Serial Stories உயிராய் வந்த உறவே

உயிராய் வந்த உறவே-15

15

“மம்மு எனக்கு அடுத்த பூரி நல்லா உப்பலாக சூடாக கொண்டுட்டு வர்றீங்களா?” டைனிங் டேபிளில் தாயிடம் கொஞ்சிக் கொண்டிருந்த விசாகனை எரிச்சலாக பார்த்தபடி நாற்காலியை சத்தத்துடன் இழுத்துப் போட்டுக் கொண்டு அமர்ந்தாள் அமுதவாணி.

அதென்னவோ அவளுக்கு இப்பொழுது சில நாட்களாக அம்மாவிடம் உரிமையாக கொஞ்சும் பிள்ளைகளை்.. அவர் எந்த வயதினராக இருந்தாலும் பிடிக்காமல் போகிறது. முன்பே தனக்கு பிடிக்காதவனான விசாகன் இன்று அவன் செய்த பிடிக்காத செயலால் இன்னமும் பிடித்தமற்றவனாகி விட “பச்சைப் பிள்ளை என்று நினைப்பா உனக்கு?” எரிந்து விழுந்தாள்.

விசாகன் அவளைப் பார்த்த பார்வையில் கொலைவெறி மின்னியது. வீட்டின் கடைக்குட்டி அவன் என்ற சலுகையில் அப்பா அம்மா அத்தை அண்ணன் என்று அனைவரிடமும் விசேஷ கவனம் பெற்று வளர்ந்தவன். இப்போது ஒரு புதியவள் உறவு உரிமையோடு வீட்டிற்குள் நுழைந்து விட, அத்தனை உறுப்பினர்களும் இளகலோடு அவள் பக்கம் சாய, தனது செல்லக் குழந்தை நிலைமை என்னாகுமோ என்ற பயத்திலிருந்தவன் உடனடியாக அமுதவாணியிடம் பாய்ந்து விட்டான்.

“ஏய் நான் என் அம்மாவிடம் பேசுகிறேன்.உன் வேலையை பார்த்துக் கொண்டு போ”

“இல்லாமல் உனக்கு வேலை பார்த்துக் கொடுக்க வந்தேனென்று நினைத்தாயா?”

“ஆஹா இந்த அம்மையாருக்கே வேலை பார்த்துக் கொடுக்க நான்கு ஆட்கள் வேண்டும். இவர் அடுத்தவருக்கு பார்ப்பாராக்கும”

“எனக்கு எப்போதுடா நீ வேலை பார்த்தாய்?”

“அரைத்து அரைத்து இழைத்து இழைத்து  மண்டைக்குள் உன் அம்மா யார் என்று ஏற்றியது நானில்லாமல் வேறு யாராம்?”

“ம் பெரிய வேலை…? நீ இல்லாவிட்டாலும் என்றாவது நானே தெரிந்து கொண்டிருப்பேனாக்கும்”

இரு கைகளையும் தட்டி உரக்க சிரித்தான். “அண்ணா கேட்டீர்களா கதையை? இவளே அம்மாவை தெரிந்து கொண்டிருப்பாளாம்”அருகில அமர்ந்து சாப்பிட்டுக் கொண்டிருந்த விபீசனை தங்கள் சண்டைக்குள் இழுத்தான்.

விபீசன் விழித்தான்.இப்போது அவன் யார் பக்கம் பேசுவது? தம்பி பக்கமா ?மனைவி பக்கமா? திருமணத்திற்கு முன்பு என்றால் எளிதாக அமுதவாணியை விசாகனுடன் சேர்ந்து வார்த்தைகளில் போட்டு தாக்கி விட்டு போய்க்கொண்டே இருப்பான். ஆனால் இப்போது அப்படி பேச மனம் வரவில்லை.

“டேய் அடங்குடா” கீழே இறங்கிய குரலில் தம்பியை மிரட்டினான் என்ன சொல்லப் போகிறாய் என்ற கூர்மையான பார்வையுடன் பக்கத்தில் அமர்ந்திருந்தவளை ஓரக்கண்ணால் பார்த்துக் கொண்டான்.

விசாகன் பெருங்குரலெடுத்து கத்தினான் “இந்த அநியாயத்தை கேட்க யாரும் இல்லையா? ஒரே நாளில் என் அண்ணனை பேசாமலாக்கிவிட்டார்களே?”

இந்த கத்தலுக்கு பார்வதி வந்துவிட “அம்மா அண்ணனை பாருங்கம்மா.” தோளில் துண்டோ பக்கத்தில் சொம்போ இன்றி அம்மாவையே பஞ்சாயத்து தலைவராக்க முயன்றான்

“டேய் சும்மா இருடா,ஆயிரம் வேலை கிடக்கிறது எனக்கு” பார்வதி சுலபமாக அந்த பதவியை உதற ,அமுதவாணி விசாகன் பக்கம் ஒற்றை விரல் ஆட்டினாள். “தோப்புக்கரணம் போடு. எனக்கு வாக்கு கொடுத்து இருக்கிறாய்”




 

“அப்படியெல்லாம் அர்த்தமில்லாமல் வாயை விட்டு மாட்டிக்கொள்கிறவன் நானில்லம்மா.எனக்கு எந்த வாக்கும் நினைவில் இல்லை”

“பாவி பொய் பேசுகிறாயே வாயில் புழு வைக்கும்” கை நொடித்தாள்.

“உனக்கு கையில் கரையான் வைக்கும்”

“போதும் நிறுத்துங்க” பார்வதி இருவரையும் அதட்டினாள். “இதென்ன  பேச்சு? விபா இவர்களை கேட்க மாட்டாயா?”

 அவர்கள் இருவருக்குமிடையில் இருந்த சேரில் அமர்ந்து சாப்பிட்டுக் கொண்டிருந்த விபீசன் வேகமாக எழுந்தான். தன் இருக்கையை அவர்கள் இருவருக்கும் இடையூறின்றி ஒதுக்கி வைத்தவன், இருவர் பக்கமும் இரு கையையும் ஆட்டினான்.

 “எப்படியோ அடிச்சுக்கோங்க. யார் மண்டை உடஞ்சாலும் கை கால் முறிந்தாலும் சொல்லிடுங்க, வைத்தியம் பண்ண தயாராக இருக்கிறேன்” பக்கத்தில் இருந்த செல்பை திறந்து சாவ்லான் பஞ்சு பேண்டேஜ் போன்ற உபகரணங்களை எடுத்து வைத்துக்கொண்டு ஓரமாக அமர்ந்து கொண்டான்.

அமுதவாணியின் ஆத்திரம் இப்போது தம்பியிலிருந்து அண்ணனுக்கு மாறியிருக்க டேபிளில் இருந்த தண்ணீர் ஜக்கை எடுத்து நீரை அவன் மேல் எறிந்தாள். “இங்கே என்ன நாட்டிய நாடகமா நடக்குது?”

“அப்போ இல்லையா?” முகத்தில் வழிந்த நீரை துடைத்துக் கொண்டான்.

“அதானே நல்லா கேளு வாணி. நம்ம ரெண்டு பேரும் என்ன இவங்களுக்கு பொம்மலாட்ட பொம்மைங்களா?” விசாகன் சுலபமாக அவளுடன் கூட்டுச் சேர்ந்திருந்தான்.

“அடப்பாவிகளா உங்களுக்கு பஞ்சாயத்து பண்ணயிருந்தோம்னா” பார்வதி தலையிலடித்துக் கொள்ள “அதாம்மா நான் முதலிலேயே விவரமா எஸ்ஸாயிட்டேன்” சொல்லிவிட்டு விபீசன் டேபிளில் இருந்த மற்றொரு ஜக்கை எடுத்து நேராக அமுதவாணியின் தலையிலேயே கவிழ்த்தினான்.

“ஏய் “அவள் கத்த “அடடா “கன்னத்தில் கை வைத்து உச்சு கொட்டினான் விசாகன்.

வேகத்துடன் தன்னருகே வந்தவளிடம் விபீசன் யார் காதிலும் விழாமல்  “வீடெல்லாம் தண்ணியாகுது. கிணற்றடிக்கு போயிடலாமா?” கேட்டான்.

“எதற்கு?”

“நம்மை நாமே குளிப்பாட்டிக்க…கிணற்றடி வேண்டாம்…பாத்ரூம் வசதியா இருக்குமில்ல?” கண்ணடித்தவனின் கண்களை நோண்டிவிடும் கோபம் கொண்டவள் கையில் கிடைத்ததோடு அவனை விரட்ட பதட்டத்துடன் உள்ளே நுழைந்த மகேஸ்வரியின் மேல் மோதிக்கொண்டாள்.

ஈரம் சொட்ட தன் மேல் மோதிய மகளை நிறுத்தி பார்த்த மகேஸ்வரி “அம்மு” என்று ஒரு மாதிரி கதறல் குரலில் இறுக்கி அணைத்துக் கொண்டாள்.

“என்னம்மா ஆச்சு?” மாணிக்கவேல் தங்கையின் தோள் தொட்டு கேட்க, “அண்ணா எனக்கு பயமாக இருக்கிறது.எதிர்வீட்டில்…”  மகேஸ்வரி திக்க,

விபீசனும் மாணிக்கவேலும் வேகமாக வாசலுக்கு போய் எதிர் வீட்டை பார்த்துவிட்டு திரும்பினர். இருவர் முகமும் இறுகியிருந்தது.

” எதிர் வீட்டிற்கு ஆள் வந்திருப்பது போலிருக்கிறது” என்றார் மாணிக்கவேல்.

எதிர் வீட்டிலென்றால்… அமுதவாணியின் உடல் விரைத்தது. அதனை உணர்ந்த மகேஸ்வரி மேலும் அவளை அணைத்துக்கொள்ள முயல, மெல்ல அவளிமிருந்து விடுபட்டாள் அமுதவாணி.

படியேறி மாடிக்கு போய் ஜன்னல் வழியாக எதிர் வீட்டை பார்க்க அங்கே புதிதாக ஆட்கள் நடமாட்டம் தெரிந்தது.

“எதற்காக இப்போது இங்கே ஓடி வந்தாய்?” சீறலுடன் பின்னால் நின்றான் விபீசன்.

“இவர்கள் எதற்கு இங்கே வந்திருக்கிறார்கள்?” அமுதவாணியின் குரல் நடுங்கியது.

“எதற்காகவும் இருந்து விட்டுப் போகட்டும். இனி இந்த ஜன்னலை திறக்காதே” கதவை இழுத்து மூடினான்.

மனம் முழுவதும் வந்துவிட்ட தடுமாற்றங்களுடன் அமுதவாணி அங்கேயே அமர்ந்து விட்டாள்.




What’s your Reaction?
+1
32
+1
30
+1
2
+1
3
+1
0
+1
0
+1
1
Subscribe
Notify of
guest

0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!