Serial Stories உயிராய் வந்த உறவே

உயிராய் வந்த உறவே-4

4

“இன்றைக்கு எனக்கு கொஞ்சம் உடம்பு சரியில்லை. நீங்களாக கொஞ்ச நேரம் பிராக்டிஸ் பண்ணி பார்த்துட்டு கிளம்புறீங்களா பெண்களா?” சந்திரகலா கேட்க எல்லோரும் தலையசைத்தனர். 

“அக்கா நீங்க இன்னைக்கு சொல்லிக் கொடுங்க” நாட்டிய வகுப்பில் சேர்ந்து இரண்டு நாட்கள் தான் 

ஆகியிருந்த இரண்டு சிறுமிகளும் அவளிடம் கேட்டனர். அவர்களை விட ஒரு மாதம் முன்னால் வகுப்பில் சேர்ந்தவள் என்ற பெருமிதத்தில் நாட்டியத்தில் இறங்கினாள் அவள்.

தா…தை… தித்தித்…தை 

நட்டுவாங்கனார் போல அமர்ந்து தோழி சுரம் சொல்ல சந்திரகலாவை காப்பியடித்தது போல் அவள் ஆடத் துவங்கினாள். தோழிகள் இருவருக்கும் இது ஒரு விளையாட்டு போல் மாறியது. சிறுமிகள் கைதட்டி ஆர்ப்பரிக்க விளையாட்டாக ஏதேதோ ஆடினாள்.

“இதென்ன விளையாட்டு?” அதட்டியபடி உள்ளிருந்து வந்தான் அவன். அதென்ன அனுமதியின்றி நாட்டியம் பயிலும் இடத்திற்கு வருவது? அவனை முறைத்தாள்.

கோவில்,பள்ளி போல இந்த நாட்டிய வகுப்பிற்கும் பின் தொடர்ந்து வந்து விட்டாயா? என முறைப்போடுதான் அன்று அவனை பார்த்தாள். அவனோ வேறு சொன்னான். சந்திரகலா தனது சொந்தம் என்றான்.

இங்கேதான் தங்கியிருப்பதாக தெரியப்படுத்தினான். முகம் திருப்பி அவன் விளக்கங்களை புறக்கணித்தது போல் காட்டிக்கொண்டாலும் அடி மனதில் பதிந்து போயின அவை.

இவளது நாட்டிய பயிற்சியின்போது அறைக்கு வெளியே அவ்வப்போது அவன் தலை தெரிந்தது உண்டு. அச்சமயங்களில் தடுமாறி பின் அபிநயங்களை தொடர்வாள்.இன்றோ அறைக்குள்ளேயே வந்து நிற்கிறான்.

“ஒழுங்காக அரை மண்டி கூட போடத் தெரியவில்லை. நீ எப்படி நாட்டியம் பயில்வாய்?” அவன் கேள்வியில் அவளுக்கு கோபம் வந்தது.

“எல்லாம் சரியாகத்தான் செய்கிறேன்.அனைத்துமறிந்தவர் போல் பேச வேண்டாம்”

“இரண்டு முழங்கால்களும் ஒரே அளவில் திரும்பி இருக்க வேண்டும்”அவள் கால்களை பார்த்து சொன்னான்.

அவள் சட்டென நிமிர்ந்து கொண்டு “சொல்வது எளிது செய்து காட்ட வேண்டும்” என்றாள்.

“தாராளமாக” என்றவன் முன்வந்து கால்களை அரைமண்டி நிலையில் வைத்து பாதங்களை தரையில் அழுத்தி மாறி மாறி தட்டி காட்டினான். “இது தட்டடவு”

இரு கைகளையும் தோள்களுக்கு நேராக நீட்டி கட்டைவிரலை மடக்கி நான்கு விரல்களை வானத்தை பார்த்து நீட்டிக்கொண்டு “தையா…தையா” என அபிநயித்தான்.

அங்கிருந்த எல்லோருக்கும் ஒரே நிமிடத்தில் புரிந்து விட்டது,இவன் நாட்டியக்கலை பயின்றவன்.

அவன் தொடர்ந்து ஒவ்வொரு அடவாக அபிநயம் பிடித்து நிறுத்திவிட்டு இவளை பார்க்க, இவள் விழிகளில் ஒருவகை மயக்கமும் மையலும்.

சடாரென்று அழுத்தப்பட்ட பிரேக்கினால் உடல் குலுங்கி விழிப்பு வந்தது வாணிக்கு. ஒரு மாதிரி மலங்க மலங்க விழித்தாள்.




“என்ன?” என்றான் அருகில் அமர்ந்திருந்த விபீசன்.

வாணியின் உடலில் இன்னமும் நாட்டிய அடவுகள் திதும் திதும் என ததும்பி கொண்டிருக்க “என்ன ?”என்றாள் திரும்ப. விபீசன் முகம் கடுத்தது. “கண்ட கற்பனைகளிலேயே மூழ்கிக் கிடக்காதே” கண்களை உருட்டினான்.

உருண்ட கண்களை சந்திக்காமல் பார்வையை தழைத்துக் கொண்டவள் உதடுகளுக்குள் முணுமுணுத்தாள் “போடா”

“அப்படியே தலையில் இரண்டு கொட்டு வையுங்கள் அண்ணா”கார் ஓட்டிக் கொண்டிருந்த தம்பி அண்ணனை தூண்டினான்.

“எதற்கோ?” அவனிடம் பாய்ந்தாள்.

“உன் முட்டாள்தனத்திற்கு” தம்பிக்கு அண்ணன் பதில் சொன்னான்.

“யார் முட்டாள்?” இப்போது பாய்ச்சல் மூத்தவனிடம்.

“உங்களைப் போல் எனக்கு எந்த காரணமும் இல்லை அண்ணா. அது என்னவோ பார்க்கும்போதெல்லாம் இவள் தலையை பெயர்த்து எடுக்க வேண்டும் என்றே தோன்றுகிறது”

அருமையாக மொழிந்த தம்பியின் பேச்சுக்கு அண்ணனுக்கு சிரிப்பு சிரிப்பாக வந்தது.

“காரை நிறுத்துங்கள். நான் இறங்கப் போகிறேன்” கத்தினாள் வாணி.

“பார்த்தாயா சொன்னதை நிரூபிக்கிறாயே?”

“எதை நிரூபித்தேன் ?”சந்தேகமாக கேட்டாள்.

 “உன் முட்டாள்தனத்தை”

வாணிக்கு அழுகை வரும் போல் இருந்தது. நிம்மதியாக சென்று கொண்டிருந்த அவளுடைய வாழ்க்கையில் இடையிட்டதும் இல்லாமல் அதையும் இதையும் பேசி அவள் மனதை கலைத்து தாய் தந்தையை விட்டு பிரித்து கூட்டிச் செல்வதும் இல்லாமல் இருவருமாக இப்படி கிண்டல் பேசுகிறார்களே…

“பேச்சை குறைத்திருக்கிறாள் அண்ணா. சீக்கிரம்…” தம்பி அவசரப்படுத்த அண்ணன் அவள் தலையில் கொட்ட கை ஓங்கினான்.

வாணி பார்வையை வெளிப்புறம் திருப்பிக் கொள்ள வேகத்துடன் உயர்ந்த கை அவள் தலையை தொடும் போது மிக மெதுவாகி மலர் மேல் வண்டென அமர்ந்தது.

“ஹேய் அழுறியா?” விபீசன் குனிந்து அவள் முகம் பார்த்து கேட்க விசாகனும் அவசரமாக பின்னால் திரும்பினான்.

“ஏய்… ஏய்” அலறினாள் வாணி. “அண்ணனும் தம்பியுமாக சேர்ந்து என்னை சாகடிக்கவே முடிவு பண்ணிட்டீங்களா பாவிகளா!?”

“சரி… சரி” என்றபடி தடுமாறிய காரை சீராக்கியவன் “அழுததை மறைக்க என்னை குறை சொல்லியாகிறது” முணு முணுத்தான்.

விபீசன் பேசாமல் வாணியை பார்த்தபடி இருந்தான். கொட்டிய கை இன்னமும் அவள் உச்சந்தலையிலேயே இருந்தது.

“நீ அழுவதால் நாங்கள் எந்த ஏற்பாட்டையும் நிறுத்தப் போவதில்லை” கமிஷன் வியாபாரியின் கறார் குரலில்.

“அதுதான் தெரியுமே. எனக்கும் நிறுத்தும் தேவையில்லை” உச்சந்தலை மேல் தங்கிவிட்ட கையை உதறி தள்ளினாள்.

“அம்மு “கொஞ்சம் குரலை குழைத்து சமாதான பேச்சுடன் அவள் அருகில் சற்று நெருங்கி அமர்ந்தான்.

“எதுவும் சொல்ல வேண்டாம். நான் எல்லாவற்றிற்கும் தயாராகத்தான் இருக்கிறேன்” சற்று முந்தைய  அவன் கறார்தனத்தை தானும் பின்பற்ற முனைந்தாள்.

“விடுங்கண்ணா, இதெல்லாம் பட்டு திருந்துகிற ஜென்மம்” விசாகன் சொல்ல விபீசன் மீண்டும் நகர்ந்து அமர்ந்து கைகளை கட்டிக்கொண்டு தூங்க ஆரம்பித்தான்.




What’s your Reaction?
+1
35
+1
22
+1
3
+1
1
+1
0
+1
2
+1
1
Subscribe
Notify of
guest

0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!