Serial Stories என் காதல் ராட்சசி

என் காதல் ராட்சசி-13

13

“எவ்வளவோ புரட்டிப் பார்த்தோம். கடைசியாக அந்த ஆயிரம் ரூபாய் புடவைதான் எனக்கு பிடித்தது. அவர் எடுத்துக்கோன்னு உடனே மூணு புடவை எடுத்துக் கொடுத்துட்டார் “திவ்யாவின் பேச்சு காதில் கேட்க அலட்சியமாக உதட்டை சுளித்துக் கொண்டாள் மகிதா.

இவள் அலம்பு தாங்க முடியலையே நினைத்தபடி பாத்திரங்களை ஒழித்துப் போட்டு அடுப்பை துடைக்க துவங்கினாள்.

அடுத்த வாரத்தில் திவ்யாவின் பிறந்தநாள் வருகிறது.அதற்கான பர்ச்சேசிங்கிற்காக முதல் நாள் கதிரவனும் திவ்யாவும் சென்று வந்தனர். அந்த பிரதாபங்களைதான் பேசிக் கொண்டிருக்கிறாள்.

மகிதாவிற்கு சத்யேந்திரன், கதிரவன் திவ்யாவை எப்படி வீட்டுக்குள் அனுமதித்தார் என்பது இன்னமும் புதிராகவே இருந்தது. காதல் திருமணம்தான் செய்வேன் என பிடிவாதம் காட்டியவளை ஒடுக்கி தனது மகனுக்கு மணம் முடித்து வைத்தவராயிற்றே அவர். காதல் திருமணம் செய்த மகளை எப்படி வீட்டிற்குள் சேர்த்துக் கொண்டுள்ளார்?

மகிதாவிற்கு அன்று அவள் வீட்டிற்கு போனபோது சத்யேந்திரன் குடும்பத்துடன் அமர்ந்திருந்தது நினைவு வந்தது. இப்போது என்ன செய்யப் போகிறாய் என்ற சவாலான பார்வையுடன் உட்கார்ந்திருந்தவரை பதில் சவால் பார்வை பார்த்து திருமணத்திற்கு சம்மதிக்க மாட்டேன் என்றாள்.

திலகவதியும் திவ்யாவும் கோபமாக பேச முயல அவர்களை கையமர்த்திய சத்யேந்திரன் “யோசித்து சொல்லுங்கள் “என்று விடை பெற்றார்.

சாவித்திரியையும் சுப்பிரமணியையும் முழுமூச்சுடனேயே மறுத்தாள் மகிதா.நல்ல சம்பந்தம் என்று கெஞ்சியவர்களையும் ஆகாத போது மிஞ்சியவர்களையும் தைரியமாக கடந்து வந்தாள். ஆனால்…எனக்கென்ன பதில் என்று வந்து நின்ற ஆதித்யனைத்தான் அவளால் கடந்து வர முடியாமல் போனது.

“கொஞ்சம் சுடு தண்ணீர் கொண்டு வாம்மா” புன்னகையுடன் கேட்டபடி அடுப்படிக்குள் வந்து நின்ற சுகவனத்தை பார்த்து புன்னகைத்தாள் மகிதா.

“எப்படி இருக்கிறீர்கள் அங்கிள்?”

” நான் நன்றாக இருக்கிறேன்மா. இப்போது எல்லாம் சரியாகப் போகிறதா?” சுகவனம் குறிப்பாய் கேட்ட கேள்விக்கு இலக்கில்லாமல் தலையாட்டினாள்.

” பாட்டியின் உடம்பு எப்படி இருக்கிறது?” விசாரித்தாள்.

” வயதானவர்களில்லையா? ஏற்றமும் இறக்கமும் இருக்கும்தான். நான் போய் பார்க்கிறேன். நீ சுடுதண்ணியோடு வா” 

சுகவனம் டாக்டர்.பாட்டியின் ஊர்க்காரர்.தனது மருத்துவ தொழிலில் இருந்து ஓய்வு பெற்று இவர்கள் தெருவிற்கு இரண்டு தெரு தள்ளி சிறியதாக ஒரு வீடு வாங்கிக் கொண்டு குடியிருக்கிறார். மகன் மகள் எல்லோரும் வெளிநாட்டில் செட்டிலாகி விட்டனர். பாட்டி தனது ஊர்காரர் என்று அவரிடம் மட்டுமே வைத்தியம் பார்த்துக்கொள்வார். இப்போதும் பாட்டியை பார்க்கத்தான் வந்திருக்கிறார்.

“இந்த மாத்திரையை இப்போதே போட வேண்டும் அக்கா “உரிமையோடு அகட்டியபடி மகிதா கொணர்ந்த சுடுதண்ணியில் பாட்டியை மாத்திரை போட வைத்தார்.

“கோதுமை கஞ்சி, ராகி கஞ்சி ,கம்பு கஞ்சி என்று பிரித்து கொடுங்க” உணவை பட்டியலிட்டார்.

” அத்தை கஞ்சி குடிக்க சங்கடப்படுறாங்க” திலகவதி சொல்ல…

” என்ன அக்கா இது ?”அதட்டினார்.”வயதான பிறகு வகையாக உண்ணுவதை நிறுத்தி விட வேண்டும். அதுவும் இப்போது படுக்கையில் படுத்து விட்டீர்கள். இனி கட்டுப்பாடு நிச்சயம் வேண்டும்.அவருக்கு பிடிக்கவில்லையென்றால் நான்கு ஐந்து தடவைகளாக பிரித்து கஞ்சியே கொடுங்கள். உப்பு போடாமல் காய்கறிகளை வேக வைத்து கொடுங்கள்” என்றவர் சில மாத்திரைகளை கிறுக்கி நீட்டினார்.

“இதனை மூன்று வேளைக்கும் கொடுக்க வேண்டும்”

” இது என்ன மாத்திரைகள் அங்கிள் ?”ஆதித்யன் கேட்டான்.

” விட்டமின் மாத்திரைகள்தான்பா. பயப்படாமல் வாங்கிக் கொடுங்க” சுகவனம் கிளம்பிவிட்டார்.




 

“பாட்டிக்கு உடம்பு எப்படி இருக்கிறதாம்? டாக்டர் என்ன சொன்னார்?” கேட்டபடி ஸ்வாதீனமாக பாட்டியின் அறைக்குள் கதிரவன் எட்டிப் பார்க்க,சத்யேந்திரனின் உடல் இறுகுவதை மகிதா உணர்ந்தாள்.வேகமாக அறையை விட்டு வெளியேறிவிட்டார் அவர். கதிரவனுக்கு முகம் சுண்டி போனது. திவ்யாவோ அம்மாவை முறைத்தாள்.

ஆக சத்யேந்திரனுக்கும் கதிரவனுக்கும் இன்னமும் எதுவும் சரியாகவில்லை, எனக்கும் மாமனாருக்கும் போல… நினைத்துக் கொண்ட மகிதாவிற்கு இதற்காக சந்தோஷப்படுவதா வருத்தப்படுவதா என்று தெரியவில்லை.

திவ்யாவின் வாடிய முகத்தை பார்த்தபோது பாவமாக இருந்தது.ஆறுதலாக பேசலாம் என்றெண்ணி அருகே போனபோது விழி உருட்டி அவள் முறைத்த போஸில் பயந்து விலகி விட்டாள். போயேன் உனக்கு பாவம் பார்க்க எனக்கு என்ன அவசியம் உதட்டை சுளித்துக் கொண்டாள்.

“இப்போது எதற்கு உதடு கோணுகிறது?” மிக அருகே சத்தம் கேட்க திடுக்கிட்டு திரும்பியவள் பின்னால் நின்றிருந்த ஆதித்யனுடன் உரச வேண்டியதாயிற்று.

 அந்த உரசலுக்கான கோபத்தை முகத்தில் காட்டிய போது “கொஞ்சம் தள்ளி நின்று பேச மாட்டாயா? எப்போதும் என்ன உரசிக்கொண்டு?” என்றான் அவன்.

வேண்டாம் மகிதா பேசாமல் இரு…இவன் வேண்டுமென்றே வம்பு இழுக்கிறான்… தனக்குத்தானே அறிவுறுத்திக் கொண்டு சிரமப்பட்டு வாயை அடக்கினாள்.

“என்ன வேண்டும்?”

“ம்க்கும் இப்படி ஒரு கேள்விக்கு பிறகு தேவையை சொல்ல முடியுமா?” கத்தியாய் வந்த அவள் கேள்வியை சுட்டினான்.

“ரொம்ப நல்லது சொல்லாதீங்க”

“ஆஹா அது எப்படி சொல்லாம இருக்க முடியும்?”

எப்படியும் சொல்லத்தான் போகிறான் இதில் எதற்கு இத்தனை ஜம்பம்? மீண்டும் சுழித்த உதடுகளை கொத்தாய் பற்றினான். “அதென்ன எப்பவுமே இப்படி ஒரு அலட்சியம்?”

 பட்டென அவன் கையை தட்டி விட்டாள்.,” இதையெல்லாம் கேட்கும் உரிமை உங்களுக்கு கிடையாது” குற்றம் சாட்ட ஆரம்பித்த அவள் பேச்சை பாதியில் வெட்டினான்.

” அதையெல்லாம் பிறகு பேசிக் கொள்வோம்.இப்போது என்னோடு வெளியே வா”

செய்த தப்பை மறைத்தால் பரவாயில்லை…. மறக்கவே வைக்க முயற்சிக்கிறானே. மகிதாவினுள் சினம் புரண்டது. “நான் எங்கேயும் வரவில்லை”

“மகி உனக்காகத்தான்…”

“எனக்கு ஒன்றும் வேண்டாம் கிளம்புங்கள்”

சுருங்கிய முகத்துடன் ஆதித்யன் செல்ல ஒருவகை திருப்தி மகிதாவினுள். அடுப்படியில் வெந்து கொண்டிருக்கிறேன் இதை என்னவென்று கேட்கும் வழியைக் காணோம். கொஞ்சலாக வெளியே கூப்பிட வந்து விட்டான்… முணுமுணுத்தபடி வேலைகளை தொடர்ந்தவளுக்கு ஏன் இப்படி அடுப்படிக்குள் வேகிறாளென புரியவேயில்லை.

அடுத்த ஒரு மணி நேரத்தில் புத்தம் புதிய ஆக்டிவா ஹோண்டாவில் ஆதித்யன் வீட்டிற்குள் நுழைவதை ஜன்னல் வழியாக பார்த்தவள் கண்கள் விரிந்தன. இது எனக்காகவா? இதற்காகத்தான் வெளியே கூப்பிட்டானா? ஒருவித எதிர்பார்ப்போடு வாசலுக்கு போனாள்

 அங்கே திவ்யா “ஐ அண்ணா என் பர்த்டே பிரசன்டேஷனா? ரொம்ப தேங்க்ஸ் அண்ணா “என்று சொல்லிக் கொண்டிருந்தாள்.




What’s your Reaction?
+1
62
+1
30
+1
1
+1
4
+1
1
+1
3
+1
1
Subscribe
Notify of
guest

0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!