Serial Stories உயிராய் வந்த உறவே

உயிராய் வந்த உறவே-7

7

“அவர்கள் முகம் எப்படி சுருங்கி போனது பார்த்தீர்கள்தானே? பிறகும் ஏன் அப்படி செய்தீர்கள் ?”வாணி தைரியமாக விபீசனின் முகம் பார்த்து கேட்டாள். அவள் மனதினுள் மகேஸ்வரியின் வாடிய முகம் இன்னமும் இம்சித்தபடி…

“அந்த வேதனை எனக்குத் தெரியும்.உனக்கும் தெரிய வேண்டுமல்லவா?

இனியொரு முறை தவிர்க்கவோ பொய் சொல்லவோ நீ நினைக்க கூடாது” சொன்னபடி நீரை அள்ளி குதிரை மீது ஊற்றினான்.மென்மையான பிரஸ்ஸினால் அதன் உடலை தேய்த்து விட ஆரம்பித்தான்.

அவனுக்கு மிக பழக்கமான செல்லப்பிராணி இது. அங்கே சென்னை வரும்போது கூட இந்த குதிரையை பிரிய மனமில்லாமல் உடன் கூட்டி வந்திருந்தான். இதோ இப்போது அதனை குளிப்பாட்டும் விதத்திலேயே அவனின் பாசம் தெரிகிறது. வலிக்குமோ என்ற மென்மையுடன் குதிரை உடலில் பதிந்த அவன் முரட்டுக் கரங்களை பார்த்தாள்.

 அவளையறியாமல் ஒரு பெருமூச்சு எழுந்தது. இது போலொரு மென்மையை அனுபவிக்க முடிந்தால்… அவளிடமெல்லாம் எப்போதும் கறாரும் கண்டிப்பும்தான்.

“எதற்காக என் கண்மணியை முறைக்கிறாய்?” அவனிடம் வழக்கமான அதட்டல்.

 பெயர் வைத்திருக்கிறான் பார் கண்மணியாம். இப்படியா குதிரையை கொஞ்சிக் கொண்டிருப்பான்… எரிச்சலுடன் முகத்தை திருப்பிக் கொண்டாள். இந்த லட்சணத்தில் இவன் இருந்து கொண்டு திருமண சம்மதம் கேட்கிறான். இவனையெல்லாம் காதலிப்பதை நினைத்துக் கூட பார்க்க முடியவில்லை. வாணி வேகமாக அந்த இடத்தை விட்டு நகர்ந்தாள்.

“எனக்கு பதில் சொல்லாமலே போகிறாய்” என்ற அவன் குரலை காற்றோடு விரையமாக்கினாள்.

“ஏய் கண்டிப்பாக இந்த பாலத்தில் நடக்கத்தான் வேண்டுமா?” அவள் குரல் நடுங்க தோழி சிரித்தாள்.

“என்னடி பயம்?”

“கயிற்று பாலம். காலை வைத்ததும் கிடுகிடுவென்று ஆடுகிறது. எனக்கு பயமாக இருக்கிறது”

“நான் இருக்கிறேன் வா” இருவரும் கை பிடித்துக் கொண்டு பாலத்தில் கால் வைக்க பாலம் ஆடத் துவங்கியது. 

“ஐய்யய்யோ” அலறியவளை வாயில் விரல் வைத்து எச்சரித்தாள் தோழி.

அடியில் ஓடும் ஏரி தண்ணீர் அத்தனை ஆழமில்லை.இருந்தாலும் அவள் நீச்சலில் தேர்ந்தவள். பேசாமல் நீருக்குள் விழுந்து நீந்தி போய்விட்டால்தான் என்ன அவள் மனம் சிந்திக்க ஆரம்பித்தது. அதை உணர்ந்த தோழி வலுக்கட்டாயமாக அவள் கைப்பற்றி இழுத்தாள்.

” நீச்சலடிப்பதெல்லாம் ஆகாது தாயே! ஒழுங்காக வா!” இந்த இழுவையில் மேலும் பாலம் கிடுகிடுக்க அலறியபடி தடுமாறியவள் விழுந்தது அவன் மார்பில்.

 எதிர்ப்புறமிருந்து இவர்கள் இருவரின் விளையாட்டுகளை பார்த்தபடி வந்தவன் தடுமாறி விழுந்தவளை சரியாக தன்மார்பில் ஏந்திக் கொண்டான். சூடாய் தன் கன்னம் தொட்ட அவன் மூச்சுக்காற்றில் வயமிழந்து அவனைப் பார்க்க இரு ஜோடி விழிகளும் ஒன்றுடன் ஒன்று கலந்து காதல் கடலுக்குள் கயலென நீந்த தொடங்கின. பக்கத்தில் நின்றிருந்த தோழி பலமுறை கைத்தட்டி அழைத்த பின்பே அவர்கள் மௌனம் கலைந்தது.

தலையை உலுக்கி உடல் சிலிர்த்துக் கொண்டாள் வாணி. ஷப்பா என்ன காதல்! அவள் மனதினுள் ஒருவகை ஏக்கம். 

“எப்போதும் கனவு…ஏதோ கற்பனை… இவளெல்லாம் எப்படி உருப்பட போகிறாளென்று தெரியவில்லை” காட்டமாக ஒலித்தது விபீசனின் குரல்.

 தனது கனவு உலகத்திலிருந்து திரும்பியவள் அவனுடைய நியாயமான குற்றச்சாட்டிற்கு தலைநிமிர்த்த முடியாமல் உணவு தட்டிற்குள் கவிழ்ந்து கொண்டாள்.

“சும்மாயிரு விபா. வாணி சின்ன பெண். எல்லாம் சரியாகிவிடுவாள்” பார்வதி மகனை அதட்டினாள்.




ஆமாம் சீக்கிரமே சரியாக வேண்டும் நினைத்துக் கொண்டாள் வாணி.மறந்து போ மனமே…என்று தன் மனதை அலைக்கழித்த நினைவுகளை ஒதுக்க முனைந்தாள்.

“காரப் பணியாரம் பிடிக்குமாடா?” பரிவுடன்  கேட்ட மகேஸ்வரியின் குரலுக்கு அவள் கை நடுங்க துவங்கியது. பதிலின்றி தட்டை வெறித்து அமர்ந்திருந்தாள்.

“காது கேட்காதா உனக்கு?” விபீசன் குரல் கொடுக்க, வேகமாக தலையசைத்து விட்டு எழுந்து விட்டாள்.

“காரம் பிடிக்காது. இனிப்புதான் சாப்பிடுவேன்” கை கழுவி விட்டு அறைக்குள் நுழைந்து கொண்டாள். விபீசனின் கோப மூச்சும் மகேஸ்வரியின் கண்ணீர் மூச்சுமாக சாப்பாட்டு அறை வெப்பமாய் தவித்தது.

சுந்தர்ராமன் தனது அரசியல் அதிகாரத்தை வைத்து வாணியை எல்லா இடங்களிலும் தேட ஆரம்பித்திருந்தார். வயது பெண் என்றதுமே எல்லோரும் கேட்ட கேள்வி அவளுக்கு காதல் இருக்கிறதா என்பதுதான்.

பதில் சொல்ல முடியாமல் விழித்தார்கள் சுந்தர்ராமனும் தெய்வானையும். வாணியின் தோழர்களை விசாரித்து கல்லூரியில் அலசி இறுதியாக அவர்கள் வந்து நின்ற இடம் விசாகன்.

அவன் அந்தக் கல்லூரியில் சேர்ந்து ஆறு மாதங்கள் தான் ஆகியிருந்தது. கடந்த ஒரு மாதமாக விசாகனும் வாணியுமே அடிக்கடி தனிமையில் பேசிக் கொண்டிருந்தது தெரிய வந்தது. எல்லாவற்றிற்கும் மேலாக இப்போது விசாகனையும் காணவில்லை.

கூட்டிக் கழித்து கணக்கு போட்ட சுந்தர்ராமன் “அந்த விசாகனை தூக்குங்கடா” கர்ஜிக்கும் குரலில் தனது ஆட்களிடம் சொல்லிக் கொண்டிருக்கும் போதே, “கொஞ்சம் தள்ளுங்க” என்றபடி அவர்களருகே வந்து நின்றவன் விசாகனே…

“ஏய் யாருடா நீ?”

“இந்த காலேஜ் ஸ்டுடென்ட்ங்க. என் பேரு விசாகன். இப்படி வாசலை அடைத்து நின்று கொண்டால் நான் உள்ளே எப்படி போவதாம்? தள்ளுங்க…” சுந்தர்ராமனின் தோள்பற்றி நகர்த்தி விட்டு கல்லூரிக்குள் நடந்தான்.

“ஏய் எந்த விசாகன்டா நீ?”

சுந்தர்ராமனை ஏற இறங்க பார்த்தவன் “கொஞ்சம் மரியாதையாக பேசுகிறீர்களா?” என்றான்.

 அப்பொழுது அவர்கள் டிபார்ட்மெண்ட் பையன் ஒருவன் வந்து “சார் நீங்கள் தேடிக் கொண்டிருக்கும் விசாகன்தான் இவன்” என்க சுந்தரராமனுக்கு குழம்பியது.

“நீ வாணி கூட போகலையா?”

“நான் ஏன் வாணியுடன் போக வேண்டும்? அது சரி வாணி எங்கே போயிருக்கிறாள்?”

“நடிக்காதடா வாணியை எங்கே?” சுந்தர்ராமன் அவன் சட்டையை பிடித்தார்.

“ஹலோ…மேலே கை வச்சீங்கன்னா நல்லாயிருக்காது…”விசாகனும் எகிற கல்லூரி நிர்வாகி அவசரமாக ஓடி வந்தார்.

” சார் விசாகனுக்கு எதுவும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. அதற்கு அவன் இங்கே நிற்பதே சாட்சி. அவனை விடுங்கள். நாம் வேறு யோசிக்கலாம்” என்று பேசி இருவரையும் பிரித்து விட்டார்.




What’s your Reaction?
+1
34
+1
25
+1
1
+1
3
+1
2
+1
2
+1
1
Subscribe
Notify of
guest

0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!