gowri panchangam Sprituality

அருள்தரும் சக்தி பீடங்கள்: 50 ஹேமகூடம் மன்மதை

அம்மனின் சக்தி பீட வரிசையில், கர்நாடக மாநிலத்தின் பெல்லாரி மாவட்டத்தில் பாயும் துங்கபத்ரா ஆற்றங்கரையில் உள்ள ஹம்பி (ஹேமகூடம்) பம்பாதேவி சமேத விருபாட்சர் கோயில் முக்கியமானதாகக் கருதப்படுகிறது. விஜய நகரப் பேரரசின் தலைநகரமாக விளங்கியபோது இத்தலம் விஜயநகரம் என்று அழைக்கப்பட்டது.

சமயச் சிறப்பு வாய்ந்த இடமாகக் கருதப்படும் இத்தலத்தில் விஜயநகரத்தோடு தொடர்புடைய பல நினைவுச் சின்னங்கள் காணப்படுகின்றன. துங்கபத்ரா ஆற்றின் பழைய பெயரான ‘பம்பா’ தான் இப்போது ‘ஹம்பே’ (ஹம்பி) என்ற கன்னட சொல் வழங்கப்படுவதாகக் கூறப்படுகிறது. விஜயநகர அரசர்களின் குலதெய்வமான விருபாட்சரின் பெயராலேயே இத்தலம் ‘விருபாட்சபுரம்’ என்றும் அழைக்கப்படுகிறது.




தல வரலாறு

ஹேமகூட மலையில் முனிவர்கள் பலர் வசித்து வந்தனர். அப்போது அவர்களுக்கு இளம்பெண் ஒருத்தி பூக்களைப் பறித்துக் கொடுப்பது, மாடு, கன்றுகளைப் பாதுகாப்பது போன்ற பணிகளைச் செய்து கொண்டிருந்தாள். யாகம், பூஜைகள் உள்ளிட்ட இறைப் பணியில் ஆழ்ந்திருந்த முனிவர்கள், இந்தப் பெண்ணின் சேவையை மெச்சி, அவளுக்கு வரம் அளிப்பதாகக் கூறினர்.




அனைவரும் வணங்கும் விருபாட்சரையே மணம் புரிய விரும்புவதாக அந்தப் பெண் கூறியதும் முனிவர்கள் ஆச்சரியப்பட்டனர். அம்பாளின் அம்சமாக இருப்பவருக்கே இதுபோன்ற விருப்பம் இருக்கும் என்பதை உணர்ந்த முனிவர்கள், சிவபெருமானை நோக்கி தவம் மேற்கொள்ளுமாறு அப்பெண்ணைப் பணித்தனர். அதன்படி முனிவர்களிடம் இருந்து மந்திர உபதேசங்களைப் பெற்று, சிவபெருமானை நோக்கி அப்பெண் தவம் மேற்கொண்டாள்.

அப்பெண்ணின் தவத்தில் மகிழ்ந்த சிவபெருமான், அவள் முன் தோன்றி, வேண்டிய வரங்களைப் பெற்றுக் கொள்ளலாம் என்கிறார். அப்பெண்ணும், தன் பெயர் ‘பம்பை’ என்பதையும், சிவபெருமானை மணம் புரிய விரும்புவதையும் தெரிவிக்கிறாள். அவளின் விருப்பப்படியே சிவபெருமானும் அவளை மணம் புரிந்து கொண்டதால், அவர் ‘பம்பா பதி’ என்று அழைக்கப்படுகிறார்.

புவனேஸ்வரி

பம்பை என்று அழைக்கப்படும் அப்பெண்மணி, பார்வதி தேவியின் அம்சமாகவே கருதப்பட்டு, ‘மன்மதை’ என்றும் ‘புவனேஸ்வரி’ என்றும் அழைக்கப்படுகிறார். ஒருவர் இறை சேவை புரிந்து, அவரது அருளுக்கு பாத்திரமானால், அவரது கருணையைப் பெறலாம் என்பதே அம்பிகை அனைவருக்கும் உணர்த்தும் தத்துவம் ஆகும்.




கோயில் அமைப்பும் சிறப்பும்

தென்னிந்திய வரலாற்றுச் சின்னமாகக் கருதப்படும் ஹம்பி கிராமமானது துங்கபத்திரை ஆறும், மூன்று புறமும் கற்குவியலாய் காணப்படும் குன்றுகளும் சூழ்ந்து காணப்படுகிறது. துங்கபத்ரா ஆற்றங்கரையில் உள்ள ஹேமகுடா மலை அடிவாரத்தில் அமைந்துள்ள விருபாட்சர் கோயில், பம்பாவதி கோயில் என்றும் அழைக்கப்படுகிறது.

திருவிழாக்கள்

பிப்ரவரி மாதத்தில் இங்கு வருடாந்திர தேர்த் திருவிழா நடைபெறுகிறது. மாசி மாத சிவராத்திரி, புரட்டாசி நவராத்திரி, ஐப்பசி அன்னாபிஷேக தினங்களில் விருபாட்சர், பம்பா தேவிக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெறும். ஆன்மிகத் தலமாகவும், சுற்றுலாத் தலமாகவும் இத்தலம் விளங்குவதால், எப்போதும் பக்தர்கள் கூட்டம் இங்கு காணப்படுகிறது.




What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!