Serial Stories அன்பெனும் ரகசியம்

அன்பெனும் ரகசியம்- 8

 8

திருச்சி பேருந்து நிலையத்தில் இறங்கியதும், சில நிமிடக் காத்திருப்பிற்குப் பின், தான் பிறந்து வளர்ந்த கிராமத்திற்குச் செல்லும் மினி பஸ் வர அதில் ஏறினான் கோடங்கி ராஜய்யன். 

“நாம இப்ப எங்கே போறோம்?” சரவணன் கேட்க,

“நான் பொறந்து வளர்ந்த ஊருக்குப் போறோம்”

 “அங்க யாரு இருக்காங்க?… உங்க அம்மாவா?” குழந்தைத்தனமாய்க் கேட்டான் சிறுவன்.

 “ஹும்… அந்தக் கொடுப்பினையெல்லாம் எனக்கேது?.. அப்பன்… அம்மா ரெண்டு பேருமே நான் சின்னதா இருக்கும் போதே போய்ச் சேர்ந்திட்டாங்க… என் கூடப் பொறந்த ஒரே அக்கா மட்டும் அங்க இருக்காங்க” என்றான் ராஜய்யன்.

 “அவங்க என்னை வீட்டுக்குள்ளார விடுவாங்களா?” பரிதாபமாய்க் கேட்டான்.

 “தம்பி… நாங்கெல்லாம் வறுமை ஜீவன்கள்தான்… ஆனா மனசாட்சி உள்ளவங்க… கஷ்டப்படறவங்க எல்லோரையும் ஏத்துக்குவோம்!… நாங்க திங்கற சோத்துல ஒரு கவளத்தைக் குடுத்தாவது பசியாத்துவோம்!…ஆமாம் உங்கப்பா எப்படி?… என்ன தொழில் பண்றார்?”

 “ஆபீஸுக்கு வேலைக்குப் போவார்”

 “என்ன ஆபீஸ்?”

 “தெரியாது!… ஆபீஸுக்குப் போவார்… அவ்வளவுதான் தெரியும்”

கோடங்கி ராஜய்யனின் அக்கா பூமணி, பெரிய உருவத்தோடு, அவனைப் போலவே ஜடா முடியோடு, நெற்றியில் பெரிய குங்குமப் பொட்டோடு, பார்க்கவே அச்சமூட்டும் விதத்தில் இருந்தாள்.

அவளைக் கண்ட மாத்திரத்தில் கோடங்கியின் பின்னால் ஒதுங்கினான் சரவணன்.

 “ராஜய்யா… யாருடா பொடியன்?” கேட்டாள். குரல் கணீரென்று ஒலித்தது.

 சரவணன் தன்னுடன் வந்து சேர்ந்த கதையை தன்னுடைய பாணியில் ராஜய்யன் சொல்ல, “பாவப்பட்ட ஜென்மம்டா இவன்?… அப்பன் இருந்தும் அவன் கூடப் பொழைக்க முடியாத அனாதையாயிட்டானே?… என்ன பண்ணப் போறே… இவனை?” கேட்டாள்.

 “அது தெரியாமத்தானே உன்னைத் தேடி வந்திருக்கேன்?… சொல்லு என்ன பண்றது?”

 சரவணனை அருகில் அழைத்து அவன் முகத்தைக் கூர்ந்த பார்த்த அந்த பூமணி, “டேய்… இவன் சாதாரண பிறவியல்லடா… ஏதோவொரு தனி சக்தியிருக்கு இவனுக்குள்ளார!… இவன் நெற்றியைப் பார்த்தியா?… சிவபெருமானுக்கு நெற்றிக் கண் இருக்கற மாதிரி இவன் நெற்றில ஒரு தழும்பு… அது ஞான அடையாளம்டா” என்றாள்.

 “க்கும்… அப்படி இருந்தா இவன் ஏன் இப்படி கோடாங்கியோட ஒட்டிக்கிட்டுத் திரியறான்?” 

 அப்போது வேக, வேகமாய் உள்ளே வந்தான் மூக்கையன்.  அடுத்த தெருவில் இருப்பவன். அவனுடன் அவன் தம்பியர் இருவரும் வந்திருந்தனர்.  இருவர் முகத்திலும் கோபம் உலையாய்க் கொதித்துக் கொண்டிருந்தது.

 “என்ன மூக்கையா?… என்ன பிரச்சினை?”

 “ஆத்தா…. என் வீட்டு பீரோவிலிருந்த என் பாட்டன் காலத்து நகைப்பொட்டியைக் காணோம் ஆத்தா!… உள்ளார அந்தக் காலத்து நகைகள் இருக்கு ஆத்தா!… நீதன் மை போட்டுக் கண்டுபிடிச்சுச் சொல்லணும் ஆத்தா” மூக்கையன் அழுது விடுபவன் போல் சொல்ல,

 “எத்தனை நாளாச்சு காணாமல் போயி?”

“ரெண்டு நாள் ஆச்சு… “

 “ரெண்டு நாளா என்ன… பொண்டாட்டி தலைல பேன் பார்த்திட்டிருந்தியா?” சொல்லியவாறே ஒரு வெற்றிலையை எடுத்து உள்ளங்கையில் வைத்து அழுந்தத் தேய்த்து அதன் அழுக்கைத் துடைத்தாள்.  பின்பு, ஒரு சிறிய டப்பாவிலிருக்கும் கண் மை போன்றதொரு மையை எடுத்து அந்த வெற்றிலையின் மத்தியில் வைத்து, அவள் நெற்றியிலிருப்பதைப் போலவே ஒரு பெரிய பொட்டு வைத்தாள்.  வைத்து விட்டு கண்களை மூடி எதையோ முணுமுணுத்தாள்.

பின்பு சரவணனைக் கூப்பிட்டு, “தம்பி… இங்கவா… இந்தக் கருப்பு மைல ஏதாச்சும் தெரியுதா உனக்கு?” கேட்டாள்.

தயக்கமாய் எழுந்து வந்து அந்தக் கருப்பு மையை உற்றுப் பார்த்து விட்டு, உதட்டைப் பிதுக்கினான் சரவணன்.

 “என்னப்பா… என்ன தெரியுது?”

 “ஒண்ணுமே தெரியலை”

 “நல்லா… கண்களைத் தேய்ச்சிட்டுப் பாருப்பா” சற்று அதட்டலாகவே சொன்னாள் அந்த பூமணி.

இப்போது சரவணன், “ம்ஹும்… ஒண்ணுமே தெரியலை… கருப்பு மைதான் தெரியுது” என்றான்.

 அவனருகில் வந்து அமர்ந்து, தணிவான குரலில், “சரவணா… எதுக்கும் பயப்படாம … அதுல என்ன தெரியுதோ அதை அப்படியே சொல்லுப்பா” என்றான் கோடங்கி ராஜய்யன்.

 “அய்யோ… எனக்கு ஒண்ணுமே தெரியலை” சரவணனும் பெரிய குரலில் சொல்ல,

ராஜய்யனுக்கும் அந்த சந்தேகம் வந்தது, தன் அக்காவைப் பார்த்து, “பூமணி… பையன் பொய் சொல்ல மாட்டான்… உண்மையிலேயே ஒண்ணும் தெரியலையோ என்னவோ?” என்றான்.

மீண்டுமொருமுறை கண்களை மூடி, சொல நிமிடங்களுக்குப் பிறகு திறந்து, “தம்பி… இப்பப் பாரு” என்றாள் பூமணி.

சரவணன் முன்பு சொன்னது போலவே, “ஒண்ணும் தெரியலை” என்றான்.

கோபத்துடன் ஒரு பெருமூச்சை இழுத்து விட்ட பூமணி, தன் கையிலிருந்த வெற்றிலையைத் திருப்பித் திருப்பி பார்த்து விட்டு, “இந்த வெற்றிலைல மை போட்டா எப்படித் தெரியும்?” என்று சொல்லி அதை வீசியெறிந்து விட்டு, வேறொரு வெற்றிலையை எடுத்து அதில் மை தடவி விட்டு மந்திரம் ஓதினாள்.

மூக்கையன் “திரு… திரு”வென்று விழித்தபடி அந்த வெற்றிலையையே பார்த்தபடி அமர்ந்திருந்தான்.

கண்களைத் திறந்த பூமணி, “தம்பி… இப்பப் பாருப்பா” என்றாள்.

மறுபடியும் எதிர்மறை பதிலே வர, “ராஜய்யா.. பயல் பொய் சொல்றான் போலிருக்கே?” என்றவள், தலையைத் தூக்கி எல்லோரையும் ஒரு பார்வை பார்த்து விட்டு, “வேற யாராச்சும் குழந்தைகள் இருக்காங்களா?” கேட்டாள்.

மூக்கையனுடன் வந்திருந்த ஒருவன் ஓடிப் போய், தெருவில் விளையாடிக் கொண்டிருந்த ஒரு சிறுவனை அழைத்து வந்து, அவனைப் பார்க்கச் சொன்னான்.

அவனோ, “ஒரு எழவுமே தெரியலை” என்று அவன் பாணியில் சொல்லி விட்டு ஓடியே போனான்.

நொந்து போன மூக்கையன், “என்ன தாயி… இப்படி ஆகிப் போச்சே…. எல்லாம் பழைய பரம்பரை நகைக… சொக்கத் தங்கம்… இன்னிக்கு ரேட்டுக்கு சுத்தமா எழுவது… எம்பது லட்சம் போகும்” என்றான்.

அப்போது யாரும் எதிர்பாராத விதமாய், “அந்தப் பெட்டி எங்கிருக்குன்னு எனக்குத் தெரியும்” என்றான் சரவணன்.

 “அடப்பாவி… இப்பத்தானே வெற்றிலை மையைப் பார்த்து ஒண்ணுமே தெரியலைன்னு சொன்னே?.. இப்ப எப்படி உனக்குத் தெரிஞ்சுது?” கோபமாய்க் கேட்டாள் பூமணி.

 “எனக்கு வெத்தலை மையில தெரியல!  இப்ப என் மூக்குக்கு அந்தப் பழைய இரும்புப் பெட்டியோட வாசம் இங்க எங்கியோ பக்கத்திலிருந்து வருது”

எல்லோரும் அவனை வினோதமாய்ப் பார்த்து, “இவனுக்கென்ன கிறுக்கா?” கேட்டனர்.

“எல்லாரும் என் கூட வாங்க… நான் காட்டறேன் அந்தப் பெட்டியை” சொல்லி விட்டு எழுந்து மோப்பம் பிடித்துக் கொண்டே நடந்தான்.

எல்லோரும் அவனைப் பின் தொடர்ந்தனர்.




 

மூக்கையனின் இரண்டு தம்பிகளும் ஆர்வத்தோடு ஓட. மூக்கையன் மட்டும் இறுகிய முகத்தோடு நடந்தான்.

தெருவில் இறங்கி வேக வேகமாய் நடந்த சரவணன் அடுத்த தெருவிற்குள் நுழைந்து, முன் புறம் நிறைய காலி இடம் இருந்த ஒரு வீட்டின் மூங்கில் கேட்டைத் தள்ளிக் கொண்டு உள்ளே சென்றான். 

மூக்கையனுக்கு முகம் வியர்த்து, இதயம் “திடும்… திடும்” என அதிர்ந்தது.

வீட்டின் வடக்கு காம்பௌண்ட் சுவற்றின் அருகிலிருந்த அகண்ட கிணற்றருகே போய் நின்ற சரவணன், “இதுக்குள்ளார இருந்துதான் வாசம் வருது… கூடவே புறா எச்சத்தோட வாசமும் வருது” என்று சொல்ல,

மூக்கையனின் தம்பிகளில் ஒருவன், பாய்ந்து சென்று கிணற்றுப் படிகளில் நிதானமாக நடந்து சென்று தண்ணீருக்குள் பார்த்தான். அப்போது சரவணன் சொன்ன புறா எச்சம் ஞாபகத்திற்கு வர, கிணற்றுச் சுவற்றின் உட்புறமிருக்கும் பெரிய புறாக் கூட்டை ஆராய்ந்தான்.

கையை உள்ளே விட்டுத் தேடினான். ஏதோவொன்று கெட்டியாக கையில் பட, சுண்டினான், இரும்புச் சத்தம் கேட்டது. “இருக்கு… இங்கே இருக்கு” என்று உள்ளிருந்தபடியே கத்தினான் மூக்கையனின் தம்பி.

அதை கேட்டதும் இன்னொரு தம்பி, “இரு… இரு” நானும் வர்றேன் என்று சொல்லி, கிணற்றுப் படிகளில் நடந்து உள்ளே இறங்கினான்.

சில நிமிடங்களில் இருவரும் அந்தப் பழைய கால இரும்புப் பெட்டியோடு மேலே வந்தனர்.

தம்பிகள் இருவரும் மூக்கையனை முறைக்க, அவன் முகத்தில் ஈயாடவில்லை.  இருந்தாலும் அதைச் சமாளிக்கும் பொருட்டு, “திருடினவன் தெருவில் கொண்டு போனால் யாராவது பார்த்து விடுவார்கள்னு இங்க ஒளிச்சு வெச்சிட்டுப் போயிருக்கான்!…” என்றான்.

“இந்தப் பொட்டி… உன் வீட்டுல எந்த இடத்துல இருக்கு?ன்னு அவனுக்கெப்படித் தெரியும்!… அதே மாதிரி… இந்தக் கிணற்றுக்குள்ளார புறாக் கூடு இருப்பது அவனுக்கு எப்படித் தெரியும்!… இதெல்லாம் தெரிஞ்சிருக்குன்னா… ஒண்ணு அவன் இந்த வீட்டுக்கு வாடிக்கையா வந்து போறவனா இருக்கணும்!… இல்லேன்னா… நீயோ… உன் மகனோதான் இருக்கணும்” என்றான் முக்கையனின் சின்னத்தம்பி.

 “அடப்பாவி… கூடப் பொறந்த அண்ணனையே சந்தேகப்படறியா நீ?”

 “மொதல்ல உன் மகனை வரச் சொல்லு”

 “அவன் வெளியூர் போய் பத்து நாளாச்சு” என்றான் முக்கையன்.

 அப்போது,  “இந்தப் பெட்டியோட வாசம் வேறெங்கிருந்தோ மறுபடியும் வருது” சொல்லி விட்டு அங்கிருந்து தெருவுக்கு வந்து தன் கால் போன போக்கில் நடந்தான் சரவணன்.

 “எல்லோரும் குழப்பத்துடன் அவனைப் பின் தொடர்ந்தனர்.  




What’s your Reaction?
+1
9
+1
10
+1
0
+1
0
+1
2
+1
0
+1
0
Subscribe
Notify of
guest

0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!