Serial Stories உயிராய் வந்த உறவே

உயிராய் வந்த உறவே-3

3

சந்திரகலா டீச்சர் சிவந்த நிறமும் வாளிப்பான உடலுமாக மிக அழகாக இருந்தார்.”கவலைப்படாதீங்க ஐயா உங்க மகளுக்கு ஆறே மாதத்தில் அரங்கேற்றம் செய்யும் அளவு நாட்டியம் நான் சொல்லித் தருகிறேன் “அவர் குரலில் புல்லாங்குழல்.

அவளுக்கு டீச்சர் பேசுவதும் அசைவதும் நாட்டியமாகவே தோன்றியது. இவர்கள்தான் எவ்வளவு அழகு? கண்ணெடுக்காமல் பார்த்திருந்தாள். தினமுமே டீச்சர் அணியும் சேலையும் நகைகளும் அலங்காரமும் என்று அதற்காகவே நாட்டிய வகுப்பிற்கு வந்தாள்.

“என்னடி ஒரு வாரமாக உன் பாதுகாவலனை காணவில்லை?” தோழி கேட்டபோது, மனதிற்குள் அந்த நினைப்பு இருந்தாலும் வெளிக்காட்டிக் கொள்ளாமலேயே இருந்தாள்.

” அந்த நினைவெல்லாம் எனக்கில்லை” தோள் குலுக்கி கொண்டாள்.

“எந்த நினைவு இல்லை?” திடுமென முன் வந்து நின்று கேட்டவனை இரு பெண்களுமே அதிர்ந்து பார்த்தனர். நாட்டியம் சொல்லிக் கொடுக்கும் இடத்தில் இவனுக்கென்ன வேலை? அவளின் விழிகள் வட்டமாக விரிந்து அவனை பார்த்தபடி இருந்தன.

“இரண்டே இரண்டு இட்லி. அதை சாப்பிட உனக்கென்ன?” விபீசன் அதட்ட வாணிக்கு திணறியது. கல்லுருண்டை போல் தொண்டைக்குள் எதுவோ அடைத்துக் கொண்டிருக்கிறது என  சொல்ல முடியாமல் தவித்தாள்.

சொம்பு நிறைய தண்ணீரை அவள் அருகில் வைத்தவன் “தண்ணீரை குடித்தாவது விழுங்கி முடி” என்றான் கருணையின்றி. நீர் திரையுடன் அண்ணாந்து பார்த்த விழிகளை அலட்சியப்படுத்தினான்.

எதிரே ஏழாவது இட்லியில் இருந்த விசாகனை எரிச்சலாக பார்த்தாள் வாணி. இப்போது தம்பிக்கு துணையாக அண்ணனும் அமர்ந்து கொண்டான். மகா அசுரர்களோ என்ற சந்தேகம் வரும் வகையில் அள்ளிப் போட்டுக் கொண்ட சகோதரர்களை கண்டதும் வாயில் வைத்த ஒரு துண்டு இட்லியும் உள்ளே இறங்க முடியாமல் அவதிப்பட்டாள்.

“நிறைய வேலைகள் இருக்கின்றன. உடம்பில் வலு வேண்டும்” என்றான் அண்ணன்.

” பாதி வழியில் மயக்கடித்து விழுந்தோமானால் பத்திரமாக பொத்தி தூக்கிச் செல்ல யார் இருக்கிறார்கள்?” என்றான் தம்பி.

 பசி மயக்கத்தில் விழுகிறவர்களா நீங்கள்? உண்ட மயக்கத்தில் கிறங்கிப் போய் கிடக்க போகிறீர்கள் பாருங்கள்…எண்ணியவளுக்கு உடனே அப்படியும் நடந்து விடலாமோ! என ஒருவகை பரபரப்பு உண்டானது.

 அண்ணனும் தம்பியுமாக இப்படி அளவில்லாமல் தின்று முடித்துவிட்டு கொட்டாவி விட்டு படுத்து விட்டார்களானால்… ஏதோ ஒரு வகை விடுதல் சந்தோஷம் இருந்த போதிலும்…அதன் பிறகு…? 




நினைவை ஓட்ட முடியவில்லை அவளால். அவளது நினைவுப் பலகை அதன் பிறகு கற்பனையின்றி கறுப்பான பக்கங்களை காட்டியது.

“அப்படியெல்லாம் தூங்கிட மாட்டோம். பயப்படாதே” விபீசன் சொல்ல வேகமாக தண்ணீரை எடுத்து குடித்தாள்.

அவசரத்தில் வாய் தாண்டி வடிந்த நீரை துடைத்துக் கொண்டு அவனை நிமிர்ந்து பார்த்தால் அவள் தடுமாற்றத்தை கவனித்தபடி இருந்தவன் அதற்கான சலனமேதுமின்றி அவள் முன் குனிந்தான்.

” எந்தக் காரணத்தைக் கொண்டும் நம் திருமணம் நிற்க அனுமதிக்க மாட்டேன்” விபீசன் கூறிய தினுசில் வாணிக்கு குளிரடித்தது.

அன்று விபீசன் குதிரை மேல் ராஜகுமாரன் போல் அமர்ந்திருந்த நிலையில் ஒரு பிரமிப்பை அவளுக்கு கொடுத்தாலும், அவனுடைய திருமண கோரிக்கையை ஏற்க மறுத்து விட்டாள். ஆனால் அவனும் விடவில்லை.

“நம் திருமணத்தின் அடிப்படை காரணம் உனக்கு தெரியுமல்லவா?” என்றான் ஒரு நாள்.

“காலம் முழுவதும் இப்படியே மக்கு மண்ணாந்தையாகவே இருக்கப் போகிறாயா?” இது அடுத்த நாள்

“உனக்கென்ன வேறு எந்த தேசத்து மகாராஜாவும் தேடி வருவான் என்ற எண்ணமா?” இன்னொரு நாள்.

இதற்காகத்தான் குதிரை மேல் இருந்து திருமண சம்மதம் கேட்டாயா? மனதிற்குள் நினைத்துக் கொண்டாள் வாணி. அப்போது அவள் இதழ்களில் மெலிதான புன்னகை கூட வந்தது.

“இந்த சிரிப்பின் அர்த்தம் சம்மதமா?”

“நீங்கள் சொன்ன காரணங்களையெல்லாம் தாண்டி இன்னொன்று இருக்கிறது. அதனை மறந்து விட்டீர்கள்”

“அது என்ன கண்றாவி?”

சலிப்பும் சிடுசிடுப்புமான அவன் முகத்தை நிமிர்ந்து பார்த்தாள் வாணி. இவனெல்லாம் காதல் சொல்கிறவனா?

” காதலென்றால் என்னவென்று தெரியுமா உங்களுக்கு?”

வாணியின் மன ஓலைக்குள் எழுத்தாணி எழுத்துகளாய் பதிந்து கிடந்த அந்த அழகான காதல் பக்கங்கள் விரிந்து கொண்டன. ஆஹா காதல் என்றால் அதுவல்லவா காதல் ?எவ்வளவு மென்மை!மேன்மை!

சைக்கிள் மிதித்து ஊர் சுற்றி வந்த அந்த இளம் சிட்டுக்களின் காதல் தினங்கள் அவள் மனதிற்குள் ஓவிய பிரேம்களாய் வலம் வந்தன.பாவாடை தாவணியும் இரட்டைச் சடையும் குடை ஜிமிக்கியுமாய் அப் பெண் உருவம் அவள் மனதிற்குள் திரடு திரடாய் வடிவின்றி அலைந்தது.

 மிகவும் முயன்று அந்த உருவத்தில் தன் முகத்தை ஒட்ட முயன்றாள். ஆனால் அவளது முயற்சி வீணாகி அவ்வுருவம்  கரைந்து நழுவி திரி திரியாக பிரிந்தது.

“ஏய்” அவள் தோளை பற்றி உலுக்கினான் விபீசன். “நான் கல்யாணம் முடிக்க கேட்டுக் கொண்டிருக்கிறேன். நீ ஏதோ கனவில் மிதந்து கொண்டிருக்கிறாய் ?”

புன்னகையோடு அவனை ஏறிட்டாள் வாணி. “காதல் இல்லாமல் கல்யாணம் இல்லை. முதலில் நீங்கள் காதலியுங்கள். பிறகு கல்யாணத்தை யோசிக்கலாம்” மென்னகையோடு சொல்லிப் போனவளை திகைப்பாய் பார்த்திருந்தான்.

அன்று காதலுக்காக விபீசனிடம் வாணி வலியுறுத்தினாள். ஆனால் அந்த காதலை அவளிடம் காட்டவே முடியவில்லை அவனால். ஆனாலும் இதோ அவர்களது திருமணம் நடக்கப் போகிறது.வாணி பேச முடியா தன் நிலையை எண்ணி பெரு மூச்செறிந்தாள்.




What’s your Reaction?
+1
34
+1
21
+1
2
+1
2
+1
1
+1
2
+1
4
Subscribe
Notify of
guest

0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!