Entertainment Serial Stories மனதில் உந்தன் ஆதிக்கம்

மனதில் உந்தன் ஆதிக்கம்-17

17

ஜீவிதா நான்கு முறை போன் செய்து எடுக்காமல் ஐந்தாவது முறைதான் எடுத்தான் பிரவீண்.

“ஹலோ” என்றவனின் குரலில் மிகுந்த பயம் இருந்தது.”அம்மா தாயே இப்போ எதற்கு போனடித்துக் கொண்டே இருக்கிறாய்?தெரியாமல் உனக்கு நம்பர் கொடுத்துவிட்டேன். என்னை ஆளை விடு,நான் விலகிக் கொள்கிறேன்”

“எதிலிருந்து விலகிக் கொள்வீர்கள் பிரவீண்? உங்கள் அண்ணன் கொடுக்கும் இரண்டு பர்சென்ட்டிலிருந்தா?”

“ஆங் அது எப்படி?அதெல்லாம் பேசி முடித்து அக்ரிமென்ட் பைல் பண்ணி முடிவான விசயம்”

“சரிதான்.அந்த முறை தொடர வேண்டுமானால்,எனக்கு நீங்கள் உதவி செய்தே ஆக வேண்டும்”

“உனக்கு உதவியா?நீதான் பெரியவரையே கைக்குள் வைத்திருக்கிறாயே?நீ சாட்டையை சொடுக்கினால் அவர் சுற்றுவார் போல,நான் வேறு இதெல்லாம் தெரியாமல் அவரைப் பற்றி ஏதேதோ உளறி விட்டேன்.அதையெல்லாம் மறந்து விடு தாயே,ப்ளீஸ்”

“சூ புலம்பாமல் நான் சொல்வதை கேளுங்கள்.நான் இப்போதே எஸ்டேட்டிற்கு போக வேண்டும்.துணைக்கு வாருங்கள்”

“ஐய்யோ அண்ணன் சம்மதம் இல்லாமல் ஒரு சிட்டுக்குருவி கூட அந்த மலையேற முடியாது.என்னை கோயம்புத்தூரில்தான் தங்கியிருக்க சொல்லியிருக்கிறார்.நான் வர மாட்டேன்”

“உங்கள் அண்ணனிடம் நான் சொல்லிக் கொள்கிறேன். வாருங்கள்” ஜீவிதாவின் குரலில் அதிகாரம் சேர்ந்திருக்க,மீற முடியாமல் கிளம்பி வந்தான் பிரவீண்.அம்மா,அப்பாவிடம் சொல்லி விட்டு, அவனுடன் கிளம்பினாள்.

“இந்த காட்டுக்குள்ளும்,மேட்டுக்குள்ளும் மனுசன் இருப்பானா? சை…”புலம்பலோடு தடுமாற்றமாய் காரை ஓட்டினான்.

அவர்கள் கொழுக்குமலையை அடைந்த போது இருட்டி விட்டது.மர வீட்டின் முன் காரை நிறுத்தியவனை ” உள்ளே வாங்க” அழைத்தாள்.




“இங்கேயா? இது பேய் வீடு.இங்கெல்லாம் உன் புருசன் மாதிரி அசுரனால்தான் குடியிருக்க முடியும்.நான் புது பங்களாவிற்கு போகிறேன்”காரை திருப்பியவன் நின்று,”ஒன்று கேட்கவா?நீயும்,ஹரியும் முன்பே காதலித்தீர்களா?”என்றான்.

தலையை லேசாக சரித்து யோசித்தாள் ஜீவிதா.பிறகு தோள்களை குலுக்கி ” இருக்கலாம்” என்றாள் அப்படியே ஹரிகரனை காப்பி அடித்து.

“ஐய்யோ பயமாக இருக்கிறதே,இதுங்க இரண்டையும் எப்படி சமாளிக்க போகிறேனோ தெரியலையே” புலம்பியபடியே போனான்.

புன்னகையுடன் உள்ளே நடந்த ஜீவிதா வீட்டிற்குள் நுழையாமல் பக்கவாட்டில் திரும்பி மல்லிகாவின் வீட்டை நோக்கி நடந்தாள்.

அங்கே படுக்கை அறையினுள் கட்டிலில் படுத்திருந்த மல்லிகாவின் அம்மாவிடம் போனாள்.கை கால்கள் இழுத்துக் கொண்டு பேச முடியாமல் படுத்திருந்தார் அவர்.

“வணக்கம் அம்மா.நான் ஜீவிதா.ஹரிகரனின் மனைவி”தொடர்ந்து பேச வசதியாக அவர் அருகே வசதியாக அமர்ந்து கொண்டாள்.

அந்த அம்மாளின் முகத்தில் பீதி தெரிந்தது.

அதே நேரத்தில் அலுவலகத்தில் ” ஏன் இப்படி செய்தாய் மல்லிகா?” எனக் கேட்டுக் கொண்டிருந்தான் ஹரிகரன்.

இவன் எதைக் கேட்கிறான்? திரு திருவென விழித்து நின்றாள் அவள்.

“நான் உன்னை எவ்வளவு தூரம் நம்பினேன்? இப்படி நம்பிக்கை துரோகம் செய்யலாமா?”

“நா…நான்…”




 

“போதும் மல்லிகா.மேலே சமாதானம் சொல்ல வேண்டாம்.நீ போகலாம்”

“எ…எங்கே போகச் சொல்கிறீர்கள்?”

“விளாம்பட்டிக்கு.அதுதானே உன் சொந்த ஊர்.அங்கேயே போய்விடு” புறங்கையை விசிறியவன் கோபத்தை அடக்கி வைத்திருப்பது நன்கு தெரிந்தது.

இரண்டே நிமிடங்களில் தனது அதிர்ச்சியை விழுங்கிக் கொண்ட மல்லிகா தனது பேச்சு முறையை மாற்றினாள்.”ஹரி” குழைவாக அழைத்தாள்.

“இப்படி உரிமையாக அழைக்கும் முறை உள்ளவள்தான்.ஆனால் சார் சார் என்று…சை.இனி இப்படியே அழைக்கவா ஹரி? எத்தனை நாட்கள் அனாதையாகி விட்டேனேன்னு பச்சை தண்ணீர் பல்லில் படாமல் கிடந்திருக்கிறீர்கள்?அப்போதெல்லாம் உங்களை என் மடியிலேந்தி சாப்பாடு ஊட்டி விட்டு,ஆறுதல் சொல்லி தேற்றி உட்கார வைத்திருக்கிறேன்தானே?நான் வேறு நீங்கள் வேறென என்றுமே நினைத்ததில்லை ஹரி?”

மல்லிகாவின் இந்த அணுகுமுறையில் ஸ்தம்பித்து நின்றிருந்தான் ஹரிகரன்.

“என்னையோ,அம்மாவையோ உங்களால் ஒதுக்க முடியுமா ஹரி…ம்?” கேட்டபடியே அவனை நெருங்கி மார்பில் சாய்ந்தாள்.

“ஜீவிதாவை கூட நான் ஸ்வேதா அறைப் பக்கம் விட்டதில்லை ஹரி.மிகவும் ரகசியமாகத்தான் விசயத்தை வைத்திருக்கிறேன்.நான் நல்லவள் ஹரி.என்னை போகச் சொல்லாதீர்கள்.நான் போக மாட்டேன்” இரு கைகளையும் அவனை சுற்றி செலுத்தி இறுக்க அணைத்துக் கொண்டாள்.

“இதுதான் அந்த சாவியா அம்மா?” ஜீவிதா பேச்சியம்மாவின் தலையணைக்கு கீழ் கையை நுழைத்து அந்த சாவியை எடுத்திருந்தாள்.

கண்கள் கலங்கி நீர் வடிய கோணலாக தலையசைத்தார் பேச்சியம்மா.ஜீவிதா அந்த சாவியுடன் வீட்டிற்குள் நுழைந்து மாடியேறி ஸ்வேதா அறையை திறந்தாள்.திறந்த உடனேயே அறை சுவரில் மாட்டியிருந்த புகைப்படம் அவள் முகத்தில் புன்னகையை கொண்டு வந்தது.

தொடர்ந்து அறைக்குள் தேடி ஒரு போனை கண்டு எடுத்தாள்.அதற்கு சார்ஜ் ஏற்றி விட்டு திறந்தாள்.பாஸ்வேர்டு கேட்க,யோசித்து விட்டு ஹரிகரனின் போன் பாஸ்வேர்டை அடிக்க திறந்து கொண்டது.கடைசியாக அந்த போனிற்கு வந்த அழைப்பு ஸ்வேதாவிடமிருந்து.இதனை அன்று ஹரியிடம் பேசியது நான்.புன்னகைத்துக் கொண்டாள்.

போனின் கேலரிக்குள் ஜீவிதாவின் மண்டை புழு குடைச்சலுக்கான விடைகள் நிறையவே கிடைத்தன.போனை கையில் எடுத்துக் கொண்டு அறையை பூட்டி விட்டு கீழே இறங்கினாள்.

மாடிப்படிக்கு நேராக வீட்டு வாசலில் ஹரிகரனின் ஜீப் வந்து நின்றது.மல்லிகாவும்,ஹரிகரனும் ஜீப்பிலிருந்து இறங்கினர்.வாசல்படி ஏறிய போது மல்லிகா திரும்பி ஹரிகரனை இறுக்க அணைத்தாள்.அவன் ஏதோ கூற அவள் முகம் நிறைய சிரித்தபடி விலகி உள்ளே வந்தாள்.

வீட்டிற்குள் நுழைந்ததும் பார்வையில் பட்ட ஜீவிதாவை இருவருமே எதிர்பார்க்கவில்லை.”ஏய் நீ எதற்காக இங்கே வந்தாய்?” ஹரிகரன் அதட்டியபடி வந்தான்.

“திரும்பி போகச் சொல்லுங்கள் ஹரி” என்றாள் மல்லிகா.

“ஆமாம்.நீ கிளம்பு” ஹரிகரன் அவள் கை பற்றி வாசல் பக்கம் தள்ளினான்.




What’s your Reaction?
+1
57
+1
40
+1
0
+1
0
+1
0
+1
1
+1
5
1
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!