Serial Stories யாரோடு யாரோ

யாரோடு யாரோ-9

(9)

மைதிலி கோவில் வாசலில் நின்று சுற்றிப் பார்த்தாள்.

சிவசு கோவில் வாசலில் வெயிட் செய்யறேன் என்று சொல்லியிருந்தான். மைதிலி வீட்டில் சொல்லாமல் கிளம்பி வந்திருந்தாள்.

எப்பவும் வியாழக் கிழமை அருகில் உள்ள பாபா கோவிலுக்கு வருவது வழக்கம். அதனால் மைதிலி கிளம்பியதும் யாரும் ஒன்றும் சொல்லவில்லை. மைதிலியும் எல்லோரும் நம்புவதற்காக, கௌதமை தன்னைக் கோவிலில் விடச் சொல்லி கேட்டாள்.

கௌதம்தான் அவளைக் கொண்டு வந்து விட்டான்.

“அப்புறம் எத்தனை மணிக்குக் கூட்டிட்டு போக வரட்டும் அண்ணி?

“அஞ்சு நிமிஷம் வெயிட் பண்றியா? பாபாவுக்கு ஒரு நமஸ்காரம் செஞ்சுட்டு வரேன்.

“அப்படியா? நான் ஒரு அவசர வேலையாப் போகணும். ஆட்டோ பிடிச்சு வந்துடறீங்களா?

“பத்து நிமிஷத்துல வந்துடுவேன்னா வெயிட் பண்றேனே?

கௌதமுக்கு சத்யாவின் மெடிகல் ரிபோர்ட் வாங்கும் வேலை இருந்தது. அது ரகசியமானது. டாக்டரிடம் போனவன், சத்யாவை மெடிகல் டெஸ்ட் எடுக்கச் சொன்னார் என்று லேபுக்கு கூட்டிப் போனான். அங்கு என்னென்னவோ டெஸ்ட் எடுக்க, அவளுக்கு எதுவும் புரியவில்லை.

எல்லா டெஸ்டும் எடுக்கறது நல்லதுதானே என்றார் அப்பா.

 




“உடம்புல சக்தியே இல்லை. அதனால் டாக்டர் சில டெஸ்ட் எடுக்கச் சொன்னார். எதுவும் இல்லைன்னு தெரிஞ்சா சந்தோஷம்தானே.

“அந்தச் சிதம்பரத்தோட லேபுக்குக் கூட்டிட்டுப் போகாதே.– அப்பா.

“இல்லை மாமா. என் பிரண்டோட அப்பா நடத்தறார். சாய்பாபா காலனில.

சரி என்று சம்மதித்தார் அப்பா.

இரண்டு நாள் ஆகிறது. பிளட் டெஸ்ட், யூரின், கொலஸ்ட்ரால் என்று அனைத்தும் கொடுத்தாள். யூட்ரஸ் ஸ்கேன், கண் என்று எந்த டெஸ்டும் ஏன் என்று கேட்காமல் கொடுத்து விட்டு வந்தாள்.

நடமாடும் கூடு என்று புரிந்தது வீட்டில். ஆனால் யாராலும் அப்பாவை மீறி எதுவும் செய்ய இயலவில்லை. அவரிடம் இத்தனை பிடிவாதமா என்ற வியப்பை விடவும், வெறுப்புதான் வந்தது.

அப்பாகிட்டப் பேசுடா என்று தங்கம் விஜயிடம் தனியாக அழுதாள்.

“சிவகாமி நல்லவ இல்லை. அந்தக் கௌதமும் அப்பாகிட்ட வேஷம் போடறான். நீயானும் எடுத்துச் சொல்லு.என்று புலம்பினாள்.

ஆனால் இது விஷயமாக யாரும் எதுவும் பேசக் கூடாது என்று சொல்லி விட்டார் அப்பா. கம்பெனிக்கு கௌதம்தான் சத்யாவை அழைத்து வந்தான். அவனே கூட வந்து மேனேஜரிடம் ஒரு மாதம் லீவ் சொல்லி விட்டு, அழைத்து வந்து விட்டான்.

இப்போது அப்பாவின் முதன்மை மந்திரி கௌதம்தான். சத்யாவைப் பொறுத்த வரை அவன் எடுக்கும் முடிவுகள்தான்.

“இது ரொம்பத் தப்புப்பா. ஒரு பெண்ணின் இஷ்டம் இல்லாமல் அவளை போர்ஸ் செஞ்சு கல்யாணம் செய்யறது அராஜகம். நம்ம நாட்டுக்குச் சுதந்திரம் கிடைச்சிருச்சு. ஆனா எத்தனை படித்தாலும், வெளில வேலைக்குப் போனாலும், ஒரு பெண்ணுக்கு தன் வாழ்வை வாழ சுதந்திரம் இல்லை.– விஜய்.

“நான் அவளைக் கொண்டுபோய் கிணற்றில் தள்ளலையே. என் தங்கை மகனுக்கு கல்யாணம் செய்யறேன்.

“அப்பா, சிதம்பரம் வந்து பொண்ணு கேட்டார் சரி. ஆனா சிவசு மேல சத்யாவுக்கு இஷ்டம் இருக்கா இல்லையா? கௌதமை கல்யாணம் செஞ்சுக்க அவளுக்குச் சம்மதமான்னு கேட்க வேண்டாமா?

“அவ என் பொண்ணு. அவளைப் பற்றிய எந்த முடிவு எடுக்கும் உரிமையும் எனக்கு உண்டு.




“பாசம் வேற. அடிமைத்தனம் வேற. உங்களுக்கு இருக்கறது பாசம் இல்லை. ஈகோ. இதுக்கு நீங்க நிச்சயம் ஒருநாள் வேதனைப் படுவீங்க. இதை நான் ஒரு சாபமாவே சொல்றேன்.– விஜய் துக்கத்துடன் கத்தினான். அப்பாவுடன் பேசுவதை நிறுத்தி விட்டான். தங்கமும் அதிகம் பேசுவதில்லை.

“கௌரவம், ஈகோ என்று நீங்க உங்க குலக் கொழுந்து வாழ்வை அழிக்கறீங்க மாமா– என்றாள் மைதிலி.

சத்யா எதுவும் பேசவில்லை. மௌனமாகவே இருந்தாள். கௌதம் பேச வந்த போது கூட “தயவு செய்து என்கூட எந்தப் பேச்சும் வேண்டாம் கௌதம். அப்பா வார்த்தைக்கு கட்டுப்பட்டு இந்தக் கல்யாணத்துக்கு நான் சம்மதிக்கிறேன். வேற எந்த அட்வாண்டேஜூம் எடுக்காதே– என்று கூறி விட்டாள்.

இதை இப்படியே விடக் கூடாது என்று நினைத்தாள் மைதிலி. எனவேதான் சிவசுவைச் சந்திக்க வந்தாள். கௌதமுக்கு இந்த விஷயம் தெரிந்தால் அவன் நிச்சயம் இதை வைத்து ஒரு கேம் ஆடுவான் என்று நினைத்தாள்..

“அண்ணி– சிவசுவின் குரல். நான் இங்க இருக்கேன்.

சிவசு அவளிடம் வந்தான். “கௌதம் போகட்டும்னு வெயிட் செஞ்சு வந்தேன்.

“பின்னாடி போயிடலாம். அங்க தேவஸ்தான அலுவலகம் இருக்கு. அங்க உட்கார்ந்து பேசலாம்.– என்றவன் அங்கு அழைத்துப் போனான்.

மைதிலிக்கு என்ன பேசுவது என்று தெரியவல்லை. அவளைப் பொறுத்த வரை கௌதம் சத்யாவை மணக்கக் கூடாது. அவனிடம் எதோ ஒரு திருட்டுத் தனம் இருக்கிறது என்று நினைத்தாள் மைதிலி.

சிவ்சுவைப் பற்றி அதிகம் தெரியாது என்றாலும், விஜய் அவனைப் பற்றி விசாரித்த வரையில் நல்லதாகவே இருந்தது.

ஒரு பெண் யாருடைய அன்பில், அரவணைப்பில் மகிழ்ச்சியாக, பாதுகாப்பாக உணர்கிறாளோ, அவனே அவளின் கணவனாக வேண்டும். வாழ்க்கைப் பாதையில் கை பிடித்து அழைத்துச் செல்ல, தோள் சாய ஒரு நட்பாக அமைய வேண்டும்.

தான் முன்னாள் செல்ல, மனைவி பின் தொடர வேண்டும் என்று நினைக்காமல் இணைந்து நடப்பவனே சிறந்த கணவன். அவளையும் ஒரு மனுஷியாக மதித்து, அவளுக்குச் சகல உருமைகளையும் கொடுப்பவனால் ஒரு பெண் நிம்மதியாக, அமைதியாக, திருப்தியாக வாழ முடியும். சிவசுவின் கரங்களில், சத்யா மன நிறைவான ஒரு வாழ்க்கையை வாழ்வாள் என்று தெரிந்தது.

“அப்பா கொஞ்சம் அவசரப் பட்டுட்டார்– சிவசு வருத்தத்துடன் பேசினான்.

“எனக்கு சத்யாவைப் பிடிக்கும். ஆனால் அவளுக்கு என்மேல் விருப்பம் இருக்கா, இல்லையான்னு தெரியாம அப்பா, உங்க மாமாகிட்ட வந்து பேசிட்டார்.

சிவசு நிஜமான வருத்தத்துடன் பேசினான்.




“இது கௌதமுக்கு அதிர்ஷ்டமான நேரம். ஆனா சத்யா அவனைக் கல்யாணம் செஞ்சுண்டா, சிறிது நாள் கூட உயிரோடு இருக்க மாட்டா. அவனிடம் வேஷம் இருக்கு.– மைதலி.

“சத்யா மனசில் என்ன இருக்குன்னு தெரியாமா, நாம எதுவும் பேச முடியாது.

“அவ எப்பவும் அப்பா சொல்லை மீற மாட்டா.

“நான் சத்யாவை விரும்பினது உண்மை. அவ எண்ணமும், என் எண்ணமும் ஒரே அலைவரிசையில் இருந்தது. வாழ்க்கை அர்த்தமுள்ளதா, சுவாரஸ்யமா இருக்கும்னு நினைச்சென். அவ என்னை விரும்பலைன்னா கூட, சத்யாவுக்கு ஒரு நல்ல லைப் அமைஞ்சு மகிழ்ச்சியா வாழணும்னு நினைச்சேன்.

“அவ அப்பாவா பார்த்து, இந்தக் கல்யாணத்தை நிறுத்தணும்.

“அதுக்கு கௌதம் பற்றிய உண்மைகளைக் கண்டு பிடிக்கணும். அவ வேஷம் போடறான்னு தெரியுதே தவிர, எப்படி அதை நிரூபிக்கறதுன்னு தெரியலை.

“முதல்ல சத்யாவுக்கு என்னைப் பிடிக்குதான்னு தெரியணும். அவளுக்கு இஷடமில்லைன்னா எல்லா முயற்சிகளும் வீண்தான்.-சிவசு.

“எப்படி அறியறது.?

“நான் சத்யா கூடப் பேச முடியுமா?

“வீட்டை விட்டு வெளியில் வர அனுமதி இல்லை.

“இந்தக் காலத்துல இப்படியா?

“அவர் அந்தக் கால மனிதர்தானே.

சிவசு யோசித்தான். ஒரு நிமிஷம் அவன் மனம் வாசுதேவனை நினைத்து வருந்தியது. பிடிவாதம், ஈகோ, தான் நினைத்ததே நடக்க வேண்டும் என்ற அவரின் குணங்கள் மூலம் எவ்வளவு தூரம் அந்தக் குடும்பத்தை விட்டு விலகி போய் விட்டார் என்பதை உணரவில்லை. மற்றவர்களின் மனங்களிலிருந்து தலை குப்புற விழுந்து விட்டார்.

மன சிம்மாசனத்தில் ஏறுவது சிரமம். ஆனால் ஒரு நிமிஷத்தில் அதிலிருந்து விழுந்து விட முடியும். இதை வாசுதேவன் ஏன் உணரவில்லை?

ஒரு வீட்டில் பெண் இருந்தால், நாலு பேர் தன் பையனுக்கு வந்து கேட்பது இயல்பான விஷயம். இதில் கோபப் பட என்ன இருக்கிறது. இல்லை என்று சொல்லி விட்டுப் போக வேண்டியதுதானே.

“நீங்கள் அநாதை இல்லத்தில் வளர்ந்தவர் என்ற காரணம்.– மைதிலி.

“அதுக்கு நான் காரணம் இல்லையே. அங்கு வளர்ந்தாலும் நான் படித்து, நல்ல நிலையில் இல்லையா? சமூகத்தில் உயர்ந்த நிலையில்தானே இருக்கிறேன். என் கம்பெனியின் டர்ன் ஓவர் ஒரு வருஷத்துக்கு நாலு கோடி ஈட்டுகிறது. இன்னும் அது வளரும். என் படிப்பு, குணம், பண்புகளைப் பார்க்க வேண்டும். அப்பா, அம்மா பெயர் தெரிந்தவர்கள் மட்டும் நல்ல ஒழுக்கத்துடன் இருக்கிறார்களா?

“- – – – – – – “

“எனக்கு ஒரு உதவி மட்டும் செய்யுங்க.

“சொல்லுங்க.

“கௌதம் இத்தனை நாள் எங்க இருந்தார், அவங்க அப்பா யாருங்கற விஷயத்தை கண்டு பிடிக்க முடியுமா?

“டன்

“நன்றி. மற்றபடி நான் சத்யாவைச் சந்திக்க விரும்பறேன். நிச்சயம் நான் அவளை விரும்பறது, உண்மைன்னா, என் அன்பு சத்தியம்னா அதற்கான சூழ்நிலை அமையும்.– நம்பிக்கையுடன் பேசினான் சிவசு.

உடல் சிலிர்த்தது சத்யாவுக்கு. ஆம் என்றது பிரபஞ்சம்.




What’s your Reaction?
+1
7
+1
16
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
Subscribe
Notify of
guest

0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!