Serial Stories பாதரஸ பற​வைகள்

பாதரஸ பற​வைகள் – 15

15

சமையல்கட்டை ஒழித்துவிட்டு சூடான காப்பியுடன் பின்கட்டுக்கு வந்து அமர்ந்தாள் ராஜம். மனம் முழுக்க ராதிகாவிற்கு வந்த சம்பத்தின் மேல் இருந்தது. குருவி சேர்க்கிறாபோல அவ கல்யாணத்துக்குன்னு ஒரு தொகையை யாரும் அறியாமல் சேர்த்து வைத்திருந்தாள் ஏதோ நம்ம தகுதிக்கு ஏற்றாற்போல் இருந்தாப் போதுன்னு தெரிந்தவங்க சிலபேர்கிட்டே ஜாதகம் கொடுத்ததில் தகைந்தது இந்த இடம். பிள்ளையோட அம்மா போன வாரம் பிரதோஷ பூஜையிலே ராதிகாவைப் பார்த்தாளாம் ரொம்ப பிடிச்சிட்டது பிள்ளை இப்போ படிச்சி முடிச்சிட்டு பதிந்து வைச்சிருக்கான். கூடவே வெளிநாட்டு வேலைக்கு போகும் எண்ணமும் இருக்கு அதுக்கான கால நேரம் இன்னமும் கூடி வரலை, பணம் சேர்த்து வைச்சிருக்கேன் அந்த செலவுக்கு எல்லாம் எனக்கு இருக்கிறது இரண்டே பேர் பெரியவனுக்குத்தான் உம் பொண்ணை கேட்கிறேன் சின்னதுக்கு சொந்தத்திலேயே ஒண்ணு கிடக்குது. 

ஜட்ஜ் வீட்டுக்கு வரும்போது அந்தம்மாளைப் பார்த்திருக்கிறாள் சற்றே கனத்த சரீரம் அலட்டல் பேச்சுத்தான் அவள் தன் பிள்ளையைப் பற்றி சொன்னது எல்லாமே உண்மைதான் என்று ஜட்ஜ் வீட்டம்மாளும் சொன்னாள். நல்லபிள்ளைதான் அவதான் கொஞ்சம் அலட்டல் பையன்கள் இரண்டும் சொக்கத் தங்கம் நல்ல இடம் முன்னே பின்னே ஆனாலும் நான் அய்யாவை வைச்சிப் பேசச் சொல்றேன் என்று தைரியம் கொடுக்கவும் நிம்மதியாய் மூச்சுவிட்டாள். ஆனால் எல்லாத்துக்கும் நடுவில் நந்தியாய் வந்து நிற்கும் இந்த நாத்தனாரை என்ன செய்வது பத்தாக்குறைக்கு தடிமாடுமாதிரி இவன் வேறு பார்வையும் அவனும் என்று யோசித்தபடியே சாரங்கனை அழைத்துப் பேசிவிடுவதே நல்லது என கணவனுடன் பேசிட தகுந்த நேரம் பார்த்துக் கொண்டு இருக்க அவனே அவளை பின்கட்டுக்கு தேடியும் வந்திருந்தான்.

தன் பின்னால் நிழல் தோன்ற தலையுயர்த்திப் பார்த்தாள் ராஜம். சாரங்கன் தயங்கமாய் நின்றபடி உன்கிட்டே பேசணும் என்றதும், இதுவே நல்ல சகுணம்தான் மகளின் திருமணம் பற்றி நானே சொல்லவேண்டும் என்று நினைத்தேன் நல்லவேளை இவரே வந்துவிட்டாரே சந்தோஷம் மனதோடு சொல்லுங்க என்றாள்.

அது வந்து…அது வந்து….

அதான் வந்திட்டீங்களே ? சொல்லுங்க 

ராதிகா விஷயமா உங்கிட்டே பேசணும், அவளுக்கும் கல்யாண வயசு வந்திடுச்சி நேரத்தோடு செய்யவேண்டுமே, பாமினியின் பையனுக்கு அவளைக் கொடுத்தால் நம்ம கண்ணுக்கு பக்கத்திலேயே இருப்பாள். அவளைப் பிரியும் கவலை உனக்கு இருக்கும். பணம் காசுன்னு அதிகம் செலவழிக்கவேண்டியது இல்லை. அவன் நல்லவன்தான் ஏதோ கொஞ்சம் வயசு கோளாறு அப்படியிப்படின்னு இருந்திட்டான். ஒரு கல்யாணத்தைப் பண்ணிட்டா சரியாயிடும். 

நம்ம செட்டியார் கடையிலே கொஞ்சம் எலிப்பாஷாணம் வாங்கிட்டு வந்துடுங்க அவளுக்கும் கொடுத்திட்டு நானும் செத்துப் போயிடறேன் வெடுக்கென்று அவள் பேசியதும் சாரங்கள் தீப்பட்டாற் போல நிமிர்ந்தவன் மனைவியின் முகத்தில் தெரிந்த காட்டத்தைக் கண்டதும் கண்களைத் தழைத்துக் கொண்டான்.  உங்களுக்கு என்ன திண்ணக்கம் இருந்தாள் அவனுக்கு நம்ம பொண்ணைக் கொடுக்கச் சொல்லுவீங்க, அப்பாங்கிற ஸ்தானத்திற்கு இதுவரைக்கும் என்ன செய்திருக்கீங்க ? சம்பந்தம் பேச வந்திட்டீங்க அந்த ரெளடிப்பயலுக்கு ! வாழ்க்கையிலே நீங்க எனக்கு எந்த சுகத்தையும் கொடுக்கலை, எப்படியோ உங்கம்மாவுக்கு பயந்து பயந்து இரண்டை பெத்துட்டு திண்ணையே கதின்னு கிடந்தீங்களே ?  தங்கத்தை வைரத்திலேதான் பதிக்கணும் சாக்கடையில் இல்லை.




உங்களுக்கு கடைசியா சொல்றேன் இனிமேல் என் பொண்ணு கல்யாண விஷயத்திலே தலையிட வேண்டாம். உங்கம்மாவும் அக்காவும் போட்ட ஆட்டத்திலே வெறும் அடுப்புக்கு துணை நிற்கிறது என்னோட போதும்.  

பாமினி காளிமாதிரி வந்து நின்றாள். என்னடி வாய் ரொம்பவும் நீளுது. ரொம்பவும் இடம் கொடுத்திட்டே அண்ணா நீ ! எதிர்த்து பேசற அந்த வாயை அப்படியே கிழிச்சிருந்தா அவ அமைதியா இருந்திருப்பா வாயில்லாத பூச்சி நீ அதான் இப்படி அடிச்சி விளையாடுறா ? என்னமோ ஊருலே உலகத்திலே இவள்தான் பொண்ணைப் பெத்து வைச்சிருக்கிறா மாதிரி ஆடறாளே ? எம் பிள்ளை ஆம்பிளை சிங்கம் அவனுக்கு லைன் கட்டி நிக்கவைப்பேன். கூடப்பிறந்த கடனுக்கு உம் பாரத்தை கொஞ்சம் குறைக்கலான்னு நினைச்சேன் பாரு என்னைச் சொல்லவேண்டும்.  இனிமே நீயே காலிலே விழுந்தாலும் நான் என் பிள்ளையைத் தரமாட்டேன் என்று கத்தினாள் அன்றைய இரவு முழுவதும் நிம்மதியற்ற இரவாகவே கழிந்தது.

இனியும் தாமதிக்கக் கூடாது என்று நினைத்து காலையிலேயே ஜட்ஜ் அம்மாவின் வீட்டுக்கு ஓடியேவிட்டாள் நடந்த அத்தனையும் சொல்லிவிட்டு நீங்கள்தான் கதியென்று நின்றவளை கண்டு பிள்ளை வீட்டாரை வரச்சொல்லியிருந்தார்கள். பேச்சு ஓரளவிற்கு நல்லபடியாகவே முடிந்ததும், சந்தோஷமாக வந்திருந்தவளை ராதிகாவின் நடுங்கிய குரல் அம்மா என்ற அலறல் வயிற்றை பிசைந்தது. ராதிகா என்று பதறியபடி படுத்திருந்த மாமியாரைக் கடந்து ஓடினாள். பாமினியின் பிள்ளை பின்கட்டில் ராதிகாவிடம் வம்பு செய்து கொண்டிருக்க, கட்டிக்கிட்டா இவனைத்தான் கட்டிக்கிடணுன்னு அவ தவம் கிடக்கணும்டா அதுக்கு என்ன பண்ணனுமோ அதை செய்யுன்னு தாய் சீவி விட்ட கொம்பில் அவனுக்கு அந்த தைரியம் துளிர்த்திருந்தது. தையல் மேடையில் இருந்த கத்திரிதான் ராஜத்தின் கண்களில் முதலில் பட்டது. சட்டென்று அவன் பின் மண்டையில் ஓங்கி அடித்தாள். ராதிகா தாயின் பின்னால் மறைந்து கொள்ள அப்போதே வெளிப்பட்ட பாமினி குய்யோ முய்யோன்னு கத்தினாள் பிள்ளையின் தலையில் ரத்தகுளியல்.

அடிப்பாவி கொலைகாரி என்னடி இப்படி செய்திட்டே ? இப்போ என்ன செய்திட்டான் என்பிள்ளை முறைப்பொண்ணுதானே கொஞ்சம் உரிமையெடுத்துக்கிட்டான் அதுக்கு இப்படியா செய்வே ? பாமினியை நோக்கி அதே கத்திரியைத் திருப்பினாள் ராஜம் மரியாதையா இந்த நிமிஷமே இந்த வீட்டை விட்டு வெளியே போயிடு ?! இன்னும் கொஞ்ச   நேரம் இங்கிருந்தாலும் நான் கொலைகாரியாகிவிடுவேன். 

அம்மா இந்த அநியாயத்தைப் பார்த்தியா உம்மருமக என்னை வெளியில் போகச் சொல்கிறாள். 

இதாபாரு உன்னோட அம்மா இன்னும் என்ன கூடப்பிறந்தவன்னு கொஞ்சிறீயே அந்த உறவுலே தானே நீ இங்கே இருக்கே அவரையும் கூட கூட்டிட்டுப் போயிடு இல்லைன்னா இப்பவே போலீஸை கூட்டிட்டு வந்து பிடிச்சிக் கொடுத்துவேன் என்ற வார்த்தைக்கு சக்தியிருந்தது. சட்டென்று கிளம்பினார்கள் அம்மாவும் பிள்ளையும் அய்யோ அய்யோ என்று அரற்றிய மாமியாரை கஞ்சியோ கூழோ நான்தான் ஊத்தணும் நியாபகம் இருக்கட்டும் ஒரு துளி பாசானத்தைக் கலக்க ரொம்ப நேரம் ஆகாது என்று எச்சரிக்கவும் சட்டென்று அடங்கிப்போனாள். சாரங்கன் வந்ததும் ராதிகா அனைத்தையும் சொல்ல அம்மாவின் பிலாக்கணம் வேறு நான் இதில் எதிலும் தலையிடப்போறதில்லைம்மா உங்கம்மா விருப்பம் போலவே எல்லாம் நடக்கட்டும் என்றார். 

அடுத்து நடந்தது எல்லாம் மடமடவென்று பிள்ளை வீட்டார் வந்து பார்த்தார்கள் கல்யாணத்திற்கு அவசரப்படுத்தினார்கள் எல்லா சேமிப்பும் கரைந்து கடனும் கூடியது என்ன செய்ய ? பொண்ணுக்கு நல்ல வாய்ப்பாகிப் போனது. சட்டென்று திகைந்த நல்ல இடம் இன்னும் கொஞ்சம் காத்திருந்தால், பாமினி தன் பிள்ளையோடு போய் ஏதாவது பிரச்சனை செய்வானோ என்று தோன்றியது. ஆனால் அப்படி ஏதும் நடக்கவில்லை மணம் முடிந்து போன ராதிகாவை ஆசையோடு வருடினாள். விஜி கூட தமக்கையின் பிரிவில் சட்டென கண்கலங்கினாள். தாயின் தோளையும் நானிருக்கிறேன் என்று ஆதரவாக பிடித்துக் கொண்டாள். 

போன மச்சான் திரும்பி வந்தான் என்ற கதையாய் இரண்டு மூன்று வருட திருமண வாழ்வில் உழண்டு கையில் கைப்பிள்ளையோடு கணவனை விபத்தில் தொலைத்துவிட்டு தாய் வந்து சேர்ந்தாள் ராதிகா. விஜிக்கு நல்ல வரன் வந்திருந்த நேரம் ஆனால் கையில் பத்து பைசா இருக்காமல் எல்லாவற்றையும் பாரின் மாப்பிள்ளை என்று அம்மா வாரியிறைத்திருக்கிறாள் என்பதை உணர்ந்தாள் பொண்ணு அழகாயிருந்தா மட்டும் போதுமாம் நகை நட்டு வேண்டான்னு யார் சொல்வாங்க? பாட்டி அதற்கு பிறகு அத்தனை பேச்சுயில்லை அவளிடம் அதிக நேரம் பேசுவது விஜி மட்டுமே ஏய் சின்னகுட்டி கொஞ்சம் பக்கத்திலே வாயேன். இரண்டு மூணு இடம் வந்ததுன்னு  பேச்சு வந்ததே என்ன உங்காத்தா வேண்டான்னு சொல்லிடாளா ? 

எல்லாம் பொம்பளை ராஜ்ஜியம், சாரங்கன் அதான் உங்கப்பன்கிட்டே எத்தனையோ சொன்னேன் ஆனா அவன்தான் கேட்கலை, எம்பேரனுக்கு அவளைக் கட்டியிருந்தா உறவும் விட்டுப்போயிருக்காது உனக்கும் இப்போ வந்த வரனில் எதையாவது ஒன்றை முடித்துப் போட்டு இருப்பான் பாரு. எல்லாத்தையும் கெடுத்தவ உங்காத்தான் எம்பிள்ளை வாயில்லாப் பூச்சி நீயும் என்னைக் கொண்டு வெடுக்குன்னு பேசினாலும் நல்லதை எடுத்துச் சொல்றேயில்லை அதனாலதான் உன்மேலயும் அவளுக்கு கடுப்பு மூத்தது பொட்டிப்பாம்பாய் பின்னாடியே சுத்தி காரியத்தை சாதிச்சிகிட்டா ஆனா நீ இப்படி பட்டமரமா நிக்குறியே செருப்பாதேச்சு எம்பிள்ளை கொண்டுவந்து கொட்டறதையெல்லாம் ஆடி, தீபாவளின்னு சீராகவும், பிள்ளைபேறு பேர்சூட்டல்ன்னு வாரியிறைச்சி உன்னை நட்டாத்திலே விட்டுட்டா சின்னகுட்டி இனியாவது முழிச்சிக்கோ இப்போ கூட நீ சரின்னு சொல்லு உன் அத்தைப் பிள்ளை ராஜாமாதிரி இருக்கான் அவனை வரச்சொல்றேன் தங்கமா தாங்குவான் உன்னை என்ற பாட்டியின் பேச்சு பாதி மண்டையில் ஏறியது. வாய் முழுக்க பான்பராக் கறையோடும் சிவந்த கண்களோடும் இருக்கும் அவனைப் போயா கட்டிக்கொள்வது. 




சில நேரம் காதில் பார்க்காமல் போனாலும் அந்த வருட தீபாவளிக்கு என்று அக்காவின் குடும்பத்திற்கு என ஆடைகள் கொண்டு வந்த அம்மா தனக்கென்று ஒரு சிறு ரவிக்கை கூட வாங்கிவரவில்லை என்ற உண்மை உரைத்தது. ஆயிரம் இருந்தாலும் உனக்கு அவதாம்மா உசத்தி என்று குத்தினாள் மகளின் மனமாற்றம் புரியாமல் வார்த்தைகளின் விஷம் உணராமல் என்னடி செய்யறது கட்டிக்கொடுத்தாச்சி அங்கே அவளுக்குன்னு ஒரு கெளரவம் வேணாமா ? இல்லைன்னா 

இல்லைன்னா என்ன கழுத்தைச் சீவிடுவாங்களோ நீ பெத்தவ இப்படி பெத்தபிள்ளைகளுக்குள்ளே ஏம்மா இத்தனை பாராபட்சம் உனக்கு ? என்ற சின்னவளின் கேள்வியை சீண்டலாய் நினைத்த அந்த தாயுள்ளம் அவளின் பேச்சில் தொடர்ந்து விஷம் தர அதன் தாக்கம் தாளாமல் தவித்தபோதுதான் பாட்டியின் இறப்பும் பெரிய மகளின் கைம்பெண் வருகையும். ராஜத்திற்கு சம்மட்டியால் அடித்தது எழ முடியாத அளவிற்கு வலி. அவனுக்கு ஜாதகத்திலே கண்டன்னு யாரும் பொண்ணைத் தரலை நீ சல்லிசா கல்யாணம் பண்ணிட்டே அதான் இப்போ அனுபவிக்கிறே என்ற மகளைப் பார்க்கவென்று வந்த பெண்வீட்டுகாரர்களில் சிலர் சொல்ல அவசரத்தில் தன் பிள்ளையின் வாழ்க்கையை தானே அடித்து நொறுக்கிவிட்டோமே என்ற வருத்தம் பாறாங்கல்லாய் அழுத்தியது.  தரகர் வந்து அம்மா சின்னப்பொண்ணுக்கு ஒரு வரன் வந்ததுன்னு சொன்னேனே அவங்க இப்போ வேண்டாங்கிறாங்க மூத்தவ தாலியறுத்துட்டு வந்திட்டா அவ ராசி என்னவோ ஏதோ இப்போ இவளை….விடும்மா நல்ல இடமா நானே பார்த்துத்தர்றேன் என்று சொல்லிவிட்டு செல்லும் தரகரின் சொற்களில் விஜி ரெளத்திரமானாள் அன்றிலிருந்து வீசும் ஒவ்வொரு சொற்களிலும் விஷம் தோய்த்தாள். அதில் அதிகம் கடிபட்டது ராதிகாதான். 




 

What’s your Reaction?
+1
5
+1
3
+1
0
+1
0
+1
1
+1
0
+1
2
Subscribe
Notify of
guest

0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!