிந்த பின் அப்படியே பேச ஆரம்பித்தாள். “அப்பாவை பார்க்க…பத்திரிக்கை வைக்க…”

“ஏய் அம்மு, நீயும் வருகிறாயா? வெரி குட். நாம் எல்லோருமாக போய் உன் அப்பாவை….வைத்து செய்து விட்டு வரலாம்” அம்முவில் உற்சாகமாக ஆரம்பித்த குரல் அப்பாவிற்கு பிறகு வஞ்சினமாய் கத்தியால் திருகுவது போலிருந்தது.

இங்கேயே இத்தனை ஆத்திரமென்றால் நேரில்… வாணிக்கு அப்படியும் விட மனதில்லை. “வந்து… அப்பா ஏற்கனவே மகள்…வந்து… விட்டுப் போனதில் ரொம்பவே வருத்தத்தில் இருப்பார்.இ… இப்போது வந்து மேலும் அவரை வருத்தப்படுத்தினால்…வந்து…”

விபீசன் விரல்களை நீட்டி மடக்கி ஏதோ எண்ணிக் கொண்டிருக்க பேச்சை பாதியில் நிறுத்தினாள். “என்ன?” எரிச்சலாக கேட்டாள்.

“எத்தனை ‘வந்து’ என்று எண்ணிக் கொண்டிருக்கிறேன். இத்தனை தயக்கத்திலேயே தெரியவில்லையா நீ பேச வந்திருப்பது சரியான விஷயமில்லை என்பது? அதை விடு வாயேன் ஒரு ரைட் போகலாம்” கையை நீட்டி அழைத்தவனை நம்ப முடியாமல் பார்த்தாள்.

நானிருக்கும் நிலை பற்றிய கவலையின்றி இவனுக்கு உல்லாசம் வேண்டியிருக்கிறதா? அவள் நினைப்பை கூட முழுவதும் முடிக்க விடாமல் குனிந்தவன் அவள் இடை பற்றி வளைத்து தூக்கிய கையோடு குதிரையை தட்டி விட குதிரை ஓட ஆரம்பித்தது. வீலென்ற அலறலுடன் குதிரை மேல் விழுந்தவள் திரும்பி அவன் கழுத்தை கட்டிக் கொண்டாள்.

 குதிரையின் ஒவ்வொரு குதிக்கும் அதிர்ந்து தூக்கிப் போட்ட  உடல் முழுவதும் எலும்புகள் பிரிந்து தொங்கும் உணர்வு வந்தது.அவளின் நிலையை நன்கு உணர்ந்த போதும் குதிரையின் வேகத்தை அவன் குறைத்தானில்லை. மேலும் லகானை சுண்டியிழுக்க கண்மணி உற்சாகத்தோடு ஓட்டத்தை கூட்டியது.

 இறுதியாக விபீசன் வாணியை வீட்டு வாசலில் இறக்கி தள்ளியபோது உடலின் ஒவ்வொரு அணுவும் வலித்தது.

” மிஸ்டர் சுந்தர்ராமனை போய் பார்த்து திருமண பத்திரிக்கை வைத்து விட்டு வரப் போகிறோம்” உறுமலான குரலில் அறிவித்துவிட்டு குதிரையை சுண்டி இழுத்துப் போனான் அவன்.

இவனை திருமணம் செய்து கொண்டு காலம் முழுவதும் வாழ வேண்டுமா? மனம் முழுவதும் பயம் மண்ட தடுமாறி நின்றிருந்தவளின் தோளை பின் வந்து நின்று மென்மையாய் தொட்டாள் மகேஸ்வரி.

“அம்மு என்னடா ஒரு மாதிரி இருக்கிறாய்?” 

பொங்கிய ஆத்திரத்துடன் தன் தோள் தொட்ட கையை பற்றி விசிறினாள். 

ஒரு முக்கியமான மீட்டிங் இருக்கிறது.அது முடிந்ததும்  பச்சைமலைக்கு போகலாம்” தெய்வானையின் தோளை சுந்தர்ராமன் ஆதரவாக தட்டிய போது வாசலில் அந்த கார் வந்து  நின்றது. அதிலிருந்து இறங்கியவர்களை கண்டதும் அதிர்ந்தார்.

“வணக்கம்.கவுன்சிலர் ஐயா எங்கே கிளம்பிட்டீங்க ?முக்கியமான வேலையா ?”கேட்டபடி இறங்கியவர் மாணிக்கவேல்.




சுந்தர்ராமன் தடுமாற, தந்தை அருகே இறங்கி நின்றான் விபீசன். “எங்கள் வீட்டு திருமணத்திற்கு உங்களுக்கு அழைப்பு வைக்க வந்திருக்கிறோம் ஐயா. உள்ளே வரலாமா?” பவ்யமாக கேட்டான். சுந்தர்ராமன் அசையாமல் வெறித்தபடி நின்றிருந்தார்.

“என்ன சார் இப்படியே நின்றிருந்தால் எப்படி? வாங்க உள்ளே போய் பேசலாம்” சுந்தர்ராமனின் கைப்பிடித்து உள்ளே இழுத்துக் கொண்டு போனவன் கடைசி நொடி நின்று திரும்பி காரை பார்த்து “அத்தை நீங்களும் வாங்க, பெண்கள் இல்லாமல் அழைப்பு கொடுப்பது எப்படி?” என்றான்.

 தனது கைக்குள் இருந்த சுந்தர்ராமனின் கைகள் நடுங்குவதை திருப்தியாக உணர்ந்தான்.

உடலெங்கும் வியர்வை மழையாக ஊற்றிய நிலையிலும் சுந்தர்ராமன் திரும்பி காரை பார்க்க, கார் கதவை திறந்து கொண்டு நிதானமாக இறங்கினாள் மகேஸ்வரி .”இதோ வந்துட்டேன் விபா” கண்ணன் கை குழல் நாதமாய் அவள் குரல்.

மிக நேராக விபீசனை மட்டுமே பார்த்தவள் அவன் கை தட்டை வாங்கிக்கொண்டு வீட்டிற்குள் நுழைந்தாள்.

தெய்வானையின் நிலைமையோ சுந்தர்ராமனை விட மோசமாக இருந்தது. இமையை கூட தட்டாமல் வீட்டின் நடுவே வந்து நின்றவளை விரித்து பார்த்து நின்றிருந்தாள்.

கொண்டு வந்த தட்டை டீபாயில் வைத்து நிமிர்ந்த மகேஸ்வரி “எப்படி இருக்கிறாய் தெய்வா?” இயல்பாக விசாரித்தாள்.

பதிலாக சிறு தலையசைப்பை கூட கொடுக்க முடியாமல் ஆணியடித்தார் போல் நின்றிருந்தாள் தெய்வானை.

அவள் கண்கள் பழத்தட்டையும் அதன்  மேலிருந்த பத்திரிகையையும் பார்த்து திக்கென விரிந்தது.

“இது என்னது?”

“கல்யாண பத்திரிக்கை தெய்வா.உங்களை அழைக்க வந்திருக்கிறோம்” 

“யாருக்கு கல்யாணம்?”

“எனக்கு” விபீசன் மார்தட்டி காட்ட, ஒரு நொடி நிம்மதி மூச்சுவிட்ட தெய்வானை உடனே கலவரமானாள்.

 “மணப்பெண் யார்?”

“என் மகள்” இப்போது மகேஸ்வரியின் குரலில் குயில்கள் இல்லை. சிறுத்தையின் சீறல் இருந்தது.

“இல்லை” வீறிட்டாள் தெய்வானை. “இந்த திருமணத்திற்கு நான் அனுமதி கொடுக்க மாட்டேன்”

“உங்கள் அனுமதி எங்களுக்கு தேவையில்லை” விபீசன் குரலை உயர்த்தினான்.

தெய்வானை சுந்தர்ராமனிடம் ஓடினாள் “என்னங்க பார்த்துக் கொண்டு பேசாமல் இருக்கிறீர்கள்? நம்முடைய மகளுக்கு திருமணம் செய்ய இவர்கள் யார்?”

சுந்தரராமன் அசையாமல் அப்படியே நின்றிருந்தார். அவரது பார்வை இன்னமும் மகேஸ்வரியிடமே இருந்தது. “என்ன செய்வது?” தடுமாற்றமாய் கேட்டார்.

தெய்வானை பற்களை கடித்தாள். “என்ன பழைய மோகம் திரும்புதா?” அடிக்குரலில் உறுமினாள். இடக்கையால் சுந்தர்ராமனை ஒதுக்கி அவரை மறைத்து முன்னால் நின்று தலை உயர்த்தினாள்.” வாணி என் மகள்.எங்கள் விருப்பமில்லாமல் இந்த திருமணம் நடக்காது”

“அட அப்படியா !”கேலியாக கேட்டான் விபீசன்.

“உன் மகளா?” மகேஸ்வரி தெய்வானையின் கண்களை உறுத்தாள்.

“இல்லையென்று வாணியையே சொல்லச் சொல்லேன் பார்க்கலாம்” தெய்வானையின் தைரியத்திற்கு குறைவில்லை.

“அதற்கெல்லாம் எங்களுக்கு நேரமில்லை. திருமணத்திற்கு இன்னமும் இரண்டு நாட்கள்தான் இருக்கிறது.எங்களுக்கு நிறைய வேலைகள் இருக்கிறது.குடும்பத்தோடு திருமணத்தில் கலந்து கொள்ளுங்கள்” விபீசன் எழுந்து மகேஸ்வரியின் கைப்பற்றிக் கொண்டு கிளம்பலானான்.

“என்னங்க என்னன்னு கேளுங்க” தெய்வானை சுந்தர்ராமனை இழுக்க இமை தட்டி விழித்தவர் “என் மகளின் திருமணம் என் சம்மதம் இல்லாமல் நடக்காது” என்றார்.

“அப்போது சம்மதித்து விடுங்களேன்” இனிய குரலில் சொன்னபடி விபீசனின் இழுவைக்கு நடந்த மகேஸ்வரி அழகான புன்னகை ஒன்றையும் சிந்திப்போனாள்.

தொப்பென சோபாவில் விழுந்து தலையில் கை வைத்துக் கொண்டார் சுந்தர்ராமன். எதையெதையோ புலம்பியபடி அருகில் நின்றிருந்தாள் தெய்வானை.




What’s your Reaction?
+1
27
+1
25
+1
2
+1
3
+1
1
+1
1
+1
0
Subscribe
Notify of
guest

0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!