Serial Stories தேவ மல்லிகை பூவே

தேவ மகல்லிகை பூவே-12

12

 “பாரி என்னை மன்னித்து விடும்மா” குமரன் தங்கையின் கையை பற்றி கண்களில் ஒற்றிக் கொள்ள அவள் பதறினாள்.

” ஐயோ என்ன அண்ணா இது? எதற்காக இந்த மன்னிப்பு?”

” நமது சொந்தங்களை பற்றி எனக்கு தெரிந்திருந்தும் இப்படி உன்னை தனியாக விட்டு போனது என் தவறுதானே?”

” விதி இப்படி இருக்கும்போது நாம் என்ன அண்ணா செய்ய முடியும்? நடந்ததை விடுங்கள்”

” அது எப்படிம்மா முடியும்? இப்போது புதிதாக நமக்கு ஒரு தாய் மாமா முளைத்து வந்திருக்கிறானே”

பாரிஜாதம் அழகாய் புன்னகைத்தாள். “ரொம்ப நல்லவர் அண்ணா உங்கள் பிரண்ட்.உங்களைப் போன்றே அப்பாவி”

“யாரையும் இப்படி எளிதாக நம்பி விடக்கூடாதும்மா”

“ஆமாம் பாரிஜாதம்.அப்பாவியென வீட்டிற்குள் விழி சிமிட்டி கொண்டு இருப்பவர்கள் வெளியில் பெரிய பெரிய காரியமெல்லாம் செய்வார்கள் தெரியுமா?” என்றபடி அவர்கள் இருவருக்கும் எதிரே நாற்காலியை இழுத்துப் போட்டுக்கொண்டு அமர்ந்தான் உதயன்.

” நாங்கள் பர்சனலாக பேசிக் கொண்டிருக்கிறோம்” குமரன் எரிந்து விழுந்தான்.

” என்ன பர்சனல் பாரிஜாதம்?” அண்ணனை விட்டு தங்கையிடம் விசாரித்தான்.

“அப்படி எல்லாம் எதுவும் இல்லை உதயன். சும்மாதான் பேசிக் கொண்டிருந்தோம். இருங்க காபி கொண்டு வருகிறேன்” பாரிஜாதம் எழுந்து போனாள்.

குமரன் பற்களை நறநறத்தான். “நீ எப்போது போகப் போகிறாய்?”

“இப்போதிற்கு ஐடியா இல்லை”




“உன் நோக்கம் என்ன?…” என்றவன் அவன் முகத்தை கூர்ந்தான்”என் தங்கையா?”

கேட்டவனை கண்கள் மின்ன பார்த்தான் உதயன்.மெலிதாய் விசில் அடித்தான் “ஆஹா இந்த நோக்கத்தையும் வைத்துக் கொள்ளலாம் போலவே” குமரனின் கண்களில் நெருப்பு ஜுவாலைகள்.

” துரோகி ஒரு நண்பனாக நினைத்து என் மன சங்கடங்களை உன்னிடம் பகிர்ந்து கொண்டேன்.நீ இப்படி என் வீட்டிற்குள்ளேயே பாம்பு போல் புகுந்து கொண்டு விஷத்தை கக்குகிறாயே”

“ரிலாக்ஸ் குமரன் நீங்கள் பயப்படும் அளவு என்னால் பெரிய ஆபத்து எதுவும் வராது “அவன் தோள்களை தட்டி விட்டு எழுந்தான்.

“என் தங்கைக்காக இல்லையென்றால்  நீ இங்கு எதற்காக வந்தாய்?” நின்று திரும்பிப் பார்த்த உதயன், அழகாக புன்னகைத்தான்.

” சும்மா நீங்கள் விவரித்த குடும்பத்தை பார்க்கும் ஆவலில் வந்தேன்” கண்களை சிமிட்டு விட்டு போனான்.

“இங்கே உங்கள் பங்கு நிலத்தின் அளவு எவ்வளவு குமரன்? அதில் இருந்து சுமாராக எத்தனை டன் பூக்கள் கிடைக்கும்?”

மிகச் சாதாரணமாக தங்கள் தொழில் கணக்கு கேட்டுக் கொண்டிருந்தவனை வெறுப்பாய் பார்த்தான் குமரன்.

” அட சொல்லுப்பா சும்மா சாதாரண கேள்விதானே? இதற்கு ஏன் இப்படி முறைக்கிறாய் ?”

“உனக்கு இன்னமும் ஒரே நாள்தான் கெடு.நாளையே இந்த ஊரை விட்டு ஓடிவிட வேண்டும்” குமரன் விரலாட்டி எச்சரிக்க அந்த விரலை பற்றி கீழே இறக்கினான் உதயன்.

“அதோ உன் தங்கை செடிகளுக்கு உரம் வைத்துக் கொண்டிருக்கிறாள். அவள் எதிரே இப்படி என்னிடம் விரலாட்டினால் என்ன நினைப்பாள்?”

” நீ ஒரு துரோகி. என்னுடைய எதிரி என்று அவள் நினைக்கட்டும். அதற்காகத்தான்… ஆ…” அலறினான் குமரன் வலியில். பிடித்து இறக்கிய அவன் ஒற்றை விரலை தனது கைகளுக்குள் வைத்து நசுக்கி கொண்டிருந்தான் உதயன்.

“உடல்நலம் சரியில்லாத தந்தையையும் ஆதரவுகள் இல்லாத தங்கையையும் விட்டுவிட்டு காதல் முக்கியம் என்று ஓடிப்போய் திருமணம் முடித்துக் கொண்டு வந்த நீ என்னை துரோகி என்கிறாயா?”

“வெண்ணிலாவை காட்டி என்னை மிரட்டுகிறாயா?” உதயனின் கைகளுக்குள் நசுங்கும் தன்  விரலின் வேதனையை வெளிக்காட்டாமல் இருக்க பிரயத்தனப்பட்டான் குமரன்.

” சந்தேகமேபடாதே,நிச்சயமாக மிரட்டுகிறேன்.நான் உங்கள் தாய் மாமா .அதை மட்டுமே உன் உறவுகளிடம் சொல். உன்னுடைய சிறந்த நண்பன் நான். இதை மட்டுமே உன் தங்கையிடம் சொல்.”

“அவள் புத்திசாலி.சீக்கிரமே உன்னை கண்டு கொள்வாள்”

“ஆஹாம்”

“உதய் ஒரு நிமிஷம் இங்கே வாருங்களேன்.” செடிகளுக்கு இடையே நின்றிருந்த பாரிஜாதம் அழைக்க உதயன் குமரனின் விரலை விட்டான்.குமரனுக்கு ஒற்றைக் கண்ணை மூடித் திறந்தவன்,முகத்திற்கு பிரகாச முகமூடி அணிந்து கொண்டு பாரிஜாதத்தை நோக்கி நடந்தான்.




“அப்பா காலத்தில் இருந்தே இந்த நிலம் எங்கள் பங்கிற்கு வந்த பிறகு அம்மா கிட்ட தட்ட 25 வருடங்களாக இயற்கை உரங்களை மட்டுமே உபயோகித்தார்கள் கொஞ்சம் சோம்பல் படாமல் அவற்றை தயாரித்து உபயோகித்தமானால் பலன் கை மேல் கிடைக்கும்.எங்கள் பங்கு நிலத்து பூக்கள் அதிக நேரம் வாடாமல் இருப்பதற்கும், கூடுதல் மணத்திற்கும் காரணம் இதுதான். எங்கள் நில மல்லிகை பூவில் கட்டிய மாலைகளை தினமும் மதுரை மீனாட்சி அம்மனுக்கு சாற்றும் பாக்கியம் கிடைத்ததற்கு இதுவே காரணம்”

பாரிஜாதம் முதல் நாள் உதயன் கேட்ட கேள்விகளுக்கு  விளக்கங்கள் கொடுத்ததோடு தாங்கள் உபயோகிக்கும் இயற்கை உரங்களையும் அவனுக்கு காட்டியபடி செடிகளுக்கு இட்டாள்.

“இவையெல்லாம் நம்முடைய குடும்ப ரகசியங்கள். எல்லோரிடமும் சொல்லுவாயா?” எரிச்சலோடு  கேட்டபடி வந்தான் குமரன். அவனை நம்பாத பார்வை பார்த்தாள் பாரிஜாதம்.

” அண்ணா இது இயற்கை உரங்களை உபயோகிக்க தூண்டும் முறை.இதனை குடும்ப ரகசியமாக வைத்துக்கொள்ள அம்மா நமக்கு சொல்லித் தரவில்லையே. எல்லோருக்கும் பரப்ப வேண்டும் என்று தானே கூறினார்கள். ஆனால் இங்கேதான் நம் உறவுக்காரர்களே அம்மா சொன்னதற்காகவே அதனை ஏற்றுக் கொள்ளவில்லை. இப்போது நீங்களும் இப்படி பேசுகிறீர்களே?”

“அப்படி இல்லை பாரிம்மா. இங்கே நமது நிலத்து பூக்களுக்கு இந்த அளவு கிராக்கி இருக்கும் போது நம் விளைச்சல் ரகசியங்களை வெளியிடாமல் இருப்பது நல்லது தானே?”

“கூடுதல் மணம். நீண்ட நேரம் வாடாமல் இருப்பது. இவைகளால் உங்கள் பூக்களுக்கு அதிக மவுசு இருப்பது நியாயம் தானே!. ஆனால் அதனை ரகசியமாக ஏன் நினைக்கிறீர்கள்?” உதயன் கேட்டான்.

குமரன் அவனுக்கு பதில் சொல்லும் எண்ணத்தில் இல்லை ஆனால் பாரிஜாதம் சொன்னாள்.

“ஏதோ ஓர் கார்ப்பரேட் கம்பெனி எங்கள் தோட்டத்துப் பூக்களை குறி வைத்து சுற்றிக் கொண்டிருக்கிறார்கள்”

“அட இது எதற்காக?”

“அவர்கள் வாசனை திரவியங்கள், பத்தி போன்றவை தயாரிப்பவர்கள். எங்கள் தோட்டத்துப் பூக்களை அவர்கள் தொழிலுக்கு உபயோகிக்க கேட்கிறார்கள்”

“இது நல்ல வாய்ப்புதானே?எதற்காக நீங்கள் ஏன் தயங்குகிறீர்கள்?”

“இந்த தொழிலை நாங்கள் வருமானத்திற்கு மட்டுமாக பார்க்கவில்லை.ஆத்ம திருப்தியும் இதில் எங்களுக்கு உண்டு. எங்கள் தோட்டத்துப் பூக்கள் கோவிலுக்கு திருமண வீடுகளுக்கு விசேஷ விழாக்களுக்கு இப்படி போவதில் எங்களுக்கு மகிழ்ச்சியே.ஆனால் இது போன்ற கார்ப்பரேட் கம்பெனிகளுக்கு நாங்கள் அடிபணிய மாட்டோம்”குமரன் துடிப்பாய் பேச அவனை ஒரு மாதிரி பார்த்தான் உதயன்.

“தொழில் என்றால் எல்லாமே தொழில் தானே? வாசனை மலர்களை வைத்துக்கொண்டு வாசனை திரவியங்களுக்கு தரமாட்டேன் என்பது முட்டாள்தனமாக இல்லையா?”

“எங்களையெல்லாம் முட்டாள் என்கிறாயா?”)

“அண்ணா ஏன் கோபப்படுகிறீர்கள்? உதய்க்கு விபரமாகச் சொன்னால்தானே புரியும்? அவர்களுக்கு மலர்களை கொடுப்பதில் எங்களுக்கு ஆட்சேபம் இல்லை உதய். ஆனால் அவர்கள் போடும் கண்டிசன்கள் எங்களுக்கு ஒத்துவரவில்லை.இந்த மலர் தோட்டங்கள் முழுவதையும் அவர்களிடம் குத்தகைக்கு விட்டு விட சொல்கிறார்கள். மாதா மாதம் பணம் கொடுத்து விடுவதாகவும் உழைப்பது மட்டுமே எங்கள் வேலை என்றும் பேசுகிறார்கள்”




“அந்தப் பணம் உங்களுக்கு போதவில்லையா?”

பாரிஜாதம் இப்போது உதயனை ஒரு மாதிரியாக பார்த்தாள் “இதற்கு பதில் தான் சற்று முன் அண்ணன் சொன்னது. இந்த நிலம் எங்கள் ஆத்ம திருப்தியுடன் சம்பந்தப்பட்டுள்ளது.இதன் விளைச்சலை நாங்கள் எங்கள் கைதொட்டு வருடி மனமார உணர்ந்து அனுபவித்து வருகிறோம்.இது போன்ற கம்பெனிகளின் கைகளுக்கு போய்விட்டால் அவர்கள் கொடுக்கும் பணத்திற்கு எதையோ உழைப்போம்… எனும் எண்ணம் வந்துவிடும்.ஏனென்றால் இவர்கள் அதிக விளைச்சலுக்கு எங்களை தூண்டுவார்கள்.அப்படி அந்த சூழ்நிலையில் நாங்கள் வகுத்து வைத்திருக்கும் பயிரிடல் முறைகள் மாறி போகும் இதில் எங்களுக்கு சம்மதம் கிடையாது”

“ஆனால் உங்கள் உறவுக்காரர்களுக்கு சம்மதம் போலவே”

“அது எப்படி உனக்கு தெரியும்?” குமரன் சந்தேகமாக கேட்டான்.

“உங்கள் இருவரின் பேச்சை வைத்து நானாக யோசித்ததுதான்”

“ஆமாம் உதயன் கிட்டத்தட்ட முப்பது ஏக்கர் பூமி எங்கள் உறவுகளிடமே உள்ளது.இதில் எங்கள் பங்கு நிலம் நாலரை ஏக்கர் தவிர மற்றவர்கள் எல்லோரும் அந்த கார்ப்பரேட் கம்பெனியுடன் ஒத்துப் போக சம்மதித்து விட்டனர். நாங்கள் மட்டுமே மறுத்து வருகிறோம்.”

உதயன் யோசித்தான் “உங்கள் பாரம்பரிய முறை பயிரிடலை அந்த கம்பெனி ஏற்றுக் கொள்வதானால் அவர்களுடன் தொழிலில் ஒப்பந்தம் செய்து கொள்ள நீங்கள் தயாரா?”

“நீ என்ன அந்த கம்பெனிக்காரன் போலவே பேசுகிறாய்?” குமரன் உதயனை ஏற இறங்க பார்த்தான்.

‘நான் பொதுவான நியதியை பேசுகிறேன். உங்கள் விதிகளுக்கு ஒத்துப் போவதாக இருந்தால் வரக்கூடிய வருமானத்தை மறுக்க வழி ஏதும் இல்லையே…சரிதானே பாரு?”

“நாங்கள் சொல்லும் விதிகளுக்கு அந்த கம்பெனி ஒத்து வரட்டும், பிறகு பார்க்கலாம் உதயன்”

“இது போதும்.நானே உங்கள் சார்பாக அந்த கம்பெனியிடம் பேசுகிறேன்”

“பெரிய இவன்… கிழித்தான்” குமரன் முணுமுணுக்க பாரிஜாதம் கண்டிப்பா அண்ணனை பார்க்க உதயன் யோசனையுடன் அகன்றான்.




What’s your Reaction?
+1
40
+1
25
+1
0
+1
1
+1
3
+1
2
+1
0
Subscribe
Notify of
guest

0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!