Serial Stories தேவ மல்லிகை பூவே

தேவ மல்லிகை பூவே -2

2

 உதயன் மல்லிகை பந்தலை அடைந்த போது,இரவு பத்து மணியாகி விட்டது.ஊருக்குள் நுழைந்ததும் காரை நிறுத்தி இறங்கி நின்றான்.இடுப்பில் கை வைத்து உடம்பை பின்னால் வளைத்து பயண சுவடுகளிலிருந்து ஆசுவாசப்படுத்திக் கொண்டான். சுற்றிலும் பார்வையை ஓட்டி ஆச்சரியமானான்.இதென்ன பத்து மணிக்கே இப்படி ஊரடங்கி விட்டது?

ஆங்காங்கே சோம்பலாய் எரிந்து கொண்டிருந்த தெரு விளக்குகளை தவிர்த்து எங்கும் வெளிச்சம் கூட இல்லை.அந்த விளக்குகளும் சில இடங்களில் எரியாமலும்,மினுங்கியபடியும் இருந்தன.மீண்டும் காரிலேறி மெல்ல ஊரை வலம் வந்தான்.கடைத்தெருவை விட்டு தெருக்களுக்குள் நுழைந்தான்.

ஒரு சில வீடுகளில் முகப்பு விளக்காக குண்டு பல்புகள் எரிய,பிற வீடுகள் முழு இருளுக்குள் அடங்கிக் கிடந்தன.எந்த வீட்டிற்குள்ளும் விளக்கு எரியவில்லை.அதாவது அனைவருமே தூங்கிவிட்டனர்.இதனை ஆச்சரியமாக உணர்ந்தான்.

இரவுக்கும்,பகலுக்கும் வித்தியாசமின்றி பூட்டிய அறைக்குள் வழியும் குளிரினூடே,கம்ப்யூட்டர் திரையினுள் மூழ்கிக் கிடக்கும் பட்டணத்து பகட்டில் வளர்ந்தவனுக்கு இந்த கிராமத்து வரையறை வாழ்வு ஆச்சரியம் கொடுத்தது.இரவு பத்து மணிக்கெல்லாம் இப்படி உறக்கம் வந்து விடுமா என்ன?

“ஏய் யாருவே அது?இந் நேரத்துக்கு மோட்டார் காருல ஊர்வலம் போறது?” கனத்த குரலொன்று கர்ஜிக்க காரை நிறுத்தி இருளில் தேடினான்.கையில் கனத்த தடி ஒன்றுடன் இருளுக்குள்ளிருந்து வெளி வந்தான் ஆஜானுபாகுவான ஒருவன்.

“வணக்கங்க” காரை விட்டிறங்கி கை கூப்பினான் உதயன்.

“யாருவே நீரு?”

“நான் ஊருக்கு புதுசுங்க.இங்கே தாமோதரன் ஐயாவை பார்க்க வந்திருக்கேன்”

“எந்த தாமோதரனை?செல்வராசு பேரனையா?”

அப்படியா…தனக்குள் கேட்டுக் கொண்டு விடை கிடைக்காமல் மையமாக தலையாட்டி வைத்தான்.




“என்ன விசயமா பார்க்கோனும்?”

“நீங்க யாருன்னு தெரிஞ்சுக்கலாமா ஐயா?” சிரமப்பட்டு எரிச்சலை மறைத்தான்.

“நான்தான் இந்த ஊரு காவக்காரன்” அந்த ஆள் நெஞ்சை நிமிர்த்த,உதயனுக்கு சை என்றானது.வாட்ச்மேன்.இவனுக்கிருக்கும் எகத்தாளத்தை பார்…இதழ்களொ இறுக மூடி வார்த்தைகளை பற்களுக்குள் மென்று நின்றான்.

“என்னவே இவனுக்கெதுக்கு அந்த சங்கதின்னு சிந்திக்கிறீரோ?எனக்கு தெரியாம இந்த ஊருக்குள்ளார ஒரு வீட்டுலும் நல்லது கெட்டது நடக்காதுவே.சொல்லும்.நானே ஊட்டை காட்டுதேன்”

“பூ சாகுபடி விசயமா பேசனுங்க”உதயன் பற்களின் நறநறப்பை அடக்கிக் கொண்டான்

” ஓ…பட்டணத்துலருந்து வர்றீகளா?வெள்ளன வர்றதுக்கு என்ன? மூஞ்சி மொகர தெரியாத இருட்டுக் கச்சுக்குள்ள இப்படி வந்து நின்னா…என்னா நெனக்குறது?”

“ஐயா நான் நேரத்தோடுதான் கிளம்பினான்.வழியில் கார் ரிப்பேராகி விட்டது.ரிப்பேர் பார்த்து வர இவ்வளவு நேரமாகி விட்டது” அந் நேரத்திற்கு மனதில் தோன்றியதை சொன்னான்

“ஓ…அப்ப சரித்தான்.இங்குட்டு வாங்க…”அவர் நுழைந்த சந்திற்குள் இரண்டு கால் தவிர,நான்கு கால் ஜீவன்கள் கூட நுழைய முடியாதென புரிய,உதயன் தன் காரை ஏக்கத்துடன் பார்த்து விட்டு,அவர் பின்னேயே இருளுக்குள் நுழைந்தான்.

” தாமோதரனுக்கு படுக்கைதான்.அவம் மகனுட்டதான் நீங்க தொழில் வெசயம் பேசனும்”பேசியபடி நடக்க,சிறிது நேரத்தில் வீடுகளின் நெருக்கம் குறைந்து,சமவெளி வந்தது.வீடுகளுக்கிடையே நடந்த போதிருந்த இறுக்கம் மறைந்து இப்ப து காற்று சிலுசிலுவென உடலை குளிர்வித்தது.கூடவே கும்மென்ற வாசமும் நாசியை வருட உதயன் விழிகளை விரித்து கவனித்தான்.

எதிரே இருந்தது வயல்வெளி.ஆம் முழுவதும் தோட்டங்கள்.பாத்தி பாத்தியாய் இருந்த இடங்களை முழுக்க நிரப்பியிருந்தன மல்லிகை செடிகள்.அவைகளின் உடல் முழுவதும் நட்சத்திரங்கள் போல் வெண்ணிற பூ மொட்டுக்கள்.ஆஹா…மூச்சை இழுத்து வாசனையை முகர்ந்தான்.




“வாசனை தூக்குதுல்ல.எங்கூரு மல்லி மகிம அப்புடி.ரொம்ப மோப்பம் புடிக்காதீரும்.நாளக்கி எங்கடா என் மாலயில வாசத்த காணோமுன்னு மீனாட்சி கோவிக்க போறா?”

“எந்த மீனாட்சி?”

“மதுர மீனாட்சி அம்மன்யா! அம்மனுக்கே எங்கூர்ல இருந்துதான் வெள்ளிக்கிழம மால போகும் தெரியுமா?”

“ஓ…நல்லதுங்கய்யா.தாமோதரன் ஐயா…”

“இந்தா இது முழுசா அவுக குடும்ப எடம்தான்.தோட்டத்துக்கு நடுக்க வூடும் வாசலுமா செல்வாக்கா இருக்காக.அந்தா அந்த கெழக்கு மூலைல தனிச்சு தெரியிறதுதான் தாமோதரன் வூடு.போய் பேசு…” காட்டிவிட்டு கைத் தடியை தரையில் தட்டி தட்டி ஒலியெழுப்பியபடி போய்விட்டார்.

எது கிழக்கு திசையாயிருக்கும் என சுற்றி சுற்றிப் பார்த்து கணித்து,அதோ அதுவாகத்தான் இருக்குமென அனுமானித்து அந்த இடத்தை நோக்கி நடந்தான் உதயன்.தூங்குபவர்களை தட்டி எழுப்புவதா? யோசனையுடன் நடந்து போய் நின்றான்.

வாசல் முகப்பில் ஒரு நோ வாட்ஸ் குண்டு பல்பு எரிய,மரக்கதவு இறுக அடைக்கப்பட்டிருந்தது.காலிங்பெல்லை தேடி அலுத்து,மெல்ல கதவை தட்டினான்.

“யாரது?” உள்ளிருந்து கேட்ட பெண் குரல் இனிமையாக இருந்தது. ஆனால்…

“தாமோதரன் சாரை பார்க்கனும்”

“நாளை காலையில் வாங்க” குரல் நடுங்கினாற் போல் இருந்தது.

“உங்க அண்ணனை பார்க்கலாமா?”

“அண்ணன் வீட்டில் இல்லை”குரலில் கரகரப்பு தெரிய,உதயனின் பொறுமை போனது.கதவை மீண்டும் தட்டினான்.

” நான் உங்கள் அண்ணனின் ப்ரெண்ட்.கதவை திறங்க.ஒரு முக்கிய விசயம் பேச வேண்டும்’

உள்ளே சிறிது நேர மௌனத்தின் பின் கதவு மெல்ல திறந்தது. மேகத்தின் பின்னிருந்து நிலவொன்று எட்டிப் பார்த்தது.இப்படித்தான் உதயனுக்கு நினைக்க தோன்றியது.

வீட்டின் உட்புற அறை இருளாக இருந்தது.முகப்பு விளக்கு வெளிச்சத்தில் பாதி கதவு வழியே எட்டிப் பார்த்த வட்ட முகம் நிலவின் தகதகப்பை தனக்குள் வாங்கியிருந்தது.

“சொல்லுங்க,என்ன விசயம்?”

அந்த நிலைவாசலில் பாதி கதவின் பின் அவள் நின்றிருந்த கோலம்,விழி தாழ்த்தி பூமி பார்த்திருந்ததால் சிப்பியென குமிந்து கிடந்த இமைகள்,வில்லென வளைந்து நீண்டிருந்த புருவங்கள்,பம்மென பார்வைக்கே மென்மை உணர்த்தும் கன்னங்கள்,நேராக நிமிர்ந்து குமிழ் போல் அமைந்திருந்த மூக்கு,மாதுளம்பழ சாற்றின் நிறத்தை கடன் வாங்கியிருந்த வடிவான இதழ்கள்….

உதயனால் இம்மியும் கண்களை திருப்பிக் கொள்ள முடியவில்லை.யார்…யார் இவள்? தேவதையா? நிலவு மகளா? இந்த பூமிவாசி போல் தெரியவில்லையே! எத்தனை அழகு! எச்சில் விழுங்க கூட இல்லாமல் அப்படியே பார்த்திருந்தான்.

அவனிடமிருந்து பதிலில்லாமல் போகவே,அவள் நிலத்திலிருந்த விழிகளை உயர்த்தினாள்.அவனை பார்த்தாள்.ஓ…ஓவ்வ்…உதயனுக்கு உடல் முழுவதும் மின்சாரம் ஓடியது.

“சொல்லுங்க சார்.குமரன் அண்ணனை உங்களுக்கு எப்படி தெரியும்?”




“குமரன்?”

“ம்…என் அண்ணன். முக்கிய வேலையாக வெளியூர் போயிருக்கிறார்”

“பாரிஜாதம்?”

அவள் தலையசைத்தாள்.கொடியொன்று தென்றலுக்கு அசைவது போல் தோன்றியது அவனுக்கு.

இவளை…இந்த தங்கையை ஏமாற்றி…மறைத்து மணம் முடிக்க குமரனால் எப்படி முடிந்தது? அந் நேரத்தில் உதயனுக்கு தடுமாறி நின்ற குமரனின் காதலை நினைவுக்கு கொணர முடியவில்லை. பாரிஜாதத்தின் அழகிலிருந்து இன்னமுமே அவனால் வெளி வர முடியவில்லை.

“தாமோதரன்…?”

“என் அப்பா…கொஞ்சம் உடம்பு சரியில்லை” அவள் குரல் நணநமத்தது.

“அவருக்கு என்ன ?”

பாரிஜாதம் பதில் சொல்ல தயங்க,உதயனுள் அபாயமென ஓருணர்வு பரவியது.”சற்று நகருங்கள்.நான் அவரை பார்க்க வேண்டும்”

“இல்லை,வேண்டாம்.நா…நாளை வாருங்கள்” விசும்பலொன்று பேச்சின் முடிவில்.

அதன் பிறகும் தாள முடியாத உதயன்,அவள் பற்றியிருந்த கதவை தள்ளிக் கொண்டு உள்ளே நுழைந்தான்.

“என்ன இது…நில்லுங்கள்” அவள் பதறியபடி பின் வர,சரசரவென வீட்டினுள் நடந்து ஆங்காங்கே பரவிக் கிடந்த இருளுக்குள், ஒளிர்ந்த ஓரிடத்தை நோக்கி நடந்தான்.அது ஒரு படுக்கையறை.உள்ளே…கட்டிலில் ஒருவர் படுத்திருந்தார்.

சூழ்நிலை எதையோ அபஸ்வரமென சொல்ல,உதயன் டிக் டிக்கென சத்தமெழுப்பிய இதயத்துடன் அவரருகே சென்றான்.மெல்ல அவர் கையை தொட்டுப் பார்க்க கை நீட்டியபோது…

“அப்பா உயிர் பிரிந்து ஒரு மணி நேரத்திற்கும் மேலாகிவிட்டது” வறள் நிலத்தின் வெடிப்பாக அவள் வார்த்தைகள்.




What’s your Reaction?
+1
36
+1
34
+1
1
+1
0
+1
0
+1
1
+1
9
Subscribe
Notify of
guest

0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!