Serial Stories நெஞ்சம் மறக்கவில்லை

நெஞ்சம் மறக்கவில்லை- 21

21 

ஆனந்தன் கோபத்தில் கொதித்துக் கொண்டு இருந்தான். எதிரில் வங்கி மேலாளர் கிஷன் நின்றிருந்தார்.

கிஷன் நீங்க சொல்றதை என்னாலே நம்பவே முடியலை மகேஷ் ஏற்கனவே பணவிஷயத்திலே கையாடல் செய்து இருக்கான். இருந்தும் நம்பி எல்லாவேலையும் ஒப்படைத்தேன். இரண்டாவது முறையாக என் நம்பிக்கையைச் சிதைத்து விட்டான். இனி அவனுக்கு மன்னிப்பே இல்லை,

இதோ 2 லட்ச ரூபாய்க்கு அவன் தந்த காசோலை,,,

கட்டாயமாக இது என் கையெழுத்து இல்லை,

எனக்கும் ரொம்ப சந்தேகமாத்தான் இருந்தது. அதனால்தான் நான் கிளியர் பண்ணலை, ஊழியர்களின் தவறினால் கணிப்பொறி வேலை செய்யவில்லை என்று சொல்லிவிட்டு சாயந்திரம் வரச்சொல்லி அனுப்பிவிட்டேன்.

ரொம்பவும் நன்றி கிஷன்.

பரவாயில்லை ஆனந்த் இது என் கடமை. நல்ல தோழனா ஒரு அறிவுரை சொல்றேன். பண விஷயத்தில் நம்பிக்கையான ஆளை மட்டும் வேலைக்கு வையுங்கள். அப்போ நான் கிளம்பறேன். ராஜீக்கு கல்யாணம் ஆகிவிட்டதாக கேள்விப்பட்டேன்.

ஆமாம் ஊருக்குப் போயிருக்காங்க…!

கிஷன் கிளம்பவும் அருகிலிருந்த தொலைபேசியை எடுத்து மகேஷ் இருந்தால் உள்ளே வரச் சொல்லுங்கள். அவர் இரண்டு நாட்களாக அலுவலகம் வரவில்லை, சைட்டுக்கும் வரவில்லை, என்ற பதில் வரவே எனக்கு ஏன் தெரிவிக்கவில்லை என்று கோபமாய் கேட்டுவிட்டு வருகைப் பதிவேட்டில் மகேஷ்ஷின் முகவரியைக் குறித்துக் கொண்டு அங்கு விரைந்தான் ஆனந்தன்.





ஆனந்தன் அந்த விலாஸ் விடுதியை நோக்கி வரும்போது நீலாவும், மலரும் ஆட்டோவை விட்டு இறங்கி விடுதிக்குள் நுழைவதைப் பாாத்து புருவத்தை உயர்த்தினான். இவர்கள் இங்கே ஏன்? அழைக்க எண்ணியவன் ஒரு நொடியில் விடுத்துப் பின் தொடர்ந்து சென்றான். அவர்கள் இருவரும் மகேஷின் அறைக்குச் சென்று உள்ளே நுழையவும், ஜன்னல் கம்பிகளில் இருந்து நடப்பவனவற்றை கவனித்தான். மகேஷ் இவர்கள் இருவரையும் கண்டதும். வியந்து போய், மலர் நீ இவளோட எப்படி?

இவ எங்க வீட்டுப் பொண்ணு, ஏன் மகேஷ்? ஒரு சின்னப் பொண்ணை இப்படித்தான் ஏமாத்தி தொந்தரவு செய்யறதா? மனசில இத்தனை அழுக்கான எண்ணங்களை வச்சிகிட்டு, என்னை வேற காதலிக்கிறதா சொல்லிட்டீங்க? எத்தனை மட்டமான புத்தி உங்களுக்கு?

சத்துள்ளவன் சாதிக்கிறான் மலர். என்னைப்பற்றி எல்லா விவரமும் உங்களுக்குத் தெரிந்து விட்டது. இனி ஏன் மூடி மறைத்துப் பேசணும். நீலாவிற்கும் என்னைப் பிடிக்கைலயாம், அதனால் அவ சம்பந்தப்பட்ட அத்தனையும் நான் திருப்தித்தரத் தயாராய் இருக்கிறேன்.

நன்றி,

நான் இன்னமும் முழுசாப் பேசி முடிக்கலை மலர், மல்லிகையை இழந்திட்டு தாமரையைக் கேட்கிறேன் புரியலையா? நீலாவிற்கு பதில் நீ வேண்டும் எனக்கு! மனைவியாய் வந்தாலும் சம்மதம், ஒரு நாள் விருந்து தந்தாலும் சம்மதம் எல்லாமே உன் விருப்பம் தான் என்ன சொல்றே? வெளியே ஆனந்தனுக்கு நாடி நரம்புகள் எல்லாம் துடித்தன இருந்தாலும் மலர் இதற்கு என்ன பதில் சொல்லப் போகிறாள் என்பதை அறிவதற்காகவே அமைதி காத்தான்.

முட்டாள் என்னைக் களங்கப்படுத்திட உன்னால் முடியாது. என்றோ ஒரு நாள் மனதில் ஏற்றி வைத்த அவருடன் நான் இப்போதும் வாழ்ந்து கொண்டு இருக்கிறேன். அவரைத் தவிர வேறு யாராலும் என்னைத் தீண்டிட என் நிழல் கூட அனுமதிக்காது.

அதையும்தான் பார்பாபோமே என் கண்ணில் பட்ட யாரையும் நான இது வரையில் விட்டுவைத்ததே கிடையாது. அதில் நீங்கள் இரண்டு பேர் மட்டும் விதிவிலக்கல்ல.

பூனை கண்ணை மூடிகிட்டா பூலோகமே இருண்டு போயிடாது மகேஷ்! என் மேல் உன் விரல் படறதுக்கு முன்பே நான் உன்னைக் கொன்னுருப்பேன்.

மலர்ங்கிற மென்மையான பேரை வைச்சிகிட்டு எண்ணெயில் போட்ட அப்பளமாய் பொரியுறீயேம்மா? நியாயமா?

ஆனந்தனின் மனம் மலரின் பேச்சினால் துள்ளிககுதித்தது. மலர் நீ என்னை மறக்கவில்லை இந்த வார்த்தைகள் போதும் என் குழப்பங்கள் அத்தனைக்கும் தீர்வு கிடைத்துவிட்டது. நான் அடைந்த துயரங்களுக்கு எல்லாம் நிவாரணம் தந்துவிட்டாய் உன் ஒற்றைச் சொல்லில்! கதவைத் தள்ளிக்கொண்டு புலிபோல் மகேஷ்ஷின் முன்பு நின்றான் ஆனந்தன்.

அவனைச் சற்றும் எதிர்பாராத மகேஷ் திருதிருவென்று விழித்தான். என்னைப் போலவே மோசடிக் கையெழுத்திட்டு இரண்டு லட்சரூபாய் மோசடி செய்யப் பார்த்தாய் அதற்கு கண்டிக்கலாம் என்று வந்தால், நீ அதை விடவும் இன்னமும் பல பெரிய தவறுகளையெல்லாம் செய்கிறாயே?




இதில் நீங்கள் தலையிடாதீர்கள் இது என் சொந்த விஷயம்?

எது,? உன் சொந்த விஷயம்? என் வீட்டுப்பெண்களை நீ அசிங்கப்படுத்துவே, நான் கைகட்டி வேடிக்கைப் பார்க்கணுமா? பளீரென்று ஒரு அறைவிட்டான் ஆனந்தன் பொறி கலங்கிப் போனான் மகேஷ். உன்னை எத்தனை நம்பியிருந்தால் நீ தவறு செய்திருந்தாலும் மறுபடியும வேலை கொடுத்து இருப்பேன். என்னையா ஏமாற்றுகிறாய், மேலும் அடிக்கப்போனவனை மலர் தடுத்தாள்.

விடுங்கள். நீலாவுடைய புகைப்படங்கள் , கடிதங்கள் அனைத்தையும் முதலில் வாங்குங்கள்.

சொன்னது காதில் விழுகிறதா இல்லை போலீஸ் வந்து சொல்ல வேண்டுமா? மகேஷ் அரண்டுபோய் எல்லாவற்றையும் கொண்டு வந்து தந்தான். இனி இந்த ஊர் பக்கம் உன்னைப் பார்க்க கூடாது, பார்த்தால் அடுத்த நொடி சிறையில் தான் இருப்பாய் நினைவிருக்கட்டும். எச்சரித்து விட்டு பெண்களிருவரையும் அழைத்துக் கொண்டு வெளியே வந்து காரைக் கிளப்பினான்.

நீங்கள் இங்கே எப்படி வந்தீர்கள்?

தான் வந்த காரணத்தை சொன்ன ஆனந்தன், இந்த மாதிரி இனியும் வேற லேடி ஜேம்ஸ்பாண்ட் வேலையெல்லாம் வேண்டாம். யாரையாவது துணைக்கு அழைத்து வாம்மா தாயே! உனக்கு ஏதாவதுன்னா நான் உங்க வீட்டுக்கு பதில் சொல்லணும், என்று மலரைப் பார்த்து சொல்லிவிட்டு நீலாவிடம் திரும்பினான். ஒரு சின்ன அஜாக்கிரதையாலே எத்தனை பெரிய பிரச்சனை வந்திடுச்சு பாரு? இனியாவது நல்லபடியா நடந்து கொள். என்ன பெண்களோ, உண்மையான அன்போடு நெருங்கி வந்தால் எட்டி எட்டி உதைக்கிறீர்கள்? ஆனால் இப்படிப்பட்ட மோசடி ஆட்களிடம் எளிதில் சிக்கி விடுகிறீர்கள். நீலா வாயே திறக்க வில்லை, ஆனந்தன் தன்னைத்தான் சொல்லுகிறான் என்று அறிந்தாலும் மலர் மெளனமாய் வண்டியில் ஏறினாள். மகேஷ் தன்னிடம் தவறாய் பேசிய போது ஆனந்தனிடம் எழுந்த கோபம் என் மேல் கொணட அக்கறையா? காதலா இரண்டுமே சொல்லாமல் சொன்ன அந்த விழிகள் மலர் அவனைத் திரும்பிப்பார்த்தாள், அவன் கடமையே கருமமாய் வண்டியை செலுத்திக் கொண்டு இருந்தான்.

வீட்டிற்குள் நுழைந்தவுடன் தேவியம்மாள் வேகமாய் ஓடிவந்து, எங்கே அய்யா போயிட்டீங்க? அம்மாவுக்கு திடுமென உடம்புக்கு முடியலை, எனக்கு கையும் ஓடலை, காலும் ஓடலை, ஒரு வழியா மருத்துவர் அய்யாவிற்கு தகவல் சொல்லி அவர் வர்றதுக்குள்ளே நான் ரொம்பவே தவிச்சிப்போயிட்டேன்.

அம்மாவுக்கா … ஆனந்தன் நாலே எட்டில் தாயின் அறையை அடைந்து அம்மா என்னம்மா ஆச்சு என்றான் பரிவுடன், மகனின் தோளை ஆதரவாய் வருடினார் பெரியம்மாள்.

வயசாயிட்டாலே வியாதிகள் விருந்தாளிகள் மாதிரி வந்து சேர்ந்திடறது. ப்ரஷர் அதிகமாயிட்டதால் லேசா மயக்கம் வந்திடுச்சு, தேவி உடனே மருத்துவருக்கு தகவல் சொல்லி பெரிய கலாட்டாவே பண்ணிட்டா.

இல்லே சின்னதம்பி அம்மா சும்மா சொல்றாங்க. இன்னமும் ஒரு வாரத்திற்கு அம்மாவை படுக்கையில் இருந்து எழக்கூடாதுன்னு சொல்லியிருக்காரு. தேவியம்மா பேசியபடியே பழரசம் பிழிய போனாள். ஆனந்தன் உடனே மருத்துவரிடம் தொடர்பு கொண்டு நடந்தவற்றை விசாரித்து அம்மாவிடம் திரும்பினான்.




அம்மா நீங்க கட்டாயம் ஓய்வு எடுத்துக்கணும். இல்லைன்னா மருத்துவமனைக்கு கூட்டி வரச் சொல்லிட்டார் மருத்துவர். தேவைன்னா ஒரு செவிலியாரையாவது வைச்சிக்கலாம்.

அதெல்லாம் வேண்டாம் ஆனந்தா. என்னை என் சின்ன மருமகள் நல்லாப் பார்த்துப்பா..

சின்ன மருமகளா யாரு?

மலர்தான் ஏன் மலர் உறவுப்படி பார்த்தா நீ என் சின்ன மருமகள்தானே என்னை கவனிச்சிக்க மாட்டியா? மலர் சற்று திகைத்து பின் தலையசைத்தாள்.

ஆனந்தா தனிமை ரொம்பவும் கொடுமைப்பா, மலர் வீட்டுக்கு வந்ததில் இருந்தே நான் ரொம்பவும் நிம்மதியா உணருறேன்.அவ ஒரு வாரம் என்கூடவே இருக்கட்டுமே…

அம்மா அலுவலக வேலைக்குன்னு வந்தவங்களை….

பரவாயில்லை, நான் அம்மா பக்கத்திலேயே இருந்து கவனிச்சிக்கிறேன் என்றாள் மலர்

அதென்னம்மா, உறவுமுறைப்படி நீ என்னை அத்தைன்னும், ஆனந்தனை அத்தான்னும் அழையேன்.

அது வந்து… அவள் இழுக்க.

விடுங்கம்மா எதையும் உடனே செய்ய முடியுமா போகப்போக பழகிடும். ஆனந்தன் அடிக்கண்களால் அவளைப் பார்த்து சிரித்தான், மலர் நீ அம்மாவைக் கவனித்துக் கொள், எனக்கு ஒரு முக்கியமான வேலை இருக்கிறது என்று கூறியபடியே அவன் நகர,

டேய் பெரியவன் ஏதும் பேசினால் எனக்கு உடம்புக்கு முடியலைன்னு சொல்லிடாதே, மனசு வருத்தப்படுவான்.

சரிம்மா, அவன் போகவும் மலர் நீலாவைப் பார்த்து நீ போய் படி நீலா தேர்வுகள் எல்லாம் வரப்போகுது இல்லையா? தேவியம்மா இவளை ஏதும் வேலை வாங்காதீங்க? அவ படிக்கிறாளான்னு மட்டும் அப்பப்போ பார்த்துக்கோங்க…

சாப்பிட ஏதும் கொண்டுவரவா,

அத்தைக்கு குழைவாய் ரசம் சாதம் மட்டும் போதும். எனக்கும் அதையே தாங்க. என்று ஆளுக்கொரு வேலை சொல்லிவிட்டு, பெரியம்மாவை தூங்கப் பண்ணினாள். அவளுக்கு அந்த நேரத் தனிமை தேவையாய் இருந்தது. பெரியம்மாவிற்கு ஏதும் விஷயம் தெரிந்திருக்குமா? அவருடைய பேச்சும் செயலும் தன்னை ஆழம்பார்ப்பதைப்போல் இருக்கிறதே என்று எண்ணியபடியே, ஆனந்தனின் செயல்களை அசைபோட்டாள். அவரின் நேசம் மட்டும் உண்மையாய் இருந்தால்……..!




What’s your Reaction?
+1
16
+1
16
+1
2
+1
1
+1
0
+1
0
+1
0
Subscribe
Notify of
guest

0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!