karthikai deepangal Serial Stories

கார்த்திகை தீபங்கள்-17

17

” நீ சித்தப்பா கூட போ ….” சொல்லிவிட்டு ராஜாவையும்,ரவியையும் தன் பைக்கில் உட்கார வைத்துக் கொண்டு பள்ளிக்கு கிளம்பனான் கதிர்வேலன் .கீர்த்தனா முகம் வாடி நின்றாள் .

” கீர்த்து ஏன்மா வாசலில் நிற்கிறாய் …? ” பூந்தளிர் மென்மையாய் அவள் தலை வருடினாள் .

” ஸ்கூலுக்கு கிளம்பினேன் சித்தி .அப்பா என்னை விட்டுட்டு ராஜா , ரவியை மட்டும் கூட்டிட்டு போயிட்டார் …” குழந்தையின் கண்கள் கலங்கிவிட்டது .

” ஏன்மா நீ சித்தி கூட வர மாட்டாயா …? ” கீர்த்தனா உற்சாகமானாள் .” ஓ….” வேகமாக தலையாட்டினாள் .

” அழகான சித்தி .அதுவும் பள்ளிக்கூட கரஸ்பான்டனட் வேறு .அவர்கள் கை பிடித்து பள்ளக்கூடத்திற்குள் போனாலே …கீர்த்துக்கு ரொம்ப பெருமையாக இருக்கும் …அப்படித்தானேடா …” கேட்டபடி பின்னால் வந்து நின்றான் குருபரன் .

பூந்தளிர் கணவனை செல்லமாக முறைக்க , கீர்த்தனா கை தட்டி ” ஐ ..ஆமாம் …அப்பிடித்தான் …நீங்கள. ரொம்ப அழகு சித்தி ….” குதித்து தன் கழுத்தை கட்ட முயன்றவளை கைகளில் அள்ளிக் கொண்டாள் பூந்தளிர் .

” உன் சித்தப்பா சொன்ன பிறகுதான் நான் அழகென்று தெரிந்த்தா …? “

” இல்லையில்லை .முதல்லேயே தெரியும். ஸ்கூலில் என் ப்ரெண்ட்ஸ் எல்லாம் கூட சொல்வாங்க .உங்க சித்தி ரொம்ப அழுகு .நீ  ரொம்ப லக்கி .அவுங்க கூடவே வீட்ல இருக்கியேன்னு சொல்வாங்க …”

” பாரேன் கீர்த்து .எல்லோரும் உன்கிட்ட மட்டும் சொல்லியிருக்காங்க .என்கிட்ட ஒருத்தர் கூட சொல்லலையே …? ” வருத்தம் போல் முகத்தை வைத்து கண்களை கசக்கிக் கொண்டாள் .

” அது …உங்க்கிட்ட நேர்ல சொல்ல பயப்படுவாங்களா இருக்கும் …”




” கரெக்ட் கீர்த்தும்மா .எல்லோரும் என்னை மாதிரித்தான் போல .உண்மையை  கூட நேரில் சொல்ல பயந்து ,யார் யார் மூலமாகவோ சொல்லி புரிய வைக்க வேண்டியதிருக்கிறது …” என்ற குருபரனை திரும்ப முறைத்தாள் .

குழந்தை முன் இதென்ன பேச்சு விழியால் அதட்டிவிட்டு ” உங்க அண்ணனுக்கு பெண் குழந்தைகள்னா பிடிக்காதா …? ” கீர்த்தனா காதில் படாமல் முணுமுணுப்பாய் கேட்டாள் .

” ஏன் …? ” புருவம் சுருக்கினான் .

” இவளை விட்டு விட்டு ராஜா , ரவியை மட்டும் ஸ்கூலுக்கு கூட்டிட்டு போயிருக்கிறார் …”

” அதனால் …இவளை பிடிக்கவில்லையென்று ஆகிவிடுமா …? அண்ணனுக்கு ஏதாவது வேலையிருந்திருக்கும் .சும்மா ..சும்மா கண்டதையும் மண்டைக்குள் போட்டு உருட்டக் கூடாது …” சொன்னதோடு அவள் உச்சந்தலையில் தன் உள்ளங்கையால் அழுத்தினான் .அது கொஞ்சம் வலுவாக இருக்க …

” என்னை அடிக்க உங்களுக்கு இது ஒரு சாக்கா  …? ” பூந்தளிர் அவனுடன் சண்டைக்கு களம்பினாள் .

” ஐ…சண்டையா ..வர்றியா போட்டு பார்த்திடலாம. …” என்றவனின் வர்றியா வில்லங்கமாக இருக்க , முகச்சிவப்பை கோபம் போல் முனைந்து மாற்ற முயன்று தோற்றுக் கொண்டிருந்தாள் .அந்த சிவப்பை  உறிஞ்சி விடுவான் போல்  பார்த்திருத்தான் குருபரன் .இருவருக்குமிடையே பூந்தளிர் கைகளிலிருந்த கீர்த்தனா இருவரையும் மாறி மாறி பார்த்தாள.

” ஏய் …குட்டி …ஏன் அப்படி பார்க்கிற …? ” குருபரன் கீர்த்தனாவின் கன்னத்தை தட்டினான் .

” இரண்டு பேரும் சண்டை போட போறீங்களா சித்தப்பா …? “

” ம் …உன் சித்தி வர்றாங்களான்னு கேட்டு சொல்லு …சண்டைக்கு நான் ரெடி ….”

” பேசாம இருக்க மாட்டீங்களா …? ” பூந்தளிர் பல்லை கடித்தாள் .
” ஓ…இரண்டு பேரும் அன்னைக்கு மாதிரி சிலம்ப சண்டை போட போறீங்களா …? ” கீர்த்தனா கேட்டதும் குருபரன் உதட்டை மடக்கி மெலிதாய் விசிலடித்தான் .” ஆஹா போடலாமே …”

பூந்தளிர் தன் கால்களால் அவன் கால்களை மிதித்தாள் .அடங்குடா என உதடசைத்தாள் .போன ஞாயிற்றுக்கிழமை அவள் குழந்தைகளுக்கு வீட்டு தோட்டத்தில் வைத்து சிலம்பம் சொல்லிக் கொடுத்து கொண்டிருந்தாள் .சும்மா பார்க்கிறேன் என குருபரனும் வந்து அமர்ந்தான் .அவன் பார்க்கும் உற்சாகத்தில் மேலும் ஆர்வமாக கம்பை சுழற்றியபடி ஒரு கட்டத்தில் அவனை கவனித்தவள் முகம் சிவந்தாள் .

குருபரனின் பார்வை அன்று சிலம்பம் விளையாடிய போதுவேகமான அவளது கையசைவுகளிலும் , லாவகமான அவள் காலெட்டுக்களிலுமே ஆச்சரியமாய் நிலைத்திருந்த்து .இன்றோ …தூக்கி சொருகிய சேலை தெரிவித்த  கால்களின் மேலும் , வரிந்து சொருகிய முந்தானை காண்பித்த இடுப்பின் மீது , இழுத்து கட்டிய உடையில் தெரிந்த உடல் வடிவின் மீதும் தாபமாக படிந்திருந்த்து .அவளது ஒவ்வொரு அசைவிற்கும் அவன் முகத்தில் மோகம் கொப்பளித்தது …




.சை இதறகுத்தான் வந்து உட்கார்ந்தானா … தன் கை கம்பை அவன் முன் எறிந்தவள் ” கண்ணை புடுங்கனும் ….” என அவனிடம் முணுமுணுத்து விட்டு உள்ளே போய்விட்டாள் .இப்போது அதை சுட்டிக் கேட்ட குருபரனை கன்னத்தில் அறைந்தால் என்ன …எனத்தோன்றியது பூந்தளிருக்கு .

” அடிப்பதானால் நம் அறைக்குள் போய்விடலாம் தளிர் ….” என அவன் அறைக்குள் அழைத்தது அறை வாங்குவதற்கு போல் தெரியவில்லை .

” இப்போ எங்களை ஸ்கூலில் விட வரப் போறீங்களா இல்லையா …? ” தன் நெகிழ்வை மறைக்க கோபம் காட்டினாள் .

” போகலாமா …” கீர்த்னாவை தூக்கி பைக் டேங்கின் மீது அமர்வைத்து விட்டு , தானும் தாராளமாக அமர்ந்து கொண்டு ” நல்லா வசதியாக உட்கார் …” என இடம் கொடுத்தான் .

” இன்றும் ஜீப் இல்லையா …? ” அவன் கொடுத்த சொற்ப இடத்தில் தன்னால் அமர முடியுமா என பூந்தளிருக்கு சந்தேகம் வந்த்து .

” ஜீப்பை இன்னும் வேலை பார்க்கவில்லை ….” கூசாமல் புளுகியவன் பைக்கை கவனமாக பள்ளம் பார்த்து விட ஆரம்பித்தான் .வண்டியின் சைடு கைப்பிடியை பிடித்தபடி அவன் மேல் விழாமல் பயணிப்பதற்குள் பூந்தளிர் மிகவும் தவித்து போனாள் .

பொன்னுரங்கம் பூந்தளிருக்கு ஒரு ஸ்கூட்டி வாங்கி கொடுத்து விடும்படி , குருபரனிடம கூறியிருந்தார் .ஸ்கூட்டி வாங்க தஞ்சாவூர் போக வேண்டும் .தனக்கு வேலை இருப்பதாக கூறி ஸ்கூட்டி வாங்குவதை ஒத்திப் போட்டுக் கொண்டே வந்தான் குருபரன் .அது வரை தானே அவளை ஸ்கூலில் கொண்டு போய் விடுவதாக கூறினான் .அன்றிலிருந்து எப்போதும் ஊருக்குள் ஜீப்பில் சுற்றுபவன் …வம்படியாய் பைக்கை தூக்கிக் கொண்டு அலைந்தான் . அவனது ஜீப்பில் நிறைய ரிப்பேர் இருக்கிறதாம் .

எவ்வளவு சமாளித்தாலும் பட் ..பட்டென அவனது தோள்களை மோதும் தன் கன்னங்களால் உண்டான அவதியை போக்க , மனதை வேறு பக்கம் திருப்பினாள் பூந்தளிர் .

பூந்தளிர் அன்று சொன்னபிறகு பிள்ளைகள் முவரும் அவர்கள் பள்ளியிலேயே சேர்க்கப்பட்டு விட்டார்கள் .ஒரு சாதாரண விசயத்திற்கு அன்று அனுராதாவிற்கு எவ்வளவு ஆத்திரம் வந்த்து …? பொதுவாக அவள் பொன்னுரங்கத்தின் முன் இது போல் ஆங்காரமாய் பேசியதெல்லாம் கிடையாது .ரொம்ப பணிவாக கை கட்டாத குறையாகத்தான் நிற்பாள் .இன்று அவளை அனைவரும் ஆச்சரியமாக பார்த்தனர் .

பொன்னுரங்கமோ அவளது கூச்சலுக்கு சற்றும் அசங்காது பல் குத்திக் கொண்டிருந்தார் .” எல்லோரும் சேர்ந்து பிளான் போட்டு ஸ்கூலை என்கிட்ட இருந்து பிடுங்கிட்டீங்க .இப்போ என் பிள்ளைங்களையும் இந்த ஆகாத பள்ளிக்கூடத்தில் படிக்க வச்சு கெடுக்க பாக்குறீங்களா …? ” கத்தினாள் .

” டேய் முருகேசா ….” வீடு அதிர கத்திவிட்டு தன் பல்லிடுக்கில் சிக்கியிருந்த எதையோ தூ என துப்பினார் பொன்னுரங்கம் .

” ஐயா …” பதறியபடி ஓடி வந்தான் முருகேசன் .

” உன் வீட்டுக்காரிக்கு என்ன பிரச்சனைன்னு கேளு …”

அவன் அப்போதுதான் ஆங்காரமாய் நின்ற தன் மனைவியையும் , அவளை கோபமாக பார்க்கும் தன் வீட்டாட்களையும் பார்த்தான் .

” ஏய் …என்னடி இது …? “




” நம்ம புள்ளைங்களை இந்த ஊர் ஸ்கூலில் சேர்க்கனுங்கிறாங்க .இதுக்கு நான் சம்மதிக்க மாட்டேன் …”

” ஐயாதானே சொல்றாங்க .சரின்னு சொல்லு ….” வேறு வார்த்தை பேசாது , ” நாளையே மூணு பசங்க டி.சியையும் வாங்கிட்டு வந்து நம்ம ஸ்கூலில் சேர்த்திடுறேங்கய்யா ….”

குடும்பத்தினர் கலைந்து போக தன் கணவனிடம் ” என் குழந்தைகள் மேல் எனக்கு உரிமையில்லையா …? ” பொருமினாள் அனுராதா .

” அவுங்க எனக்கும் பிள்ளைங்கதான்டி …”

” என்கிட்ட இருந்து ஸ்கூலையும் பிடுங்கிட்டாங்க …” அனுராதா முகத்தை சோகமாக்கி கண்ணை கசக்கினாள் .

” ம் …கஷ்டம்தான் .நீ பிறந்த வீட்டிலிருந்து கொண்டு வந்த சீரை நாங்க பிடுங்கி வச்சிக்கிட்டா …நீ உன் பிறந்த வீட்டு ஆளுங்களுக்கு என்ன பதில் சொல்வ …பாவம் ….” கணவனின் நக்கலில் வாயை மூடிக்கொண்டாள் .

அவர்கள் இருவரும் காதலித்து மணந்தவர்கள்தான் .ஆனால் இருவரும் காதலித்த போதே ,என் வீட்டில் எல்லோரும் சம்மதித்தால் தான் நம் திருமணம் .இல்லாவிட்டால் …கிடையாது …என்ற கண்டிசனை முன் வைத்த பின்பே தன் காதலை சொன்னான் முருகேசன் .இன்று வரை அவளிடம் ஆசையும் , காதலுமாக நடந்து கொண்டாலும் தன் குடும்பமென வரும்போது , யாரடி நீ பார்வையை அவளிடம் பார்ப்பான் .அதனால்தான் இன்று வரை சொத்தை பிரித்துக் கொண்டு தனக்குடித்தனம் என்ற அனுராதாவின் தீராத ஆசை தீராமலேயே போய் கொண்டிருக்கிறது .

மனதிற்குள் முருகேசனை மெச்சிக் கொண்ட பூந்தளிரின் நினைவு கதிர்வேலனிடம் வந்து நின்றது .” உங்கள் அண்ணன் – அண்ணியிடம் வித்தியாசமாக உங்களுக்கு ஒன்றும் தோன்றவில்லையா …? ” காற்றில் பறந்து அவன் கன்னம் தொடும் தன் முன் நெற்றி கேசத்தை கைகளால் அடக்கியபடி கேட்டாள் .

” பூந்தளிர் அண்ணன் , அண்ணி திருமணம் முடிந்த போது நான் சிறு பையன் .இப்போது கொஞ்சம் முன்பு கீர்த்தனா நம் இருவரையும் வேடிக்கை பார்த்தாளே …அது போல் நானும் பல தடவை அண்ணன் அண்ணியை பார்த்திருக்கறேன் .முதலில் புரியாமல் பார்த்திருக்கிறேன் .புரிந்த பின்பு ஒதுங்கியிருக்கிறேன் .எனக்கு தெரிந்து அண்ணனும் , அணணியும மிகுந்த புரிதலுள்ள அந்நியோன்யமான தம்பதிகள் .இப்போது திடீரென நீ  வந்து எதையோ சொல்வதை என்னால் ஏற்றுக் கொள்ள முடியாது ….” பேச்சின் தீவிரத்தில் ப்ரேக்கை அழுத்தமாக மிதித்தானோ என்னவோ பூந்தளிர் துள்ளி முன் போய் அவன் முதுகு முழுவதும் அப்பினாள் .

அரைநிமிடம் கழித்து சுதாரித்து விலகியவள் அவனை முறைத்தபடி இறங்க , ” நம்ம ஊர் ரோடு ரொம்ப மோசம் ….” சலித்துக கொண்டான் .குண்டும் , குழியுமான ரோட்டுக்கு சந்தோசப்படும் ஒரே ஜீவன் இவனாகத்தான் இருக்கும் .

” இந்த வரம் ஞாயிற்றுக்கிழமை நாம் நிச்சயமாக ஸ்கூட்டி வாங்க போகப் போகிறோம் ….” நிச்சயம் காட்டினாள் .

” இந்த வாரமா …முடியாதே .இந்த வாரம் ஐயா நாம் எல்லோரும் சேர்ந்து நம் தோட்டத்துக்கு போக வேண்டுமென சொல்லிக் கொண்டிருந்தார் .அதனால் இன்னொரு முறை பார்க்கலாம் தளிர் ….” போய்விட்டான் .பட்டப் பகலில். இத்தனை நடமாட்டத்திற்கிடையே கண்ணை சிமிட்டி விட்டு போகிறான் பார் …பொறுக்கி …தனக்குள் திட்டி தீர்த்தாள் .

தனது அறைக்குள் நுழைந்து டேபிளில்  வைத்திருந்த தண்ணீரை குடித்து நற்காலியில் பின்னால் சாய்ந்தவுடன்தான் தன் உடல் ஆசுவாசமாய் தளர்வதை உணர்ந்தாள் .குருபரன் அருகிலிருக்கும் நேரம் முழுவதும் அவளது உடல் , மனம் இரண்டிலும் ஒரு வெள்ளை குதிரை சிறகு விரித்து ரேஸ் ஓட்டம் ஓடிக் கொண்டிருப்பதாய் உணர்ந்தாள் .அதன் வேகத்திறகு ஈடு கொடுக்க முடியாமல் மனமும் உடலும் சோர்வதாய் நினைத்தாள் . ஏனோ அந்த குதிரை ஓட்டம் பிடித்தமானதாயும் , இல்லாத்தாயும் அவளுக்கு இருந்த்து .

கண்களை அயர்வுடன் மூடிய போதுதான் மாமியார் பற்றி கணவனிடம் பேச நினைத்திருந்த்து  நினைவு வந்த்து .அன்று காலை அவளுக்கும் சொர்ணத்தாயுக்கும் சிறு உரசல் .

காலை சாப்பிட அடுப்படிக்கு போனவள் அங்கு சொர்ணத்தாய் வழக்கம் போல் பொன்னியை திட்டிக் கொண்டிருந்த்தை பார்த்தாள் .பொன்னி வாயே திறக்காமல் மாமியாரின் வசவுகளை வாங்கியபடி வேலைகளை தொடர்ந்து கொண்டிருந்தாள் .ஓரமாக டேபிளில் அமர்ந்து அனுராதா தட்டை மாறி மாறி நிரப்பி சாப்பிட்டுக் கொண்டிருந்தாள் .பொன்னி வாங்கும் திட்டுக்களுக்கு ௦அவள் இதழ்களுக்குள  ஒரு ரகசிய சிரிப்பு ஒளிந்திருந்த்து .
பூந்தளிருக்கு மாமியார் மீது ஆத்திரம் வந்த்து .அதென்ன ஒரு வேலையும் செய்யாமல் ஊர் சுற்றும் அவளை விட்டு விட்டு எத்தனை வைதாலும் கேட்டுக் கொள்கிறாளென இவளை எந்நேரமும் திட்டிக் கொண்டே இருப்பது .உடனடியாக சூடாக மாமியாருக்கு கொடுக்கத்தான் நினைத்தாள் .ஆனால் பொன்னுரங்கத்தின் பரிவு நினைவு வந்த்து ்அவருக்காக வாயை இறுக மூடிக்கொண்டாள் .

ஒரு வழியாக சொர்ணத்தாய் திட்டி முடித்து போனதும் , அனுராதா கை கழுவி எழுந்தாள் .” அத்தை திட்டுவதை கேட்கவே இவர்கள் இவ்வளவு நேரமாக இங்கே சாப்பிட்டார்களோ …? ” என்றாள் .

” உஷ் சும்மாயிரு பூவு .பெரியவங்க ஏதோ சொல்றாங்க .அனுக்கு புரியிற பக்குவம் கிடையாது .இதையெல்லாம் பெருசா நினைக்க கூடாது .விடு …”

” எப்படிக்கா உங்களால் இப்படி பொறுமையாக இருக்க முடியுது ? .உங்க இடத்தில் நானிருந்தால் இந்நேரம் நம்ம மாமியார் தலையில் நச்சுன்னு ஒரு கொட்டு வைத்திருப்பேன் …” பொன்னி மனக்கண்ணில் அந்த காட்சி விரிய அவள் இதழ்கள் மெல்ல விரிந்த்து .

“உங்களுக்கு சிரிப்பு வருதில்லை .எனக்கும் .அப்படியே அந்த சீனை மனசுக்குள்ளே கற்பனை பண்ணி பாருங்க …”

” பார்ப்பீங்கடி பார்ப்பீங்க ….இங்க இருக்கிறவளைல்லாம் கேனச்சின்னு நினைச்சீங்களா …? ” பின்னால் கேட்ட சொர்ணத்தாயின் குரலில் இருவரும் ஙெலவெலத்தனர் .கடவுளே இப்படி யோசிக்காமல் பேசி தொலைந்தேனே ….பூந்தளிர் தன்னையே நொந்தபோது சொர்ணத்தாயின. நாக்கு சுழல ஆரம்பித்திருந்த்து .தொடர்ந்து அங்கே இருக்க முடியாமல் வெளியே ஓடிவந்து விட்ட போதுதான் வாசலில் கீர்த்தனாவை பார்த்தாள் பூந்தளிர் .

“மாமியாருடன் நடந்த பிரச்சனையை குருபரனிடம் சொல்லி விட வேண்டுமென்றுதான் நினைத்திருந்தாள் .ஆனால்குருபரன் ஏதேதோ கலாட்டா செய்து அவளை மறக்க செய்திருந்தான் .ம் …நானாவது இப்படி வெளியே வந்து தப்பித்துக் கொள்கிறேன் .பொன்னி அக்கா பாவம் .வீட்டிற்குள்ளேயே இருந்து நாள் முழுவதும் அத்தையின் பேச்சுக்களை கேட்டுக் கொண்டிருக்க வேண்டும் .சே …கொஞ்சம் ஜாக்கிரதையாக பேசியிருக்காமல் போனேனே …

அவளால் அதற்கு மேல் அங்கேயிருக்க முடியவில்லை .சில முக்கியமான வேலைகளை சொல்லிவிட்டு மெல்ல நடந்தே வீட்டிற்கே திரும்ப தொடங்கினாள் .குருபரனுக்கு போன் செய்தால் அவளை அழைத்து போக வருவான்தான் .பூந்தளிர் இருந்த மனநிலைக்கு அவனோடு இன்னொரு பைக் பயணத்திற்கு அவள் தயாராக இல்லை .

வழக்கத்தற்கு மாறான அமைதி வீட்டில் நிரம்பியிருப்பதை போன்றே தோன்றியது .உள்ளே என்ன நடக்கிறது …ஒருவேளை அத்தை …பொன்னி அக்காவை அடிப்பார்களோ …? இந்த சந்தேகம் வந்த்தும் பூந்தளிரின் கால்கள் அவசரமாக வீட்டிற்குள் விரைந்தாள் .




What’s your Reaction?
+1
21
+1
24
+1
1
+1
0
+1
0
+1
0
+1
2
Subscribe
Notify of
guest

0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!