gowri panchangam Sprituality

அருள்தரும் சக்தி பீடங்கள் – 39 திருவொற்றியூர் திரிபுரசுந்தரி

அம்மனின் சக்தி பீட வரிசையில் திருவொற்றியூர் திரிபுரசுந்தரி சமேத ஆதிபுரீஸ்வரர் கோயில் இட்சு சக்தி பீடமாகப் போற்றப்படுகிறது. சிவபெருமானின் தேவாரப் பாடல் பெற்ற 274 சிவாலயங்களில் இது 253-வது தேவாரத் தலம் ஆகும்.

தல வரலாறு

இத்தலத்தில் மூலவர் ஆதிபுரீஸ்வரர், ஒற்றீஸ்வரர், அம்பிகை வடிவுடையாம்பிகை, வட்டப்பாறையம்மன், தல விருட்சங்கள் அத்தி, மகிழம், தீர்த்தங்கள் பிரம்ம தீர்த்தம், அத்தி தீர்த்தம், ஆகம பூஜை, காரணம், காமீகம் என்று அனைத்தும் இரண்டாக அமைந்திருப்பது தனிச்சிறப்பு.

பிரளயம் ஏற்பட்டு உலக ஜீவராசிகள் அனைத்தும் அழிந்து விட்டன. மீண்டும் உலகைப் படைக்க நினைத்த பிரம்மதேவன், இத்தலத்தில் உள்ள சிவபெருமானை வழிபட்ட பிறகுதான் படைப்புத் தொழிலைத் தொடங்கினார் என்று தலபுராணம் கூறுகிறது. எனவே, இத்தலத்து மூலவர் ‘ஆதிபுரீஸ்வரர்’ என்று அழைக்கப்படுகின்றார். புற்று வடிவில் உள்ளதால் ‘புற்றிடங்கொண்டார்’ என்றும் அழைக்கப்படுகின்றார். பிரளயம் இத்தலத்தை ஒற்றிச் (விலகிச்) சென்றதால் ‘ஒற்றியூர்’ என்று வழங்கப்படுகிறது.




ஒருமுறை இப்பகுதியை ஆண்டுவந்த அரசன் தனது ஆளுகைக்குட்பட்ட பகுதிகளில் வரி வசூலிக்க வேண்டும் என்று ஓலையில் எழுதி அதிகாரிகளுக்கு அனுப்பி வைத்தான். அதிகாரிகள் திருவொற்றியூர் தவிர மற்ற இடங்களில் வரி வசூல் செய்து அரசனிடம் கொடுத்தனர். திருவொற்றியூரில் ஏன் வரி வசூல் செய்யவில்லை என்று அரசன் வினவ, ஓலையில் ‘ஒற்றியூர் நீங்கலாக’ என்று எழுதியிருந்ததை அதிகாரிகள் காட்டினர். தான் எழுதியது எப்படி மாறியது என்று திகைத்த மன்னன் வேறு ஒரு ஓலையில் எழுதித் தர, அந்த ஓலையிலும் ‘ஒற்றியூர் நீங்கலாக’ என்ற எழுத்து தெரிந்தது. இதைக் கண்ட அரசன் இதை எழுதியது ஒற்றியூர் இறைவனே என்று உணர்ந்து அப்பகுதியில் வரி வசூல் செய்யாமல் விட்டுவிட்டான். ஓலையில் இறைவன் எழுதியதால் ‘எழுத்தறிநாதர்’ என்று பெயர் பெற்றார்.

மூலவர் ‘ஆதிபுரீஸ்வரர்’, ‘புற்றிடங்கொண்டார்’, ‘படம்பக்க நாதர்’ என்னும் திருநாமங்களுடன், சதுர வடிவ ஆவுடையுடன் மிகப்பெரிய புற்று லிங்க வடிவில் காட்சி அளிக்கின்றார். மூலவர் மீது கவசம் சாத்தப்பட்டுள்ளது. கார்த்திகை மாதம் பௌர்ணமி முதல் மூன்று நாட்கள் கவசம் நீக்கப்பட்டு மீண்டும் சாத்தப்படுகிறது.

அம்பாள் ‘வடிவுடையம்மை’, திரிபுரசுந்தரியம்மை என்னும் திருநாமங்களுடன் வெளிப்பிரகாரத்தில் தனி சன்னதியில் காட்சி அளிக்கின்றாள். பௌர்ணமியும் வெள்ளிக்கிழமையும் சேர்ந்து வரும் நன்னாளில் காலை வேளையில் சென்னையை அடுத்த மீஞ்சூருக்கு அருகில் உள்ள மேலூரில் எழுந்தருளியிருக்கும் திருவுடை அம்மனையும், உச்சிக்கால பூஜைக்கு இத்தலத்து வடிவுடை அம்மனையும், மாலையில் சென்னையை வடக்கே இருக்கும் திருமுல்லைவாயிலில் உள்ள கொடியிடை அம்மனையும் தரிசனம் செய்கின்றனர். இந்த மூன்று சிலைகளும் ஒரே சிற்பியால், ஒரே அளவில் செதுக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. அம்பிகையின் 51 சக்தி பீடங்களுள் இத்தலம் இக்ஷீ பீடத் தலமாக விளங்குகிறது. இங்கு அம்பாள் கிரியா சக்தியின் வடிவமாகப் வணங்கப்படுகின்றாள்.




மூன்று அம்பிகையர் தரிசனம்

சென்னை சுற்றுவட்டாரப் பகுதியில் மூன்று அம்பிகையர் இச்சா, கிரியா, ஞான சக்திகளாக இருந்து அருள்புரிகின்றனர். பல்லாண்டுகளுக்கு முன்பு, சிற்பி ஒருவர், மேலூர் திருமணங்கீஸ்வரர் கோயிலில் சிலை செய்து பிரதிஷ்டை செய்வதற்காக, பெரிய பாறையைக் கொண்டு சென்றார். வழியில் அந்தப் பாறை வெடித்து மூன்று பாகங்களாகச் சிதறியது. இதன் காரணமாக, உயிரை விடத் துணிந்தார் சிற்பி. அப்போது அவர் முன்னர் தோன்றிய பார்வதி தேவி, தன்னை மூன்று வடிவில் சிலையாக வடித்து மேலூர், திருவொற்றியூர், திருமுல்லைவாயில் தலங்களில் பிரதிஷ்டை செய்யும்படி அருளினார். சிற்பியும் அவ்வாறே செய்தார்.

வட்டப்பாறை அம்மன்மதுரையை எரித்துவிட்டு, உக்கிரத்துடன் கிளம்பிய கண்ணகி, இத்தலத்துக்கு வருகிறாள். அப்போது சிவபெருமானும், அம்பிகையும் சொக்கட்டான் விளையாடிக் கொண்டிருந்தனர். கண்ணகி வருவதை கவனித்த சிவபெருமான், அவளது கோபத்தைத் தணிப்பதற்காக, தான் விளையாடிக் கொண்டிருந்த தாயக்கட்டையை உருட்டி, அருகில் இருந்த கிணற்றில் விழச் செய்தார். தாயக்கட்டையை எடுக்க, கிணற்றுக்குள் இறங்கினாள் கண்ணகி. அந்த சமயம், சிவபெருமான் அங்கிருந்த வட்டப்பாறையை வைத்து கிணற்றை மூடிவிடுகிறார். சற்று நேரத்தில், கண்ணகி பாறையின் வடிவில் எழுந்தருளினாள். அதன் காரணமாக, கண்ணகி ‘வட்டப்பாறை அம்மன்’ என்று பெயர் பெற்றாள். பின்னாட்களில் பாறை அருகே, அம்மனுக்கு சிலை வைக்கப்பட்டது. வட்டப்பாறை அம்மனின் கோபத்தை தனிப்பதற்காக, ஆதிசங்கரர், அம்மன் சந்நிதியில் ஸ்ரீசக்கரத்தை பிரதிஷ்டை செய்தார்.

திருவிழாக்கள்

சித்திரையில் வட்டப்பாறை அம்மன் உற்சவம், வைகாசியில் 15 நாட்கள் வசந்த உற்சவம், ஆனித் திருமஞ்சனம், ஆடிப் பூரம், கலியநாயனார் வீதியுலா, ஆவணியில் விநாயகர் சதுர்த்தி, புரட்டாசியில் நவராத்திரி, ஐப்பசியில் பௌர்ணமி விழா (அன்னாபிஷேகம்), கந்த சஷ்டி, கார்த்திகையில் தீபத் திருவிழா, மூலவர் கவசம் திறப்பு, மார்கழியில் ஆருத்ரா தரிசனம், மாணிக்க தியாகராஜர் 18 திருநடனம், தைப்பூசத் திருவிழா நடைபெறும்.




What’s your Reaction?
+1
1
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!