Serial Stories உயிராய் வந்த உறவே

உயிராய் வந்த உறவே-6

6

“என்ன உளறுகிறாய்?” தகவல் கொண்டு வந்து கொடுத்த வேலையாளிடம் எரிந்து விழுந்தாள் தெய்வானை.

“நிஜம்தான்மா. வாணி அம்மாவை அவர்கள் அறையில் காணவில்லை”

காலை உணவை தயார் செய்து டேபிளில் எடுத்து வைத்து விட்டு இன்னமும் உண்ண இறங்கி வராத மகளை அழைத்து வருமாறு வேலையாளை ஏவியிருந்தவள் அவள் சொன்ன செய்திக்கு  யோசனையுடன் புருவம் நெறித்தாள்.வேகமாக வீடு முழுவதும் மகளை தேடலானாள். அவள் மனதிற்குள் ஒரு அபாய மணி ஒலிக்க ஆரம்பித்தது.

சிறிது நாட்களாகவே ஏதோ சரியில்லை எனும் உறுத்தல்தான் அவளுள். இந்த மனிதரிடம் அப்போதே சொன்னேன்,எதையாவது காதில் வாங்கினால் தானே? தனக்குள் புலம்பியபடி வீட்டின் முன்னால் இருந்த அலுவலக அறைக்கு போனாள். அறைக்குள் நான்கு பேருடன் தீவிரமாக பேசிக் கொண்டிருந்த சுந்தர்ராமன் இவளை முறைத்தார். வேலையில் இடையூறு செய்ய வேண்டாமாம்…

தெய்வானை போகவில்லை, வாசலிலேயே கைகளைக் கட்டிக் கொண்டு நின்று கொண்டாள். அதனை பார்த்தவர் சீக்கிரமே தனது பேச்சுக்களை முடித்துக் கொண்டு வந்து “என்ன விஷயம்?”  எரிந்து விழுந்தார்.

“வாணியை காணவில்லை” சொல்லும்போதே தெய்வானையின் குரல் தளுதளுத்தது.கண்களில் நீர் வடிய ஆரம்பித்து விட்டது.

சுந்தர்ராமனுக்கும் அதிர்ச்சி தான்.”நன்றாக பார். எங்கே போயிருப்பாள்?”

“பார்த்துவிட்டேன்.எங்கேயும் இல்லை.எனக்கு பயமாக இருக்கிறது”

“அவளுக்கு போன் போட்டாயா?”

தெய்வானை இல்லை என தலையசைக்க “முட்டாள் இது கூட தெரியாதா?” என்றபடி தன் போனை எடுத்து நம்பரை அழுத்தினார்.வாடிக்கையாளரை தொடர்பு கொள்ள முடியாது என்றது போன்.

“அவள் போன் ஆக்டிவாக இல்லைதானே?”  விரக்தியாய் கேட்டாள் தெய்வானை. சுந்தர்ராமன் யோசனையில் மண்டையை சொரிந்தார்.

“இரவு படுக்கப் போன மகள் காலையில் காணாமல் போய்விட்டாள். போனை தொடர்பிலா வைத்திருப்பாள்?” கசப்பாய் கேட்டாள்.

“இல்லை அப்படியில்லை. பிடிச்சிடலாம்… பிடிச்சிடலாம்” மனைவிக்கு போல் தனக்குத்தானே சொல்லிக்கொண்ட சுந்தரராமன் தேடுதல் வேட்டையில் இறங்கினார்.

வாசலில் நிழல் ரூபம் ஓரக்கண்ணில் தெரிய, வெடித்து விடுமோ என துடித்த இதயத்தை சமன்படுத்துவது போல் தன் இடது மார்பை அழுத்திக் கொண்டாள் வாணி. 

“ஏன் இப்படி செய்கிறீர்கள்?” சிம்மை உடைத்தவனை அதட்டலாய் கேட்க நினைத்தாள்தான். குரல் மேலே எழும்பவில்லை, ஆனாலும் விபீசனின் செயலை ஆட்சேபிக்க தவறவில்லை அவள்.




சேலையின் சரசரப்போடு அவள் அருகே வந்து நின்ற பெண் பேச்சின்றி அவளையே பார்த்தபடி இருக்க ,நிமிர துணியவில்லை வாணி. அவள் மார்பின் மீது அழுத்தியிருந்த கையை தட்டி தள்ளினான் விபீசன்.

” அப்படி ஒன்றும் உன் நெஞ்சம் வெடித்து விடாது.பயப்படாதே” எள்ளலாய் சொன்னான்.

“விபா நீ உள்ளே வா” பார்வதி அதட்டலாய் மகனை அழைக்க விபீசன் எழுந்து போனான். இப்படி இவனை மிரட்டும் வித்தையை இந்த ஆன்ட்டியிடம் கேட்டு தெரிந்து கொள்ள வேண்டும் படபடப்பான அந்த நிலையிலும் இப்படி ஒரு எண்ணம் வாணியின் அடிமனதில் ஓடியது.

எதிரே நின்றவர் தன் கையை வாணியின் தோளில் வைக்க, பஞ்சு போல் மென்மையும் கதகதப்புமாக இருந்தது அந்த தொடுகை. வாணி கண்களை மூடி அந்த தொடுதலை உள்வாங்கினாள். அவள் கன்னங்கள் துடைக்கப்பட அப்போதுதான் வழிந்த கண்ணீரை உணர்ந்தாள்.

நிமிர்ந்து பார்க்க எதிரே நின்றிருந்த பெண்ணும் கண்கலங்கி நிற்க, கூடாது என்று நினைத்தாலும் மீறி வாணிக்கு கண்ணீர் வழிந்தபடியே இருந்தது.

“அம்மு” இதழ் துடிக்க அழைத்தவர் அப்படியே அவள் தலையை இழுத்து தன் வயிற்றோடு அணைத்துக்  கொண்டு விட தன்னை மறந்து அவரோடு ஒட்டிக்கொண்டாள் வாணி.

இருவருமாக ஒருவர் அணைப்பில் மற்றவர் எவ்வளவு நேரம் இருந்தார்களோ? மாணிக்கவேலின் லேசான செருமல் சத்தம் கேட்டு மனமின்றி விலகினார்கள்.

சை.. இது என்ன இப்படி சரணாகதி போல்…?தன் செய்கையில் கொஞ்சம் வெட்கினாள் வாணி.

மாணிக்கவேல் பரிவுடன் “இப்போது சந்தோசம் தானே மகி?” எனக் கேட்க, மகேஸ்வரி வாணியின் தலை வருடியபடி தலையாட்டினார்.

“என் செல்லம்… கண்ணு…” என்றபடி அவர் வாணியின் கன்னம் கிள்ளி தன் உதட்டில் வைத்துக்கொள்ள கூச்சத்துடன் எழுந்து விட்டாள் வாணி.

திடுமெற எழுந்து நின்று விட்டவளை இருவரும் திகைப்பாய் பார்த்தனர். தவறேதும் செய்து விட்டோமோ என்ற கவலை இருவர் முகத்திலும். “பாத்ரூம்” தெளிவற்ற குரலில் முனங்கினாள்.

மாணிக்கவேல் உட்புறம் கைகாட்ட ,வேகமாக  நடந்தவள் கை இழுபட திரும்பி பார்த்தாள். மகேஸ்வரி இவள் கையை விட மனமில்லாமல் பிடித்தபடி நிற்க, லேசான புன்னகையுடன் விரலை உருவிக் கொண்டு வீட்டின் பின்பக்கம் நடந்தாள்.

“அப்படி என்ன அவசரம் ?கையை உதறிவிட்டு வருமளவு?” சிடு சிடுத்தான் விபீசன். அவன் பாத்ரூம் கதவின் மீது சாய்ந்தபடி நின்றிருந்தான்.

இப்போது இவனுக்கு என்ன பதில் சொல்வது திரு திருத்தவள் சட்டென வயிற்றை பிடித்துக் கொண்டாள். வாந்தி என்பது போல் சைகை செய்து “ஓவ்” என ஓங்கரித்தாள். விபீசன் அவசரமாக பாத்ரூம் கதவை திறந்து விட்டான்.

” போ போ” வேகமாக உள் நுழைந்து ஆசுவாச பெருமூச்சு விட்டாள்.

“ஹெல்ப் வேண்டுமா?₹ வெளியிலிருந்து அவன் சத்தம் கேட்க அவசரமாக மீண்டும் “உவ்வே” சத்தம் எழுப்பினாள். கதவை திறந்து உள்ளே வந்து விட்டவன் வேகமாக அவள் நெற்றியைப் பிடித்து தலையை தாங்கினான்.

“டிராவல் சிக்னஸ் உனக்கு அதிகமாக இருக்குமாடா?” குரல் குழைய அவன் விரல்கள் நெற்றி பொட்டை இதமாக அழுத்தின. இந்தப் பரிவின் முன் நடிக்க முடியாது போக ,மெல்ல அவன் கைகளை விலக்கி விட்டு சுடிதார் ஷாலால் வாயை துடைத்துக் கொண்டாள். 

“வாந்தி இல்லை சும்மா…” தடுமாறியவளை முறைத்துவிட்டு பாத்ரூம் கதவை சட்டென அறைந்து அறைந்து சாத்தி வெளியேறினான்.




முகம் கழுவி வெளியே வந்தவளின் முன் பெரிய கண்ணாடி டம்ளர் நீட்டப்பட்டது .”உப்பு போட்ட எலுமிச்சை ஜூஸ்மா. வாந்திக்கு நல்லது. முழுவதும் குடித்து விடு” பார்வதி சொல்ல புன்னகையோடு வாங்கிக் கொண்டாள்.

மகேஸ்வரி வாணி அமர்ந்திருந்த சோபாவிற்கு எதிர் சோபாவில் அமர்ந்து கண்ணெடுக்காமல் அவளை பார்த்தபடி இருந்தாள். அவள் பக்கம் விழிகளை விடாமல் தன் ஜூசில் கவனமாக இருந்தாள் வாணி.

“இரண்டு போதும்”

” இல்லை, நான்கு உடைக்க வேண்டும்”

 அண்ணன் தம்பி இருவரின் குரல் கேட்டு வாணி திரும்பி பார்க்க இரண்டு கையிலும் இரண்டு இளநீர் குழையுடன் உள்ளே நுழைந்தனர் இருவரும்.

“செவ்விளநீர் இரண்டு,பச்சை இளநீர் இரண்டு. இப்போதிற்கு நான்கு போதும்” விபீசன் சொல்ல விசாகன் உடனே அறிவாளால் இளநீரை சீவ துவங்கினான். அவனது ஓரக்கண் பார்வையோ தன் தலையை சீவும் ஆசை இருப்பதை சொல்ல வாணி மிடறு விழுங்கினாள்.

“இளநீர் யாருக்கு?”

“உனக்குத்தான் கண்ணு. வாந்தி வருகிறது பார். அதற்கு ரொம்ப நல்லது” மாணிக்கவேல் சொல்ல திடுக்கிட்டாள்.

 விசாகன் வெட்டிக் கொண்டிருந்த இளநீர் வடிவை பார்த்தவள் வயிற்றுக்குள் தளும்பி ஆடிக்கொண்டிருந்த ஜூஸை வயிறு வருடிப் பார்த்தாள்.

“ம்ஹூம். இப்போது வேண்டாம் என்னால் குடிக்க முடியாது”

“அடடா பாதி வயிறோடு இருக்க கூடாதும்மா. இரண்டும் இரண்டும் நான்கு இளநீர் குடித்து விட்டாயானால் பிறகு வாந்தி என்பதே உன் ஜென்மத்திற்கும் வராது” விபீசன் அடித்து பேச, அடேய் இத்தனையையும் குடித்த பிறகு எனக்கு ஜென்மம் என்ற ஒன்று இருக்குமா என்றே தெரியவில்லையே மனதிற்குள் அலறினாள்.

பாவி ராட்சசன் எப்படி பழி வாங்குகிறான் பார்?

“இல்லை எனக்கு வாந்தியெல்லாம் வரவில்லை விட்டுவிடுங்கள்”

“அட இளநீர் குடிக்க பயந்து கொண்டு உன் வியாதியை மறைப்பாயா? குடிச்சிடு செல்லம்” குழந்தைக்குப் போல் கொஞ்சிய விபீசனை பாவமாய் பார்த்தாள். அவனோ சவால் பார்வையோடு மிரட்டினான்.

“அண்ணா நான் மூக்கை பிடித்துக் கொள்கிறேன். நீங்கள் வாய்க்குள் ஊற்றி விடுங்கள் “விசாகன் உற்சாகமாக அருகே வர விபிசன் சொம்போடு நெருங்க வாணி வேகமாக எழுந்து கொண்டாள்.

“இல்லை எனக்கு டிராவல் சிக்னஸ் எல்லாம் கிடையாது.இங்கிருந்து கொஞ்ச நேரம் தனியாக போக சும்மா சொன்னேன்” வாணி உண்மையை சொல்லி விட,மகேஸ்வரியின் முகம் பொலிவிழந்து சுருநடந்தால்.

 


What’s your Reaction?
+1
30
+1
28
+1
3
+1
1
+1
0
+1
1
+1
1
Subscribe
Notify of
guest

0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!