Serial Stories உயிராய் வந்த உறவே

உயிராய் வந்த உறவே-2

2

தன்னை அறியாது கண்களில் கண்ணீர் வடிவதை உணர்ந்தும் தடுக்க இயலாமல் அமர்ந்திருந்தாள் வாணி.லேசான அவள் மூக்குறுஞ்சலில் அவள் நிலையை உணர்ந்த விசாகன் “அழாதே” அதட்டலாய் சீறினான்.

உதடுகளை மடித்து கடித்து அழுகையை அடக்கிக் கொண்டாள். எல்லாமே போய் விட்ட நிலையில் அவளுக்குத் தேவை ஆறுதலான ஒரு தோள் மட்டுமே. சீட்டில் சாய்ந்து கண்களை மூடிக்கொண்டாள்.

கண்களை மூடி தெய்வத்தை வேண்டி முடித்ததும் கண் திறந்தவள் எதிரே நீட்டப்பட்ட கற்பூர ஆரத்தி தீபத்தை கண்ணில் ஒற்றிக் கொண்டு நிமிர்ந்த போது அதிர்ந்தாள்.

 அவன்… எதிரே ஆண்கள் வரிசையில் இவளுக்கு நேரே நின்றிருந்தான். கண்ணெடுக்காமல் இவளை பார்த்தபடி இருந்தான். இங்கேயும் வந்து விட்டானா? சிறு பயத்துடன் தன் அருகில் நின்ற தாயை திரும்பி பார்த்துக் கொண்டாள். அம்மாவிற்கு ஏதாவது சந்தேகம் வந்தால்…?

 மிரளும் அவள் விழிகளை கண்டவனின் முகத்தில் கருணை வந்தது.பயப்படாதே ஒன்றும் ஆகாது கண்களால் தைரியம் சொன்னான். இரு வினாடிகளுக்கும் மேலாக அவன் கண்களில் பதிந்துவிட்ட தன் பார்வையில் திக்கிட்டு வேகமாக நகர்ந்தாள் அவள்.

 கோவிலை சுற்றி வரும் வரை நிழலாக பிறருக்கு சந்தேகம் வராதபடி பின் தொடர்ந்தவன் அவர்கள் கோவிலை விட்டு வெளியேறி சாலையில் நடந்து வீடு வரை செல்லும் வரை நிழலாகவே தொடர்ந்தான். தங்கள் வீட்டிற்குள் நுழையும் போது அவள் மிக லேசாக திரும்பிப் பார்க்க தெருவோர மரத்தின் பின் அவன் தலை தெரிந்தது.

“ஏதாவது சாப்பிட்டு வந்தாயா? இல்லையா? இது தூக்கமா? மயக்கமா?” விசாகன் கேட்க விழித்திறக்காமலேயே தலையசைத்தாள்.

” ஆமாம் என்கிறாயா? இல்லை என்கிறாயா?” எரிச்சலாக கேட்டான்.

” எனக்கு ஒன்றும் வேண்டாம் போ என்கிறேன்”

“கேட்ட கேள்விக்கு பதில் வரக் காணோம்.. திமிர்.

“முணுமுணுத்தவன் சாலையோரம் சுமாராக தெரிந்த அந்த கடையின் முன் காரை நிறுத்தினான்.

” உள்ளேயே இரு.ஏதாவது வாங்கி வரேன்” போனவனின் முதுகை வெறித்தாள். எப்படி சூறாவளியாக வந்து என் வாழ்வையே திசை திருப்பி விட்டான்…!

கல்லூரியில் மூன்றாம் வருடத்தின் இடையில் திடீரென்று வந்து சேர்ந்தான் அவன்.அதெப்படி என்று மாணவர்கள் பேசிக்கொண்டனர். ஏதோ பெரிய இடத்து சிபாரிசு என்பதான தகவல்களும் உலா வந்தன. விசாகன் கல்லூரியில் சேர்ந்த இரண்டாம் நாளே இவள் முன் வந்து நின்று கேட்டான்.

” நீதானே வாணி?”




ஆமாம் என தலையசைக்க “கொஞ்சம் அப்படி போ. நான் வாணியிடம் தனியாக பேச வேண்டும்” என இவள் அருகில் அமர்ந்திருந்த சித்ராவை எழுப்பி விட்டு அருகில் அமர்ந்தான்.

 முதலில் சாதாரண விசாரிப்புகள் மட்டுமே. அவளைப் பற்றி படிப்பை பற்றி பிறகு மெல்ல மெல்ல குடும்பத்தை பற்றி. அதன் பிறகு விசாகன் பேசிய பேச்சுக்கள் அனைத்துமே வாணியின் வயிற்றில் தீக்கங்குகளை வாரிக் கொண்டு வந்து தட்டின.

“திட்டம் போட்டுதானே நான் படிக்கும் காலேஜிலேயே வந்து சேர்ந்தாய்?” கடலை மிட்டாய் பாக்கெட்டையும்,பிஸ்கெட்  பாக்கெட்டையும் நீட்டியவனை பார்த்து கேட்டாள். அரையிருளில் விசாகனின் கண்கள் மின்னின. பிறகு பற்களும். சிரிக்கிறான் போலும்.

“இன்னும் சந்தேகமா?” கேட்டுவிட்டு காரை எடுத்தான். வாங்கி வந்த தின்பண்டங்களை அவள் சாப்பிட்டாளா? என்ற கவனம் கொள்ளவில்லை. பயணத்தில் தீவிரமானான்.

 வேகமாக ஓடிக்கொண்டிருக்கும் வாகனத்திற்குள் வாயில் எதையும் வைத்து உண்ண முடியாமல் சுற்றி ஓரமாக வைத்தாள்.

இவன் தின்பண்டம் வாங்கி கொடுத்த காரணம் அக்கறை அல்ல…கணக்கு காட்டுவதற்காக. சாலையில் எதிர்வரும் வாகனங்களின் வெளிச்சம், கார் ஓட்டுபவனின் முகத்தில் பட்டு பட்டு விலக ஒருவகை அமானுஷ்யம் அவன் முகத்தில். இப்படி ஒருவகை பீதியை கொடுப்பவர்களாக இருக்கும் இவனுடன் இவன் குடும்பத்தினருடன் எப்படி தன்னால் பொருந்த முடியும்? வாணியின் வயிற்றில் பயப்பந்து உருண்டது.

விசாகனுடன் அவன் உறவை சந்திக்கச் சென்ற தினம் நினைவில் வந்தது. வீட்டிற்குள் நுழையும் போதே ஒரே கவ்வலில் கழுத்தைத் துண்டாக்கியே தீருவேன்… எனும் வெறியுடன் பாய்ந்து வந்த நாயில் அலறினாள்.

“ஹனி கீப் கொயட்” விசாகனின் அதட்டலின் பின் சாதுவாகி தரையில் படிந்தது அது.

“இவர்தான் என் அண்ணன்” விசாகன் காட்டிய நபரை நிமிர்ந்து பார்த்த அவளின்  மனதில் ஒருவித படபடப்பு. எதிரே நின்றிருந்தவன் மிக பிடித்தமானவனாக அல்லது கொஞ்சமும் பிடித்த மற்றவனாக எதிர் எதிர் உணர்வுகளை அவள் மனதிற்குள் ஒரே நேரத்தில் விதைத்தான்.

” வணக்கம் நான் விபீசன்” கைக்குவித்தவனின் குரலில் கருங்கற்களின் உருளல்.

விபீசன் மகா உயரமாக இருந்தான். அகலமாகவும்.அவனது ஒரு காலெட்டுக்கு வாணி தலா மூன்று எட்டு வைக்க வேண்டியிருந்தது. அகன்ற அவன் உள்ளங்கை போதும் தனது முகத்தை மூட்டை பூச்சியாக நசுக்குவதற்கு என்று நிறைய தடவை… அவன் கைகளை விரிக்கும் போதெல்லாம் வாணிக்கு தோன்றும்.

 அடர்ந்த மீசையையும் கொத்தான தாடியையும் அவன் நீவிக் கொள்ளும் போதெல்லாம் பல நேரம் அவள் மனதிற்குள் பூச்சி பறக்கும்.சில நேரம் மயில் பீலி மனம் கூட்டும்.

இருப்புக்கும் மறுப்புக்கும் இடையே அவள் ஊசலாடிக் கொண்டிருந்தபோது, ஒரு சுகமான மாலை பொழுதில் விபீசன் அவளிடம் கேட்டான். “நாம் இருவரும் திருமணம் செய்து கொள்ளலாமா அம்மு?”

அந்த கேள்வியின் போது அவன் குரல் அதிசயத்தக்க விதமாக தேன் சொட்டிக் கொண்டிருந்தது. அன்று, அவர்கள் சந்தித்து பத்து தினங்கள்தான் ஆகியிருந்தன. அதுதான் அவர்களது நான்காவது சந்திப்பு.

கேட்டவனை அண்ணாந்து பார்த்தாள் வாணி. அவன் அப்போது குதிரை மேல் அமர்ந்திருந்தான். “குதிரை வைத்திருக்கிறீர்களே? ஓட்டுவீர்களா?” என்ற கேள்விக்கு பதிலாக அம்பாய் குதிரை மேல் ஏறி மைதானத்தை கண்சிமிட்டுவதற்குள் இரண்டு சுற்று வந்து விட்டிருந்தான்.

 அவனது குதிரை ஏற்றத்திற்கு இவளுக்கு மூச்சிரைக்க… நின்றிருந்தவளின் அருகே வந்தவன் திருமண சம்மதம் கேட்டான்.

குதிரை மேல் அமர்ந்த நிலையில் விஸ்வரூப சிவனாய் காட்சி தந்தவனை பார்த்து எச்சில் விழுங்கினாள். மறுப்பாய் தலையசைத்தாள். உடன் அவன் முகம் மாறியது.

“ஏன்?” குரலில் தேன் போய்  தேள்களின் ஊர்வலம்.

“இறங்கு” விசாகன் காரை நிறுத்தியிருக்க வாணி நடுங்கிய கால்களுடன் இறங்கினாள். உடனே வீட்டின் வாசல் கதவு திறந்தது. “எந்த பிரச்சனையும் இல்லையே?’ கேட்டபடி வந்தான் விபீசன். அவன் பார்வை வாணியின் மீது அழுத்தமாக விழுந்து ஆராய்ந்தது.

“இல்லை அண்ணா”

“சாப்பிட்டாயா?”

“அங்கே எப்படியோ…? நான் வரும்போது கொஞ்சம் ஸ்னாக்ஸ் வாங்கி கொடுத்தேன்” அண்ணனிடம் கணக்கை நேர் செய்தான்.

“சரி வா” இயல்பாக அவள் தோள் சுற்றி கை போட்டு அழைத்துச் சென்றான் விபீசன். இடுக்கில் மாட்டிக்கொண்ட எலி போல அவன் கைகளுக்குள் இழுபட்டு போனாள் வாணி.




What’s your Reaction?
+1
35
+1
25
+1
2
+1
2
+1
0
+1
0
+1
7
Subscribe
Notify of
guest

0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!