Serial Stories உயிராய் வந்த உறவே

உயிராய் வந்த உறவே-16

16

“நான் உள்ளே வரவா அம்மு?” அனுமதி கேட்டபடி வாசலில் நின்றவனின் மேல் பார்வை படிந்தாலும் அவனது கேள்வி அமுதவாணியின் மூளையில் உரைக்கவில்லை.

தன்னை விரித்து பார்த்தபடி கட்டிலில் கிடந்தவளை யோசனையாய் பார்த்தவன் உள்ளே வந்து அருகே அமர்ந்தான்.

“எதற்காக இவ்வளவு டிஸ்டர்ப் ஆக இருக்கிறாய் அம்மு?”

வாணி தலையசைத்தாள். “உங்களுக்கு புரியாது.அன்பு அனுபவிப்பவர்களுக்கு மட்டுமே புரியும்”

“யாருடைய அன்பு?” கேட்டபோது விபீசனின் குரலில் எரிச்சல் தொடங்கிவிட்டது.

“அவர்களுடைய தாயன்பில் நான் என்றுமே குறை கண்டதில்லை.அவர்களை கடந்து வருவது என்பது எனக்கு மிகவும் கடினம்தான்”

“ஓஹோ அப்போது அவர்கள் பின்னேயே போகும் ஐடியா வைத்திருக்கிறாயா?” கேட்டவனுக்கு ” இருக்கலாம்” தெனாவட்டாக பதில் அளித்தாள். விபீசனின் கண்களில் ஜ்வாலை.

“நீ செய்தாலும் செய்வடி. உன்னை…” என்றபடி அவள் முகத்தை இரு கைகளாலும் பற்ற ,அமுதவாணி கண்களை இறுக மூடிக்கொண்டு அவனை எதிர்கொள்ள தயாரானாள். எதிர்பார்த்தது நடவாமல் போக மெல்ல விழி திறந்து பார்த்தபோது அவளை பார்த்தபடியே இருந்தால் விபீசன்.

“ஏன் ஆரம்பிக்கவில்லை?” ஒற்றை விரலால் தன் உதடு தொட்டு காட்டி கேட்டாள். “உங்களுக்கு கோபம் வந்தால் உங்களை விட எளியவர்களிடம் காட்டுவது தானே பழக்கம்.நடத்துங்கள்” முகவாய் உயர்த்தி விழி மூடி காத்திருக்க ஆரம்பித்தாள்.

பொங்கிய கோபத்தை விபீசன் வேறு வழியில் காட்டினான்.அவள் நெற்றியோடு தன் நெற்றியை பலமாக மோதினான். ஒருமுறையல்ல பலமுறை…

வலியில் சிவந்த நெற்றியை தடவியபடி நிமிர்ந்த அமுதவாணி அவனது நெற்றியும் சிவந்து போய் கிடப்பதை கண்டாள். “வலிகளும் தண்டனையும் எனக்கு மட்டும்தானே? உங்களுக்கு ஏன்?”

“ஏனென்றால் இப்போது நான் உன் கணவன். உனக்கு வரும் நல்லதோ கெட்டதோ எனக்கும் பங்கு உண்டு. இது ஒரு வாழ்க்கை சக்கரம்தான். உன் அப்பா செய்த தீமையோ நன்மையோ எப்படி உன்னை பாதிக்குமோ… அது போலவே கணவன் மனைவியின் பரஸ்பர நன்மை தீமைகள் இருவருக்குமே பொதுதான்”

 விபீசன் போய் விட்டான். அவன் சொன்ன வார்த்தைகளின் உண்மைகள் வெகு நேரம் அறைக்குள்ளேயே சுழன்று கொண்டிருந்தன.

மறுநாள் காலை 

அமுதவாணி ஜன்னலை திறந்த போது எதிர் வீட்டில் தெய்வானை தெரிந்தாள். இவளுக்காகவே காத்திருந்தாள் போல் மாடி ஜன்னலையே பார்த்திருந்தாள். இவள் முகம் பார்த்ததும் கண்கலங்கி புன்னகைத்தாள் லேசாக கையாட்டினாள்.

அமுதவாணி வேகமாக ஜன்னலை மூடிக் கொண்டு விட்டாள்.அறைக்கதவை தட்டி விட்டு உள்ளே வந்தான் விபீசன் .அவன் கையில் சிறு பிளாஸ்க்கும் காபி டம்ளரும்.

” முகம் கழுவி விட்டு காபி குடி, குளித்து கிளம்பு. வெளியே போய் வரலாம்”

“எங்கே?”

“சும்மா ஊரை சுற்றி பார்த்து விட்டு வரலாம்”

 வீட்டிற்குள் இருப்பது மூச்சடைப்பது போல் இருக்கவே கிளம்பி விட்டாள். ஆனால் விபீசனின் ஒவ்வொரு செயலுக்குப் பின்னும் ஒரு காரணம் இருக்கும் என்பதை வெளியே சென்ற பிறகே உணர்ந்தாள்.

“இதுதான் இந்த ஊர் பள்ளிக்கூடம்” விபீசன் காட்டிய பள்ளி ஓட்டு கட்டிடத்துடன் பழமையாக சிறியதாக இருந்தது.

” இப்போது இரண்டு மெட்ரிகுலேஷன் பள்ளிகள் வந்துவிட்டாலும் ஆரம்பத்தில் உன் அம்மா படித்த போது இருந்தது இந்த ஒரே பள்ளிக்கூடம்தான்”

அமுதவாணியின் உச்சந்தலையில் சுரீரென்ற மின்னல்.இதோ இந்த பள்ளி பாதை வழிதான் காதல் வளர்த்தனரா அவள் தாயும் தந்தையும்? சிறிதான அந்த கட்டிடம் அவள் மனதிற்குள் பொருந்தவில்லை.

அடுத்து விபீசன் காட்டியது கோவில் “இதுதான் அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவில்” ஐந்து சிறு தெய்வ சந்நிதிகளுடன் சிறியதாக அடக்கமாக இருந்தது கோவில்.

அடுத்து விபீசன் தகர கொட்டகை சரிந்து கிடந்த ஒரு சிறு கட்டிடத்தின் முன் பைக்கை நிறுத்தியதுமே, அமுதவாணி  சொல்லிவிட்டாள். “டைப்ரைட்டிங் க்ளாஸ்”

“கரெக்ட் .இதன் சொந்தக்காரர் இப்போது உயிரோடில்லை. பிள்ளைகள் பெங்களூரில் செட்டிலாகிவிட்டனர். இந்த சொத்து பராமரிக்க ஆளின்றி இப்படி கிடக்கிறது”

“கயிற்றுப் பாலம் காங்கிரீட் ஆகிவிட்டது” ஓடை ஒன்றின் மேலே இருந்த சிறு பாலத்தை காட்டினான்.

“இன்னமும்…”

“சந்திரகலா டீச்சரின் நாட்டிய பள்ளி மட்டும்தான் இருக்கிறது. அதையும் காட்டி விடுங்கள். அவர்கள் சந்திர கலா டீச்சர்…” கொஞ்சம் பயத்துடன் இழுத்தாள்.

” இருக்கிறார்கள். வயதாகிவிட்டது அவ்வளவுதான் .இப்போது அவர்கள் வீட்டிற்குத்தான் போய்க்கொண்டிருக்கிறோம்” 

ஓரளவு பெரிய வீடுதான். சுற்றிலும் ஓடு இறக்கி கட்டியிருந்த தொட்டி கட்டு வீடு.நடு பகலிலும் வீட்டிற்குள் இருளின் ஆட்சி.

தலை முழுவதும் பஞ்சாய் நரைத்திருக்க குழி விழுந்த கன்னங்களும் சொருகி கிடந்த விழிகளுமாக மரக்கட்டிலில் துவண்டு கிடந்த உருவம்தான் சந்திரகலா டீச்சர் என்பதனை அமுதவாணியால் ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை.




 

“சந்திரா டீச்சர்” கறுத்து விறகு கட்டையாய் விரைத்துக் கிடந்த கையை தொட்டு அசைத்தான் விபீசன்.

ஒரு மாதிரி முனகலான சத்தத்துடன் சிரமப்பட்டு விழித்தார் அவர். “உங்களை பார்க்க வந்திருக்கிறார்கள்” அமுதவாணியை சந்திரகலாவின் பார்வைக்கு நகரத்தினான்.

“யாரு?” காற்றின் சீறலாய் வெளிவந்தது குரல்.

விபீசன் கொஞ்சம் தயங்கி பின் “உங்கள் மாணவி மகேஸ்வரியின் மகள்” என்றான்.

சந்திரகலாவின் சுருங்கி கிடந்த கண்கள் விரிந்தன. அதிர்ச்சியோ? ஆச்சரியமோ?.

“என்னுடைய மகள் டீச்சர்” அழுத்தம் திருத்தமாய் அறிவித்தபடி உள்ளிருந்து வந்தாள் மகேஸ்வரி. கையில் ஒரு பாத்திரத்தில் கஞ்சி வைத்திருந்தாள்.

“திகைப்பாய் பார்த்த அமுதவாணியிடம் ஆசிரியரை பார்த்துக் கொள்வது மாணவியின் கடமை” என்றாள்.

தன் கை வெதுவெதுப்பான நீரால் நனைய திரும்பிப் பார்த்த அமுத வாணி திடுக்கிட்டாள். “ஐயோ அம்மா என்ன இது ?கையை விடுங்க” சந்திரகலா அமுதவாணியின் கைகளை தன் கண்களில் ஒற்றிக் கொண்டிருந்தாள்.

அமுதவாணி கைகளை உருவிக்கொள்ள சந்திரகலா இரு கை குவித்து மன்னிப்பு போல் இறைஞ்சினார்.” என்ன பண்றாங்க இவங்க?” அமுதவாணி எழுந்து கொண்டாள்.

“தன்னால்தான் தாயும் மகளும் பிரிந்தார்கள் என்னும் மனச் சங்கடம் இவர்களுக்கு. அதற்காக இப்படி…” என்றபடி கூம்பியிருந்த சந்திரகலாவின் கையை பிரித்து விட்டான் விபீசன்.

” டீச்சரம்மா உங்களால் எதுவும் நடக்கவில்லை. எல்லாம் நன்றாகத் தான் இருக்கிறது. அம்மு இப்போது அத்தையுடன் வந்து விட்டாள்” என்றான்.

உடன் சந்திரகலாவின் பஞ்சடைத்து கிடந்த கண்களில் ஒளி வந்தது. பெரும் நிம்மதி போல் தன் நெஞ்சில் கை வைத்துக் கொண்டவர். கண்களை மூடிக்கொண்டார்.

” இந்த கஞ்சியை சாப்பிட்டு விட்டு தூங்குங்க டீச்சர்” மகேஸ்வரி கஞ்சியோடு அவர் அருகில் அமர்ந்து ஊட்ட ஆரம்பித்தாள்.

விபீசன் அமுதவாணியை அழைத்துக் கொண்டு வெளியேற அவள் வாசலில் நின்று பார்த்தபோது “டயபர் மாற்றிடலாமா டீச்சர்?” என்று கேட்டுக் கொண்டிருந்தாள் மகேஸ்வரி.

“டீச்சரம்மாவிற்கு சொந்தங்கள் யாரும் கிடையாதா?” ஒரு மாதிரி பாரம் ஏறிய மனதுடன் இருந்தாள் அமுதவாணி.அவள் மனதிற்குள் வடிவும் வாளிப்புமான சந்திரகலா கால் சலங்கையுடன் நடனமாடிக் கொண்டிருந்தாள்.

“அவர்களுக்கு குழந்தைகள் கிடையாது.கணவரும் இறந்து விட்டார். கணவருக்குப் பிறகு அவர் பக்கத்து சொந்தங்களும் ஒதுங்கிவிட, தாய்வீட்டு சொந்தம் இவர்களை ஒதுக்கி வைத்து விட…டீச்சரம்மா பாவம் அனாதையாகி போனார்”

“ஐயோ பாவம் இவரை ஏன் ஒதுக்கி வைத்தார்கள்?”

” அதனை நீ மிஸ்டர் சுந்தர்ராமனிடம் கேட்க வேண்டும்”

“என் அப்பா… இவர்கள் உறவா? ஏதோ தூரத்து சொந்தம் என்று… அப்படித்தான் அம்…” என்று ஆரம்பித்தவள் அவனது தீப்பார்வையில் “தெய்வா சொன்னார்கள்” என முடித்தாள்.

“தூரத்து உறவா? உடன் பிறந்த தம்பி செய்த அநியாயத்தை தட்டி கேட்டதற்காக கூடப் பிறந்த அக்காவை கடைசி காலத்தில் எட்டிக் கூட பார்க்காமல் விட்டுவிட்டார்”

கருங்கல் ஒன்று தொண்டைக்குள் சிக்கிக் கொண்டதைப் போன்ற அவஸ்தைக்குள் விழுந்தாள் அமுதவாணி.

“உறவாக நினைத்து இல்லை. தனது குருவிற்கான கடமை என்றே அத்தை இவர்களை கவனித்து வருகிறார்”

“அம்மா”தன்னை அறியாமல் முணுமுணுத்தாள். தலை சாய்த்து கவனமாக அவள் உதட்டசைவை கேட்டவன் “ம்… இப்போது சொல்… சொல்ல வேண்டிய நேரத்தில் ,ஆளிடம் சொல்லி விடாதே” சலித்தான்.




What’s your Reaction?
+1
35
+1
29
+1
0
+1
1
+1
0
+1
0
+1
3
Subscribe
Notify of
guest

0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!