Serial Stories நெஞ்சம் மறக்கவில்லை

நெஞ்சம் மறக்கவில்லை-8

8

மனதில் இருக்கும் ஆணின் மேல் எந்தளவு ஆசை இருக்கிறதோ அதே அளவு மருதாணி சிவக்கும் என்று பாட்டி காலையில் சொன்னது நினைவிற்கு வர, மனதிற்குள் ஆனந்தனை எண்ணியபடியே வைத்து முடித்தாள்.

பார்வதி ஆன்ட்டி கிரில் கேட்டைத் திறந்து வரும் சப்தம் கேட்டது.

“வாங்க ஆன்ட்டி உட்காருங்க! மலர் காட்டிய நாற்காலியில் அமர்ந்தாள் பார்வதி.

“என்ன மருதாணி போட்டுக்கிட்டு இருக்க போலயிருக்கே?”

“ஆமாம் ஆன்ட்டி !”




“உனக்கென்னமா ! கவலை இல்லாத பொண்ணு அழகா உட்காந்துட்டு மருதாணி இட்டுகிட்டு இருக்கே! ஆனா எனக்குத்தான் மனசே சரியில்லே.”

“ஏன் ஆன்ட்டி என்னாச்சு ?”

“என்னத்தேன்னு சொல்றது மலர், கடவுள் என்னை ரொம்பவே சோதிச்சுட்டான். சின்ன வயசிலே வயித்துக்கு இல்லாம தவிச்சேன்.இப்போ வறுமை எட்டாத உயரத்திற்கு போயிட்டாலும் தனிமை வந்திடுச்சே, சரி பழசை எல்லாம் இப்போ பேசி என்ன புண்ணியம், போன மாதம் என் அண்ணன் மகள் பிறந்தநாள் விழாவிலே எடுத்த போட்டோஸ் இப்பத்தான் வந்தது.நாளைக்கு அவங்க வீட்டுக்குப் போகப்போறேன். வர எப்படியும் ஒருமாதம் ஆகும்.”

“ஆனா ? உங்க வீட்டுக்கு யாரோ ஒருத்தர் வருவாரே அவரு போயிட்டாரா ?” என்று வெகு எச்சரிக்கையோடு கேட்டாள் மலர்.

“யாரு? ஆனந்தனா……? அவன் ஊருக்குப் போயிட்டானே. நாநென்னம்மா தனிக்கட்டை தானே ! யாரு கேக்கப் போறா, சரி அதை விடு போட்டோ பாக்குறீயா?”

மலர் மெல்ல போட்டோவை வாங்கிப் பார்த்தாள். ஒவ்வொரு புகைப்படத்திலும் பிறந்தநாள் கோலாகலங்கள், அழகான ஒரு பெண் அதில் சிறிது கொண்டு இருந்தாள்.

நான்கு புகைப்படங்கள் கடந்த பின்னர், பிறகு வந்த அனைத்திலும் ஆனந்தனும், அந்த பெண்ணும் நெருக்கமாய் கேக் ஊட்டிக் கொண்டும், தோளில் கை போட்ட படி இணக்கமாகவும், பரிசளிப்பது போலவும் என்று இருவரும் இருந்ததைக் கண்டு மனம் வலித்தது மலருக்கு.

“பார்த்திடியா மலர்?” பார்வதியின் குரல் அவளை இழுக்க புகைப்படத்தை அவள் தந்தாள்.
“இதிலே இருக்கிறது…?”

“இவ தான் என் அண்ணன் பொண்ணு நீரஜா, இவளுக்குத் தான் ஆனந்தனை தரலாமின்னு நினச்சேன்.”
ஆனந்தனின் அருகில் வேறொரு பெண் நெருக்கமாய் இருப்பதையே தாங்க முடியாத மலருக்கு பார்வதி கூறிய இந்த விஷயம் மேலும் அதிர்ச்சியை தந்தது.

பார்வதி மேற்கொண்டு தூபமிட்டாள், “சும்மா இல்ல மலர் இந்த பயல் ஆனந்தன் இருக்கானே, போற இடத்திலேயெல்லாம் பாக்குற பொண்ணை எல்லாம் வளைச்சிடுவான்.

நானும் எத்தனையோ முறை புத்தி சொல்லி பார்த்திட்டேன். அவன் கேக்குற பாட்டை காணோம் .

அதான் சீக்கிரம் கால் கட்டு போட்டு அவன் ஆட்டத்தை கட்டுப்படுத்திடலாமின்னு முடிவு பண்ணி இருக்கோம்.
மலர் முகத்தில் ஈயாடவில்லை. பார்வதிக்கும் இதுதானே வேண்டியதாய் இருந்தது. மெல்ல ஆரம்பித்தாள்.

“மலர்மா… நான் ஒன்னு கேட்ட தப்பா நினைக்க மாட்டியே ?”
இல்லையென்று தலையசைத்தாள்.

“நீ ரொம்பவும் சின்ன பொண்ணு, உன்னைப் பத்தி உங்க வீட்டுல ஆயிரம் கனவுகள் கண்டு வைச்சிருப்பாங்க. நீயும் ஆனந்தனும் அன்னைக்கு லைபரரி அறையிலே பேசிகிட்டு இருந்ததை எதேச்சையாய் பார்த்தேன்.”




“நீ ஆனந்தனை தயவு செய்து நம்பாதே ! எனக்கு உறவுங்கிறதனால அவன் எப்படி பட்டவன் என்பதை மறைச்சு, கண்ணுக்கு முன்னாடி ஒரு சின்ன பொண்ணோட வாழ்கை வீணாவதை நான் விரும்பலைமா.நீ இப்பதான் சின்ன மொட்டு ! ஆனந்தன் நம்பினா கருகி போயிடுவ, நான் சொல்றதை சொல்லிட்டேன் அப்புறம் உன் விருப்பம்.

“இப்ப நான் என்ன செய்யட்டும் ஆன்ட்டி !” உடைந்த குரலில் கேட்டாள் மலர்.

“மலர்! பேசமா நீ உங்க வீட்டுக்கு போயிடு ! அப்பத்தான் ஆனந்தனால உனக்கு தொந்தரவு இருக்காது. அதோட நீங்க எனக்குரியவர் இல்லைன்னு உன் கைபட ஒரு கடிதம் தந்திடு அது போதும் மீதியை நான் பாத்துக்கிறேன்.”

“நான் …. எப்படி….?

“யோசிக்காதே மலர், நான் உனக்கு தீங்கிழைப்பேனா ? ஒரு தவறான முடிவால் என் வாழ்வையே இருட்டாகிக் கொண்டு வாழ்கிறேனே அதே போல் நீயும் ஆகக் கூடாதுங்கிற நல்ல எண்ணத்திலே தான் சொல்றேன்.”

“நான் ஆனந்தனை உன் வழியிலே வரக் கூடாதுன்னு கண்டிச்சு வைக்கிறேன் சரியா ?”

“ம்…! பலியாடு மாதிரி தலையசைத்தாள் மலர், பார்வதி சொன்னது போலவே நறுக்கென்று “நாலே வரியில் என்னை மணக்க நீங்க உகந்தவர் இல்லை மன்னிக்கவும். இனி என் வழியில் குறுக்கிட வேண்டாம்.” என்று எழுதி பார்வதியிடம் திணித்து விட்டு கிளம்பினாள்! அதன் பிறகு பாட்டி வீட்டில் இருந்தும் மூட்டை முடிச்சுடன் உடனே ஊருக்கு திரும்பி விட்டாள்.

“என்னடியிது ? லீவு முடியுற வரைக்கும் பாட்டி வீட்டுல இருந்து வரமாட்டன்னு அடம் பிடிச்சே இதென்ன உடனே கிளம்பி ஓடி வந்திட்டே,”

“என்னவோ அப்பா, அம்மா நினைப்பாவே இருக்குன்னு உடனே போகலாம்ன்னு அட பிடிச்சா! வேற வழி இல்லமாதான் கூட்டிட்டு வந்தேன்” என்று பாட்டியின் பதிலுக்கு,

“இங்க வாடி செல்ல பிள்ளை. பெரிசா வளர்ந்த மாதிரி தான் இருக்கு. ஆனா மனசளவிலே அவ இன்னமும் குழந்தைதான். “தாயின் அன்பான அரவணைப்பில் ஒண்டினாள்.
நான்கு வருடங்கள் கடந்து விட்டது.

இருப்பினும் பார்வதி ஆன்ட்டி சொன்னது பொய்யாய் இருக்க கூடாதா என்ற ஏக்கம் இருந்தது.
மனம் தாங்காமல் அடுத்த வருடம் சென்றாள்.




ஆனால் பார்வதி ஆன்ட்டி தன் அண்ணன் வீட்டிலேயே தங்கி விட்டதாக தகவல் வர, பூட்டிய வீட்டின் மேல் ஏக்க பார்வையை வீசியவாறு திரும்பி விட்டாள்.
பார்வதி ஆன்ட்டி சொன்னது உண்மை தான்.

என் மேல் உண்மையான அன்பு கொண்டிருந்தால் சமுத்திரத்திற்கு அடியில் இருந்தாலும், என்னை வந்து சந்தித்து இருப்பானே, அவன் சந்தித்த ஒருத்தி என்ற நினைப்பையே அவன் மறந்து தான் இருப்பான்.
இத்தகையவனிடமிருந்து தப்பிக்க நேர்ந்ததே என்று மனம் சந்தோசம் அடைவதற்கு பதிலாக, ஒரு ஏமாற்றம் ஆக்கிரமித்தது நிஜம்.

அறியாத வயதில் மனதில் விழுந்த விதை வெட்ட முயன்றும் முடியாமல் ஆலமரமாய் வேருன்றி விட்டது.
இனிமேல் மறுப்பது மறைப்பதோ கடினம். நல்ல வேளை குடும்பச் சூழ்நிலை சற்று முரணாய் இருப்பதால், தன் திருமணப் பேச்சு இப்போதைக்கு அடிபடாது அந்த மட்டில் நிம்மதி தான். நினைவுகளை கிளறுவதில் சுகத்தை விட வலி தான் அதிகம்.

ஆனந்தன் இல்லமல் தனகென்று ஒரு தனி வாழ்வை யோசிக்க கூட இயலவில்லை மலருக்கு ! ஒரு வேளை அவனை திரும்பவும் ஏற்றுக் கொள்வதும் முடியாத காரியமாய்த் தான் பட்டது மலருக்கு! நாளை இன்னொரு வேலைக்கு ஏற்பாடு செய்யச் சொல்லி வசந்தா அக்காவிடம் கேட்க வேண்டும் என்ற நினைவோடு உறங்கியும் போனாள்.




What’s your Reaction?
+1
21
+1
19
+1
0
+1
0
+1
0
+1
0
+1
1
Subscribe
Notify of
guest

0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!