Entertainment karthikai deepangal Serial Stories

கார்த்திகை தீபங்கள்-13

13

தூக்கி அமர்த்த அமர்த்த மீண்டும் மீண்டும் தன் மேல்தூங்கி  விழும் கீர்த்தனாவை உட்கார வைக்கும் வழி தெரியாமல் விழித்தாள் பூந்தளிர் .அவள் சரிவதில் அவள் தோள் பட்டுச்சேலை பின் சட்டையில் சிக்கி சேலையையும் , சட்டையையும் கிழித்து விடக் கூடுமென்பதால் , மெல்ல எழுந்து தனது இடத்தில் கீர்த்தனாவின் காலை தூக்கி வைத்துவிட்டு தலையை தூக்கத்திலிருந்த பொன்னியின் மடியில் வைத்துவிட்டு தனக்கு உட்கார இடம் தேடி வேனிற்குள் விழிகளை சுழல விட்டாள் .

மணி இரவு பன்னிரெண்டை நெருங்கிக் கொண்டிருக்க அனைவருமே உறக்கத்தில் இருந்தனர் .வேனினுள் பெரிய விளக்கு அணைக்கப்பட்டு ஒரு சிறிய விளக்கு மட்டும் சிக்கனமாக ஒளி சிந்திக் கொண்டிருந்த்து .அந்த வெளிச்சத்தில் குரபரனருகில் இருந்த இடம் மட்டுமே காலியாக இருப்பது தெரிய , அவனருகில் போய் அமரவா …தயங்கினாள் .இவன் இன்று தேவையில்லாமல் எப்படி முறைத்தான் …ம்க்கும் இவன் எப்போதுதான் என்னை முறைக்காமல் இருந்தான் .பார்க்கும் நேரம் எல்லாம் முறைத்துக் கொண்டேதான் இருக்கிறான் .இவன் பக்கத்தில் போய் உட்காரவா …நகம் கடித்தபடி பார்த்தாள் .வரும்போது போல் இல்லாமல் இப்போது சன்னல் ஓரமாக ஒட்டி அமர்ந்து இவளை வா என அழைப்பது போல் வேறு உட்கார்ந்திருந்தான் .

அப்பாவி போல் கண்ணை மூடி உறங்குவதை பாரு …கோவிலில் வைத்து கண்ணை எப்படி உருட்டினான் …? பூந்தளிர்    அவரிடம்பேசிப் பார்க்கலாமே …என்றதும் ,” எந்த கருங்கல் சுவரிடம் …? ” என வெடுவெடுத்தான் .

” குமரன் மாமாவிடம் ….” பதிலுக்கு அவனை முறைத்தபடி தனது உறவு முறையை அழுத்தி சொன்னாள் .உடனேயே இன்னமும் சிவந்து எரிந்த அவன் முகத்தை திருப்தியாக பார்த்தாள் .

” பேசிப் பார்த்துட்டேன்மா .அவன் பிடி கொடுக்க மாட்டேங்கிறான் …”

” என்ன மாமா சொல்கிறார் …? “

” ப்ச் …விடும்மா ..” என பொன்னுரங்கம் வேறு பக்கம் பார்க்க ” அவனை என்னிடம் விடுங்கய்யா .நான் கவனிக்கிறேன் ” கை முஷ்டியை முறுக்கினான் குருபரன் .

” டேய் ஒரு பெரிய இடத்து பையனா பொறுப்பா நடந்துக்கோடா .பொறுக்கி மாதிரி நடந்துக்காதே …” மகனை அதட்டினார் .இவளை வைத்துக் கொண்டு என்னை இப்படி வையத்தான் வேண்டுமா …குருபரன் தந்தையை பார்த்தான் .

” குமரன் மாமா என்ன சொல்கிறார் மாமா …? ” பூந்தளிர் தன் காரியத்தில் கண்ணாக இருந்தாள் .

” அவனை விடும்மா லூசுப்பய .இந்தக் கும்பாபிசேகத்தை நடத்த விடனும்னா உடனே உன்னை திரும்ப உன் பிறந்த வீட்டிற்கு அனுப்பனுமாம் ….” பூந்தளிர் புருவம் சுருக்க , அவனை அடிக்காமல் விட்டுட்டாய்யா வந்தீக …? ” குருபரன் துடித்தான் .




” இதென்ன மாமா உளறல் ..? ” பூந்தளிர் பொறிமையாக கேட்க எப்படி நிதானமாக இருக்கிறாள் பார் குருபரன் கறுவினான் .

” சொன்னேனேம்மா .அவன் லூசுப்பயலென்று …இங்கே நம் வீட்டில் உன்னை ரொம்ப கொடுமை படுத்துகிறோமாம் .நீ எந்நேரமும் அழுது கொண்டே இருக்கிறாயாம்.அதனால் உன்னை திரும்ப அவர்களிடமே  ஒப்படைத்து விட வேண்டுமாம் .இப்படி உளறிக் கொண்டிருந்தான் . உளறாதே முட்டாளேன்னு சத்தம் போட்டு அனுப்பினேன் “

” எந்நேரமும் இவள் அழுகிறாளாமா ..? தினமும் நம்மை அழ வைக்கிறாள் .அது தெரியாமல் அந்த குட்டிச்சுவர் கத்திக்கொண்டிருக்கிறது ” குருபரனின் முணுமுணுப்பிற்கு பூந்தளிரிடமிருந்து பதில் வராத்தால் நல்லவேளை இவள் காதில் விழ்வில்லையென பெருமூச்சு விட்டுக் கொண்டான் .
” குமரன் மாமாவிற்கென்று எங்கள் பக்கம் எந்த பவரும் கிடையாது மாமா .சும்மா அவர் வயது பசங்க பத்து பேரை சேர்த்துக்கிட்டு ஊரை சுற்றிக்கிட்டு இருப்பார் .அவர் இடைஞ்சலையெல்லாம் நீங்கள் பெரியதாக எடுத்துக்க ஙேண்டாம் ….”
அவள் பொன்னுரங்கத்திடம் பேசிக் கொண்டிருந்தாள் .

” ம் எனக்கும் அவனை பற்றி தெரியும்மா .என்னுடைய ஆசை இந்த ஊரில் இருக்கும் விவரம் தெரியும் ஒரு சிறு குழந்தை கூட எந்த நெருடலும் இன்றி இந்த கும்பாபிசேகத்தை நடத்த வேண்டுமென்பது .அது பேராசை போல ….”

” ஏய் …அங்கே என்ன வாய் …? இங்கே வந்து சாமான்களை ஒதுக்க ஆரம்பி ” சொர்ணத்தாயின் குரலுக்கு பூந்தளிர் செல்ல , அவள் பின்னால் போன மகனின் பார்வையை பார்த்தார்

” என் எதிரில் உட்கார கூடாதென்று சொல்லி வைத்தாயா ..? “

குருபரன் தலையாட்டினான் .

” ம் ..பலமுறை சொல்லியும் இவ்வளவு நேரமாக நின்று கொண்டேதான் பேசினாள் .கள்ளமில்லாமல் என்னருகில் உட்கார்ந்து  உரிமையோடு பேசிய என் மகளை… என் தாயை… நீங்கள் காணாமலடித்து விட்டீர்கள் .ம் …பூந்தளிர் தனித்துவமானவள் .அவளோடனான வாழ்க்கையை பெற்றவன் முற்பிறவி தவஞ்செய்தவன் ” ஓரக்கண்ணால் மகனை அளந்தபடி சொல்லிவிட்டு எழுந்து போனார் .

தந்தையின் பேச்சை மனதிற்குள் அளந்தபடி விழிகளை மூடி சாய்ந்திருந்த குருபரன் அருகில் அமரலாமா வேண்டாமா என மனதிற்குள் பட்டிமன்றம் நடத்தியபடி அருகாமையில்  நின்ற மனைவியை மூடிய கண்களுக்குள்ளேயே உணர்ந்தபடி மனதிற்குள் புன்னகைத்தபடி இருந்தான் .

” ரொம்ப யோசிக்காதே .உட்கார் …” விழிகளை திறக்காமல் பேசியவனை திக்கென பார்த்தாள் .இவன் தூங்கவில்லையா …மீண்டும் பழைய இடத்திற்கே போக திரும்பினாள் .

” அங்கே இடமில்லை .இங்கே உட்கார் .நான் தூங்க போகிறேன் ” இன்னமும் சன்னல.புறம் சாய்ந்து கொண்ட  குருபரன் இப்போதும் கண் திறக்கவில்லை .

தூங்கிடுவான் தனக்கு தானே சொல்லிக் கொண்டு சீட்டின் ஓரத்தில் அமர்ந்து கொண்டாள் .”கொஞ்சம் உள்ளே தள்ளி உட்கார் .தூங்கி கீழே விழுந்து வைக்க போகிறாய் ….”

ம்ஹூம் இவன் சரிபட மாட்டான் .பேசாமல் எந்திரிச்சி நின்னுட்டே வருவோம் …எழப் போனவளை ” உனக்கு விவரங்கள் வேண்டாமா பூந்தளிர் …? ” என்ற அவனது கேள்வி நிறுத்தியது .

” என்ன விபரம் …? “

” அந்த வெங்காய சேமிப்பு கிடங்கு விபரம் .உன் உழவன் மகனுக்கு சொல்வதற்கு …அந்த விபரங்கள் வேண்டாமா …? ” இன்னமும் குருபரன் கண்களை விழிக்கவில்லை .




” விபரம் சொல்வீர்களா …? “

” ம் …”

” எப்போ …? “

” இப்போ …”

” ஐ ….”குழந்தையாய் குதூகலித்தபடி அவனருகில் அமர்ந்து கொண்டு தன் போனை எடுத்துக் கொண்டாள் .” சொல்லுங்க …”

” இந்த கிடங்கு தரை மட்டத்திற்கு மேல் மூண்டி உயரத்தில் இருக்கவேண்டும் .நல்ல காற்றோட்டமான இடத்தில் இருக்க வேண்டும் .முதலில் சிறியதாக அமைத்து சோதித்து பார்த்துவிட்டு பிறகு பெரியதாக அமைத்துக் கொள்ளலாம் .நீளம் ….” என்று அவன் தொடர்ச்சியாக வெங்காய சேமிப்பு கிடங்கின் விபரங்களை சொல்ல சொல்ல பூந்தளிர் அதனை தனது போனில் தமிழில் டைப் செய்தபடி வந்தாள் .

” உள்ளே பரப்பியது போக கொஞ்சம் கயிற்றில் கட்டியும் தொங்கவிடலாம் .இந்த முறையில் மூன்று மாதம் வரை வெங்காயத்தை பாதுகாக்கலாம் .முதலிலிருந்த எடையை விட மூன்று மாத்த்தில் பத்து கிலோ எடைதான் குறைந்திருக்கும் .இது விவசாயிகளுக்கு  நிச்சயம் நல்ல லாபகரமான திட்டம் .” என அவன் முடிக்கவும் ஓசை எழாமல் கைகளை தட்டினாள் .

” என்ன அழகாக விளக்கம் கொடுக்கிறீர்கள் …இப்போது இதைசரிதானா என்று  ஒரு முறை படித்து பாருங்கள் .” போனை நீட்டினாள் .மார்பில் கட்டியிருந்த தன் கைகளை எடுக்காமல் கண்களை மட்டும் திறந்து அவள் தன் முன் நீட்டியிருந்த போனிலிருந்த்தை வாசித்து முடித்தான் .சில திருத்தங்கள் சொன்னான் .வேனின் குலுக்கலுக்கு அசங்கிய அவள் கைகளை போனோடு சேர்த்து பிடித்தபடி முழுதும் வாசித்து முடித்தான் .

” சரிதான் .இதை என்ன செய்வாய் …? “

” உழவன் மகனுக்கு அனுப்பி விடுவேன் .அவர் இதை படித்து விட்டு அவரது முகநூல் பக்கத்தில் போடுவார் .அதை நிறைய பேர் படித்து பார்த்து உபயோகிப்பார்கள் .உழவன் மகனே இதை செய்து கூட பார்ப்பார் …”

” ம் ….” என உதடு பிதுக்கியவன் ” இதை எப்படி அனுப்புவாய் …? ” என்றான் .

” மெயில் பண்ணுவேன் …”

” அது எப்படி …? “

” இப்படி ….” அவனோடு நெருங்கி அமர்ந்து அப்போதே தன் போனில் மெயில் அனுப்பி காட்டினாள் .

” உன் உழவன் மகனுக்கு எத்தனை வயதிருக்கும் …? ” தீவிரமாக அவனுக்கு மெயில் அனுப்புவதை விளக்கிக் கொண்டிருந்தவள் அவன் அதை கவனிக்காமல் ஙேறு பேசியதில் எரிச்சலுற்று அவனை முறைத்தாள் .

எனக்கெதற்கு வம்பு என்பது போல் தோள்களை குலுக்கிக் கொண்டு மீண்டும் சன்னலில் சாய்ந்து தூக்கத்தை தொடர ஆரம்பித்தான் குருபரன் .பூந்தளிர் தன் போனில் பேஸ்புக்கை ஓபன் செய்து பார்க்க ஆரம்பித்தாள் .கண்ணுக்கு கெடுதி , இந்த நேரத்தில் எதற்கு , எதிலும் அதிகமாக மூழ்க கூடாது …இப்படிஅருகில் அமர்ந்து கண்களை மூடியபடியே அவன் கொடுத்த டார்ச்சர்களில் நொந்து போனை அணைத்து விட்டு பின்னால் சாய்ந்து தூங்க ஆரம்பித்தாள் .

” இந்த சேலை உனக்கு அழகாக இருக்கிறது ” திக்கென விழி திறந்து பார்த்தாள் .அவன் இன்னமும் கண்களை மூடியபடிதான் இருந்தான் .என்னையா  சொன்னான் …குனிந்து தன் சேலையை பார்த்துக் கொண்டாள் .காலையில் வெடவெடப்பாக அழகாக உடலில் படிந்திருந்த சேலை இப்போது துவண்டு , கசங்கி பொலிவிழந்திருந்த்து .அழகாக இருக்கிறதென்று எப்போது சொல்கிறான் பார் ….அவன் பேச்சு காதில் விழாதது போல் கண்களை இறுகி மூடிக்கொண்டாள் .

திடுமென நினைவு வர ” அப்போது என்ன சொன்னீர்கள் …நான் இங்கே எல்லொரையும் அழ வைத்துக் கொண்டிருக்கிறேனா …? அப்புறமென்ன குட்டிச்சுவரா …? என் உறவினரை அதெப்படி சொல்லலாம் ? ”  சரிந்திருந்தவள் நிமிர்ந்து அவன் பக்கமாக திரும்பி சண்டை ஒன்றுக்கு தயாரானபடி கேட்டாள் .இப்போது அவள் பேச்சு அவன் காதில் விழவில்லை போல .

குருபரன் அசையவில்லை .திரும்பவில்லை .மூடிய விழி திறக்கவில்லை .தூங்கிவிட்டானா …குனிந்து அவன் முகத்தை உற்று பார்த்தாள் .இல்லையென மெலிதாய் துடித்துக் கொண்டிருந்த அவன் உதடுகளும் , அசைந்து கொண்டிருந்த அவன் மீசையும் சொல்லியது .கண்களை திறப்பானா ….இன்னமும் பார்வையை கூர்மையாக்கி அவன் நெற்றி , புருவம் , மூக்கு …என பார்வையில் வருடியபடி காத்திருந்தாள் .ம்ஹூம் அது போன்ற அறிகுறி எதுவும் தெரியாத்தால் போடா என  சற்று சத்தமாக  அவனுக்கு கேட்கும்படி கூறிவிட்டு பின்னால் சாய்ந்து கண்களை மூடிக் கொண்டாள் .அதன் பிறகு மெல்ல ஒற்றை விழி திறந்து அவளை பார்த்துவிட்டு ” உப் ” என வாய் குவித்து காற்றை வெளியேற்றிவிட்டு தூங்க ஆரம்பித்தான் குருபரன் .

பூந்தளிருக்கு விழிப்பு வந்த போது பொன்னி அவளை உலுக்கிக் கொண்டிருந்தாள் .கதகதப்பான போர்வையை விலக்க மனம் வராமல் ” என்னக்கா …? ” கண்களை திறக்காமலேயே கேட்டாள் .போர்வையை இழுத்து மூடிக்கொண்டாள் .

” உஷ் …அத்தை எந்திரிக்கிறதுக்குள்ள இரண்டு பேரும் எந்திருங்க .அத்தை பார்த்தா அவ்வளஙுதான் ….குரு …பூவு ….” பொன்னி உலுக்கலை தொடர , தூங்குவதற்கெல்லாம் அத்தை எதற்கு வைய போகிறார்கள் …சோம்பலாய் விழி திறந்தவளின் பார்வையில் முதலில் பட்டது குருபரனின் முறுக்கி விடப்பட்ட மீசைநுனி .இவனெங்கே இங்கே வந்தான் மசமசத்த மூளையை கசக்கி யோசித்தபோது அவனும் மெல்ல கண்களை திறந்து இவளை பார்த்தான் .ஒரு நொடி இருவரது விழிகளும் சந்திக்க அப்போதுதான்  தங்களிருந்த நிலையை உணர்ந்த இருவரும் ஒரு சிறு அலறலுடன் ஒருவரையொருவர் தள்ளி விட்டபடி தள்ளி அமர்ந்தனர் .

” உஷ் ..செய்றதையும் செய்துட்டு எதுக்கு இந்த கூச்சல் …? எல்லோரும் தூக்க கலக்கத்தில் இருக்கங்கா .முழிச்சி பார்க்கிறதுக்குள்ள சீக்கிர ம் கீழே இறங்குங்க .வீடு வந்துடுச்சு ….” பொன்னி அதட்டியபடி கீர்த்தனாவை தூக்கிக் கொண்டு இறங்கினாள் .பூந்தளிர் சுற்றிலும் பார்க்க எல்லோரும் கொட்டாவி விட்டபடி கையுயர்த்தி சோம்பல் முறித்தபடி மந்தமாக கீழிறங்க தயாராகிக் கொண்டிருந்தார்கள் .

நல்லவேளை யாரும் பார்க்கலை .தோளொடு தோள் உரசியபடி வந்த இரண்டாவது மகனையும் , மருமகளையுமே சொர்ணத்தாய் அடிக்கடி திரும்பி பார்த்து முறைத்தபடி வந்தாள் .இங்கே இவர்கள் இருவரும் ஒருவரையொருவர் இறுக்கி அணைத்தபடி உறங்கிக் கொண்டு வந்திருக்கின்றனர் .மாமியார் பார்த்தால் அவ்வளவுதான் என்ற நினைப்போடு அருகிலிருந்த கணவனை பார்க்க கூச்சமாக இருக்க தலை குனிந்தபடி இறங்கிய பூந்தளிர்  வேகமாக  அறைக்குள் வந்து குருபரன் வரும் முன்பே போர்வையை முகம் மறைத்து மூடி தூங்கிப் போனாள் .

———————–

” என்ன விசயம் …? ” கண்ணாடி முன் நின்று தலை சீவியபடி கண்ணாடியில் பூந்தளிரை பார்த்து கேட்டான் குருபரன் .

அச்ச்சோ …கவனித்து விட்டானா …திருதிருவென விழித்தவள் .” ம் …ம்ஹூம் …ஒண்ணுமில்லையே ….” ஒரு மாதிரி உதட்டை விரித்து இளித்தாள் .

” சோபாவில் ஒரு நிமிடம் , அந்த சன்னலிடம் அரை நிமிடம் , இந்த சேரில் ஐம்பது நொடி , மேசைகிட்ட முப்பது செகண்ட் ….”

அடுக்கிய அவன் கணக்கில் புரியாமல் முழித்தாள் .

” அப்போதிருந்து நிலையில்லாமல் இப்படி அங்குமிங்கும் அல்லாடிக் கொண்டிருக்கிறாய் .என்ன விசயம் …? “

அவனின் சூட்டிகையில் பூந்தளிருக்கு அவன் காதை பிடித்து திருகும் வேகம் வந்த்து .ஆனால்…. இப்படி உயரமாய் இருந்து தொலைகிறானே …  அவன் காது எனக்கு எட்டுமா …?  வேண்டுமானால் அந்த மீசையை வலுவாக பிடித்து இழுத்து விடலாமா …? ராஸ்கல் …வலியில் கத்தட்டும் .கணவனுக்கான தண்டனையை யோசித்துக் கொண்டிருந்தவளின் முன் விரல்களால் சொடுக்கிட்டான் .

” என்ன விசயம்னு கேட்டேன் “

ம்ஹூம் ..நமக்கு காரியம் ஆகனும் …கொஞ்சம் இவனை அனுசரித்துதான் போகனும் …மனதிற்குள் ஒத்திகை பார்த்த தண்டனைகளை தள்ளி வைத்துவிட்டு ” உங்களுக்கு நான் ஒரு காபி போட்டு தரவா …? ” அவர்கள் அறையினுள்ளேயே இருந்த அந்த அடுப்படியை காட்டி கேட்டாள் .குருபரனின் புருவம் சுருக்குதலை கவனியாத்து போல் அடுப்படியினுள் போய் அடுப்பை ஆன் செய்தாள் . பால் பாத்திருத்தை அடுப்பில் வைத்தாள. எப்படி கேட்பது ….யோசித்து நின்ற போது , அவன் கை அடுப்பை அணைத்தது .

” தேவையில்லாமல் கஷ்டப்படுத்திக் கொள்ள வேண்டாம் .விசயத்தை சொல்லு ….”

” நீங்க மாட்டேன்னு சொல்லகூடாது ….”

” ஓ….அப்படி ஒரு விசயத்தைத்தான் கேட்க போகிறாய் …? “

கொஞ்சம் விட்டுக் கொடுக்கிறானா பார் .சரின்னு ஒரு வார்த்தை… ம் ன்னு ஒரு தலையாட்டல் .்இது கூட முடியாதா இவனுக்கு …

” முடியாது …” அவள் முக பாவனையை முன்னால் நின்று கவனித்துக் கொண்டிருந்தவன் சொன்ன பதிலில் அரண்டவள் எச்சில் விழுங்கிக் கொண்டாள் .

” இன்னைக்கு அம்மா வீட்டுக்கு போகலாம்னு இருக்கேன் ….”

இப்போதும் சிறு தலையசைவு கூட இல்லாமல் அவள் முகம் பார.த்து நின்றிருந்தான் .ராட்ச்சன் …எந்த நேரங் கெட்டு பிறந்தானோ …என் உயிரை வாங்கிக் கொண்டிருக்கிறான. …?பூந்தளிர் மனதிற்குள் அவனை அர்ச்சித்துக் கொண்டிருந்த போது , ராட்ச்சி என்ன ஓரண்டையை இழுக்க போறாளோ தெரியலையே என அவனும் அவளை உள்ளுக்குள்  அர்ச்சித் கொண்டுதான் இருந்தான்.

” நீ …நீங்களும் என் கூட வர்றீங்களா …? ” கேட்டுவிட்டு அவனது  கத்தலை கேட்க பயந்து காதுகளை பொத்தி கண்களை மூடிக்கொண்டாள் .ஒரு சத்தமும் இல்லாமல் போகவேமெல்ல கண்களை திறந்து பார்த்தாள் .அவன் அமைதியாக நின்று அவளை பார்த்தபடி இருந்தான் . கண்களை திறக்கவும் காதுகளை மூடிய கையை எடுக்க சொல்லி கையை அசைத்துவிட்டு …

,” அங்கே அந்த குட்டிச்சுவர் இருப்பானே …? ” என்றான் .

” அவர் என் மாமா …” ரோசமாக சொன்னாள் .

” குட்டிச்சுவருக்கெல்லாம் மாமா உறவு சொல்வாயா …? “

நாயே …பேயே ..போடா …வாடா எனத் துடித்த நாவை கஷ்டப்பட்டு கட்டியவள் ” கேப்பையில் நெய்யெடுக்க நினைத்தது என் தப்பு .குத்துக்கல்லுக்கென்ன குளிரா…காய்ச்சலா …? என்னமோ …எப்படியோ போயேன் ..எனக்கென்ன …இனி ஒரு தடவை உன்கிட்ட வந்து நின்னா ஏன்னு கேளு ….” மனம் போன போக்கில் வாய்க்குள் முணுமுணுத்தபடி நகர்ந்தவள் அவனை ஓரப்பார்வையில் பார்த்த போது அவன் மீசையை நீவுவது போல் சிரிப்பை அடக்குவதை பார்த்து மேலும் கொதித்தாள் .நான் நாயாக கத்துகிறேன் …நீ சிரிக்கிறாயா …இருடா …இதற்கு பழி வாங்க எனக்கும் ஒரு நாள் வரும் …அவசரமாக தலைவிரித்து போட்டு   கண்ணகி சபதமொன்றை எடுத்துக் கொண்டிருந்த போது …




” கிளம்பு ….” என்றான் ஒற்றை வார்த்தையில் .கொதிக்கும் பாலை குளிர் நீர்கலந்து தணித்தது .

இதோ …என வேகமாக சேலை மாற்ற உடை மாற்றும் அறைக்குள்  போனவளின் பின்னேயே வந்து அவளோடு சேர்ந்து அலமாரியை ஆராய்ந்து சூரியகாந்தி மஞ்சள் புடவையை ” இதைக் கட்டு ” என  தேர்ந்தெடுத்து கொடுத்தான் .அவள் கட்டி முடித்து வந்த்தும் ” உன் நிறத்திற்கும் சேலை நிறத்திற்கும் வித்தியாசம் தெரியவில்லை ….” என சிலாகித்தான் .போகலாம் என அவன் உபயோகிக்கும் ஜீப்பை எடுத்து வந்து அவள் பக்க கதவை திறந்து விட்ட போது …தன் கைகளை தானே கிள்ளிக்கொண்டாள் பூந்தளிர் .

எதுவும் உள்குத்து இருக்குமோ …என கணவனின் நடவடிக்கையை பூந்தளிர் சந்தேகித்து கொண்டிருந்த போது ” உன் அம்மா வீட்டிற்கு நான் எதற்கு …? ” என்றான் .

” நம்ம கல்யாணம் முடிஞ்சு மூணுமாசம் கழிச்சு இப்போத்தான் அம்மா வீட்டிற்கு போறேன் ….” மெல்ல சொன்னாள் .இதனை குருபரன் அறிவான் .அவர்கள் திருமண இரவை கூட அங்கே கழிக்காமல் புகுந்த வீட்டிற்கு வந்து விட்டவள் , அதன் பிறகு ஆங்காங்கு ஊருக்குள் போனாலும் அம்மா வீட்டுப்பக்கம் போனதில்லையென அவன் அறிவான் .அவர்களாக பலவேசமும் , குணவதி இரண்டொரு முறை இவளை பார்க்கவென வந்த போது  பொன்னுரங்கம் , பொன்னி தவிர மற்ற வீட்டாள்களின் ரகசிய முகம் தூக்கலை கவனித்தவள் அதன்பிறகு அவர்களுக்கும் இங்கே வர தடை விதித்திருக்க வேண்டும் .

” நம் இரண்டு வீடுகளுக்கிடையே சரியான போக்குவரத்து இல்லாத்துதான் …இது போல் கண்ட வதந்திகளையும் ஊருக்குள் பரப்பியிருக்கிறதென நினைக்கிறேன் ….”

” உன் அம்மா வீட்டிற்கு போவதற்கு நம் விட்டில் யாரும் தடை சொன்னதில்லை …” நினைவுறுத்தியவனை கோபமாக பார்த்தாள் .

” புது கல்யாணம் முடித்தவள் , புருசனில்லாமல் தனியாக அம்மா வீட்டிற்கு போனால் ஊருக்குள் வித்தியாசமாக பேச மாட்டார்களா …? “

” ஓ…அதனால்தான் இன்று அவ்வளவு பவ்யமாக என்னிடம் பேசினாயா …? ” அவன் கண்டுபிடித்தலில் அவளுக்கு கோபம் வந்த்து .

” இதோ பாருங்க நான்  என் அம்மா வீட்டிற்காக மட்டும் பார்க்கவில்லை .நம் திருமண வாழ்வோடு நம் ஊர் கோவில் கும்பாபிசேகமும் பிணைந்திருக்கிறது .நான் நன்றாக பெரிய வீட்டில் வாழ்கிறேனென்ற அறிவிப்புதான் கோவில் கும்பாபிசேகத்தை தடையில்லாமல் நடத்த உதவும் …”

” நினைப்புதான் ….” எக்கலான பேச்சுடன் ஜீப்பை நிறுத்தியவன் , ” உன் தெரு பார்க்க உன்னை உன் அம்மா வீட்டு வாசல் வரை கூட்டி வந்தாயிற்று ்இனி நான் கிளம்புகிறேன் …”

வாசல் வரை வந்துவிட்டு உள்ளே வராமல் போனால் எல்லோரும் என்ன நினைப்பார்கள் …விழி நுனி வந்துவிட்ட கண்ணீரை இமையால் விழுங்கியபடி , மனம் வெறுத்து தன் தாய் வீட்டினுள் நுழைந்தாள் பூந்தளிர் .பின்னால் ஜீப் கிளம்பிய சத்த்தை கேட்டபடி வந்தவள் …”பூவு வாம்மா வா …நீ மட்டுமா வந்த …மாப்பிள்ளை வரலை …? ” பரபரப்பாக வரவேற்ற அன்னைக்கு என்ன பதில் சொல்ல என விழித்த போது …..

” இதோ வந்துட்டே இருக்கேன் அத்தை .இங்கே ஜீப் நிறுத்தியது இடைஞ்சலாக இருந்த்தால் கொஞ்சம் தள்ளி ஒரமாக நிறுத்திட்டு வர்றேன் …” என்றபடி வந்து நின்ற குருபரனை பார்த்து தலை சுற்றி மயங்கும் நிலைக்கு போனாள் .




What’s your Reaction?
+1
37
+1
13
+1
1
+1
2
+1
0
+1
0
+1
0
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!