Serial Stories உயிராய் வந்த உறவே

உயிராய் வந்த உறவே-5

5

“மலையேற ஆரம்பித்து விட்டோம்” விசாகன் அறிவிக்க சன்னல் கண்ணாடியை கீழ் இறக்கினாள் வாணி. கொஞ்சம் கொஞ்சமாக காற்றில் குளுமை சேர துவங்கியது.

பச்சைமலை பெயருக்கேற்றாற் போல் பசுமையும்,குளுமையுமாக

ஆர்ப்பாட்டமாய் வாணியை வரவேற்றது.ஏற்றமான பாதை வயிற்றுப் பிரட்டலை உண்டாக்குவது போல் தோன்றியது.

“வாந்தி வருகிறதா ?மிட்டாய் எதுவும் வாயில் போட்டுக் கொள்கிறாயா?” விபீசன் கண்களை திறக்காமலேயே கேட்டான் .

பிறகுதான் வாணிக்கு உமிழ்நீர் சுரந்து வாந்தி வரும் அறிகுறிகள் தோன்ற ஆரம்பிக்க, வேகமாக இதழ்களை மூடிக்கொண்டு வேண்டாம் என தலையசைத்து விட்டு பின்னால் சாய்ந்து கண்களை இறுக மூடிக்கொண்டாள். அவள் மனதிற்குள் டைப்ரைட்டர்களின் ஒளி டக டகவென…

கூர்ந்து கவனித்து எழுத்துக்களை ஒவ்வொன்றாய் மெனக்கெட்டு அழுத்திக் கொண்டிருந்தாள் அவள். “எக்ஸ்கியூஸ் மீ.நான் புதிதாக ஜாயின் செய்து இருக்கிறேன். எப்படி அடிக்க வேண்டும் என்று கொஞ்சம் சொல்லித் தர முடியுமா?” எதிரே கேட்ட குரலுக்கு ஆச்சரியமாகி நிமிர்ந்தாள்

 அவன் தான் நின்று கொண்டிருந்தான் .முகத்தில் பிரகாசமும் கண்களில் குறும்பும் போட்டி போட்டன.

இங்கேயும் வந்து விட்டாரா…! ஏறிட்டு பார்த்த நொடியே தலை கவிழ்ந்தும் கொண்டாள் அவள். மனக்கண்ணில் அபிநயம் பிடித்து அவன் காட்டிய அடவுகள் ஊர்வலம் போக இன்னமும் பிரமிப்பு அவளுள்.

 மீண்டும் ஒருமுறை அவனது நாட்டியத்தை பார்க்க மனம் ஏங்கியது .ஆனால் அன்று ஒரு நாள் தான் ஆடி காட்டினான் .மறுநாளே சந்திர கலா வகுப்பிற்கு வந்துவிட இவன் மீண்டும் அந்தர்த்தனம் ஆகிவிட்டான்.

வகுப்பில் யாரானாலும் இடையிடுவதை சந்திரகலா விரும்புவதில்லை. எனவே அவ்வப்போது தலை காட்டுவதோடு சரி, நாட்டிய அறைக்குள் கூட வருவதில்லை.

“என்னங்க மேடம் ,சொல்லித் தருவதில் உங்களுக்கு எவ்வளவு கஷ்டமா ?”கையில் பேப்பருடன் இன்னமும் அருகில் நின்றவனை தயங்கி ஓரக் கண்ணால் பார்த்தாள்.

“நாட்டியம் போலத்தான், எனக்கு டைப்பும் அவ்வளவாக வராது” நிறைய தடுமாற்றம் அவள் குரலில்.

“அட இதுக்கு எதுக்கு அழுறீங்க ?இதையும் சொல்லித் தந்துட்டா போச்சு”

அப்போது இவனுக்கு இதுவும் தெரியுமா அவனுக்கான பிரமிப்பு அவளுள் வளர்ந்து கொண்டே போனது. இவன் அறியாத விஷயமே கிடையாதா?

“வாணி” விபீசன் தோள் தொட்டு அசைக்க கண் விழித்தாள். கார் ஒரு வீட்டின் முன் நின்றிருந்தது.

“நம்ம வீடு வந்தாச்சு.இறங்கு ” இவள் பக்க கதவை திறந்து நின்றான்.உனக்கு வேறு வழி கிடையாது நீ இங்கே இறங்கியே ஆக வேண்டும், என்பதான அவன் செய்கையில் லேசான மன திடுக்கிடல் இருந்தாலும் வாணி இறங்கு எனும் கட்டளையை தன் கால்களுக்கு தரவே செய்தாள்.




“அம்மா “என்று அழைத்தபடி விசாகன் வீட்டிற்குள் போக, பரபரப்பாய் உள்ளிருந்து வந்தாள் ஒரு நடுத்தர வயது பெண். “வாம்மா “இவளை வரவேற்றவளின் குரலில் லேசான நடுக்கம்.அத்துடன் பரபரப்பாய் இவள் மேல் படிந்தன விழிகள்.

” வ…வணக்கம். நல்லா இருக்கீங்களா?” சம்பதாயமான வாணியின் விசாரிப்புக்கு “நல்லா இருக்கேன்மா. நீ எப்படி இருக்கிறாய்?” பதில் சம்பிரதாயம் செய்தாள்.

“இதுவரை நன்றாக இல்லை. இனித்தான் கொஞ்சம் உருப்பட போகிறாள்” பதில் சொன்னவன் விபீசன்.

வாணி தலை குனிந்து இருக்க “சும்மா இருடா” மகனை அதட்டினாள்.

அட, இந்த ராட்சசனை கூட அதட்ட ஒருவரால் முடியுமா( தாயை விட ஒன்னரை அடி உயரமும் இரண்டு மடங்கு அகலமும் ஆக நின்றவனை பார்த்து ஆச்சரியப்பட்டுக் கொண்டாள்.

“வாணிம்மா எப்படிடா இருக்கிறாய்?” கனத்த ஆண் குரல் ஒன்று கரகரப்பாய் கேட்க நிமிர்ந்து பார்த்தாள்.

” அப்பா” என முணுமுணுத்தான் விபீசன். மரியாதையாக குவிந்த வாணியின் கையை பற்றி இறக்கியவரின் கண்களில் நீர்த்திரை. கை நடுங்க தலையை வருடினார்.

“உள்ளே வாம்மா” குனிந்து நாசுக்காக கண்களை துடைத்துக் கொண்டார். ஏனோ வாணிக்கும் அழுகை வரும் போல இருந்தது. இவர்களையே எதிர்கொள்ள முடியவில்லையே…அ…அவர்களை எப்படி?

தடதடத்த இதயத்துடன் மெல்ல வீட்டிற்குள் நுழைந்தாள்.

உள்ளே ஹால் ஷோபாவில் அமர்ந்திருந்த விசாகன் பெற்றவர்களை நோக்கி ஒற்றை விரலை நீட்டி ஆர்ப்பாட்டமாய் கத்தினான். “ஒரு மாதம் கழித்து வந்திருக்கிறேன். பெற்ற மகனின் அம்மா என்கிற அழைப்புக்கு பதில் இல்லை. இவளை வரவேற்க எல்லோருமாக வாசலுக்கு ஓடியாகிறது. எனக்கு இப்போதே ஒரு முடிவு தெரிந்தாக வேண்டும். இனிமேல் இந்த வீட்டில் என்னுடைய நிலை என்ன?”

கேட்ட மகனின் தலையில் செல்லமாய் கொட்டினாள் தாய்.”சோறுன்னு ஒண்ணு இனிமே உனக்கு கிடைக்குதான்னு பார்த்துக்கோ. வாலை சுருட்டிக் கொண்டு இருந்தாயானால் ஏதோ கொஞ்சம் தட்டில் போடுவேன். இல்லையென்றால் பட்டினி தான்”

“ஐயோ துயரத்த..”விசாகன் தலையில் கை வைக்க விபீசன் அந்த கையை தட்டி விட்டான். “என்னடா ?”செல்லமாய் அத்ட்டினான்.

“சொல்ல சொல்ல கேட்காமல் இந்த துயரத்தை இழுத்துகிட்டு வந்திருக்கீங்களே, இனி என்னாகுமோ?” வாணியை கை காட்ட அவள் முகம் கன்றியது.

“விசா..” அப்பா மாணிக்கவேல் அதட்ட, முறைப்பாய் முகத்தை வைத்துக்கொண்டு எழுந்து உள்ளே போனான் விசாகன்.

“உட்காரம்மா” பார்வதி அவள் தோள் தொட்டு அமர வைக்க, தரையில் விரித்திருந்த கார்பெட்டில் பார்வை பதித்தவளின் மனதிற்குள் சொல்ல முடியா உணர்வு ஒன்றுடன் சதா சிறகை படபடத்துக்கொண்டிருந்தது பறவை ஒன்று.

“எங்கே?” விபீசனின் சைகை கேள்விக்கு பார்வதி ஏதோ சைகை பதில் சொல்வதை உணர்ந்தாள்.வாசல் போர்ட்டிகோவில் கார் ஒன்று வந்து நின்றது.

“இதோ வந்தாச்சு” பார்வதி குரல் கொடுக்க வாணியின் மன பறவையின் சிறகசைப்பு அதிகமானது. அப்போது விபீசன் “உன் ஃபோனை கொடு “என கை நீட்டினான்.

புகைமண்டி கிடக்கும் ஒரு மர்மலோகத்திற்குள் இருப்பது போன்ற நிலையிலிருந்தவள் அனிச்சையாய் போனை எடுத்து நீட்ட, அதனை வாங்கி பிரித்தவன் உள்ளிருந்த சிம் கார்டை எடுத்து அவள் கண் முன்னாலேயே விரல்களால் அழுத்தி உடைத்தான்.”இந்த சிம் இனி உனக்கு வேண்டாம்” 

வாணி அந்த அதிர்ச்சியில் இருந்து மீளும் முன் வாசலில் நிழலாடியது.




What’s your Reaction?
+1
31
+1
25
+1
3
+1
1
+1
0
+1
0
+1
4
Subscribe
Notify of
guest

0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!