Serial Stories யாரோடு யாரோ

யாரோடு யாரோ-10

 (10)

“தொடரும் ஏழ் பிறப்பும் நான் வருவேன் கூட

உயிரே உன் மடிதான் நான் கேட்பது.

எங்கோ பாட்டு ஒலித்தது. அடுத்த வீட்டு மாடியாக இருக்கும்.

அதில் இருக்கும் மீனா டீச்சர்தான் மெலடியாக பாடல்களைப் பதிவு செய்து கேட்டுக் கொண்டே வேலை செய்வார். பழசு, நடுவாந்தரம், இளையராஜா என்று கலந்து கட்டி இருக்கும்.

இந்த மழை நேரத்தில் பாட்டு கேட்டபடி வாசலில் அமர்ந்திருப்பது நன்றாக இருந்தது. சத்யாவின் வீட்டு காம்பவுண்டு சுவரை  ஒட்டி மீனா டீச்சர் வீடு. கீழ் போர்ஷனை வாடகைக்கு விட்டு மேலே இருக்கார். அங்கிருந்து சத்யா வீட்டுடன் பேசுவார்.

அப்பா இந்த வீட்டை திண்ணை வைத்துக் கட்டியிருந்தார். “எல்: வடிவில் திண்ணை. இரண்டு படி இறங்கினால் போர்டிகோ. பெரிய கேட் ஒன்று. சின்ன கேட். அதன் வழியாக பின் பக்கம் வாடகைக்கு இருப்பவர்கள் பயன்படுத்த. மாடிப்படி போகும். அதன் வழியாகத்தான் சிவகாமி போக வர இருக்கிறாள்.

வர மட்டும்தான். போவதில்லையே. எல்லா நேரமும் இங்குதான்.

நினைக்காதே என்று தலையை உலுக்கிக் கொண்டாள் சத்யா.




அப்பா திருமணம் நிச்சயம் செய்த பின் எல்லா நேரமும் இங்குதான். கௌதமின் அதிகாரம் அதிகம். சத்யாவிடம் அதிக உரிமை எடுத்துக் கொள்கிறான். நரக வேதனையாக இருக்கிறது.

ஏன் இப்படி திடீரென வாழ்க்கை மாறிப் போனது?

எந்தப் புள்ளியில் எது வந்து கோர்க்கிறது.

“ஒரு புள்ளியில்தான் தொடங்குகிறது ஒரு பகையோ, நட்போ.

ஒரு புள்ளியில்தான் முடிகிறது வாழ்க்கையின் நலிந்த பயணமும்.

மனதுக்குள் எழுதினாள். எல்லாமே இப்படி மனதுக்குள்தான்.

எழுதப்படாத கடிதங்களே மனவெளியில் பறக்கிறது. வார்த்தைகள் கிடைக்காமல் வறண்டு சொல்லுக்கு அலைகிறது. ஒரு ஏக்கம், உதாசீனத்தை உதறித் தள்ள கவிதைகளே கை கொடுக்கிறது.

அன்பு என்பது அவசியமில்லையோ என்று நினைத்தாள் சத்யா. இங்கு அடக்கு முறைதானே இருக்கிறது. உருக்குலைத்து, உருக வைத்து குழிக்குள் அழுத்துகிறது. என்றாலும் இந்த மாதிரியான சின்னச் சின்ன ரசனைகள் வாழும் உற்சாகத்தை அளிக்கிறது.

சத்யா பாட்டை ரசித்தபடி சாய்வு நாற்காலியில் அமர்ந்திருந்தாள்.

மதிய நேரம் என்றாலும் வெயில் இல்லை. மழை லேசான தூறலாய் மேக மூட்டத்துடன் காணப்பட்டது.

அடுத்த பாட்டு ஆரம்பித்து விட்டது.

“யாரோடு யாரோ? நீ எந்த ஊரோ?

மனதை ராகம், குரல் என்று மயங்க வைத்தது.

உண்மையில் யாருக்கு யார் என்று தெரியும்? தனக்கு கௌதமா? சிவசுவா/ இல்லை வேறு யாரோ? எதையும் முடிவு செய்வது நாம் இல்லையே. “யாருக்கு மாப்பிள்ளை யாரோ? அவர் எங்கே பிறந்திருக்கின்றாரோ? அதுதானே உண்மை. ஆனால் யாராக இருந்தாலும் முடிவு எடுப்பது நான் இல்லை. மனதில் சிந்தனைகள் ஓடியது.

கண்ணை மூடியபடி இருந்த சத்யாவைப் பார்த்தபடி அப்பா, மதிய சாப்பாட்டுக்கு வீட்டுக்கு வந்தார்.

அவளைப் பார்க்கையில் மனது கலங்கியது. இவளின் உற்சாகத்தைப் பறித்தது தான்தானே. ஒரு வார்த்தை கேட்டிருக்கலாம். ஆனால் என்ன வீம்பு என்னைச் செயல்பட வைத்தது? ஸ்ரகுகளைப் பிய்த்து எரிந்து விட்டேனோ?

விஜய் சொன்னது போல் தன மகள் மேல் தனக்கே நம்பிக்கை இல்லையா?




ஆனால் சத்யா அவனுடன் பழகாமல் சிவசுவின் அப்பா அவ்வளவு தைரியமாக வந்து பெண் கேட்க மாட்டார். இப்போதைய இளைய தலைமுறை, சிறிது சம்பாதிக்க ஆரம்பித்ததும், தறி கேட்டுப் போகிறார்கள். நாகரீகமாக இருக்கட்டும். ஆனால் ஊர் பேர் தெரியாத ஒருத்தனுக்கு என் பொண்ணை எப்படிக் கொடுக்க முடியும்?

அப்பா தனக்குத் தானே சமாதானம் செய்து கொண்டார்.

அப்பா நல்லவர்தான். பிள்ளைகள், குடும்பத்தின் மேல் பற்றும், பாசமும் கொண்டவர்தான். ஆனால் தன் பாரம்பரியம், குல வழக்கம், குடும்ப மரியாதையை  எப்போதும் விட்டுத் தர மாட்டார். அதனால்தான் சிவகாமியை ஒதுக்கி வைத்தது குடும்பம். இப்போது அவள் நிர்கதியாக நிற்கிறாள் என்பதுடன், கௌதமுக்கு தன் மகளைக் கட்டி வைப்பதன் மூலம், குடும்ப கௌரவம் அழியாது என்று நினைத்தார்.

ஆனாலும் செல்லமகள் ஓய்ந்து போய் அமர்ந்திருப்பது மனதுக்கு உறுத்தலாக இருந்தது.

“சத்யா– அருகில் நெருங்கி அழைத்தார்.

சத்யா நிமிர்ந்து பார்த்தாள்.

‘என்னம்மா, குளிச்சுட்டு பவுடர் கூடப் போடாம இருக்கே. பழைய நைட்டி வேற.

“இருக்கட்டும்பா. நான் எங்க வெளில போறேன்?

“வெளில் போனாத்தான் டிரஸ் பண்ணிக்கனுமா? கல்யாணம் நிச்சயம் ஆகப் போறது. நாலு பேர் பார்க்க வரப், போவ இருப்பாங்க. கண்ணுக்கு லட்சணமா இருக்க  வேணாமா?

“- – – – – – – “

“அடுத்த வாரம் நிச்சயம் செய்ய இருக்கேன். போய் உனக்கு வேண்டிய புடவை, நகை எல்லாம் வாங்கிண்டு வா.

“இல்லப்பா. உங்களுக்கு பிடிச்சதை எடுத்துக் கொடுங்க.

“ போட்டுக்கப் போறது நீதானே. பிடிச்சதை எடுத்துக்க.

“கட்டிக்கப் போற கணவனே என் இஷடத்துக்கு இல்லை. அப்புறம் இது என்னப்பா?

கோபத்துடன் எதோ பேச எழுந்த அப்பாவை தடுத்து நிறுத்தினாள் சத்யா.

“உங்க பேச்சை நான் மீற மாட்டேன். ஆனால் ஒருநாள் என்னைக் கௌதமுக்கு கட்டி வச்சதை நினைச்சு, நினைச்சு மருகுவீங்க. அவன் நல்லவன் இல்லைன்னு நீங்க உணரும்போது எல்லாமே கை மீறிப் போயிருக்கும். உங்க கண் எதிரில் உங்க பொண்ணு கண்ணீரோடு வாழறதைப் பார்க்கப் போறீங்க. அப்போ எதுவுமே செய்ய முடியாது.

“சாபம் தரியா?

“இல்லைப்பா. நடக்கப் போறதைச் சொன்னேன்.

“ஓஹோ, நீ என்ன அவ்வளவு பெரிய தீர்க்கதரிசியா?

“இல்லைப்பா. நான் சாதாரண சத்யாதான். இப்ப நான் என்ன செய்யணும்? அவ்வளவுதானே. சரி போறேன். ஆனா கூட யாரையானும் அனுப்புங்க. இல்லைன்னா, நான் கடைக்குப் போறேன்னு சொல்லிட்டு, சிவசு கூட ஓடிப் போயிடுவேன்னு நினைப்பீங்க.




அப்பா தன்னை அவமானமாக உணர்ந்தார். பெற்ற மகள் மேல் சந்தேகம் என்றாலும் யாரையும் நம்ப முடியவில்லையே. அவர் நண்பரின் மகள் முகூர்த்தத்து அன்று காலையில் காதலனுடன் ஓடிப் போனாள். நண்பர் தற்கொலை செய்து கொண்டார்.

எல்லாப் பெண்களும் பெற்றவர்களை ஏமாற்றப் பார்க்கிறார்கள் என்ற எண்ணம் அவர் மனதில். சத்யா தன் பேச்சை மீற மாட்டாள் என்றாலும் சுற்றி நடக்கும் சம்பவங்கள் அவரின் நம்பிக்கையைத் தகர்த்தது. எனவே அவள் சொன்னதற்கு எதுவும் சொல்லாமல் இருந்தார்.

மைதிலி குறுக்கே புகுந்தாள். அவளுக்கு சத்யாவை வெளியில் அழைத்துப் போக வேண்டும். சிவசுவுடன் பேச வேண்டும் என்று விஜய், மைதிலி முடிவு செய்திருந்தார்கள்.

இப்படியே வாய் மூடி நடக்கும் விபரீதங்களை வேடிக்கை பார்க்க முடியாது.

“சத்யா, இது என்ன பேச்சு? அப்பா உன் மேல இருக்கற பிரிய்த்துலதான் இப்படி நடக்கறார். யாரானும் பெத்த மகளுக்குக் கெடுதல் பண்ணுவாங்களா? உன் மனசுக்கு எல்லாமே நல்லதா நடக்கும். கௌதம் நல்லவன் இல்லைன்னா, அதைத் தெய்வம் அப்பாவுக்கு உணர்த்தும். ஒருவேளை அவன் நல்லவனா, மாமாங்கிற பிரியமும், மதிப்பும் உள்ளவனா இருந்தா?

“- – – – – -“

“எந்த வேஷமும் ரொம்ப நாள் நிலைக்காது சத்யா. தெய்வத்தை நம்பி பாரத்தைப் போட்டுட்டு நீ பாட்டுக்குப் போ.

அப்பா, மகிழ்ச்சி அடைந்தார். “நன்றி மைதிலி

“எதுக்கு மாமா நன்றி எல்லாம்? இது என் குடும்பம். நீங்க போங்க. நான் சத்யாவை கூட்டிட்டுப் போறேன். நகை, புடவை எல்லாம் வாங்கிடலாம். விஜய் வரச் சொன்னார். போகும் போது அவருக்கு சாப்பாடு கொடுத்துட்டு, அப்படியே போய் எல்லாம் வாங்கிண்டு வரோம்

“நான் வரட்டுமா? கௌதம் உள்ளே வந்தான்.

“பெண்கள் சமாச்சாரம். நீ எதுக்கு?– அப்பாவே பதில் சொன்னார்.

அதில் கௌதம் முகம் சுருங்கியது. ஆனால் அப்பாவை எதிர்த்து எதுவும் பேச முடியவில்லை.

“கௌதம் நீ போய் நம்ம வக்கீலை கூட்டிட்டு வா. ஒரு இடம் விக்கணும். அதைப்பற்றி அவர்கிட்டப் பேசணும்.

“எதுக்கு மாமா இடத்தை விக்கறீங்க?

“அந்த இடம் கிணத்துக் கடவு பக்கத்துல சும்மா கிடக்கு. வித்து, சத்யா கல்யாணத்தை முடிக்கலாம்.

“வித்தா, திருப்பியும் வாங்கறது கஷ்டம் மாமா– கௌதம்.

“தெரியும். ஆனா வேற வழியில்லை. சொன்னதைச் செய்– அப்பா உள்ளே சென்றார். யோசனையோடு நின்ற கௌதம் வெளியில் சென்றான். மைதிலி வற்புறுத்தி சத்யாவை கூட்டிக் கொண்டு விஜய் ஆபீசுக்கு முதலில் வந்தாள்.

அங்கு சிவசு இருந்தான்.




What’s your Reaction?
+1
15
+1
17
+1
1
+1
1
+1
1
+1
0
+1
2
Subscribe
Notify of
guest

0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!