Serial Stories பாதரஸ பற​வைகள்

பாதரஸ பற​வைகள்-7

7

இப்படி கொஞ்சங்கூட அவசரமேயில்லாம உட்கார்ந்து இருக்கீங்களே நான் மதியத்திற்கு எல்லாரையும் விருந்துக்கு கூப்பிட்டு இருக்கேன், ஏண்டி அவதான் கைப்பிள்ளையை வைச்சிக்கிட்டு அல்லாடறா ? உனக்கென்ன எப்பப்பாரு ஏதாவது ஒரு கதைபுத்தகத்தை தூக்கிட்டு போயிடறே ? நேத்துதான் வீடு காலி பண்ணி வந்திருக்கோம் எவ்வளோ வேலையிருக்கும்..,, இளையவள் விஜியிடம் குறைப்பட்டுக் கொண்டார் ராஜம். 

ஏம்மா அப்படியென்ன வேலை வெட்டி முறிக்குதுன்னு என்னைக் கூப்பிடறே ? இருக்கிறது நாலு சட்டியும் பானையும், ஒரு உடைச்சல் பீரோ காலுக்குப்பதில் கட்டை வைச்சி முட்டுக்கொடுத்திருக்க கட்டில் உன்னோடதும் அப்பாவோடதுமா மருந்து டப்பாக்கள் பாட்டி வீட்டு சீதனமா ஒரு டிரங்குபெட்டி வேறென்ன வைரமும் வைடூரியமும் கொட்டிக்கிடக்குது இங்கே ? இதை அடுக்க உனக்கு எத்தனை பேரு வேணும். விஜி தாடகை போல இடுப்பில் கைகளை ஊன்றிக்கொண்டு அம்மாவின் அருகில் வந்தாள். 

ஏன்டி இப்படி கத்துறே வந்த அன்னைக்கு உன்னோட குணம் எல்லாருக்கும் தெரியணுமா ?! பாண்டிச்சேரி வீடு மாதிரி இது தனியிடம் இல்லை ஒண்டுக்குடித்தனம் இங்கே கொஞ்சம் அடக்கித்தான் பேசணும் இல்லைன்னா வீட்டு மானம் சந்தி சிரிக்கும். 

ம்… அதுக்கொண்ணும் குறைச்சல் இல்லை பெரிய ஜமீன்தார் வீடு பாலும் நெய்யுமா வழியுது நீ விருந்துக்கு ரெடி பண்றே ? வத்தக்குழம்பும், வெந்தும் வேகாததுமா இரண்டு கறிகா, பாலா தண்ணியான்னு குடிக்கிறவங்களுக்கு சந்தேகம் வர்றாமாதிரி ஒரு பாயசம் போம்மா பேச வந்திட்டே ஏன் உன் சீமந்த புத்திரி அந்த அழுமூஞ்சி என்ன பண்றா ?! எப்பபாரு புள்ளையை பார்த்திட்டே மூலையிலே உட்கார்ந்திருக்கா. நல்லா படிச்சவ தானே என்னைமாதிரி பத்தாங்கிளாஸோட படிப்பை நிறுத்தியிருந்தாலும் பரவாயில்லை ஒரு டிகிரி முடிக்கிறதுக்குள்ளே பாரின் மாப்பிள்ளைன்னு கல்யாணத்தைப் பண்ணி அனுப்பிட்டே இப்போ எல்லாம் என் தலைமேல ?!

கூடப்பிறந்தவளுக்கும் பெத்தவங்களுக்கும் செய்யறது ஒரு கஷ்டமா விஜி. அவ தலையெழுத்து நாலு பேருமாதிரி நல்லாயிருப்பான்னுதான் சக்திக்கு மீறி கல்யாணம் செய்து வைத்தேன் என்ன பண்றது அவன் இப்படி நோய் வந்து பொசுக்குன்னு போவான்னு கண்டேனா என்ன ? அந்தப்பக்கமும் அக்குதொக்கு இல்லை அவளுக்கு நம்மளைவிட்டா யாரு விஜி. கொடுக்கு மாதிரி எப்பப்பாரு கொட்டிகிட்டே இருக்கியே ? விஜி அம்மாவின் பேச்சுக்கு பதில் சொல்லும் முன்னரே ராதிகா வெளியே வந்து விட்டாள்

என்னம்மா நாளெல்லாம் மாடுமாதிரி உழைச்சிட்டு ஒருநா தான் லீவுல இருக்கா அவளை ஏன் தொந்தரவு பண்றே ? த்தோ நான் பூமிக்கு பாரமா சும்மாத்தானே இருக்கேன் கொடு நான் பார்த்துக்கறேன் வாய்கொள்ளாமல் பேசிக்கொண்டு வளைய வந்த பெண் இப்போது எண்ணி எண்ணி பேசுகிறாள் அவளுக்கு ஐந்து வயசு சின்னவள் என்னமாய்பேசுது பெரியவங்க சின்னவங்கன்னு கொஞ்சம் கூட மதிப்பில்லாம எல்லாம் சம்பாதிரிக்கிற திமிரு. அப்படியே என் மாமியைக் கொண்டு பிறந்திருக்கா போல.




ராதிகா குழந்தையை தூளியில் போட்டு விட்டு அடுக்களையின் இருட்டில் வழியும் வியர்வையோடு கண்களையும் துடைத்துக்கொள்வது தெரிந்தது. இவளுக்கு என்னைக்கு விடிவு பொறக்குமோ, நல்லா படிச்சிகிட்டு இருந்த பொண்ணுக்கு பெரிய இடம் பெரிய இடன்னு நம்பி ஏமாந்து போயிட்டேனே எனக்கு கிடைக்காத வாழ்க்கை என் பிள்ளைக்கு கிடைக்கணுமின்னு நினைச்சி கடைசியிலே, 

பொண்ணைப் பெத்த தகப்பன் கொஞ்சமாவது கவலை இருக்கா. ராஜத்திற்கு தாலிகட்டிய புண்ணியவான் சாரங்கன் தன் தேய்ந்து போன சைக்கிளுக்கு எண்ணெய் விட்டுத் துடைத்துக்கொண்டு இருக்கிறார். 

சொந்தக்காரர்கள் திருமணத்தில் ராஜத்தைப் பார்த்த சாரங்கனின் அம்மா இவதான் என் மருமக என்று பெட்டியோடு வந்து வீட்டுவாசலில் நின்றுவிட்டார். கல்யாணப் பருவம்தான் என்றாலும் அந்தகாலத்து எட்டாவது படித்த ராஜத்திற்கு கொஞ்சம் ஒடிசலாய் முன்பக்கம் சற்று வழுக்கை படிய காத்திருக்கும் சோடபுட்டி சாரங்கனை பிடிக்கத்தான் இல்லை, தரித்தரம் கொண்டாடும் வீட்டில் அவளுக்குப் பிறகு இன்னும் மூன்றைக் கரையேத்த வேண்டுமே என்று அம்மாவின் அழுகையும், பெரிசா ஏதும் வேண்டான்ங்கிறாங்க. ஒரு மூணுபவுன் நகையும் இரண்டாயிரம் சுருளும் போதுமாம் கல்யாண செலவும் பாதி பாதி நான் நம்ம செட்டியார் கிட்டே ஐய்யாயிரம் கேட்டு இருக்கேன் பையன் சொந்தமா பிரஸ் வைச்சிருக்கானாம் அவளாவது மூணு வேளையும் சோறு சாப்பிடுவாளே !

ஏய் ராஜம் புதுசா ஒருத்தர் வந்திருக்காராம் இங்கிலிஷ் படத்துலே ஜேம்ஸ்பாண்ட் தோத்தாரு போ. அத்தனை அழகாம் பேரு ஜெய்சங்கராம். ராஜமும் ஜெய்சங்கருடன் தான் ஜோடியாய் ஆடுவது பாடுவதைப் போலலெல்லாம் கனவு கண்டு இருக்கிறாள் டூரிங் டாக்கீஸ்ல ஜெய்சங்கர் நடிச்ச சி.ஐ.டி சங்கர் படம் ஓடுதாம் வாம்மா போய் பார்த்துட்டு வரலான்னு அம்மாவிடம் நச்சரித்து ராத்திரிக்கு கஞ்சிக்கு வழியில்லை சினிமா கேக்குதான்னு முதுகில் மொத்து வாங்கிய நினைவு இப்போதும் கூட தன் வீட்டில் உயிருக்கு போராடிக்கொண்டு இருக்கும் அந்த ரேடியோ பொட்டியில் போடும் பளிங்கு நாள் ஒரு மாளிகையில் வந்து போகும் அந்த அடியின் வலி இன்னமும் நெஞ்சத்தில் !

எத்தனை ஆர்ப்பாட்டம் அவளுடைய மாமியார், கஷ்டப்படற குடும்பந்தான் அதுக்காக வந்தவங்களுக்கு காப்பிக்கு பதில் வெறும் சுடுதண்ணியா தர்றது. பட்டுப்புடவையிலே கொஞ்சம் சரிகை கையளவுக்கு வேணாம் விரல்தண்டியாவது இருக்க வேண்டாமா, நூல்மாதிரி ம்… என்ன செய்ய பையனுக்கு பொண்ணை பிடிச்சிப்போச்சி இல்லைன்னா…. அந்தம்மாளின் பேச்சு ராஜத்தைப் பெற்றவர்களுக்கு வயிற்றில் புளியைக் கரைத்தது. பொண்ணுபார்க்க வந்தப்போ பேசியவங்களா இவங்கன்னு, ஏன்யா ஒரு பிளசர் வைக்கக்கூடாதா ? அந்தப்பெண்மணி போனாற்போதும் என்றிருந்தது அவர்களுக்கு கூடவே அவர்களின் சீமந்த புத்திரியும் தினமும் என்ன பாடு படப்போகிறாளோ என்ற கவலை.

இங்கே பாரு ராஜம் நீ ஒண்ணும் சின்னப்பொண்ணு இல்லை, எதைஎதையோ நினைச்சு கண்ணைக் கசக்கிட்டு கிடக்காதே உன் மாமியார் கொஞ்சம் கட்டு செட்டான ஆளுதானே தவிர கெட்டவங்க இல்லை, இனிமே இதுதான் உன் வீடு புரிஞ்சி நடந்துக்கோ உனக்கு பிறகு இன்னும் மூணு பேர் இருக்காங்க நினைவு இருக்கட்டும். என்ன நடந்தாலும் வீட்டுப்பக்கம் வந்திடாதேன்னு அம்மாவின் மறைமுக எச்சரிக்கை. மனம் நிறைய வெறுப்போடுதான் இரவு சடங்கும் அந்த ராத்திரியின் விடியலிலேயே தெரிந்துவிட்டது கணவன் சாரங்கன் பொன் குதிரை அல்ல மண் குதிரை என்று. 




பொண்டாட்டியிடம் படுத்துக் கொள்ள கூட அம்மாவின் தலையசைப்பைத்தான் எதிர்பார்த்தான். வீட்டு நிர்வாகம் அத்தனையும் அந்தக் கிழவியிடம் சதா நச்சரிப்பு என்ன சமைக்கிறே ? உங்க வீடுன்னு நினைச்சியா எங்க பரம்பரையே தின்னுகெட்ட பரம்பரை ஐம்பது ஏக்கரா நிலம் இப்போ 5 ஏக்கராதான் இருக்கு பெரிய குடும்பம் 

பாலுலே இத்தனை தண்ணியேன் புது டிகாஷன் போட்டு காப்பி கொடு கள்ளிச்சொட்டு மாதிரி இருக்கணும். ஆயிரம் வசவுகள் காலைப்பரப்பி உட்காரதே ஸ்ரீதேவி வீட்டைவிட்டு போயிடுவா. ஏண்டா அந்த வைர கம்மல் ஒண்ணு கிடக்கு அதைகொண்டாந்து உம் பொண்டாட்டி காதிலே போடு முன்னே பின்னே வைரத்தை பாத்திருப்பாளா என்ன ? பாவம் தான் ஆசைப்பட்டு கூட்டிவந்த பெண்ணின் குணமே வைரம் போல் என்பதை மறந்து கல்லைப் பற்றி பீற்றிக்கொண்டாள் மாமியார்.

அலங்கரிக்கப்பட்ட தேர் போல ராஜம் நடந்துவர ராணிக்குப்பின்னால் வரும் காவல்காரனைப்போல சங்கரன் வருவார். இந்தா பட்டு பனாரஸீமாவே உடுத்திகிட்டு இருந்தா வீட்டு வேலையெல்லாம் யார் பாக்குறது. அடுப்படியிலே வேலை செய்யறவளுக்கு எதுக்கு வளையலும் கம்மலும் எதையெல்லாம் கெளரவம் என்று மருமகளுக்கு பூட்டினாளோ அதையெல்லாம் சாமர்த்தியமாக கழட்டிவிட்டாள் இதெல்லாம் பாட்டியோட சொத்து இந்த வீடு பேரனுக்கு அதுபோல இந்த நகையெல்லாம் எம்பொண்ணுக்குத்தான் என்றபோது திக்கென்று நிமிர்ந்தாள் ராஜம்.

இவருமட்டும்தான்னு …..

வார்த்தையை முடிக்கவில்லை….சொன்னேன்தான் அவ எனக்குப் பிடிக்காதவனை கல்யாணம் பண்ணிகிட்டா அதுக்காக அப்படியே விட்டுட முடியுமோ. நல்ல பொண்ணுதான் சேர்க்கை சரியில்லை இப்போ அம்மான்னு கண்ணை கசக்கிட்டு வந்து நின்னா உனக்கென்ன உன் அப்பன் சம்பாதித்தா இதெல்லாம் கழட்டுன்னா கழட்ட வேண்டியதுதானே ! அந்த முன்பின் தெரியாத முகம் அறியாத நாத்தனார் ஒரு நாள் ஜங்கென்று வந்து குதித்தாள் எனக்கு அவனைப் பிடிக்கலைம்மா தினமும் குடிச்சிட்டு வந்து அடிக்கிறான் அவங்க அம்மா வேலைக்காரி மாதிரி எல்லா வேலையும் வாங்குறா ? 

இதென்னடி ஊரிலே நாட்டிலே இல்லாத கூத்தா இருக்கு. வீட்டுக்கு வந்த மஹாலட்சமியை வேலைவாங்குறது தங்கமா தாங்க வேண்டாமா அவளுக்கு இந்த மாதிரி விக்கிரகமா  நீ கிடைச்சது பொறாமைடி பேசாம ராணி மாதிரி இங்கயே இரு அவங்களுக்கு வேணுன்னா வந்து கூட்டிட்டுப்போகட்டும். மாமியாரின் பேச்சிற்கு நாத்தியின் ஒருவார அழுக்குத் துணிகளை துவைத்தபடியே கசப்பாய் சிரித்துக்கொண்டாள் ராஜம். அவரவர் நியாயம் அவரவர்களுக்கு 

பொண்ணு வாழலை மருமகள் வாழ்வதா அறைக்குள் செல்லும் போதெல்லாம் எதாவது சாக்கு சொல்லி ராஜத்தை பிடித்து வைத்துக்கொள்வதும், வேண்டுமென்றே தேவையில்லாத வேலைக்கு சாரங்கனை வெளியே அனுப்பவதுமாய் இருக்க முதலில் பிள்ளையுண்டானதை பூரிப்போடு சொன்ன ராஜத்தை எரித்து விடுவதைப் போல பார்த்தாள் மாமியார். ஏண்டி அப்படியென்ன கொள்ளை போற அவசரம் வீட்டுலே ஒருத்தி புருஷன் கூட வாழாம இருக்காளேன்னு தெரியவேண்டாம் அவ முன்னாடி நீ வயித்தை சாச்சிட்டு வந்து நின்னா நல்லாவா இருக்கும். தான் வாழமுடியலைன்னு குமைஞ்சிபோக மாட்டா உனக்கு இருக்கே மூணு தங்கைகள் அவங்களுக்கு இப்படியேதாவதுன்னா நீ இப்படித்தான் வயித்தை சாச்சிகிட்டு நிப்பியோ ! கரு நன்றாக வளர்ந்திருப்பதாக மருத்துவச்சியின் பேச்சில் ஒரு விபரீத எண்ணம் அடியோடு அழிக்கப்பட்டது. 

இந்தாரு ஆத்தா பொண்ணுக்கு கரு ஸ்டிராங் ஆயிடுச்சி, நீபாட்டுக்கு ஏதாவது தின்னத்தந்துடாதே பொட்டுன்னு போயிட்டா என்ன செய்றது. போனவாரம் கூட அந்த பசுபதி மருமகளை கொளுத்திட்டான்னு வந்த போலீல் பிடிச்சிகினு போகலை, என்ன இப்போ இது முதபிள்ளைதானே பெத்துக்கிட்டுப் போகட்டும் உம் பிள்ளை முன்னாடி அவ நிறைஞ்சியிருக்கறது பிடிக்கலைன்னா அவ பெத்தவ வீட்டுக்கு அனுப்பிடு யாரு கண்டா அங்கேயிருக்கிற தரித்திரத்திலே அவளே போனாலும் பிரசவத்திலே போயிட்டான்னு நாம கழண்டுக்கிளாம் பாரு மருத்துவச்சியின் யோசனையில் கல்யாணத்திற்குப் பிறகு கடைசிதங்கை திரண்டுவிட்டாள் என்று பார்க்கப்போக, மாமியார் ஏச்சுக்கும் பேச்சுக்கும் ஆளான அவளின் குடும்பத்தை கிட்டத்தட்ட ஒருவருடத்திற்கும் மேலாக பார்க்கப்போகும் சந்தோஷம்.

அந்த வீடு இப்போதும் தரித்திரத்தின் மாளிகையாகத்தான் இருந்தது. ஆனால், மனித ஜீவன்கள் அவர்களை அன்போடு வரவேற்று புதியவரவை எதிர்பார்த்தன. ஆனால் அதுவும் நிலைக்கவில்லை ராதிகா பிறந்த போது மாமியார் சொன்ன கொலுசும், செயினும், கொடியும் போட முடியவில்லை என்று மேலும் மூன்று வருடங்களைக் கழித்தாள் தாய் வீட்டிலேயே, சொல்ல முடியா சோகம் விடும்மா நான் இன்னொரு பிள்ளையை பெத்ததா நினைச்சிக்கிறேன் என்று அப்பாவும் அம்மாவும் சொன்னாலும்




ராஜத்திற்குத்தான் மனம் வரவில்லை. முதன் முறையாக சாரங்கனுக்கு கடிதம் எழுதுகிறாள். 

நாளில்லா ஆச்சிரியமாக சாரங்கனும் வந்திறங்கிவிட்டான் சில பொம்மைகளோட அம்மாக்கு தெரியாது நான் வந்தது இத்தனன நாள் பார்க்க வரலையே நீ ஏதாவது நினைச்சிக்குவியோன்னு பயந்தேன் உன் லட்டரைப் பார்த்ததும் என் நண்பன் கிட்டே நூறு ரூவா வாங்கிட்டு உனக்கு பிள்ளைக்கும் வாங்கிட்டு வந்தேன். என்று சில பொருட்களை கடை பரப்பியபோது, முதன் முறையாக சாரங்கனின் மேல் அன்பு துளிர்த்தது ராஜத்திற்கு. வராத மாப்பிள்ளை ஒரு புல்லை கிள்ளி மாப்பிள்ளை என்றாலும் அது ஒரு முறை துள்ளிக்குதிக்குமாம் அப்படித்தான் இருந்த ஒரே அறையும் தம்பதிகளுக்கு ஒழித்து தரப்பட, இரண்டுநாட்கள் தங்கியிருந்த சாரங்கன் மூன்றாம் நாள் காலையில் கசங்கிய தலையுமாய், தூங்கிய கண்களுமாய் விழித்தது அவளின் அம்மாவின் முன்தான்…. !

ஏன்யா கேட்டதை போட வக்கில்லை பொண்ணோட பிள்ளையை இங்கேயே வச்சிக்கலான்னு திட்டமோ ? அவளின் எகத்தான பேச்சிக்கு அதுவரையில் அமைதிகாத்த அப்பா சட்டென்று பொண்ணைக் கட்டிப்போய் வாழ வைக்கத் தெரியாத நீங்க அதைபத்தி பேசாதீங்கன்னு சொல்லிட்டு விருட்டென்று வெளியே போய்விட, கருத்த முகத்தோடு ஆயிரம் வசவுகளோடும் சாரங்கனை காதைப்பற்றி இழுத்துப்போய்விட்டாள் மாமியார். 40 நாட்கள் கழிந்த நிலையில் எங்கோயோ பணம் புரட்டி அந்த அம்மாள் கேட்ட பொருளோடு வந்த தந்தை மகள் இன்னொரு குழந்தைக்கு தாயாகப் போகிறாள் என்று அறிந்ததும் அழுவதா சிரிப்பதா என்ற நிலைக்கு வந்துவிட்டார் 

ராஜத்திற்கு வெட்கம் அவமானம் தங்கைகளின் உரசல் பார்வைகள் திமிறிக்கொண்டு நிற்கும் மார்பின் பெருமூச்சுகள் என நெருப்பில் குளித்ததைப் போல இருந்தது. ஆனால் இம்முறை சாரங்கன் அவளை வெகுநாள் தவிக்கவிடவில்லை, அம்மாவுக்கு முன்னைமாதிரி ஒண்ணும் முடியலை, அதான் ராஜத்தை கூட்டி வரச்சொன்னா. தங்கச்சியும் இப்போ என் கூட இல்லை வயசான அம்மாவைக் கவனிக்க என்னால முடியலை, பேசியவனை புழுவைப்போல பார்த்த அப்பாவை அடக்கி அடுக்களைக்குள் கூட்டிப்போனாள் பெற்றவள். 

எதையாவது பேசி காரியத்தை கெடுத்துடாதீங்க இருந்திருந்து இப்பத்தான் பொண்டாட்டியைக் கூட்டிப்போகணுன்னு அவனுக்கு தோணியிருக்கு

அதுக்கு என் பொண்ணைப் போய் அவளுக்கு ஊழியம் பண்ணச்சொல்றீயா வேண்டாம்டி அவமாமியார்க்காரிக்கு நாக்கா அது தேள் கொடுக்கு, கூழோ கஞ்சியோ இங்கே கிடக்கட்டும்.

அதுக்கா கல்யாணம் செய்து கொடுத்தோம், என்னதான் கஷ்டன்னாலும் பொண்ணு புகுந்த வீட்டுலேதான் இருக்கணும் மூத்தவளே இப்படி உட்கார்ந்திட்டா மற்றதுகளை எப்படி கரையேத்தறதாம், மாமியார் பேச்சு வெளியே வராது இவளுக்கு சமத்தா இருக்கத் தெரியலைன்னுதானே பேசுவாங்க இது வெளியே பரவினா நான் எல்லா பிள்ளைகளையும் இப்படித்தான் வளர்த்திருப்பேன்னு வரும். அதுதான் அவ வீடு, மாமியார் மருமக பிரச்சனை எங்கேதான் இல்லை உங்கம்மா என்னை கொஞ்சநஞ்ச பாடா படுத்தினாங்க அம்மாவின் கடைசி வார்த்தைகளுக்குள்ளாகவே ராஜம் தன் டிரங்குப்பெட்டியோடு சாரங்கனுடன் நின்றாள். 

அப்பா அம்மா நான் அவர்கூட கிளம்பறேன் அங்கே அத்தைக்கு ஒண்ணும் முடியலையாம் போட்டது போட்டபடி கிடக்கு என்று பதிலுக்கு கூட எதிர்பாராமல் பஸ்ஸை பிடித்து அலுப்போடு வந்தபோதுதான் வீட்டின் முகப்பே வித்தியாசப்பட்டு இருந்தது. ஏங்க இது நம்ம வீடு இல்லையே ஏன் இங்கே வந்திருக்கீங்க, ராஜத்தின் கேள்விக்கு, தங்கையின் கணவன் திரும்பி வந்து சொத்துகளை எல்லாம் தங்கச்சியின் பேருக்கு மாத்தியெழுத்திட்டு அம்மாவை துரத்திட்டதாகவும் இப்போ ஒரு மெக்கானிக் கடையில் மாதம் 700ரூபாய்க்கு தான் வேலைப்பார்க்கிறதாகவும் தங்கச்சியின் அந்த செயலால் அம்மாவிற்கு கைகால் விழுந்திடுச்சி இனிமே நீதான்….. என்று அழுத சாரங்கனை என்ன சொல்வது என்று தெரியாத ராஜம் அன்றைக்கு சுதாரித்ததுதான். 

இரண்டு பிள்ளைகளைப்பெற்று படுக்கையிலும் தன் ஜம்பம் போகாமல் குத்திக்கொண்டு கிடக்கும் கிழவிக்கு பணிவிடைகளையும், செய்து கொண்டு அப்பளமும் வடகமும் ஊறுகாயும் தயாரித்து அக்கம் பக்கத்து வீடுகளுக்கு எல்லாம் கொடுத்து ஓரளவுக்கு குடும்பத்தை சேர்த்துக்கொண்டாள். மெக்கானிக் கடையில் சேர்வார் கூட சேர்ந்து நிறைகுடியால் வீடு வந்த சாரங்கனின் தொடுகையை முதன் முதலாய் அலட்சியப்படுத்தினாள். படுக்கையைத் தட்டி அவனின் தாய்க்கு அருகிலேயே போட்டாள். போ போய் உங்கம்மா கட்டிலுக்கு கீழே படு அவகிட்டேயே கேளு இப்படி அழுக்கா குடிவெறியோடு வந்தா பொண்டாட்டி எப்படி கூட படுப்பான்னு நீண்ட நாள் அடக்கிவைத்த கோபம், தன்னை உறிஞ்சிக்குடிக்கும் குடும்பம், உடலுக்கு மீறிய உழைப்பு என எல்லாம் வார்த்தைகளாய் வெளியே வர அன்று அடங்கியவர்தான் சாரங்கன். 

அவளுக்கு தாங்கிற திமிருடா பொட்டச்சிக்கே அத்தனை இருந்தா நீ ஆம்பிளை குடி கூத்தின்னு இருக்கிறதுல என்னடா தப்பு பேசினது தப்புன்னு அவளை கால்ல விழ வை, கிழவியின் போதனை சாரங்கனின் இயலாமை எல்லாம் விடிந்தது ராஜத்தின் தலையில் தான். கிழவி போனபிறகும் கூட அவர்கள் இருவரிடம் அத்தனை சுமுகமான பேச்சு வழக்கு இல்லை, இரண்டு பெண் பிள்ளை அதுங்களை கரையேத்தனுன்னு குருவியைப் போல சேர்த்து வைத்தாள். வெள்ளமாய் அடித்துவிட்டுப்போய் விட்டானே ராதிகாவிற்கு பார்த்த மாப்பிள்ளை என்னமோ அந்த குடும்பத்திற்கே மாப்பிள்ளை ராசி இல்லை போலும். 




 

What’s your Reaction?
+1
7
+1
10
+1
0
+1
0
+1
0
+1
0
+1
1
Subscribe
Notify of
guest

0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!