Serial Stories யாரோடு யாரோ

யாரோடு யாரோ-8




(8)

 

 

“இதென்ன பிடிவாதம்?    அப்பா கடுமையாகப் பேசினார்.

“எது கேட்டாலும், சாப்பிட மாட்டேன்னு சொன்னா, அப்புறம் எப்படி உடம்புல சக்தி வரும்? ஒரு பிடிவாதம். உன்னைப் படிக்க வச்சதுல பிடிவாதம்தான் அதிகரித்து விட்டது.

சத்யாவின் கண்ணில் நீர் கோர்க்க தலையைக் குனிந்து கொண்டாள்.

“ஒரு நல்லது சொன்னா கேக்கணும். முடியாதுன்னா, எப்படி? எல்லோரும் வேலை இல்லாம உன்னைக் கெஞ்சிட்டிருக்கனுமா?

“விடுங்கப்பா.– விஜய் குறுக்கே புகுந்தான்.

“சாப்பிட்டா வாந்தி வருது.– சப்போர்ட் செய்தான் விஜய்.

“அதான் மைதிலி வித விதமா ஜூஸ் பிழிஞ்சி தராளே. அப்புறம் என்ன?

ஆனா அதை கௌதம்ல கொண்டு வந்து தரான். மைதிலி நினைத்துக் கொண்டாள். அவனுக்கு எப்படி மூக்கு வியர்க்கும் என்று தெரியாது. ஜூஸ், சாப்பாடு நேரத்தில் எங்கிருந்தாலும் டகாரென்று வந்து விடுவான். மைதிலியின் கையிலிருந்து பிடுங்கிக் கொண்டு போவான். அவள் தடுத்தாலும் கேட்க மாட்டாள்.

இல்லை என்றால் சிவகாமி.

“குழந்தை சாப்பிடற நேரமாச்சே? மைதிலி ஜூஸ் ரெடியா? என்ன நீ மசமசன்னு நிக்கறே. நேரத்துக்கு குழந்தை சாப்பிட வேண்டாமா? என்பாள்.

“அவ சரியாத்தான் செய்யறா சிவகாமி. நீ அமைதியா இரு. சத்யா எப்ப சாப்பிடுவான்னு மைதிலிக்குத் தெரியும்.– தங்கம்.

“இல்லை அண்ணி. மைதிலிக்கு நிறைய வேலைகள். அந்த பிசியில மறந்துட்டா?

“அதெல்லாம் அவ மறக்க மாட்டா. இல்லைன்னாலும் சத்யா பசிச்சா கேட்டு வங்கிப்பா.

என்றாலும் சிவகாமி குறுக்கே புகுந்து தானோ, இல்லை கௌதமோ சத்யாவுக்கு உணவு, ஜூஸ் கொடுக்கும் வேலையை ஏற்றுக் கொள்வார்கள். அப்போதெல்லாம் அப்பா இருப்பார். இல்லை அப்பா இருக்கும் நேரமாகப் பார்த்து அந்த வேலையைச் செய்வார்கள்.

அவரை தாஜா செய்யும் வேலை இது என்று புரிந்தாலும், மைதிலி, விஜய் அதிகம் கண்டு கொள்வதில்லை. தங்கம் “விடு. அவ எப்பவும் அப்படித்தான் என்று கூறி விட்டாள்.

ஆனால் அப்பா இவர்களை இன்னும் புரிந்து கொள்ளவில்லையே, சத்யாவைத் திட்டுகிறாரே என்று வருத்தமாக இருந்தது. விஜய் எதோ சொல்ல முயன்ற போது மைதிலி தடுத்து விட்டாள்.

சத்யா நெற்றியில் கட்டுடன் இருந்தாள்.

விழுந்த வேகத்தில், கண்ணில் பூச்சி பறக்க,  தடுமாறியவளை, மயங்கி விட்டாள் என்று கௌதம் தூக்கிக் கொண்டு ஓடி விட்டான். அவசரமாக வெளியில் நின்றிருந்த விஜயின் காரை எடுத்துக் கொண்டு போய் விட்டான். அலுவலகம் கிளம்ப சாவியை காரிலேயே விட்டு விட்டு விஜய் உள்ளே வந்திரூந்தான்.

காரின் பின் சீட்டில் இருந்த சத்யா “ எனக்கு எதுவும் இல்லை. ஹாஸ்பிடல் வேண்டாம்– என்று சொல்லச் சொல்ல அவன் கேட்கவில்லை. அங்கு டாக்டர் லேசான அடிதான் என்று சொல்லி கட்டு போட்டு, “உடம்பு ரொம்ப வீக்காக இருக்கு– என்று மட்டும் சொன்னார்.

“உடம்பு ரொம்ப வீக்கா இருக்கு. ஹீமோகுளோபின் டெஸ்ட் எடுக்கச் சொன்னார். யூரின் டெஸ்ட் எடுக்கச் சொன்னார். எல்லாம் அங்க லேபிலேயே கொடுத்துட்டேன். அதுதான் எழுந்ததும் தலை சுத்தி விட்டு மயக்கம் வந்துருச்சி– கௌதம் வீட்டுக்கு வந்ததும் பெரிய கதை அளந்தான்.




“நான் வரதுக்குள்ள என்ன அவசரம்?-விஜய்

“சத்யா வ்ழுந்ததும் என்னால எதையும் யோசிக்க முடியலை.

அப்பா கனிவோடு அவன் தோளை தட்டித் தந்தார்.

“சரியான சமயத்தில் நீ வீட்டில் இருந்தே கௌதம்.

“உங்களுக்கு ஒரு கஷ்டம்னா நான் எங்கிருந்தாலும் அங்க வந்துடுவேன் மாமா.

“மயக்கம் எல்லாம் இல்லை.– சத்யா முணுமுணுத்தாள்.

“பேசாதே.– அப்பா சீறினார். “எது சொன்னாலும் அதற்கு எதிர் வார்த்தையாடறது என்ன வழக்கம்? பெரியவங்க சொல்ற எதையும் கேட்கறதில்லை.

சத்யா கண்ணில் நீர் கோர்த்தது>

“இப்ப என்ன ஆச்சுன்னு சத்யாவைத் திட்டறீங்க– விஜய் குறுக்கே வந்தான்.

“இல்லை விஜய். சத்யாவை நம்பி வேலைக்கு அனுப்பினா, இப்படிச் சாப்பிடாம, செய்யாம, உடம்பைக் கெடுத்துகிட்டு நிக்கறா. அவனவன் ஆள் அட்ரஸ் தெரியாதவனுக்கு உன் பொண்ணைக் கொடுன்னு வந்து நிக்கறான். போதும். இவ இனி வேலைக்குப் போக வேண்டாம்.

அப்பா உறுதியான குரலில் கூறினார்.

“என்னப்பா ஆச்சு?– விஜய்.

அப்பா சிதம்பரம் வந்து போனதைப் பற்றிக் கூறினார்.

“சரிப்பா. அவர் வந்து சிவசுவைக் கேட்டா, இவ என்ன செய்வா.?

“வேலைக்குப் போன இவ சும்மாவா இருந்திருப்பா? அவன்கிட்ட இவ சிரிச்சுப் பேசுவா. அவன் சரின்னு பொண்ணு கேட்டு வருவான். நாமதான் ஒழுக்கமா இருக்கணும்.

“அப்பா என்று ஆரம்பித்த விஜயை தடுத்து நிறுத்தினாள் சத்யா.

“அண்ணா வேண்டாம். எப்போ அவருக்கு என் ஒழுக்கம் மேல சந்தேகம் வந்துச்சோ, இனி எதையும் பேசிப் பிரயோஜனம் இல்லை. விடுங்க. அப்பா நீங்க என்ன சொல்றீங்களோ, அப்படியே கேக்கறேன்.

சத்யா நிதானமாகப் பேசினாள். அப்பா அவளையே பார்த்தார். சத்யா முகத்தைத் திருப்பிக் கொண்டாள். அப்பா எழுந்து உள்ளே போனார். தங்கம் கண்ணில் நீருடன் பின்னாடியே போக, “காபி எடுத்துட்டு வரேன்– என்று கௌதம் கிச்சனுக்குப் போனான்.

“வேஷம்– விஜய்.

“அண்ணா நானா விழலை.

“தெரியும். மாமா வாசல்ல வரதைப் பார்த்து, கௌதம் நீ எழும்போது குறுக்க காலை நீட்டினான்.– மைதிலி.

ஆமாம் என்று தலை ஆட்டினாள் சத்யா. ஆனால் இதை எப்படி அப்பாவிடம் சொல்வது? சிதம்பரம் வந்து பேசினது அவரின் இஷ்டம். அதற்குத் தான் என்ன செய்வது? சிவசு மனதில் இப்படி ஒரு எண்ணம் இருப்பது ஏன் தெரியாமல் போனது. அவன் தன்னிடம் பேசியிருக்கலாமே?




சத்யா யோசனையுடன் மௌனமாக அமர்ந்திருந்தாள்.

“சரி, நீ மனசைப் போட்டு அலட்டிக்காதே. நான் சிவசு கூடப் பேசறேன்.– விஜய். “சிதம்பரம் என் கிளையண்டுதான்

“வேண்டாம் என்றாள் மைதிலி.

“நீங்க போய்ப் பேசினா சிவசு மனசு ரொம்ப வேதனைப் படும் அவருக்கு.

“அவன் உண்மையாவே சத்யாவை விரும்பியிருந்தா? எனக்கு அவனைத் தெரியும். ரொம்ப நல்லவன். நேர்மை, பொறுமை, அமைதியானவன். இளகிய மனசு.

“பாருங்க. சிவசுவின் காதல் உண்மைன்னா, நிச்சயம் இவங்க திருமணம் நடக்கும்.– மைதிலி

“சத்யா இந்தக் காபியைக் குடி.-கௌதம்.

“வேண்டாம் கௌதம். குமட்டுது.

“வயித்துல ஒண்ணும் இல்லைன்னா இப்படித்தான் குமட்டும்.

“வேண்டாம்னா விட்று கௌதம்.-விஜய்

‘இல்லை விஜய். சத்யா, இனி நல்லாச் சாப்பிடனும். இரத்தம் ஊறணும். உடம்புல தெம்பு வந்தாத்தானே நாளைக்கு வேலைக்குப் போக முடியும்?

சத்யா உள்ளுக்குள் குமுறினாள். அவனின் அக்கறை அவளை வெகுளச் செய்தது.

“கௌதம் பிளீஸ். என்ன சாப்பிடணும், எப்ப சாப்பிடணும்னு எனக்குத் தெரியும். நீ சொன்ன மாதிரி டாக்டர் எதுவும் சொல்லலை. லேசான அடிதான். சரியாப் போயிடும்னார். நீங்களா எதுவும் புராணம் எழுதாதீங்க.

“உன்மேல் எனக்கு அக்கறை கூடாதா?

“போலித்தனமான அக்கறை வேண்டாம் கௌதம்.

“இது போலித்தனம் இல்லை சத்யா.

“கௌதம் பிளீஸ். என்னைக் கொஞ்சம் தனியா விடுங்களேன்.

“அவனை எதுக்கு விரட்டறே.– அப்பா சாப்பிட்டு முடித்து துண்டில் கையைத் துடைத்தபடி வந்தார்.

“உன்மேல் அக்கறை உள்ளவங்களை விரட்டுவே. ஊர் பேர் தெரியாதவன் கிட்ட குழைஞ்சு பேசுவே.

“அப்பா பிளீஸ்.– சத்யா இருகை கூப்பி வணங்கினாள்.

“என் மனசுல சிவசு மேல எந்த எண்ணமும் இல்லைன்னு எப்படி நிரூபிக்கறது. கூட வேலை பாக்கறார். அவ்வளவுதான். அவர் என்னை விரும்பினா, அதுக்கு நான் என்ன பண்ண முடியும்? உங்க பேச்சை நான் மீற  மாட்டேன்னு தெரியாதா? நான் உங்க பொண்ணு. என் மேல உங்களுக்கு நம்பிக்கை இல்லையா?

சத்யாவின் கெஞ்சலில் அப்பா நிதானித்தார்.

“நீ நான் சொல்றதைக் கேட்பதானே.

“சத்தியமா

“சரி. நீ வேலைக்குப் போ. ஆனா ஒரு கண்டிஷன்.

“சொல்லுங்க.

“நாளைக்குக் கம்பெனிக்குப் போய் ஒரு மாசம் லீவ் போடறே. சிவசுகிட்ட தெளிவா சொல்லிடு. உனக்குக் கல்யாணம்னு. மனசுல கொஞ்சம் ஆசை இருந்தாலும் அழிச்சுடுன்னு அவன்கிட்ட சொல்லிடு.

“கல்யாணம்னா எப்போ? யார் கூட.?

“விஜய், அடுத்த முகூர்த்தம் எப்போன்னு பாரு. அதுல சத்யாவுக்கும், கௌதமுக்கும் கல்யாணம்.

“அப்பா அதிர்ந்து எழுந்தான் விஜய்.

“இதைப் பத்தி யாரும் இனிப் பேச வேண்டாம்.– அப்பா கடைக்குக் கிளம்ப, கௌதம் முகத்தில் மெல்லப் படர்ந்த விஷமப் புன்னகையை திகிலுடன் கவனித்தாள் மைதிலி.




What’s your Reaction?
+1
6
+1
13
+1
0
+1
0
+1
0
+1
0
+1
4
Subscribe
Notify of
guest

0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!